சாண் ஏறி முழம் வழுக்கும் கதை!ஊழலும் இந்திய அரசியலும்!



ஓரடி முன்னால், ஈரடி பின்னால்!

லெனினுடைய வார்த்தைகள் இவை!இங்கே நம் பக்கத்தில் சாண்  ஏறி முழம் சறுக்குவது என்போமே அது மாதிரி!

லோக்பால், ஜன லோக்பால் என்று மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டே கடைசியில் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, ஒரு உப்புக்குச் சப்பாணி மசோதாவைக் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றியிருக்கிறது. அதற்கு அரசியல் சாசன அந்தஸ்து தரும் வடிவம் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்கள் அவையில் இன்றைக்கு மதியம் தாக்கல் செய்யப் படுவதாக இருந்த இந்த லோக்பால் மசோதா, நாளை மாநிலங்கள் அவையின் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. மாநிலங்களின் அவையில் போதிய உறுப்பினர்கள் பலம் இல்லாத மத்தியில் ஆளும் கூட்டணி அரசு,கேள்விக்குரிய எல்லாவிதமான வழிமுறைகளையும் கையாளத் தீர்மானித்திருப்பதாகவே தகவல்கள் சொல்கின்றன.இந்த மசோதா மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப் பட்டால், கடைசிக் கட்டமாக, மக்களவை, மாநிலங்கள்அவை இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதில் சிம்பிள் மெஜாரிட்டி கிடைக்கிறதா  இல்லையா என்ற கட்டத்தை நோக்கி மசோதா போய்க் கொண்டிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அண்ணா ஹசாரே குறைப்பட்டுக் கொள்கிற மாதிரி ஒரு வலுவான ஜன லோக்பால் அமைப்பை காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியுமே ஏற்கத்தயாராக இல்லை என்பது மிக வெளிப் படையாகவே தெரிகிறது. அதை மறைப்பதற்கு எந்த அரசியல் வாதியுமே பிரயாசைப் படவில்லை! மாறாக, உன்னாலே உன்னாலே என்று மற்றத் தரப்பைக் கைகாட்டித் தாங்கள் தப்பித்துக் கொள்ளப்பார்ப்பதாகவே, திருத்தங்கள், ஏற்கப்பட்டதும் நிராகரித்ததும் குரல் வாக்கெடுப்பிலேயே அவசர அவசரமாக முடித்து வைக்கப்பட்ட காட்சியை மக்களவையில் பார்க்கமுடிந்தது. 

இந்த லோக்பால் மசோதாவின் கதி எப்படி இருந்தாலும், ஆளும் ஐ மு கூட்டணிக் குழப்பம் இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நாடாளுமன்றத்துக்கு இன்னொரு இடைத்தேர்தலை விரும்பாத கட்சிகள் அத்தனையும் இப்போதே ஒரு இடைத்தேர்தலை சந்தித்தால்தான் தப்பிப் பிழைக்க முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டனவோ என்றொரு சந்தேகமும் வலுவாக எழ ஆரம்பித்திருக்கிறது.

சென்ற ஆகஸ்ட் நிலவரப்படி, இந்தப்பக்கங்களிலேயே ஏற்கெனெவே பேசியிருந்ததைப் போல, உடனடியாகத் தேர்தல் என்று வந்தால், பிஜேபிக்குத் தான் சாதகமாக இருக்கும் என்றிருந்தது. இப்போது, பாரதீய ஜனதா கட்சியைக் கொஞ்சம் ஓரம் கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை அல்லது அசட்டுத் துணிச்சல் காங்கிரசுக்கும் வந்திருப்பதாகவே செய்திகள் சொல்கின்றன. தவிர, அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சோனியா போயிருந்த தருணங்களில்  அண்ணா ஹசாரே இயக்கத்துக்கு எக்கச்சக்கமாகப் பணிந்து போய் விட்டதாகவும், இப்போதாவது நிமிர்ந்து நின்று தேர்தல்களில் அண்ணாவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று இத்தாலிய மம்மி தைரியமாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றம் தான் எதையும் முடிவு செய்யும்! நாங்கள் அண்ணா ஹசாரே போராட்டத்தைக் கண்டு ஒன்றும் பயப் படவில்லை என்று காக்க காக்க கனகவேல் காக்க என்று அரண்டவன் கந்தர் ஷஷ்டி கவசத்தைக் குளறித் தடுமாறி ஒப்பிப்பது போல மத்திய அமைச்சர்கள் குழற ஆரம்பித்திருப்பதே அவர்கள் எவ்வளவு பயந்து போயிருக்கிறார்கள் என்று காட்டிக் கொண்டிருக்கிறது. 


போதாக்குறைக்கு, ஊடகங்கள் தொடர்ந்து அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆளே சேரவில்லை, ஜனங்களுடைய ஆதரவு குறைந்து போய் விட்டது என்று ஊதிக் கொண்டிருந்தாலும், சிறை நிரப்பும் போராட்டத்துக்குக் கிட்டத் தட்ட ஒரு லட்சம் தன்னார்வலர்கள் முன்வந்திருப்பதாக வெளி வந்திருக்கும் செய்திகள்  ஜனங்களுடைய மனதில் ஊழலுக்கு எதிரான நெருப்பு கனன்று கொண்டிருப்பதைக் கவனிப்பார் எவருமில்லை. 

இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்று சேர்ந்து திரட்டினாலும் கூட ஒருலட்சம் தன்னார்வலர்களை சிறை நிரப்பும் போராட்டத்துக்குத் தயார் செய்ய முடியாது என்பதை ஏனோ வசதியாக மறந்தும் மறைத்தும் விடுகிறார்கள்.

வருகிற மே மாதத்திற்குள் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் காங்கிரசின் அசட்டுத் துணிச்சலை சோதிப்பது மாதிரி நடக்க இருக்கின்றன. அந்த ஐந்திலும் மிக முக்கியமாக, உத்தரப் பிரதேசத்தில் மே மாதம் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் தான் இருக்கும். அந்த முடிவுகளை வைத்துக் கொண்டு அதன் பின் யோசிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி நினைத்திருக்குமேயானால்,உணவுப்பாதுகாப்புச் சட்டம், இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு, பெயரளவுக்கான லோக்பால் மசோதா இப்படி எல்லாவற்றிலும் அவசரப்பட்டிருக்க வேண்டியதே இல்லை.

கூடா நட்பு என்று திமுக தலைவர் கருணாநிதி காங்கிரசைச் சொன்ன மாதிரி, காங்கிரசும், கூட்டணிக் கட்சிகளின் அதிகரித்து வரும் நிர்பந்தங்களை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. முக்கியமான அமைச்சர்கள் மீது எழுந்திருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்கள், எதிர்க்கட்சிகள் வாயை அடைக்க முடியாமலும், நாடாளு மன்றத்தை நடத்த முடியாமலும் நித்யகண்டம் பூர்ணாயுசு என்று ஐந்து ஆண்டுகளை ஓட்டுவது இனி முடியாது என்று காங்கிரஸ் தத்தளிக்கிறது.

தவிர, ராவுலுக்குப் பட்டம் சூட்ட வேண்டிய வேளை வந்து விட்டது என்று தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இத்தாலிய மம்மி முடிவுக்கு வந்திருக்கலாம்! எது எப்படியானாலும்,பல விசித்திரமான பிராணிகள், திசைக்கொன்றாக ஓடும் ஜந்துக்களை வைத்து வண்டி ஓட்டுவது போல இனிமேலும் கூட்டணி அரசை நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தார்களானால், அது இயற்கையானது தான்! 

உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதா என்றால், அப்படி ஒரு அறிகுறியும் தெரியவில்லை. இன்றைக்கோ, மே மாதமோ தேர்தல் எப்போது வந்தாலும் மாயாவதியின் பி எஸ் பி கட்சிதான் முன்னால் இருக்கிறது. முலாயம் சிங் யாதவ் அடுத்த இடத்தைப் பிடிக்கலாம்! சரண்சிங்கின் மகன் அஜித் சிங்கை கூட்டணிக்குள் சேர்த்து, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கியதில். முலாயம் சிங் யாதவுக்கு விழும் வாக்குகளைப் பிரிக்கலாம். அதுபோக மைனாரிடிகளுக்கு இடஒதுக்கீட்டில்உள் ஒதுக்கீடு செய்திருப்பதில் முஸ்லிம் ஓட்டுவங்கியைக் கொஞ்சம் வசப்படுத்தி விடலாம் என்று காங்கிரஸ் போடும் கணக்கு முற்றிலும் தப்புக் கணக்காகவே ஆகி விடுகிற வாய்ப்புத்தான் இப்போதைக்குத் தெளிவாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியை இந்திய அரசியலில் இருந்து வெளியேற்றினால் ஒழிய இந்த தேசத்துக்கு விடிவு இல்லை! வேறெந்தக் கட்சியாக இருந்தாலும், அந்தக் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் வெளிப் படையாக இருக்கிறதா, கிழடு தட்டிப் போன தலைமை இல்லாமல் இருக்கிறதா, வாரிசு, குடும்ப அரசியலுக்கு இடம் கொடுக்காததாக இயங்குகிறதா என்ற கேள்விகள், வடிகட்டும் காரணிகளாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது!

தலைவர்கள் வழிகாட்டுவதற்குத்தான்! நம் தலைமேல் ஏறி மிதிப்பதற்கு அல்ல! மக்கள் குரலை செவி மடுத்துக் கேட்கிறவர்கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்! ஓட்டுப் போட்ட ஒருநாளுடன் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது முடிந்து விட்டது, வானளாவிய அதிகாரம் எங்களுக்குத்தான் என்று சவடால் பேசும் எவரையும் நிராகரிக்கும் துணிவு, உரிமை வேண்டும்!

உரிமையும் சுதந்திரமும் இலவசங்களில் கிடைக்காது, தானாகவும் வராது!

எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்? 


எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!