சின்ன மீன்களைப் பலி கொடுத்துவிட்டுத் திமிங்கிலங்கள் தப்பித்துக் கொள்கிற அதிசயத்துக்கு இன்னொரு பெயர், நேரு குடும்பத்து வாரிசுகளால் வழி நடத்தப்படுகிற இந்திய ஜன நாயகம்!
காங்கிரஸ் கட்சி மேலிடப் பார்வையாளரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ கே அந்தோணி, ஆதர்ஷ் சொசைடி ஊழல் தொடர்பாக விசாரித்து விட்டு சி பி ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கட்சிக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்!
ஊழல் அம்பலமாகிப் போன பின்னாலும் கூட, அசோக் சவான், தான் தவறே செய்யவில்லை என்றும் உண்மை விரைவில் வெளியே வரும் என்றும், காங்கிரஸ் உயர்ந்த தார்மீக நெறிகளைக் கடைப் பிடிப்பதாகவும் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் பாருங்கள், அங்கே தான் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் வாலறுந்த நரி மாதிரி, எல்லோருக்கும் அதன் உண்மையான யோக்கியதையைப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது!
கல்மாடி, சவான் இரண்டு பேர் மட்டும் தான் ஊழல் செய்தார்களா?
இவர்களைப் பதவி விலகச் சொன்னதனால் மட்டுமே காங்கிரசும், சோனியா குடும்பமும் ஊழலற்ற பரிசுத்தவான்களாக ஆகிவிட முடியும் என்றால், இந்தக் கொடுமைக்கு வேறென்ன சொல்வது?
ஆ! ராசா! என்று வாயைப் பிளந்து கொண்டே சும்மா நின்றுவிட வேண்டியது தானா?!
செய்வதெல்லாம் செய்துவிட்டு, சும்மாக் கொஞ்சம் இலவசங்களை அள்ளியிறைத்துவிட்டு, தப்பித்துக் கொண்டு விட முடியும் என்றால், அதற்குப் பெயர் ஜன நாயகம் தானா?
இந்த வீடியோவைப்பாருங்கள்! தலை குனிந்து நிற்க வேண்டியவர்கள், அரசியலில் தலையெடுக்கவே முடியாதபடி ஒதுக்கித் தள்ளப் பட வேண்டியவர்கள் எல்லாம் எவ்வளவு தெனாவெட்டாக நிற்கிறார்கள்!
காங்கிரசைத் தலையெடுக்க முடியாதபடி, அழுத்தமான ஒரு பாடம் புகட்ட முடியாவிட்டால் இந்த தேசத்தை எவருமே காப்பாற்ற முடியாது!
Congress Party and congressmen should be vanished from Tamilnaadu, because Congress is the only party revenging Tamilians in Katcha theevu, Cauvery issue, Mullai periyaar issue, Paalaar issue, Srilankan Tamil's rehabilitation, Fishermen's attack by Srilankan Navy...etc.
ReplyDeleteகாங்கிரஸ் திறமையாக தன் கூட்டணி கட்சியை காப்பாற்ற சிபிஐ யை பயன்படுத்துகிரது..பாவம் அந்த அதிகாரிகள்
ReplyDeleteமுதல் வருகை, கருத்துக்கு நன்றி திரு சாயி கோகுல கிருஷ்ணா!
ReplyDeleteஉங்களுடைய வலைப் பூவில், வேலைவாய்ப்பு செய்திகளைப் பிரசுரம் செய்து, ஒரு நல்ல சேவையை செய்து கொண்டிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.
காங்கிரசை, நிராகரிக்கவேண்டும் என்று சொல்வது, அது காலாவதியாகிப் போன, எதற்குமே உதவாத, முதுகெலும்பில்லாத, சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கத் தரியாதவர்களால், தலைமை முதல், கடைசித் தொண்டன் வரை நிரப்ப பட்டிருக்கிற தண்டம் என்பதனால் மட்டுமே.
தமிழனை ஏதோ காங்கிரஸ் கட்சி மட்டும் தான் வஞ்சம் தீர்த்துக் கொண்டிருக்கிற மாதிரியான உங்கள் கருத்து எந்தவிதத்திலும் சரியானது இல்லை இந்தக் குற்றச் சாட்டை வைப்பதற்கு முன்னால், தமிழர்களுடைய நலன் காக்கப் பிறந்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிற கட்சிகள் அப்படி என்ன தமிழர்களைக் காப்பாற்றுகிறமாதிரி செய்து விட்டார்கள் என்பதை யோசித்துப் பார்த்துவிட்டு சொல்லியிருக்க வேண்டும். போபால் விஷ வாயு, மும்பைத் தாக்குதல் என்று பலவிதங்களிலும் சொந்த ஜனங்களுடைய நலன்களையே பாதுகாக்க முடியாத, திராணியற்ற ஒரு கட்சியாக இருக்கிற நிலையில், ஈழத் தமிழர்கள் பிரச்சினையை வைத்துக் காங்கிரசை எடைபோட வேண்டிய அவசியம் எங்கே இருந்து வந்தது?
வாருங்கள் ஆர் கே எஸ்!
ReplyDeleteஏதோ இப்போது தான் புதிதாக, அதுவும் கூட்டணிக் கட்சியைக் காப்பாற்றத் தான் சி பி ஐ அமைப்பைப் பயன்படுத்துகிற மாதிரி....அப்படி நினைப்பதில் எந்த உண்மையும் இல்லை. இன்றைக்கு இல்லை, காங்கிரஸ் ஆரம்ப நாட்களில் இருந்தே, அரசு அமைப்புக்களைத் தன்னுடைய சுயலாபத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டே வந்திருப்பதை, கொஞ்சம் பொறுமையாகத் தேடிப் பார்த்தால், நீங்களே கண்டு கொள்ள முடியும்.
