வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! தெரிந்தே தவறு செய்கிறவர்களுக்கு இது கூடவா புரியாது.....?


சில நாட்களுக்கு முன் ஒரு இளைஞன்  இந்தப்பக்கங்களில் அடிக்கடி தினமணி தலையங்கம் அல்லது பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு அதிகம் இடம் கொடுத்து, அப்புறம் நீங்கள் ஒரிஜினலாக எழுதுவது என்ன என்ற சந்தேகத்தை எழுப்பினான்.அந்த இளைஞன் கேட்டது ஒருவிதம்! வேறொரு தளம் அல்லது ஊடகத்தில் வெளியான வேறு செய்திக்கு அதிக இடம்கொடுக்காமல், பதிவு முழுவதும் என்னுடைய வார்த்தைகளில் இருக்க வேண்டும் என்ற உட்கிடக்கை அப்படி வெளிப் பட்டது. ஆனால் இங்கே ஒரு பதிவில், பின்னூட்டம் எழுதிய ஒருவர் வெறும் கட் அண்ட் பேஸ்ட் பதிவர் தானா நீ என்ற கேள்வியைக்  கண்டனமாக எழுப்பியிருந்தார்!அவருக்கு, அவர் சார்ந்த அரசியல் கட்சியை விமரிசனம் செய்து எழுதிவருவது பிடிக்கவில்லை என்பது தான் முக்கியமானதாக இருந்தது.

எதிரெதிரான பார்வையில் இருந்தாலும் இரண்டிலும் வருவது ஒரே கேள்வி தான்! இதர ஊடகங்களில் வெளியாகிற செய்திகளை எடுத்துக் கொண்டு, அவை சொல்ல வருவது என்ன என்ற விமரிசனத்தை முன்வைக்கும் போது சொல்லப்பட்டதை அப்படியே எடுத்தாளவேண்டிய அவசியம் பல சமயங்களில் ஏற்படுவதுண்டு. உதாரணமாக, ஜூனியர் விகடனில், இரா சரவணன் என்பவர், கனிமொழி மீது அனுதாபத்தை ஏற்படுத்துகிற மாதிரியான செய்திக் கற்பனைகளை எழுதிக் கொண்டிருந்தது, ஒரு உள்நோக்கத்தோடு செய்யப்படுபவை என்ற விமரிசனத்தை முன் வைப்பதற்காகவே அப்படியே எடுத்தாளவேண்டிய அவசியம் இருந்தது. என்ன சொல்லப்பட்டது என்று சொன்னால் தானே, அது எந்த அளவுக்கு சரியானது அல்லது கொஞ்சம் திரித்து சொல்லப்பட்டது என்பதையும் சொல்ல முடியும்?

அதே சமயம், சில நாளிதழ்களின் தலையங்கங்கள் அல்லது அதில் வெளியாகிற செய்திக் கட்டுரைகள்,மிக அருமையாக, நாட்டு நடப்பை எடுத்துச் சொல்பவையாக,இன்னும் அதிகமானவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டியவையாக இருப்பதுமுண்டு. அந்த வகையில், தினமணி நாளிதழில் வெளியாகிற தலையங்கங்கள், செய்திக் கட்டுரைகள் சிலவற்றை இந்தப்பக்கங்களில் அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.தொடர் சிந்தனையாக எழுந்த, தேவையான குறிப்புக்களுடன் இங்கே வெளியாகி இருக்கின்றன. இப்போதும் கூட, சிந்தனையைத்தூண்டுகிற இன்றைய தினமணி தலையங்கம்!

இதுகூடவா புரியவில்லை..........?

இன்றைய தினமணி தலையங்கத்தின் தலைப்பு இது! இது கூடவா புரியவில்லை என்றிருந்தாலும், நம்முடைய அரசியல்வாதிகள் தெரிந்தே தான் பல தவறுகளைத்  தொடர்ந்து  செய்துகொண்டிருக்கிறார்கள் என்று உறுதியாக நம்ப இடம் இருக்கிறது.  இவர்கள் எடுக்கும் முடிவு ஒவ்வொன்றிலும் சுயநலன் சார்ந்து இருக்கிறதே தவிர தேசத்தின் நலன் பற்றிய அக்கறையோ கவலையோ சிறிதளவும் இருந்ததில்லை.தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது மட்டுமே பிரதானமாகக் கருதுபவர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

தினமணி தலையங்கம்: இதுகூடவா புரியவில்லை....?


