2G ஸ்பெக்ட்ரம்! ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்!


பானாசீனாவுக்கு, உச்சநீதிமன்றத்தில் இருந்து இன்றைக்கே வரும் என்று எதிர்பார்த்த கத்தி வந்து விழவில்லை!

விசாரணை வியாழக்கிழமையும் தொடரும் என்று தெரிய வருகிறது.

ஆனால், பிரணாப் முகர்ஜி, பிரதமருக்கு ஒரு நான்கு பக்க கடிதத்தை இன்றைக்கு அனுப்பியிருக்கிறார். ப்ளேடால் உடல் முழுக்கக் கீறிவிட்டு, அதன் மேல் உப்புத் தண்ணீரைத் தெளிப்பது போல என்று  வைத்துக் கொள்ளுங்களேன்! சோனி(யா)வுக்கும் இதன் நகல் அனுப்பப் பட்டிருக்கிறதாம்!

நிதியமைச்சகத்தால் சென்ற மார்ச் மாதம் தயார் செய்து அனுப்பப்பட்ட ரகசியக் குறிப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  வெளியானதில் கடந்த நான்கைந்து நாட்களாகவே பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தக் குறிப்புக்கள் அனைத்தும் பிரதம மந்திரி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையிலேயே தயார் செய்யப் பட்டிருப்பதாகவும்,அந்த அறிக்கையின்  சாராம்சத்தோடு தான் கருத்து ஒன்று படுவதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருப்பது, பானாசீனாவுக்கு செம ஆப்பாக வந்து இறங்கியிருக்கிறது.

பிரணாப் அந்த ரகசியக் குறிப்புக்களில் சொல்லப்பட்டிருப்பது எதையும் மறுக்கவில்லை!மாறாக, நிதியமைச்சகம் மட்டுமே அந்தக் குறிப்பைத் தயார் செய்வதில் சம்பந்தப் படவில்லை; பிரதமர் அலுவலகம் உள்ளிட்டு வேறு சில அமைச்சகங்களும் பானாசீனாவைக் குறை கூறுவதில் சம்பந்தப் பட்டிருக்கின்றன என்று பிரணாப் அந்தக் கடிதத்தில் சொல்லியிருக்கிறார்!

ஒருவேளை மன்மோகன் சிங் தாக்குப் பிடிக்க முடியாமல் பதவி இறங்க நேரிட்டால்,அடுத்த டம்மிப் பீசாக பிரதமர் நாற்காலியில் யார் உட்காருவது என்ற போட்டியே இதன் பின்னணி என்பது காங்கிரஸ் அரசியலைக் கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும்.

தியாக சிகரமாக சித்தரிக்கப்பட்ட சோனியாவின் நிலை இப்போது மிக மிகப் பரிதாபமான ஸ்திதியில் இருக்கிறதென்றுதான் சொல்ல வேண்டும்!  

உடல்நலமோ சரியில்லை.அதை எப்படி வெளியே சொல்வது அல்லது மறைப்பது என்றும் தெரியவில்லை. இளவரசர் ராவுல் விஞ்சியை , எந்த எதிர்ப்பு, முணுமுணுப்பும் இல்லாமல் அரியணையில் ஏற்றி வைக்க வேண்டும் என்ற எண்ணமோ, இப்போதைக்கு  ஈடேறாது போல இருக்கிறது!

சிரித்து சிரித்தே கெட்டவர் என்று  ஒருவரை சொல்ல வேண்டும் ன்றால், உடனடியாக நினைவுக்கு வருகிற முகம் தயாநிதி மாறனுடையது!

கேடி பிரதர்ஸ் என்னென்னமோ அகடவிகடம் செய்து, அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்ன ஆயின என்பது பற்றிக் கொஞ்சமும் செய்திகள் வெளியே கசிந்துவிடாமல் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்! சாட்சிக்காரன், சண்டைக்காரன் எல்லோருடனும் சமாதானம் பேசி, விவகாரங்கள் பெரிதாகாமல் பார்த்துக் கொண்டார்கள். சிபிஐ  தயாநிதி மாறன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று சர்டிபிகேட் கொடுக்கிற அளவுக்குக் கூடப் போனதில், ஸ்பெக்ட்ரம் வழக்கு அவ்வளவுதான், போபார்ஸ் மாதிரியே இதையும் ஊற்றி மூடியாயிற்று என்று தான் முதலில் தோன்றியது!
நிதியமைச்சகத்தில் இருந்து வெளியான ரகசியக் குறிப்பு என்னமோ பானா சீனாவைப் பற்றியது தான்! தென்னை மரத்தில் தேள் கொட்டி, பனை மரத்தில் நெறி கட்டிய கதையாக சிதம்பரத்தை சுற்றிய 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் சுற்றி வந்து,ஆ. ராசா முதலானோர் மீது இன்னொரு குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உத்தேசித்திருப்பதாக வெளிப்பட்டு,கேடி பிரதர்ஸ் மீதான குற்றப் பத்திரிகை நாளை மறுநாள் வெள்ளிக் கிழமை தாக்கல் செய்யப்படும் என்று முடிந்திருக்கிறது.


 
எல்லாத் தப்பையும் கூட்டணி தர்மத்தோடு தான் செய்தார்கள், பங்கு போட்டுக் கொண்டார்கள்!ஆனால், சிறைக்கு அனுப்புவது என்றால் கூட்டணிக் கட்சிகள் உள்ளே போகவேண்டும் என்பது தான் காங்கிரசின் கூட்டணி தர்மமாக இதுவரை இருந்து வருகிறது!


பானாசீனா, ராசாவோடு திஹாருக்குப் போகிறாரா அல்லது அவர் திஹாருக்குப் போகாமல் இருக்க ராசா அண்ட் கம்பனியை சுளுவாக வழக்கில் இருந்து விடுபட ஆனதைச் செய்கிறார்களா?

இந்தக் கேள்விக்குக் காலம் தான் விடை சொல்லவேண்டும்!

அதுவும் வெகு விரைவில் நெருங்கிக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது!

1 comment:

  1. சீனா தான் உள்ளே போய்விட்டால் மின்அஞ்சல் வாயிலாக உங்கள் கைபேசி எண் தாருங்க. மகிழ்ச்சியில் வரும் என் கத்தலை நீங்கள் கேட்க வேண்டுமென்றால்? நீதி இன்னமும் இந்த நாட்டில் இருக்கு என்று தானே அர்த்தம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!