அடுத்த ஜனாதிபதி யார்? அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா?டுத்த ஜனாதிபதியாகத்  தனது வேட்பாளரை முடிவு செய்வதில் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் அதிகமாகவே காலதாமதம் செய்து வருகிறது. அடுத்த மாதம் தான் இறுதியாக முடிவெடுப்பார்களென இந்த செய்தி சொல்கிறது. காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அறிவிக்கிற வேட்பாளருக்குத் தான் வாய்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், இந்த காலதாமதம் வேறு சில விஷயங்களையும் பூடகமாக உள்ளடக்கி ருக்கிறது என்பது மேலோட்டமாகப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கலாம்!


னால், நேருகுடும்ப வாரிசுகள், இந்த வாரிசுப்பரம்பரையைத் தாங்கிப் பிடிக்கிற சில சக்திகள் எதனால் இப்படித் தயங்குகின்றன என்பதையும் சேர்த்துப் பார்த்தால், வியப்புக்கு இடமே இருக்காது. அப்பட்டமான சுயநலமும், அவநம்பிக்கையுமே பிரதான காரணமாக இருப்பதை அரசியலை மிக மேலோட்டமாகப் பார்க்கிற எவருமே புரிந்து கொள்ள முடியும். ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில், எல்லாக் கட்சிகளிடமும் கலந்து பேசிக் கருத்தொற்றுமை கண்ட பிறகே வேட்பாளரை அறிவிக்க முடியும் என்ற ஆரம்பநிலை இப்போது, கிட்டத்தட்ட பிஜேபி தவிர அனேகமாக எல்லா எதிர்க்கட்சிகளும் தங்களுடைய விருப்பைத் தெரிவித்த பிறகும் கூடக் காங்கிரஸ் இன்னும் தயங்குகிறது என்றால் காரணமில்லாமல் இல்லை.


பிரணாப் முகர்ஜியைப் பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்வதில் அனேகமாக எல்லாக் கட்சிகளுமே ஒன்று பட்டிருப்பதான ஒரு சித்திரம் இப்போது உருவாகியிருக்கிறது. இடதுசாரிகள் வெளிப்படையாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்யவில்லை என்றாலும், பிரணாபை ஏற்பதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை -இன்னும் பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால், வேறு வழியுமில்லை.

பிஜேபியின் யஷ்வந்த் சின்ஹா, நாடாளு மன்றத்தில் வெளிப்படையாகவே தனது வாழ்த்துக்களை பிரணாபுக்குத் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனெவே சுஷ்மா ஸ்வராஜ் பேசியது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய அனுபவமோ என்னவோ, பிஜேபி அதை உடனடியாக மறுத்திருக்கிறது. யாருக்கு ஆதரவு என்பதை என்டிஏ கூட்டத்தில் தான் முடிவு செய்வோம் என்று அறிவித்திருப்பதில், பிஜேபி கூட்டணி எந்த நேரத்திலும் கலைந்து விடுகிற ஒன்றாக இருப்பதைத் தான் காட்டுகிறது என்று சொல்வதை விட, காங்கிரஸ் முதுகில் சிறிய கட்சிகள் பச்சைக் குதிரை சவாரி செய்வதைப் போல, பிஜேபி மீது சவாரி செய்ய, நிதிஷ் குமார் மாதிரி கூட்டணி ஆசாமிகள் முனைப்பாக இருக்கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும். ஆக, எல்லோரும் நினைப்பது போல, பிஜேபி அதன் வீரியம் முழுவதையும் இழந்து விடவில்லை.உட்கட்சி மோதல்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வலுத்து வருவது, எடியூரப்பா மாதிரியான ஆசாமிகளை ஆரம்ப நிலையிலேயே எலிமினேட் செய்யத் தவறியது இப்படித் தன் தவறுகளுக்காக, பிஜேபி தேசீய அளவில் பெருத்த சரிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதென்னவோ இன்னமும் குறைந்தபாடில்லை.

1975 களில் இந்திராவால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட, அறிவிக்கப்படாத நெருக்கடி, அஜெண்டாவுடன், இத்தாலிய மம்மி, ஐமு  கூட்டணிக் குழப்பத்தைத் தலைமைதாங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். 1962, 1967 பொதுத் தேர்தல்களில் காங்கிரசின் சரிவு ஆரம்பித்தது.  எனினும்,காங்கிரசுக்கு எதிரான எதிர்ப்பு ஒரே அணியில் திரள்வதற்கு 1977 வரை காத்திருக்க வேண்டி இருந்தது.

