ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சி ஏ ஜி பொதுக் கணக்குக் குழுவின் முன் ஆஜராகி, ஊழலைப் பற்றிய தன்னுடைய அறிக்கையைப் பற்றி விளக்கமளிக்க இருப்பதை ஒட்டி ஆரம்பித்த இழை இது. வெறும் தணிக்கைக் குழு, அறிக்கை என்று மட்டுமே பார்க்காமல், அரசு ஊழியர்கள், அமைப்புக்களின் லட்சணத்தைப் பற்றியும் விவாதிக்கும் களமாக இந்த இழை ஆகிப் போனது.
இங்கே இழை மொத்தத்தையும் படிக்கலாம்!
அதில் இருந்து ஒரு பகுதி!
"திரு இன்னம்புரான் ஐயா, ஒரு பெரிய பட்டியலையே அளித்து, (ஒரே வார்த்தையில் சொல்வதானால், ஒட்டு மொத்தத்தையுமே) இவர்கள் அத்தனை பேரும் தான் ஜனங்களின் அசமந்தத் தனத்துக்குக் காரணம் என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்!
அப்பீல் கிடையாதா? அப்பீல் செய்து தான் பார்ப்போமே!
அவர் ஒட்டு மொத்தமாக சொல்வது முதலில் சரிதானா? கொஞ்சம் பார்ப்போம்!
//மேல் தட்டு பிரமுகர்கள், நடுத்தர சம்பளதாரர்கள், மெத்த படித்தவர்கள், அறிந்தும் மெளனிகள், நல்லதையெல்லாம் ஒதுக்குபவர்கள், அரசு ஊழியர்களின் கண்ணியத்தை பாழடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட அரசியலர்களை எதிர்க்க திராணி இல்லாதவர்கள்......//
இந்தப் பட்டியலில் அரசு ஊழியர்களின் கண்ணியத்தைப் பாழடிக்க வேண்டும் என்று...............!!
தங்களுடைய கண்ணியத்தை எவரோ வந்து பாழடிக்கும் வரை அரசு ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? முதலில் தங்களைப் பொதுமக்களின் சேவகர்களாகக் கருதிக் கொள்கிறார்களா, அல்லது பிரிட்டிஷ் மேட்டிமைத்தனத்தின் எச்சமாக இன்னமும் இருந்து வரும் அதிகாரச் செருக்குடன், அகம்பாவத்துடன் நடந்து கொள்கிறார்களா?
எல்லா அரசு ஊழியர்களுமே மோசம் என்று முத்திரை குத்த முயலவில்லை! ஆனால், தங்களுக்குள் இருக்கும் அழுகிப் புரையோடிக் கிடக்கும் கோளாறுகளை சரி செய்வதற்குப் பெரும்பாலான "அதிகார வர்கத்துக்கே" தைரியம் இருப்பதில்லை. அப்படி சரி செய்ய வேண்டும் என்ற நினைப்பே வருவதுமில்லை!
ஒரு உதாரணத்துக்கு, ஏற்கெனெவே முந்தைய பின்னூட்டத்தில் ஒரு சிறு வழக்கை எடுத்துச் சொல்லியிருந்தேன் அல்லவா? அதில் நாம் பார்த்ததென்ன?
ஒருவருடைய இடத்தை, அடுத்த மனைக்காரர் ஆக்கிரமிப்புச் செய்தார். தான் ஆக்கிரமித்த இடத்தையும் சேர்த்துக் கட்டடம் எழுப்ப முயன்றார்.
ஆக்கிரமிப்புக்கு உள்ளானவர், ஒவ்வொரு துறையாக மனுக் கொடுத்து, முறையிட்டுக் கொண்டே வந்தார். சர்வே மற்றும் மாநகராட்சிக்கு எதிராக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைப் பெற முயன்றார். மாநகராட்சி அசைந்து கொடுக்கவில்லை. பதில் ஏனோதானோ என்று இருந்தது.நடவடிக்கைக்கான நோடீஸ் அனுப்பபட்டிருப்பதாக ஒரு பதில், அது சம்பந்தப்பட்ட நபருக்கு சார்வு செய்யப்படவே இல்லை.