லோக்பால் மசோதா, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ரூபாய் மதிப்புக் குறைவு போன்ற பிரச்னைகள் வெறும் அரசியல் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. ஆனால், இவை ஒவ்வொன்றுமே நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகமாகப் பின்னுக்கு இழுக்கும் தன்மையன என்பதை யாரும் உணர்வதாகத் தெரியவில்லை. 
லோக்பால் மசோதா என்பது உயர் இடத்து ஊழலைக் குறி வைத்து எழுப்பப் பட்டாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவிட்ட ஊழலைக் களைந்தால் தான் மக்களுக்கு அரசின் திட்டங்களுடைய பலன் ஓரளவுக்காவது கிடைக்கும் என்பதால் இதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

டுத்ததாக, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வேண்டும் என்கிற அரசின் பிடிவாதத்தை எடுத்துக் கொள்வோம். ந்தியாவில் பொது விநியோக திட்டத்தை முறையாகவும் வலுவாகவும் கொண்டுவரத் தவறிவிட்டு இதையெல்லாம் வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால்தான் முடியும், அவர்களால்தான் விவசாயிகளுக்கும் அதிக விலை கொடுத்து, நுகர்வோர்களுக்கும் குறைந்த விலையில் பொருள்களை விற்க முடியும் என்பது நம்முடைய கையாலாகாத் தனத்தைப் பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்வதாகும்.
ரம்பத்தில் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் இந்தப் பன்னாட்டுச் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தின் முதுகெலும்பை முறித்துப் போட்டபிறகு தங்களது சுய ரூபத்தைக் காட்டத் தொடங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.அதைவிட பரிகாசத்துக்கு உரியது, அவர்களால் ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பது.  
53 நகரங்களில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு ஒரு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சக்தியும் திறமையும் அவர்களுக்கு இருந்தால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் தொழில்துறை மந்தமும் ஏன் இன்னமும் நீடிக்க வேண்டும்? அங்கேதான் பல வால்மார்ட்டுகள் இருக்கின்றனவே?

தொழில்துறை உற்பத்தி முதல் முறையாக இந்த ஆண்டு மைனஸ் 5.1% ஆக அக்டோபரில் பதிவாகியிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 2011-12-ல் 7% ஆகத்தான் இருக்கும். 2013-14-ல் தான் 8% என்ற அளவை எட்டும் என்று "ஃபிட்ச்' என்ற தர நிறுவனம் கணித்திருக்கிறது. இது ரிசர்வ் வங்கியும் மத்திய திட்டக் கமிஷனும் மத்திய நிதித்துறையும் கணித்ததைவிட மிகவும் குறைவு என்பது மட்டுமல்ல, உண்மையும்கூட. 

ர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மட்டும் அல்லாமல் கடன்கள் மீது வங்கிகள் வசூலிக்கும் வட்டியை மார்ச் 2010 முதல் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு காலாண்டிலும் இடைவிடாமல் உயர்த்திக் கொண்டே வருவதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடைசியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது. திங்கள்கிழமை ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.52.84 ஆக இருந்தது செவ்வாய்க்கிழமை ரூ.53.23 ஆக மேலும் சரிந்து விட்டது. 

து 2012 பிப்ரவரி வரை நிச்சயம் தொடரும் என்றே பேசிக்ஸ் பாரெக்ஸ் என்ற அமைப்பின் இயக்குநர் கே.என். தே தெரிவிக்கிறார்.டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்புக் குறைந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. 

வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கியிருந்த கடன் பத்திரங்களின் காலம் முடிவடைந்து வருவதால் அவற்றுக்கு டாலர்களாகத் திருப்பித் தர வேண்டி ருக்கிறது. அடுத்ததாக, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெற்று தாய் நாடுகளுக்கு அதிக அளவில் அனுப்பி வருகின்றன.குளிர்காலம் நெருங்குவதால் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயை இந்தியா அதிகம் வாங்க நேர்கிறது. இதற்காக அதிகம் அன்னியச் செலாவணி தேவைப் படுகிறது. இந்தக் காரணங்களால் டாலருக்குத் தேவை மிகுந்து இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிறது என்று தெரிகிறது. 

