தகவல் அறியும் உரிமை! சட்டமா? மாயையா?முதுகெலும்பில்லாத தகவல் ஆணையம் எதற்கு?

பொதுமக்களை அரசாங்கத்தின் வாசற்படிகளில் தவம் கிடக்கும் மனுதாரராக இருப்பதை மாற்றி தமது உரிமைகளைத் தட்டிக்கேட்கும் மன்னர்களாக்கிய ஓர் அற்புதமான சட்டம்தான் 2005-ல் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டிய தகவல் உரிமை ஆணையங்களே அப்படியொரு புரட்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளன. அந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளது தமிழகத் தகவல் உரிமை ஆணையம். 

தமிழகத் தகவல் ஆணையத்தின் செயல்பாட்டில் நேர்மையோ, நியாயமோ இல்லை என்று தகவல் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து விமர்சித்தும், அந்த ஆணையம் தன்னைத் திருத்திக்கொள்ளாத நிலையில், இப்படிப்பட்ட ஓர் ஆணையம் தேவையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

மாநிலத் தகவல் ஆணையங்களில் தலைமை ஆணையர் உள்பட 11 பேர்வரை அங்கம் வகிக்க தகவல் உரிமைச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், தமிழகத் தகவல் ஆணையத்தில் 4 பேர்தான் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை? 

தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான மனுக்கள் தேங்கியுள்ளன. மக்களுடன் அதிகத் தொடர்புடைய வருவாய், காவல்துறைகளில் ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ளன. இதற்கு உடனுக்குடன் தீர்வு காண தகவல் ஆணையம் முனைப்புக் காட்டாதது ஏன்? வருவாய் அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்குப் பதில் அளிப்பது அந்தந்த துணை வட்டாட்சியர்களுக்குக் கூடுதல் பொறுப்பாகவே அளிக்கப்படுகிறது. இதுவே மனுக்கள் தேக்கத்துக்கு காரணம் என்று துணை வட்டாட்சியர்கள் புலம்புகிறார்கள். இது ஏன் அரசின் செவிக்குக் கேட்கவில்லை? 

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட துறை பதில் அளிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இதைத் தமிழகத்தில் உள்ள எந்தத் துறையும் பின்பற்றுவதில்லை. இதற்கு முழுக் காரணம் மாநிலத் தகவல் ஆணையமே. 


மனுதாரர்களுக்கு 30 நாள்களுக்குள் பதில் அளிக்காத அதிகாரிக்கு அதிகபட்சம் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கச் சட்டம் அனுமதிக்கிறது. பெரும்பாலும் இதைத் தமிழகத் தகவல் ஆணையம் செய்வதில்லை. மாறாக, தவறு செய்யும் அதிகாரிகளைத் தப்பிக்கவைக்கும் பணியை மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகிறது. 

சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பதில் கிடைக்காவிட்டால் மனுதாரர் மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு மனுக்களைப் பெறும் தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட துறையை அணுகி ஏன் தகவல் கொடுக்கவில்லை என்று வினவி, நியாயமான காரணம் சொல்லப்படாதபட்சத்தில் அபராதம் விதிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த நடைமுறை தலைகீழாக உள்ளது. 


மேல்முறையீட்டு மனுக்களைப் பெறும் ஆணையம், தவறு செய்த அதிகாரிகளைத் துணிச்சலாகத் தண்டித்து, தகவலைப் பெற்றுத்தருவதை விடுத்து, அதிகாரிகளை அணுகி மனுதாரருக்குத் தகவல் கொடுங்கள் என்று கெஞ்சுகிறதாம். இவ்வாறு கெஞ்சுவது எதற்கு? மாநிலத் தகவல் ஆணையம் இப்படி நடந்து கொள்வதால்தான் தவறு செய்யும் அதிகாரிகள் துணிச்சலுடன் உலா வருகின்றனர். சில துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மனுதாரருக்கு அலுவலகக் கவரில் வெற்றுத்தாளை வைத்து அனுப்பி தாங்கள் தாமதிக்காமல் மனுதாரருக்குப் பதில் அளித்துவிட்டதாகப் பதில் கூறிவிடுகின்றனர்.