அதைத் தவிர மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதன்மை நகரமைப்பு அலுவலர், மாநகராட்சி ஆணையாளர் இருவருக்கும் முறையீட்டு மனு அனுப்பப் பட்டது. இன்று வரை அதன் மீது நடவடிக்கையோ, பதிலோ இல்லை.
ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர் ரிட்மனு தாக்கல் செய்தார். நடவடிக்கை எடுக்கிறோம் என்று மாநகராட்சி சார்பில் வாய் மொழியாகச் சொன்னதை மட்டும் ஏற்றுக் கொண்ட நீதிபதி கீழே (சிவில் கோர்ட்டில்) நிவாரணம் தேட வசதி இருக்கும் போது இங்கே சரியான முறையில் ரிட் மனுவை ஏற்றுக் கொள்ளக் காரணங்களை நிரூபிக்கவில்லை என்று மனுவைத் தள்ளுபடி செய்தார். சட்டப் பேராசிரியராக இருந்தவர் அவர்!, அரசியல் சாசனத்தின் 226 வது பிரிவைப் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறீர்களே என்றும் சொல்லுவார்.
ரிட் அப்பீல் கதியும் கூட கிட்டத் தட்ட அதே மாதிரித் தான்!
மாநகராட்சிக்குத் தெளிவான உத்தரவு கொடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த டிவிஷன் பெஞ்ச், நாங்கள் அப்செர்வேஷன் வேண்டுமானால் தருகிறோம், அதைப் பார்த்து விட்டு அப்புறம் சொல்லுங்கள் என்று அப்பீலை டிஸ்போஸ் செய்தது.
அப்செர்வேஷனாவது தெளிவாக இருந்ததா? ஒரு அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவருக்கும் மேலே உள்ளவரிடம் புகார் செய்ய மனுதாரருக்கு உரிமை இருக்கிறது. ரிட் மனுவை முதலில் விசாரித்த கற்றறிந்த நீதிபதி சொன்னதை நாங்கள் ஆமோதிக்கிறோம்! அவ்வளவுதான்!
மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாய்மொழியாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொன்னதை மட்டும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தங்களுக்கு மாநகராட்சியில் இருந்து விதிமுறைகளை மீறியதற்காகத் தரப்படும் நோடீஸ் எதுவும் வரவே இல்லை என்று பிரதிவாதியின் வழக்கறிஞர் சொன்னதையும், மாநகராட்சி எடுத்த நடவடிக்கை என்று ஒன்றுமே இல்லை என்று மனுதாரர் சொன்னதையும் கூடக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
"கீழே வேறு இடத்தில் பரிகாரம் தேட வசதி இருக்கும் போது நாங்கள் எதற்காக இந்த ரிட் மனுவைக் காதில் போட்டுக் கொள்ள வேண்டும்? அரசியல் சாசனம் 226 ஆம் பிரிவில் உயர்நீதி மன்றத்தில் நேரடியாகப் பரிகாரம் தேடலாம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்வது என்பது எங்களுடைய உசிதம், உங்களுடைய உரிமை அல்ல!"
இது நீதிமன்றங்களின் நிலை!
இது நீதிமன்றங்களின் நிலை!
பொறுப்பற்ற முறையில் செயல்படும் அரசுத் துறை, உள்ளாட்சி அமைப்புக்களை, தட்டிக் கேட்பதற்காகத் தான், நீதிமன்றங்களின் உதவியை இங்கே நாடவேண்டிய அவல நிலை இருக்கிறது. நீதிமன்றங்களின் பாராமுகம், அல்லது நாங்கள் ஏன் இதில் தலையிடவேண்டும் என்ற கேள்வியில், தங்களுடைய அவ
லட்சணமான முகத்தை, பொறுப்பற்ற செய்கைகளை, அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புக்கள் காப்பாற்றிக் கொண்டு வருவதே நடைமுறையாகி விட்டது.