ல்லாவற்றையும்விட இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களின் மதிப்பைவிட இறக்குமதி செய்யும் பண்டங்களின் மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த வகையில் வெளிவர்த்தகப் பற்றாக்குறை கடந்த நவம்பரில் 19.5 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டிவிட்டது. இவையெல்லாம் நம்முடைய பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் அறிகுறிகள்.இன்னமும் இவற்றையெல்லாம் பூசி மெழுகாமல் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். 
 
மதர்மக் கொள்கைகள் வெறும் சித்தாந்த கோஷங்கள் அல்ல; இந்தியா போன்ற 30% அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழை நாடுகளில் கிடைப்பவற்றை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து வறுமையிலிருந்து மீள சுயச்சார்பைப் பெறுவதே சரியான வழிமுறையாக இருக்கும்.இதையெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவனிக்கிறதா, கவலை கொள்கிறதா என்று தெரியவில்லை. 

பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களிடம் வழங்கியதைப்போல, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கவலைப்படும் பொறுப்பையும் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. 

வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதைப்போல, நாட்டுக்கு நாடு அதனதன் பிரச்னைகள் இருக்கின்றன. ஒரு நாட்டுக்குப் பொருத்தமான தீர்வு இன்னொரு நாட்டுக்கும் பொருந்தும் என்று எதிர்பார்ப்பது தவறு. 

நமது பிரச்னையைத் தீர்க்க, டோக்கியோவையும், வாஷிங்டனையும், மாஸ்கோவையும், லண்டனையும் எதிர்பார்க்காமல் கட்சி மன மாச்சரியங்களை மறந்து கைகோக்க வேண்டிய நேரம் இது. இதுகூட ஏன் நமது தலைவர்களுக்குப் புரியவில்லை?


தினமணி தலையங்கம் எழுப்புகிற கேள்விகளைக் கொஞ்சம் நீங்களும் உரத்த குரலில் கேளுங்களேன்!

தொடர்புடைய இன்னொரு பதிவு இங்கே தெஹெல்கா இதழில் வெளிவந்த செய்தியை வழக்கறிஞர் திரு சுந்தரராஜன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவருக்கு நன்றியுடன். 

6 comments:

 1. //53 நகரங்களில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு ஒரு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சக்தியும் திறமையும் அவர்களுக்கு இருந்தால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் தொழில்துறை மந்தமும் ஏன் இன்னமும் நீடிக்க வேண்டும்? அங்கேதான் பல வால்மார்ட்டுகள் இருக்கின்றனவே?//
  நெற்றியில் அடித்தாற்போல் ஒரு கேள்வி! உண்மை தானே!
  நீங்கள் பல இடங்களிலிருந்து தொடர்புடயவைகளை எடுத்து எழுதுவது மிக உபயோகமாக இருக்கிறது. ஒரு விஷயத்தை முழுமையாக புரிந்து கொள்வதற்கு இது உதவியாக இருக்கிறது. உங்கள் பாணியை தொடருங்கள்..

  ReplyDelete
 2. சைனாவில் ஒரு சட்டம் இருந்தது.. இப்போது தளர்த்தியிருக்கிறார்கள். ஒரு மாநிலத்து பிரஜை இன்னொரு மாநிலத்தில் தொழில் செய்யவோ படிக்கவோ மைய, மாநில உத்தரவுகளை பெற வேண்டியிருந்தது. 'இது என்ன காட்டுச்சட்டம்?' என்று எல்லாரும் சொன்னார்கள்... ஓரளவுக்கு அடக்குமுறை சட்டம் என்றாலும், முப்பது வருடங்களுக்குப் பிறகு இன்றைய சைனாவின் பரவலான வளர்ச்சியைப் பார்க்கும் பொழுது அந்த காட்டுச் சட்டத்தின் தொலைநோக்குப் பலனை எல்லாரும் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். அதே போல் அவர்கள் நாட்டு வளத்துக்காகப் போட்ட திட்டங்கள் எல்லாமே பதினைந்து இருபது வருடத் திட்டங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மலையை நகர்த்தியிருக்கிறார்கள். இன்றைக்கு சைனா என்றால் உலகமே நடுங்கும் அளவுக்கு அவர்களுடைய வளர்ச்சி அமைந்து விட்டது.

  சைனாவின் கம்யூனிச ஆளுமை தான் இதற்குக் காரணமா? ஏற்க முடியவில்லையென்றாலும் மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம் ஏற்படத்தான் செய்கிறது.