தகவல் ஆணைய அதிகாரிகளின் பணி நியமனத்தில் அரசியல் குறுக்கீடும், மக்கள் பிரச்னைகளின் வலியை அறிந்திராத, அக்கறையில்லாதவர்கள் நியமிக்கப்படுவதுமே ஆணையத்தின் மெத்தனச் செயல்பாட்டுக்குக் காரணம். எனவே, மக்கள் நலனில் அக்கறையுள்ள, தகவல் உரிமை ஆர்வலர் ஒருவரையும் தகவல் ஆணையராக நியமிக்கலாம். 

தில்லி அரசு சைலேஷ் பாபு என்ற தகவல் உரிமை ஆர்வலரைத் தகவல் ஆணையராக  நியமித்துள்ளது. இந்த நடைமுறையைப் பின்பற்றுவது குறித்து தமிழக அரசும் பரிசீலிக்கலாமே?  
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தச் செயலர், தகவல் ஆணையாளர்கள், பொதுத் தகவல் அலுவலர்கள், தகவல் உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டம் சென்னையில் 2008-ல் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், முதல் கூட்டத்திலேயே தகவல் அறியும் மனுக்கள் மீது எடுக்கப்படும் அலட்சிய நடவடிக்கை குறித்து பொதுமக்களும், தகவல் ஆர்வலர்களும் சரமாரியாக எழுப்பிய வினாக்களுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை. இந்தக் கூட்டத்தை ஏன் கூட்டினோம் என்ற நிலைமைக்கு ஆளாகித் தொடர்ந்து கூட்டம் நடத்துவது கைவிடப்பட்டது. 

இந்தக் கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும்.

மேல்முறையீட்டு மனுக்களை கையாளும் விஷயத்தில் வெளிப்படைத் தன்மையை தகவல் ஆணையம் பின்பற்றுவதில்லை. இதில் உள்ள நியாயம் என்ன என்பது புரியவில்லை. சாதாரண மக்களின் மனுக்களுக்குக்கூட தகவல் ஆணையம் ஆங்கிலத்தில்தான் பதில் அளிக்கிறது. இது அவர்களைச் சிரமத்துக்கு ஆளாக்கி வருகிறது. இதனால் தமிழில் மனு தாக்கல் செய்பவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்தில் தாக்கல் செய்வோருக்கு ஆங்கிலத்திலும் கடிதத் தொடர்பு இருப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்து 5 ஆண்டுகள் ஆகியும் இச்சட்டம் குறித்து தமிழக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. 


இப்படியொரு சட்டம் இருப்பதே 90 சதவீத மக்களுக்குத் தெரியவில்லை. அரசின் இலவசத் திட்டங்களை விளம்பரப்படுத்துவதுபோல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் மாநிலத்தின் கடைக் கோடியில் வசிக்கும் குடி மகனும் அறியச் செய்திட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பள்ளிப்பாடங்களில் சேர்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  அதிகாரிகள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படாமல் இருப்பதால்தான் தகவல் ஆணையம் அவசியமாகியுள்ளது.

அதிகாரிகள் மக்கள் நலன் கருதி செயல்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்துவிட்டால் இந்தத் தகவல் அறியும் சட்டம் எதற்கு? ஆணையம்தான் எதற்கு?  


இங்கே! தினமணி நாளிதழில் கடந்த பதினொன்றாம் தேதி, செங்கோட்டையன் என்பவர் எழுதிய கட்டுரை இது.

இங்கே வலைப்பதிவுகளில் "சட்டம் என்கையில்" என்று திரு திரவிய நடராஜன் போன்ற சில ஆர்வலர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுதி வருகிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசு நடவடிக்கைகளில் ஒரு வெளிப்படையான, நம்பகத்தன்மையை நிரூபிக்க உதவுகிற ஒரு கருவியாகவே ஆரம்பத்தில் கருதப்பட்டது.

ஆனால் தமிழக நிலவரம் என்ன என்பதை இந்தக் கட்டுரை மிகத் தெளிவாகவே காட்டி இருக்கிறது.


இன்னும் அறிமுக நிலையிலேயே இருக்கும் இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாகத்திருத்தி, சுத்தமாக முடமாக்கும் முயற்சியும் தொடர ஆரம்பித்திருக்கிறது

என்ன செய்யப் போகிறோம்? வெறும் இலவசங்களிலேயே மதிமயங்கி, இருப்பதையும் பறிகொடுத்துவிட்டு நிற்கப் போகிறோமா?
 

என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோமா? 

நம்முடைய சுதந்திரம் உரிமைகள் பறி போய் விடாமல் பாதுகாத்துக் கொள்ளத்தயாராக இருக்கிறோமா?
 

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!


  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!