வைணவம் வெறும் பேச்சில் இல்லை, வாழ்ந்து காட்டுவதில் இருக்கிறது!



ஆக்கியாழ்வானை வாதில் வென்ற பிறகு ஆளவந்தார், அரசன் பந்தயப்படியே பாதி அரசை அளிக்க, அதையும் ஏற்று அரசாண்டு வந்ததை வைணவ குருபரம்பரைக் கதைகளில் இருந்து சொல்லும்போது, இன்னுமொரு சுவாரசியமான சம்பவத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அரசனாகவே ஆகிப் போன ஆளவந்தாரை, அரங்கன் சேவைக்கு ஆட்படுத்துவதெப்படி என்ற சிந்தனையில், மணக்கால் நம்பிகள் என்ற வைணவ ஆசார்யர் இருக்கிறார். இவரே நாதமுனிகளின் பேரனாக, ஈஸ்வரமுனியின் பிள்ளையாக , ஆளவந்தாருக்கு, ஒரு வைணவனுக்கு செய்ய வேண்டிய சம்ஸ்காரங்களை செய்து வைத்தவர்; நாதமுனிகளின் விருப்பப் படியே குழந்தைக்கு யமுனைத் துறைவன், யாமுனாசார்யர் என்று திருநாம காரணம் செய்து வைத்தவர்.பாட்டன் தேடி வைத்த பெருந்தனமான வைணவத்தை ஆளவந்தாருக்குக் கொடுப்பதற்காகக் காத்து நின்றவர்.

சொத்துக்குடையவரோ அரச போகத்தில் தான் வந்த வேலையை மறந்திருக்கிறார். என்ன செய்யலாம்?

அரசனுக்குத் தூதுவளைக்கீரையில் பிரியம் என்பதை அறிகிறார் மணக்கால் நம்பிகள். தூதுவளையை வித்தியாசமான முறையில் பக்குவப்படுத்தி அரண்மனை சமையல்காரன் மூலமாக மணக்கால் நம்பிகள் அளித்து வருகிறார். கொஞ்ச காலத்திற்குப் பிறகு, பக்குவப் படுத்தித் தருவதை நிறுத்தி விடுகிறார். ஆளவந்தாரும், சமையல்காரனிடம் விசாரித்து, மணக்கால் நம்பிகளை வரவழைத்து, நீர் இது நாள் வரை தூதுவளையைப் பக்குவப் படுத்திக் கொடுத்தமாதிரியே தொடர்ந்து செய்து வாரும், உமக்கு வேண்டிய பொன்னும் பொருளும் தருகிறேன் என்று சொல்ல, மணக்கால் நம்பிகள் அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறார்: "அரசனே, உன்னிடமிருந்து எதையும் iபெறுவதற்காக நான் வரவில்லை. உம்முடைய பாட்டன் சொத்து என்னிடத்தில் இருக்கிறது, அதை உம்மிடம் சேர்ப்பதற்காகவே வந்திருக்கிறேன். என்னுடன் வந்து அந்தக் குலதனத்தை ஏற்றுக் கொள்ளும்." என்கிறார்.

"என்ன சொத்து, எங்கே இருக்கிறது?" என்று வினவிய ஆளவந்தாருக்கு, அது அசையாச் சொத்து, என்றும் அழியாத சொத்து, தன்னுடன் வந்தால் அதைக் காண்பிப்பதாக பதில் வருகிறது.

மணக்கால் நம்பியைத் தினசரி காண விரும்பும் அரசனுக்கு, அவரும் தினப்படி வந்து வேதாந்த ரகசியங்களையும், கீதையின் உட்பொருளையும், அதன் கனிந்தநுட்பமான மா ஸுச: என்ற சரம ஸ்லோகத்தின் மேன்மையையும் சொல்லிக் கொடுக்கிறார். நெல் மணிகள் முற்ற முற்றப் பயிர் தலைவணங்கிச் சாயுமாப்போல, ஆளவந்தாருக்கும், இந்த உலக விவகாரங்களில் இருந்து ஒதுங்கி, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி அடிமை செய்யும் ஆர்வம் கொழுந்து விட்டெரிய ஆரம்பிக்கிறது.

மணக்கால் நம்பிகளோடு ஆளவந்தார் ஸ்ரீரங்கத்துக்கு வந்து சேர, அரங்கனை தரிசனம் செய்துவித்து, இதுவே உங்கள் குலதனம், முன்னோர்கள் உமக்காகத் தேடி வைத்திருக்கும் சொத்து, ஏற்றுக் கொள்ளும் என்கிறார்.