ஆட்சியைப் பிடிப்பதற்காக ஆள் பிடிக்கிற வேலையைக் காங்கிரஸ் கட்சி முதல் பொதுத் தேர்தல் நடந்த 1952 இலிருந்தே ஆரம்பித்து விட்டது. பிள்க்ளையார் சுழி போட்ட மாநிலம் தமிழ்நாடுதான்! போட்டது கூட, குல்லுக பட்டர் என்று திராவிட இயக்கத்தவரால் அர்ச்சிக்கப்பட்ட ராஜகோபாலாசாரிதான்! சுயேட்சைகள் காங்கிரசுக்கு ஆதரவாக மாறி,ஆட்சி ஸ்திரமானதும், ராஜாஜியைக் கழற்றிவிட்டதும் காங்கிரஸ் தான்.
வருமான வரித் துறையை வைத்து சினிமா நடிகர்கள், நடிகைகளைக் கட்சிக்குள் இழுத்தது, எதிர்ப்பவர்களை வழக்குப் போட்டு தொந்தரவு கொடுப்பது என்று பெரிய அளவில் செய்ய ஆரம்பித்தது "நிலையான ஆட்சியை தருவதற்கென்றே" நேரு பெற்றெடுத்த இந்திரா ஆண்ட காலத்தில் தான்! சுதந்திரத்துக்குப் பிந்தைய காங்கிரஸ் வரலாறு என்பதே கழிசடைகளின் வரலாறு தான்!
காங்கிரசைப் பற்றி எழுதாமல் ஒரு மாதம் பதிவு போட முடியுமா உங்களால்?!! எம் கே டி பாகவதர் திருநீலகன்டரில் சொல்வது போல 'மனதாலும் நினையேன்' என்று இருக்க வேண்டும்..!!!
ReplyDeleteவாருங்கள் ஸ்ரீராம்!
ReplyDeleteவெறும் பொழுதுபோக்கு, மொக்கை போடுவதற்காக மட்டும் எழுதுவதாக இருந்தால், காங்கிரசைப் பற்றி ஒரு மாதம் என்ன, ஆயுள் முழுக்கவே சட்டை செய்யாமல் இருந்துவிட முடியும்!
காங்கிரசைப் பற்றி எழுதுவதற்கு நல்லவிதமான செய்திகளே இல்லை என்பதென்னவோ உண்மைதான்!அதற்காக காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத் தனத்தை நம்மால் முடிந்தவரை எடுத்துச் சொல்லத் தவறினோமேயானால் , அதனால் இந்த தேசம் அனுபவித்து வரும் துயரங்களைப் பார்த்துக் கொண்டு வெறும் ஜடமாக, சும்மா இருப்பதற்கு சமம்!
அதற்கு நான் தயாராக இல்லை!
//சின்ன மீன்களைப் பலி கொடுத்துவிட்டுத் திமிங்கிலங்கள் தப்பித்துக் கொள்கிற அதிசயத்துக்கு இன்னொரு பெயர், நேரு குடும்பத்து வாரிசுகளால் வழி நடத்தப்படுகிற இந்திய ஜன நாயகம்!//
ReplyDeleteஇதைவிட வேறு என்ன/எப்படி சொல்லி விளக்க முடியும்.
நேருவின் கிருஷ்ணமேனன் ஜீப் ஊழல் (1948) தொடங்கி,
நகர்வலா, போபர்ஸ்,ரஷ்யாவின் கேஜிபி கணக்கு எனத் தொடரும்
குடும்ப ஊழல்களின் சொந்தக்காரர்கள் தான், நாட்டை காக்க,
இத்தாலில் இருந்து வந்த தங்கத் தாயாய் ஜொலிக்கிறார் இந்த ஊழல் கும்பல்களுக்கு.
ஏ ராஜாவின் ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி மஹா ஊழலுக்கு
இரண்டு வருடங்களாய் இன்னும் தீர்வு இல்லை. காங்கிரஸ்காரர்களின் ஊழலுக்கு
கட்சியும் அதன் தலைமையும் தான் பொறுப்பு ஏற்று பதிவி விலக வேண்டும்.
உயர்நீதி மன்றம் தேர்தல் செல்லாது என்றால், மந்திரிசபையை கலைத்து பதவி விலகாது,
நாட்டுக்கு அவசரநிலை கொண்டுவந்தவரின், ஷேக் அப்துல்லாவுக்காய், காஷ்மீரை
பிரச்னை பூமியாக்கியவர்களின் வாரிசுகளிடம் எந்த நியத்தை எதிர்பார்க்க முடியும்.
வாருங்கள் வாசன்!
ReplyDeleteஊழலைப் பற்றி மக்கள் கவலைப்படுகிற மாதிரித் தெரியவில்லை! மரத்துப் போன ஜடங்கள் மாதிரி, தங்களைச் சுற்றி நடக்கும் அவலங்களைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைகொள்ளாமல், இலவச டீவீக்களில் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருப்பது ஒன்றே போதும் என்று ஜனங்களையும் ஆக்கி வைத்திருக்கிறார்கள் பாருங்கள், அங்கே தான் இத்தனை கோளாறுகளுக்கும் ஆணிவேர் இருக்கிறது.
இனி பொறுப்பதில்லை, எரிதழல் கொண்டுவா என்று பீமன் சொல்வதாக பாஞ்சாலி சபதத்தில் பாரதி பாடிய வரிகள் தான் இதை எழுதுவதற்கு அடிநாதமாக இருக்கிறது.