குறுகிய காலமே ஆட்சியில் இருந்தாலும், ஜனதாக் கட்சி பரிசோதனை முயற்சி நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.மிக அற்பமான காரணங்களால், அந்தக்கூட்டு முயற்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட, பலரால் சிதைக்கப்பட்டது.
இந்திராவை எதிர்த்தவர்களில் பலரை சாமர்த்தியமாகக் காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது. துணைப் பிரதமராக இருந்த சரண் சிங் பெயரைச் சொன்னால் இன்றைக்கு எத்தனை பேருக்கு நினைவிருக்கும்? மூன்றே ஆண்டுகளில், பதவியை இழந்த இந்திரா, 1980 இல் மறுபடி பிரதமரானார்.

ஜனதா பரிசோதனை தோல்வியில் முடிந்தாலும், ஜனசங்கம் என்று வடக்கே மட்டும் அறியப்பட்டிருந்த கட்சி, காந்தீய சோஷலிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, பாரதீய ஜனதா கட்சியாகப் பரிணமித்தது. அடுத்த பதினாறு வருடங்களுக்குப் பிறகு, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்தது உண்மைதான்!கூடவே களைகளாக, உட்கட்சிப் பிரச்சினைகளும் சேர்ந்து வளர்ந்தன. காங்கிரஸ் கட்சியில் இருந்த அதே அளவுக்குப் பதவிப்பித்து, ஊழல் எல்லாம் சேர்ந்தே வளர்ந்தன!

காங்கிரசுக்கு சரியான மாற்று என்று வளர்ந்திருக்க வேண்டிய ஒரு கட்சி, இதுவும் இன்னொரு காங்கிரஸ்தான் என்று சொல்லும்படியாக உட்கட்சித் தகராறுகளில் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறி ருக்கிறது.போதாக்குறைக்கு, பாபர் மசூதி இடிப்பு விவகாரம், நம்மூர் போலி மதச்சார்பின்மை வாதிகளால் நன்றாகவே பயன்படுத்திக்கொள்ளப் பட்டு, பிஜேபி ஒரு பயங்கரமான பூச்சாண்டியாக மதவாதக் கட்சியாக, காங்கிரஸ் உள்ளிட்டு எல்லோராலும் பிரச்சாரப் படுத்தப்பட்டிருக்கிறது.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரசாரத்தில் கூவிக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தன்னுடைய கூவலில்  மயங்கி பிஜேபி காங்கிரசை விட முக்கியமான எதிரியாகப் பார்க்கப்பட்டு, காங்கிரசோடு கூட்டுச் சேருகிற அளவுக்குப் போய் முடிந்தது தான்!

.....நம்முடைய ஜனநாயகக் கூத்தை இன்னும் கொஞ்சம் தொடர்ந்து பார்ப்போம்!

5 comments:

 1. இன்றைக்கு எப்படியோ தெரியாது, அன்றைய பிஜேபி ஒரு மதவாத பிற்போக்கு அரசியல்கட்சி என்பதை காங்கிரஸ் பிரசாரம் செய்து தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

  ReplyDelete
 2. வலதுசாரி சந்தர்ப்ப வாதமே இடதுசாரி அதி தீவீரவாதத்துக்குக் காரணமாக இருக்கிறது! இது லெனின் சொன்னது.கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களேயானால், எதுவும் வெற்றிடத்தில் இருந்து பிறப்பதில்லை. இருப்பவைகளில் இருந்து தான் ஒரு முரண் இயக்கமாகத் தோன்றுகிறது.அதே மாதிரித்தான், தேசம் துண்டாடப்பட்ட விதத்தில் இருந்த காங்கிரசின் கையாலாகாத்தனத்தில் இருந்தே, ஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

  ஜனசங்கம், அல்லது அதன் வழித்தோன்றலாக இன்றைய பிஜேபி உருவான விதம், காரணங்கள், காங்கிரசுக்கு ஒரு மாற்றாக வரவேண்டுமென்பதே!

