கண்ணன் பிறந்தான்! எங்கள் கண்ணன் பிறந்தான்!

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்

என்று திராவிடங்கள் போலத் தனக்கென்று சுயசிந்தனை எதுவும் இல்லாமல் தலைவன் வழிநடப்பானென்று  குதித்ததில்லை தான்! ஆனால் மகன் பிறக்கவிருந்த அந்தத் தருணங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் கொஞ்சம் ஆச்சரியம், சிலிர்ப்பு ஒருவிமான பரவசக்கலவையை  இப்போதும் வண்ணதாசன் எழுதிய இந்த வரிகளைப் படித்தபோது அனுபவிக்க முடிகிறது.

"உங்களுக்குத் தெரியும். சந்தியா பதிப்பகம் கலாப்ரியாவின் ‘மறைந்து திரியும் நீரோடை’ தொகுப்பைக் கொண்டு வந்திருப்பது.இதற்கு முந்திய நிமிடம்தான் அதைப் படித்துமுடித்தேன். அதனுடைய 192ம் பக்கத்தின் கடைசி வரி ஒட்டியிருக்கும் விரல்களால் தான் இதை எழுதுகிறேன்.

தொகுப்பில் எதை எதைப் பற்றி எல்லாமோ , மொழி, கவிதை, அரசியல், திரைப்படம், சுகுமாரன், தீபச் செல்வன், கனிமொழி, ரவி உதயன், போகன் சங்கர், ஜான் சுந்தர் கவிதைத் தொகுப்புகள் குறித்து, எல்லாம் அபாரமாக எழுதியிருக்கிறான். தானாக விழுந்த அந்தச் சொல் போல அவையெல்லாம் -அபாரம்- தான்.

பாரமானது ‘அப்பாவின் நிழல்’ என்கிற அந்தத் தொகுப்பின் இறுதிக் கட்டுரை. வாழ்வின் எடை எப்போதும் புனைவின் எடையை விட மிகக் கூடுதல் கனமானது. நிறுத்தல் அளவைகளுக்குள் ஒருபோதும் அடங்காதது. அதன் எதிர்த் தட்டில் வைக்க எடைக்கற்கள் கிடையாது. தராசு முள் முறிக்கும் துயருடையது அது. கலாப்ரியாவிடம் எதைப்பற்றிச் சொல்லவும் அழுத்தமும் ஆழமும் மிக்க துல்லிய நினைவுகள் உண்டு. எனில், அப்பாவைப் பற்றிச் சொல்ல அவனுக்கு எவ்வளவு இருக்கும்.

பூமியில் விழும் அவன் நிழல், அவனுக்கு அவன் அப்பாவுடையதைப் போலவே இருக்கிறது

அப்பா சாகும்போது
தன்னோடு எடுத்துப்
போகவில்லை
போலிருக்கிறது
தன் நிழலை
.


என்று முடிகிறது இந்தத் தொகுப்பு. இந்தப் புத்தகத்திற்கு, தலைப்பு ,மறைந்து திரியும் நீரோடை’ . இன்னொரு தலைப்பு, ‘எடுத்துப் போக முடியாத நிழல்’.

என்னுடைய நிழலையும் இப்படி என் மகன் என்றாவது  உணர்வானா என்பது எனக்குத் தெரியாது.ஆனால் என் தந்தையைப்பற்றி இதை விட மிக அழுத்தமாக அனுபவித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன்.பெரும்பாலான தந்தைகளுடைய சோகமென்னவென்றால் பிள்ளைகள் தகப்பனுடைய பாசத்தை, அக்கறையைப் புரிந்து கொள்வதே இல்லை.தகப்பன் என்றால் ஒரு கடுகடுப்பான, தன்னுடைய ஆசைகளுக்கு நந்திமாதிரிக் குறுக்கே நிற்கிற மாதிரியான சித்திரம்தான்!