  சைனாவின் அரசியல் கொள்கைகளில் எனக்குத் துளிக்கூட உடன்பாடு கிடையாது - எனினும் சில parallelகள் இருப்பதாக உணர்கிறேன். ஐம்பது அறுபதுகளில் இந்தியாவை விட வசதியான நாடென்றாலும் சைனாவும் ஏழை நாடாகத் தான் இருந்தது. அன்றைய சோவியத்தின் நிழலில் நடமாடிக் கொண்டிருந்தது. கூடவே தன் சுய வளர்ச்சிக்கான திட்டங்களையும் மெள்ள மெள்ள அமலாக்கியது. இந்தியாவில் அந்த தொலை நோக்கைத் தொலைத்தோம். நேருவிலிருந்து அத்தனை தலைவர்களும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் கட்சியை வளர்க்கவும் இன்னபிற கண்மூடித்தனங்களை வளர்த்து சுதந்திரத்தின் பொருளையே நாசப்படுத்திவிட்டார்கள் என்று தோன்றுகிறது. இவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தான் கடைசியில் இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் - என்றாலும், ஆளுமை என்ற உயரத்தில் கொண்டு நிறுத்தியவர்கள் அதற்கேற்ப நடக்கவில்லை என்று புரிந்ததும் அதை வெட்டியெறியத் தெரியாமல் தவிக்கிறோம்; அதைப் புரிந்து கொண்டு அரசியல்வாதிகளும் சுகமாகக் குளிர் காய்கிறார்கள். இந்நிலையில் தலைவர்களிடம் எத்தனை கேள்விகள் கேட்டும் பயனில்லாமல் போகும்.

  இன்றைக்கு பல dimensionகளில் இந்திய வளர்ச்சிக்குத் தோதான காரணிகள் இருக்கின்றன. இதைப் புரிந்து கொண்டு, at least மாநில அளவிலாவது பொறுப்புள்ள தலைமைகள் தோன்றுமானால் - ஓரளவுக்கு federated states போன்ற அமைப்பு ஐம்பது ஆண்டுகளில் வரலாம். இல்லையென்றால் இத்தனை பரந்து விரிந்த இந்தியாவை ஒரு நாடாகக் கட்டி ஆளுவது மிகச் சிரமம் என்றே நினைக்கிறேன்.

  தலையங்கத்தில் இருக்கும் புள்ளிவிவரங்களும் செய்திகளும் உலக நாடுகள் பலவற்றுக்குப் பொருந்தும் - புள்ளி விவரத்தை சற்றே localize செய்தால். ஒரு நாட்டுக்குப் பொருந்தும் தீர்வு அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது என்பதும் மிகச் சரி. இருப்பினும், மாஸ்கோவைத் தவிர மற்ற நகர நாடுகளில் அடிப்படை அரசியல் நாகரீகமும், ஓரளவுக்கு மக்கள் நல அக்கறையும் கட்சியளவிலும் ஆட்சியளவிலும் கடைபிடிக்கப் படுகிறது. இந்தியாவில் இரண்டையுமே காணோம் - தலைவர்களைக் கேட்டு என்ன பயன்? அதற்காகக் கேட்காமல் இருக்கக் கூடாது :) தொடர்ந்து கேட்க வேண்டும். தினமணியின் கழுத்தைப் பிடிக்கக் கட்சிக்காரர்கள் வந்தது தொண்டை கமறாமல் தொடர்ந்து கேட்க வேண்டும். ஊதுகிற சங்கை ஊதி வைக்க வேண்டும். விடிந்து தானே ஆகவேண்டும்?

  ReplyDelete
 3. 8% பொருளாதார வளர்ச்சியைக் குறைவாகச் சொல்கிறார்களா? எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இது அதிகம் என்று தோன்றுகிறதே? இதை sustain செய்யும் தந்திரங்கள் தான் நமக்குத் தேவை. வளர்ச்சியின் பலன்களை பரவலாக்கும் விதங்கள் தேவை.

  ReplyDelete
 4. வாருங்கள் திரு.பந்து!

  எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு என்பது எங்கேயும் இல்லை.கடன் வாங்கிக் கல்யாணம் என்ற ரீதியில் கடனால் பொருளாதாரத்துக்குப் புது எழுச்சி ஊட்டிய கீனிஷியன் பொருளாதாரக் கொள்கையின் உபயோகம் தற்காலிகமானதுதான் என்பதை அமெரிக்கப் பொருளாதரத்தில் தொடர்ந்து வரும் சரிவுகள் பாடம் புகட்டுகின்றன. பாடம் கற்றுக் கொள்ள அமெரிக்க கார்பரேட், வங்கி, நிதித்துறையின் பேராசை இடம் கொடுக்கவில்லை.