  அப்புறம் இந்த முற்போக்கு, பிற்போக்கு முத்திரைகள்! இடதுசாரி சிந்தனையில் நீண்டகாலம் இருந்தவன் என்ற முறையில், இந்த முத்திரைகளுக்கு அர்த்தமே இல்லை என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்! பிஜேபி ஒரு மதவாதக் கட்சி என்று கூச்சளிடுகிரவர்களுடைய யோக்கியதையைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், அங்கேயும் இன்னொரு மதத்தைக் காப்பாற்றுகிறமாதிரியான ஒரு வேடம், சாதி அபிமானம் நிறைய மலிந்து கிடப்பதைப்பார்க்க முடியும். அப்புறம், ஜனசங்கம் அல்லது பிஜேபியை மட்டும் மதவாத முத்திரை குத்துவதே என்வரையில் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 3. சுவாரசியமான கருத்து.
  கட்சினு வரப்போ alternativeக்கும் oppositeக்கும் வித்தியாசம் தெரியாம போனது தான் நீங்க சொல்ற swingக்கு காரணம்னு நினைக்கிறேன். இடதுசாரி வலதுசாரி கொள்கைகள் எல்லா கட்சியிலும் உண்டு என்று நம்புகிறேன். பிஜேபியை நான் பிற்போக்குக் கட்சி என்றதன் காரணம் "இந்து" என்ற ஒன்றைத் தவிர எதையுமே நம்பாத, வெளிப்படையாக ஆதரிக்காத, குறுகிய மனப்பாங்கு கொண்ட கட்சித் தலைமை. மொழி வெறி கொண்ட கட்சியாகவே நடந்து வந்தது. காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்ற கூட்டணி கலையக் காரணமாக இருந்த பெரிய கட்சி பிஜேபி இல்லையா?

  ReplyDelete
 4. சாதி அபிமானம் எல்லாக் கட்சிகளிலும் காணப்படுவது உண்மை தான். பிஜேபியும் திமுகவும் அதிகமாக சாதிவெறி கொண்டாடும் கட்சிகள். பிஜேபி வெளிப்படையாக கொண்டாடுகிறது.

  ReplyDelete
 5. பெரும்பான்மையான இந்துக்க‌ள் பிரிந்து இருக்கிறார்க‌ள். ஒரு நாட்டில் சிறுபான்மையின‌ரிட‌ம் ஒருவித‌ ஒற்றுமை தானாய் உருவாகுத‌ல் உயிர்க‌ளின் இய‌ல்பு. இவ்ர்க‌ளின் கூடுமிட‌ம் ம‌த‌ம் சார்ந்த‌ இட‌ங்க‌ளாய் இருக்கும் (சிங்க‌ப்பூரில் மாரிய‌ம்ம‌ன் கோவிலில் த‌மிழ்ர்க‌ள் ஞாயிறு கூடுவ‌து ஒரு உதார‌ண‌ம், இங்கு ம‌சூதி, தேவால‌ய‌ம், சீக்கிய‌ர் கோவில்). த‌ற்காத்த‌லின் ஒரு கூறாக‌ அவ‌ர்க‌ளின் பிர‌ச்னைக‌ள் விவ‌திக்க‌ப்ப‌ட்டு ஒருமித்த‌ க‌ருத்துக‌ள் அங்கே எடுக்க‌ப்ப‌டும். அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கு, இந்த‌ ஒருமைப்ப‌ட்ட‌ நிச்ச‌ய‌மான வாக்குக‌ளின் மீதான உறுதியும் ந‌ம்பிக்கையும், நிச்ச‌ய‌ம‌ற்ற‌‌ பெரும்பான்மையின‌ரின் வாக்குக‌ளில் வைக்க‌ முடியாது. கையில் இருக்கும் ஒன்று, புத‌ரில் இருக்கும் இர‌ண்டை விட‌‌ சிற‌ந்த‌து என காங்கிர்ஸ் சிறுபான்மையின‌ரை இறுக்கி பிடித்துக் கொள்கிற‌து. அத‌னால் தான் 24 ச‌த‌வீத‌திற்குள் மேலும் 7 ச‌த‌வீத‌ம் என நீதிம‌ன்ற‌ங்க‌ளில் அலைகிற‌து. நாட்டை ஆள்ப‌வ‌ன் நாட்டின் ந‌ல‌த்தில் அக்க‌றை கொண்ட‌வ‌னாய் இருக்க‌வேண்டும். சோனியாவை த‌லைவியாய் ஏற்றுள்ள‌ எல்லா க‌ட்சியின‌ரும் சுய‌ ந‌ல‌வாதிக‌ள் தான். த‌ன் ப‌த‌வியை காப்பாற்ற‌ அல்ல‌து த‌வ‌றுக‌ளை ம‌றைக்க‌ , சோனியாவை தாய் என்பார்க‌ள், ராகுலை த‌லைவ‌ன் என்பார்க‌ள்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!