மாநகராட்சி இருக்கிறதே, இவர்களை என்ன சொல்வது?
எவரோ வீடு கட்டத் தெருவில் மணல் கொட்ட ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே, அந்த வார்டு கவுன்சிலருக்குப் போய்ச் சேர வேண்டிய கப்பம் போய்விட வேண்டும். நீ ஆக்கிரமித்துக் கட்டுவாயோ,, அடுக்கு மாடி கட்டுவாயோ, எதைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை, டவுன் பிளானிங் அமைப்பில் இருக்கும் எவரையோ கொஞ்சம் கவனித்து விட்டால் போதுமானது. கண்ணை இருக்க மூடிக் கொள்வோம்!
இங்கேயும் அது தான் நடந்தது!
நில அளவுத் துறையில் அத்துமாலை அளந்து குறித்துத் தரச் சொன்னால், தாலுகா சர்வேயர் அலுவலகத்தில் வந்து அளந்து , உங்கள் பத்திரப்படி இது சரியாக இருக்கிறது, அவர் பத்திரப்படி அது சரியாக இருக்கிறது என்று மையமாகப் பேசி இரண்டு தரப்பிலும் சில்லறையைத் தேற்றிக் கொண்டு போனதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை. காரணம் எதிர் பார்டி கொஞ்சம் அதிகமாகவே "கவனித்தது" தான்!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அத்துமால் அளந்து குறித்துத் தரச் சொன்னதை எழுத்து மூலம் தரச் சொல்லி வேண்டி, கிட்டத் தட்ட ஐம்பத்தேழு நாட்கள் கழித்த தேதியிட்டு, அறுபத்தொன்றாவது நாளில் இரண்டும் கெட்டானாக பதில்!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6 (1) இன் கீழ் செய்யப் படும் விண்ணப்பத்துக்கு முப்பது நாட்களுக்குள் பதில் சொல்ல வேண்டும். மீறித் தாமதம் செய்வது, தாமதம் செய்து பதில் அனுப்புவது, தகவல் தர மறுப்பதற்குச் சமம் என்று அந்தச் சட்டமே தெளிவாகச் சொல்கிறது.
அதனால் என்ன? நாங்கள் அப்படித் தான் இருப்போம் எவன் வந்து எங்கள் தலையைச் சீவப் போகிறான் என்று தாலுகா அலுவலகம் அலட்சியமாக இருந்தது.
சிவில் கோர்டில் வழக்கு ஆரம்பமாகி, அட்வகேட் கமிஷனர் வந்து அளந்துபோய், ஆக்கிரமிப்பு இருப்பது உறுதி செய்யப்பட நிலையிலும் கூட, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் என்ன தெனாவெட்டாக இருக்கிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள் என்பதை இந்த லிங்கில் கேளுங்கள்!
ஆடியோவைகவனித்துக் கேளுங்கள்! கணவன் மனைவி இருவரும் ஜாதியைத் தொட்டு, மதநம்பிக்கையைத் தொட்டு இழிவாகப் பேச ஆரம்பித்து, நீங்களும் பொய்ப் புகார் கொடுங்கள், அய்யன் சுவர் ஏறிக் குதித்து இந்தப்பக்கம் வந்தான் என்று, நீங்களும் மொட்டைப் பெட்டிஷன் போடுங்கள் என்று பெண்மணி என்ன தெனாவெட்டாகப் பேசுகிறார் என்பதைக் கேளுங்கள். புகாரை விசாரிக்க வந்த அசிஸ்டன்ட் கமிஷனரையும் விடவில்லை...வாய்க்குள் விட்டு ஆட்டிருவேன்னு சொல்றான் ஒரு ஆளு.. என்று ஆரம்பித்து ஆண் பிள்ளை அப்படியே முழுங்குவதையும் கேட்கலாம்!
இவர்கள் உருட்டல், மிரட்டல் எல்லாம் காவல்துறையில் புகாராகவும் கொடுக்கப் பட்டிருக்கிறது. அங்கேயாவது ஏதாவது நடந்ததா என்று கேட்கிறீர்களா?