1989 டிசம்பர் 7! வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். காலையில் அலுவலகத்திற்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. மைத்துனன் எனக்கொரு மகன் பிறந்திருப்பதைச் சொன்னான். உடன் வேலை செய்பவர்களுடையவாழ்த்துக்கள்,,கேலிப்பேச்சு ஐஸ்க்ரீம் வாங்கி என் கையாலேயே எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்கிற கட்டளைக்குப் பணிந்து ஐஸ் கரீமுக்கு ஆர்டர் கொடுத்து விட்டுக் காத்திருந்த நேரத்தில் சக ஊழியர்களிருவர் வாய்க்கணக்கிலேயே  மகனுடைய ஜாதகத்தைக் கணித்துச் சொன்னவேகத்தைக் கண்டு பிரமித்து ஒருவழியாக மதுரைக்குக் கிளம்பி ஊர் வந்து சேர இரவு 7 மணியாகி விட்டது, ஊர்வந்து சேர்கிற வரை இன்னதென்று சொல்லிவிடமுடியாத ஒருவித உணர்ச்சியில் உறைந்துபோய்க்கிடந்த அந்த நாள்.

ஒரு தனியார் மருத்துவமனையில் என்மகனை முதல்முதலாகப் பார்த்த அந்தத் தருணம்! குழந்தை பசியில் தன்னிரு கால்களையும் பட்டாம்பூச்சி சிறகடிக்கிற வேகத்தைவிட வேகமாக அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கால் வலிக்குமே என்று கசிந்த அந்த நிமிடம், இன்றோடு 25 வருடங்கள் நிறைகிறது. 
டீலக்ஸ் போட்டோ ஸ்டூடியோ பாலு சொன்னபடி சேந்தமங்கலம் தத்தாச்ரமம் கிருஷ்ணானந்தரிடம் வேண்டிப்பெற்ற பெயர் வாசுதேவன். அவனுக்கு ஒரு அவதூத சன்யாசியின் திருவாக்கினால் பெயர்சூட்டப்படுகிற பாக்கியமும் இருந்தது.அவனும் என்னை மாதிரியே அம்மாபிள்ளை!அம்மாவிடம் அதிக ஒட்டுதல்!!

எல்லாவிதமான மங்களங்களையும் பெற்று நீடூழி வாழ்த்த தகப்பன் என்கிற வகையில் எனக்கும் ஏதோ ஒரு கொடுப்பினை இருக்கிறது, .உங்களுடைய வாழ்த்துக்களையும் பெறுகிற கொடுப்பினையும் இருக்கட்டுமே!

5 comments:

  1. ஆஹா! ச்சோ ச்வீட்:) மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு நன்றி கவிநயா அம்மா!
    வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜேஸ்வரி அம்மா!

    ReplyDelete
  3. கிருஷ்ணமூர்த்தி சார் முதல் பாரா உங்கள் முத்திரை! தனித்துத் தெரிகிறது.
    அப்புறம் வருவது வண்ணதாசன் வரிகளா?..
    கலாப்ரியாவிடம் 'எதைப்பற்றிச் சொல்லவும்' என்று வண்ணதாசன் குறிப்பிட்டிருப்பது உண்மை.

    போனவாரம் புரட்டிப் பார்த்தேன். கலாப்ரியாவின் 'நினைவின் தாழ்வாரங்கள்' என்று இன்னொரு சுயசரிதை டைப் புத்தகம். உள்ளடக்கம் முக்கியமில்லை; எதை வேண்டுமானாலும் சுயசரிதை போல எழுதி விடலாமென்பதற்கு இந்தப் புத்தகம் இன்னொரு உதாரணம்.

    ReplyDelete
  4. வாருங்கள் ஜீவி சார்! வண்ணதாசன் கலாப்ரியாவின் புத்தகத்தைத்தொட்டு எழுதியிருந்த வரிகள் குறிப்பாக அப்பாவின் நிழல் என்னையும் கொஞ்சம் அசைத்து சுயசரிதை எழுத வைத்து விட்டது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் என் மகன் பிறந்த தருணத்தைக் கொஞ்சம் அசைபோட வைத்து எழுத வைத்ததில் இருந்தே சுயசரிதையைக் கூட ஏதோ ஒரு புள்ளியில் இருந்து எழுதிவிடலாம் என்று தோன்றியது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!