இது சோனியாவுக்கு வந்த சோதனை மட்டும் தானா?


 
இது சோனியாவுக்கு வந்த சோதனை மட்டும் தானா?

சென்றபதிவில் திரு அப்பாதுரை இந்த ஜனாதிபதி பதவியே அவசியம் தானா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்!இன்னும் கொஞ்சம் கேள்விகள் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!

இன்னும் மூன்றே மாதங்களில் பிரதிபா பாடீல் ஜனாதிபதி மாளிகையை விட்டுக் காலி செய்து, வேறு ஒருவர் அங்கே தேர்ந்தெடுக்கப் பட்டவராக குடியேற இருக்கிறார் என்பது வெறும் செய்தி. ஆனால் அந்த வெறும் செய்திக்குப் பின்னால் என்னென்ன உள்ளடி வேலைகளைக் காங்கிரஸ் கட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்னால்,தான் போடும் தாளத்துக்குத் தலையாட்டுகிற ஒரு பொம்மையை ஜனாதிபதியாக்கிக்  காங்கிரஸ் தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொண்ட மாதிரி இப்போதும் செய்ய முடியுமா என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. தவிர, சென்ற தருணத்தில் இருந்தது போல  ஐமு கூட்டணிகுழப்பம் வெர்ஷன் இரண்டில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளுடனான உறவும் இப்போது சுமுகமாக இல்லை.
காங்கிரசின் பலவீனமான நிலையை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் கூட்டணிக்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் 2014 தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டு பலகுரல் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்திருக்கின்றன. முதலில் பொது வேட்பாளர் என்ற ரீதியில் தான் பேச்சுக்கள் அதிகார பூர்வமற்ற முறையில் நடந்தன. துணை ஜனாதிபதி பதவிக்கு பிஜேபி வேட்பாளரை ஆதரிப்பது, பொது வேட்பாளரை பிஜேபியும் ஆதரிப்பது என்று ஆரம்பித்து இன்றைக்குக் காங்கிரஸ்  நிறுத்தும் எந்த வேட்பாளரையும் ஆதரிப்பது இல்லை என்று பிஜேபி உறுதியாக அறிவித்திருப்பதில் முடிந்திருக்கிறது.

சென்ற முறையை விட,பிஜேபி இப்போது உட்கட்சி விவகாரங்களில் பெருத்த சரிவை சந்தித்துக் கொண்டிருந்தாலும்,காங்கிரசை அதன் கொம்பைப் பிடித்து ஆட்டிப் பார்த்துவிடுவது என்ற உறுதியோடு களம் இறங்குகிறது.அதிமுக உட்பட சில மாநிலக்கட்சிகள் கொஞ்சம் வலிமையோடு காங்கிரசைப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. முலாயம் சிங் யாதவ், அப்துல் கலாமைப் பொது வேட்பாளராக அறிவிக்க விரும்புகிறார் என்ற செய்தி வந்தவுடனேயே, பிஜேபி சாமர்த்தியமாக, அப்படி அப்துல் கலாமை எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால் அதை ஆதரிப்போமென்று அறிவித்துவிட்டு, கூடவே துணை ஜனாதிபதி பதவிக்குத் தங்கள் கட்சி பரிந்துரைக்கும் ஒருவருக்கு அவர்களிடம் ஆதரவு கோருவோம் என்றும் அறிவித்திருப்பது இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இருக்கும் என்ற நிலையை மெல்ல மெல்ல உருவாக்கி வருகிறது.
 
முலாயம் சிங் யாதவ், காங்கிரசோடு வெளிப்படையாக மோதுவதைத் தவிர்த்து வந்தாலும், அவருடைய கவனமும் அடுத்து வரும் நாடாளுமன்றத்  தேர்தல்களின் மீதே இருக்கிறது.மாயாவதி தற்காப்புக்காகக் காங்கிரசை அண்டியே நிற்க வேண்டும் என்ற காங்கிரஸ் கணக்கு முந்திப்பலித்தது போல இப்போதும் பலிக்குமா என்பது சந்தேகம்! மம்தா பானெர்ஜி காங்கிரசுக்குத் தூக்கமில்லாத பலநாட்களைக் கொடுக்கும் தலைவலியாக இருந்தாலும், அவரைப் பல வகையிலும் குளிர வைத்து, ஆதரவைப்பெற்று விடமுடியும் என்ற நம்பிக்கையோடு காங்கிரஸ் இருக்கிறது.