மிரட்டினவன், மிரட்டப்பட்டவன் இருவரிடமும், நாங்கள் சிவில் கோர்டில் வரும் தீர்ப்புக்குக் கட்டுப் படுகிறோம், மீறி நடக்கும் பட்சத்தில் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு உள்ளாக சம்மதிக்கிறோம் என்ற மாதிரி எழுதி வாங்கி, புகாரை மூடி வைத்து விட்டார்கள்.இதில் இன்னும் பெரிய கொடுமை, ஆக்கிரமிப்பு செய்த இடத்துக்காரன் இதில் வெறும் சாட்சி மட்டும் தான்! யாரோ ஒரு அனாமதேயம், அவனுக்காக மிரட்ட வந்து, அப்படி எழுதிக் கொடுத்த நபராக இருப்பது தான்.
மிரட்டினவன், மிரட்டப்பட்டவன் இருவரிடமும், நாங்கள் சிவில் கோர்டில் வரும் தீர்ப்புக்குக் கட்டுப் படுகிறோம், மீறி நடக்கும் பட்சத்தில் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு உள்ளாக சம்மதிக்கிறோம் என்ற மாதிரி எழுதி வாங்கி, புகாரை மூடி வைத்து விட்டார்கள்.இதில் இன்னும் பெரிய கொடுமை, ஆக்கிரமிப்பு செய்த இடத்துக்காரன் இதில் வெறும் சாட்சி மட்டும் தான்! யாரோ ஒரு அனாமதேயம், அவனுக்காக மிரட்ட வந்து, அப்படி எழுதிக் கொடுத்த நபராக இருப்பது தான்.
இத்தனைக்கும், இந்த நபர்கள் மிகப் பெரிய அரசியல் செல்வாக்கோ, ஆள் அம்பு சேனை உள்ளவர்களோ இல்லை! காசு இருக்கிறது!
யாருக்கு எவ்வளவு காசு கொடுக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்திருக்கிறது அவ்வளவு தான்! பிச்சைக்காசுக்காகக் கையேந்தி, சட்டவிரோதமாக செயல் படுவதற்கு துணை நிற்க இங்கே அரசுத் துறை ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள். என்ன செய்து விடுவீர்கள்!!
அரசு ஊழியர்கள் கண்ணியத்தை, இந்த உளுத்துப்போன பிரிட்டிஷ் சிவில் நிர்வாக முறையை வைத்துக் கொண்டு, வெளியே இருந்து எவரோ வந்து கெடுக்க வேண்டியதே இல்லை! அவர்களே அந்தத் திருப்பணியை, செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை!
ஆம் ஆத்மி என்று சொல்கிறார்களே அந்தப் பாமரனுக்கு, இந்த நீதி மன்றங்களால், அரசு இயந்திரத்தால், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் எந்த உத்தரவாதம் தர முடிந்திருக்கிறது?
ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம்!
எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்?
எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்?
உரிமைக்காக நம்நாட்டில் போராட ஆரம்பித்தால் இந்த ஜென்மம் முழுவதையும் இழக்கவேண்டிஇருக்கிறது. அல்ட்ர மெகா பொறுமை சாலிகளாக மாறவேண்டிய கட்டாயம். இந்த கொடுமைகளுக்கு முடிவு கிடைக்க இன்னொருத்தனிடம் நாட்டை அவுட் சோர்ஸ் செய்ய வேண்டிவரும்.
ReplyDeleteவாருங்கள் திரு.அமர்!
ReplyDeleteஎன்ன செய்யலாம் என்று சொல்கிறீர்கள்?!
மண்புழு கூட ஒரு நிலைமைக்கு மேல்படமெடுக்க முடியாவிட்டால் கூடத் தன்னைக் காத்துக் கொள்ளச் சீறும், பொங்கி எழும்! மனிதர்களுக்கு, குறிப்பாக இந்தியாவில் மனிதர்களுக்கு அந்த சுதந்திரம், வாய்ப்பும் கூடக் கிடையாது என்று சொல்கிறீர்களா!!