நெகிழ்ந்து நெக்குருகி அரங்கனை அனுபவிக்கும் ஆளவந்தார், எல்லாவற்றையும் துறந்து, துறவு மேற்கொள்கிறார். பட்டைதீட்டப் பட்ட வைரமாக, அரங்கன் ஆளவந்தாரைப் பிரகாசிக்க வைக்கிறான். குருகூர்ச் சடகோபனிடத்தில் இருந்து பவிஷ்யதாசார்யன் விக்ரகமும் ஆளவந்தாருடைய பூஜைக்காக, மணக்கால் நம்பிகள் அளிக்கிறார்.


பவிஷ்யதாசார்யன்

வைணவ குருபரம்பரையில், தொடர்ச்சியாக ஒரு அதிசயம் நிகழும். தன்னிடமிருக்கும் ஞானச் செல்வத்தை, பிரபத்தி மார்க்கத்தைத் தகுந்தவரிடம் ஒப்படைப்பதற்காக, மடி கனத்த பசு கன்றுக்காக ஏங்கித் தவிப்பது போல, ஆசார்யபரம்பரையில் அடுத்து வருபவர்க்காகக் காத்திருக்கும் அதிசயமே அது.

ஆளவந்தாரும், உடையவர், எம்பெருமானார் என்று போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜருடைய வருகைக்காகக் காத்திருந்ததும் , அப்படியே நடந்தது.
இங்கே சொல்ல வந்த முக்கியமான நுட்பம், ராமானுஜ சித்தாந்தத்தில், விவேகம் என்ற பதத்திற்கு விசேஷமான பொருள் உண்டு. பகுத்தறிவதே விவேகம் என்ற சாமான்ய அர்த்தமல்ல, உண்ணும் உணவே நம்முடைய குணத்தைத் தீர்மானிக்கிறது என்பதால், வைணவன் என்பவன் பரம சாத்வீகமான உணவையே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே அது.

உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் வழியாக, நல்ல குணங்களைப் பேணிவளர்க்க முடியும் என்பதும், தாமச, ராஜச நிலையைக் கழித்து, சாத்வீக நிலையில் மட்டுமே ஞானத்தைப் பெற முடியும் என்பதால், அப்படிப்பட்ட சாத்வீக நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான வழியையும், ராமானுஜ சித்தாந்தம் சொல்கிறது.

ஞானம் என்பது இப்படி இருக்கும், அப்படியிருக்கும் என்றெல்லாம் வெறும் தியரி லெவலொடு நின்றுவிடாமல், ஒரு வாழ்க்கை நெறியாகவே காட்டிக் கொடுத்தது வைணவம். ஒவ்வொரு செயலிலும் அர்ப்பணிப்புடன் கூடிய வாழ்க்கை! அர்ப்பணிப்பு என்றால் எப்படிப்பட்ட அர்ப்பணிப்பு!

குருபரம்பரைக் கதை ஒவ்வொன்றும், இந்த ஆழ்ந்த அனுபத்தைப் பற்றியதே!

உடலைக் கட்டுப் படுத்துவதன் மூலம், உணவைக் கட்டுப் படுத்துவதன் மூலம், தாமச, ராஜச உணர்வுகளில் இருந்து விடுபட்டு சுத்த சத்துவமாக்கிக் காட்டும் எளிய விதத்தை வைணவம் சொல்கிறது. மனம் இறந்த நிலை, மனமற்ற நிலை என்றெல்லாம் சித்தர்களும், யோகிகளும் சொல்கிறார்களே, அதை மிக எளிமையாக, தாஸ்ய பாவத்திலேயே சாதித்துக் காட்டுகிறது.

மனமிறந்த நிலை, மனமற்ற நிலை என்பதெல்லாம், ஒரு பூர்வாங்கம் தான், அதுவே முடிவல்ல. புகைபடிந்த கண்ணாடியை சுத்தப்படுத்தினால் தான் அதன் வழியாகப் பார்க்க முடியும். இருப்பதே தெரியாமல், ஸ்படிகம் போல, மெய்ப்பொருளைப் பார்க்க இந்த அனுபவம் ஒரு உபாயம் மட்டுமே.

வைணவம் வெறும் பேச்சில் இல்லை, அது ஒரு வாழும் வழி,வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கிறது!

1 comment:

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!