  மாறாக, தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பவன் கூட இருப்பவனையும் சேர்த்து மூழ்கடிக்கிற மாதிரி, சரிந்துவிழும் அமெரிக்கப்பொருளாதாரம், தன்னோடு மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து வருகிறது. முதுகெலும்பில்லாத அரசியல் கட்சிகள் ஆட்சி செய்யும் நாடுகள், அமெரிக்காவின் சர்வைவலுக்காகப் பலியாகிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறதா?

  இந்தியாவில் முதுகெலும்பு என்றால் என்ன என்றே தெரியாத ஒரு கட்சி தான் கூட்டணி தர்மத்தில் ஆண்டு கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 5. வாருங்கள் திரு அப்பாதுரை சார்!

  ஒரு விஷயத்தைக் கவனப்படுத்த வேண்டும், ஆரோக்கியமான உரையாடல், விவாதமாக வளரவேண்டும் என்று ஆசைப்பட்டே இந்தப் பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

  மேம்போக்காகப் பேசிவிட்டுப் போகாமல், நுட்பமாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று கவனித்து பின்னூட்டங்களை நேரம் எடுத்துக் கொண்டு எழுதியதற்காக உங்களுக்கும் திரு பந்துவுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

  2009,2010 ஆம் ஆண்டுகளிலேயே சீனா அறுபது, சீனப் பெருமிதம், சீனப்பூச்சாண்டி என்ற குறியீட்டுச் சொற்களில் தேடினால் கிடைக்கக் கூடிய பதிவுகளை எழுதியிருக்கிறேன்.உங்களுடைய கேள்விகளுக்குப் போதுமான அளவுக்கு அங்கே விடைகள் இருக்கின்றன.

  1980 வரையிலுமே கூட, சீனா, மாசேதுங்கின் வரட்டுக் கம்யூனிசம், கலாசாரப் புரட்சிகளால் சீரழிக்கப்பட்டதாகவே இருந்தது. மாசே துங் ஆதரவாளர்களால் விரட்டியடிக்கப்பட்ட டெங் சியாவோ பிங் , கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் தன்னுடைய செல்வாக்கைப் பெற்றபின், கம்யூனிஸ்ட் கட்சியின் அனாவசியமான வறட்டு சித்தாந்தங்கள், over protectionism, எல்லாவற்றையும் உதறிவிட்டு, சந்தையை அமெரிக்காவுக்குத் திறந்து விட்டார்.

  இரண்டு தரப்புக்குமே ஆதாயம் தருமா என்ற கேள்விக்கு ஆமாம் என்று விடை கொடுக்கக் கூடிய துறைகள் மட்டுமே சீனாவுக்குள் தங்கு தடையின்றி அனுமதிக்கப்பட்டன. கூடவே, சீனா, நவீன தொழில்நுட்பத்தையும் பெற்றது.பல தொழில் நுட்பங்களைக் களவாடியது என்றே உண்மையை உடைத்துச் சொல்லலாம். விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த நூறு கோடிக்கும் அதிகமான மக்கள், குறைந்தபட்ச வேலை உத்தரவாதத்தைப் பெற முடிந்தது.

  சீனா இப்போதிருக்கும் அசுர வளர்ச்சியை முப்பதே ஆண்டுகளில் சாதித்திருக்கிறது.

  தேவையில்லாத சுமையாக கம்யூனிசம் அல்லது சிவப்பு நாடாக்களை உதறி எறிந்தும், தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அம்சங்களையும் அறவே தவிர்த்து விட்டும் சீனா உலகத்தின் வலிமையான பொருளாதார சக்தியாக அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் அதுவரை இருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது பொருளாதார சக்தியாக சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே முன்னேறி விட்டது.
  என்னதான் சீனா நெருப்பைக் கக்கும் டிராகனாகப் பூச்சாண்டி காட்டினாலும், மற்றைய முன்னேறிய பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ஒரு அசுர வேகத்தோடு சீனா முன்னேறிக் கொண்டிருந்தாலும், இது நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் இல்லை என்றே சீன விவகாரங்களைக் கூர்ந்து கவனித்து வரும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!