எனக்கு தெரிந்தவரை உரிமைக்காக நீதி மன்றம் சென்றால் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ReplyDeleteபல வருடங்களுக்கு பின் சரியான தீர்ப்பு வந்தாலும் பணம், ஆள்பலம் இருந்தால் மட்டுமே அந்த தீர்ப்பு செயல் வடிவம் பெறுகிறது. (நடுவில் வக்கில்கள் செய்யும் கொடுமை, கையாலகாத சட்டம், குண்டர்கள் என எல்லாமும் கடந்தாகவேண்டும்).
இங்கு எல்லாமே பணம் தான். மனிதர்கள் வாழ்வதற்கேற்ற தட்ப வெட்ப நிலை தான் இந்தியாவின் சிறப்பு. முன்பிருந்த இந்திய கலாசாரங்களாகியா வாக்கு தவறாமை, பிறரை துன்புறுத்தாமல் இருத்தல் போன்றவை ஏட்டில்/மேடை பேச்சில் மட்டும் தான் உள்ளது. இங்கு மத்தியதர குடும்பம் புழுவுக்குகிழான நிலையில் தான் மதிக்கபடுகின்றன.ஏழைகளின் நிலைமை இதைவிட கிழேதான் உள்ளது.
வாருங்கள் அமர்!
ReplyDeleteஇழிநிலை இன்னும் இழிந்த நிலைக்குப் போய்க் கொண்டே இருக்கிறது என்பது சரிதான்! அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியம் இல்லையா?
There is an invisible association of various forms of net work among the ruling parties, opponents,other political stooges irrespective of their parties, industrialists, businessmen,traders, governments and semi government , off course the legal system and police forces and those who are possessing filthy wealth and the rowdy gangs prevails in the Indian society.
ReplyDeleteThe same has been nourished and groomed well and started to taking its advantages and began to rule the whole country now a days.
Pathetically no soul is here to have the remedy or solution for this. This is totally corroded and eroded at all dimension of the our society.
A civil war is only the solution. But that would take another century to happens here in India.
வாருங்கள் திரு மாணிக்கம்!
ReplyDeleteசிவில் வார்? எதை வைத்து அது ஒன்று தான் தீர்வு என்றும், அது வர ஒரு நூற்றாண்டு ஆகும் என்று எந்த அடிப்படையில் கணக்கிட்டீர்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை!
முதலில், இந்த நாடாளுமன்ற ஜனநாயகம்! 1952 இல் அறிமுகமான இந்தக் கூத்து, இன்னமும் ஜனங்களால் சரியாகப் புரிந்து கொள்ளப்படவே இல்லை.அல்லது, ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுத்து விட்டோம் என்று வைத்துக் கொண்டால், (தேர்தலுக்குத் தேர்தல் நாம் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம்!)அந்தத் தவறைத் திருத்திக் கொள்கிற குறைந்தபட்ச வாய்ப்புக் கூட இதில் இல்லை.
ஆளுகிறவர்கள், நல்லவர்களாக இருந்த தருணங்களில் இந்த ஜனநாயகக் கூத்தின் கொடுமைகள், கொஞ்சம் குறைவாகவே இருந்ததென்பதென்னவோ உண்மை! அனுபவம் கூடக் கூட, அறிவு வளர்ந்து வர வேண்டும் என்பது ஒரு அடிப்படை அனுமானம். நம்முடைய தேர்தல் முறையில் மட்டும் இந்த அனுமானம் தலைகீழாக, தவறாகப் போய்க் கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு இருட்டுக்குப் பின்னும் வெளிச்சம் காத்திருக்கிறது என்பதைப் போல நிச்சயமாக ஒரு மாற்றம் வரும்!
அந்த மாற்றத்தின் முன்னோடியாகத் தனிநபர் விழிப்புணர்வு தான் இருக்க முடியும். கலகங்களோ, கழகங்களோ அல்ல!