கனிமொழி விவகாரத்தில் கொஞ்சம் இளக்கம் காட்டினாலே போதும், திமுக ஆதரவு தானாகக் கிடைத்து விடும் என்பது காங்கிரஸ் காரர்களுக்குத் தெரியாதா என்ன! கருணாநிதியும் துணைவி, கனிமொழி சகிதமாக துணைவி வீட்டில் வைத்து அந்தோணியை சந்தித்தது அவரை மாதிரி ஒரு சீனியர் அரசியல்வாதி எதை எதிர்பார்ப்பார் என்பது அவ்வளவு பெரிய ரகசியமா! டெசோ புசோ என்று குழிதோண்டிப்புதைத்த பினத்தைத் தோண்டி எடுத்து ஒப்பாரி வைப்பது போல ஈழத்தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்தது பின்னால் தான் என்றாலும் பெங்களூருவில் மகள் செல்வி வீட்டில் வைத்து பிஜேபி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாதா என்ன! அந்தோணி வந்து சந்திப்பதற்கு முன்னாலேயே அமலாக்கத்துறை தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு கனிமொழிக்கு சம்மன் அனுப்பியது கூட இந்தத் தேர்தலில் திமுகவை வேறெந்தப் பக்கமும் சாயவிடாமல் இருப்பதற்காகத் தானே!

இடதுசாரிகளின் ஆதரவை எளிதாக பிஜேபி பூச்சாண்டி காட்டியே பெற்று விடலாம் என்று காங்கிரஸ் நம்புகிறது.இடதுசாரிகளைக் குளிர வைக்கிற மாதிரி, இப்போது துணை ஜனாதிபதியாக இருப்பவரையே நிறுத்தலாமென்ற யோசனையைக் கருணாநிதி கூட ஆதரித்திருக்கிறார். 

ஆனால், அவரை நிறுத்தினால் இடது சாரிகள் ஆதரவு கிடைக்கலாம், மம்தா ஆதரவு கிடைக்காது!இந்திய அரசியலில் இடதுசாரிகள் ஆக்க பூர்வமான பங்களிப்பு என்பது எமெர்ஜென்சி  தருணங்கள் தவிர  பிறகு அவ்வளவாக இல்லை என்ற கசப்பான உண்மையை வருத்தத்தோடு ஒப்புக்கொண்டாக வேண்டியிருக்கிறது. தோழர்களை வாரான் வாரான் பூச்சாண்டி பிஜேபி வடிவிலே என்று கேலியாக சொன்னால் கூடப் போதும், தடம் புரண்டு காங்கிரசைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து விடுகிற அளவுக்குத்தான்  அவர்களுடைய அரசியல் விவேகம் இருக்கிறது.

ஆனால், இப்போது நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை விட, யார் யார் போட்டியிடப் போகிறார்கள், யார் யார் எதற்காக அவர்களை ஆதரிக்கிறார்கள், அல்லது எதிர்க்கிறார்கள் என்பதே மிக சுவாரசியமான ஆட்டமாக, இந்திய அரசியல் எந்த அளவுக்குச் சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.

தேசீயக்கட்சியான காங்கிரஸ், மாநிலங்களின் உணர்வை மதிக்கத் தவறியது என்பதாலேயே மாநிலக் கட்சிகள் கடந்த ஐம்பது வருடங்களில் காங்கிரசை மாநில அளவில் தோற்கடித்து முன்னுக்கு வந்தன. அப்படி முன்னுக்கு வந்த மாநிலக்கட்சிகள், தேசீயக் கண்ணோட்டத்தோடு வளர்ந்தனவா, ஒரு பொதுவான செயல்திட்டத்தோடு காங்கிரசுக்கு மாற்றாகத் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கிக் கொண்டனவா என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள்! மாநிலக்கட்சிகள் தேசீய அளவில் ஒரு பெரிய மாற்றாக வளரவே இல்லை என்பதும், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப்போன காங்கிரஸ் அந்த ஒரு காரணத்தினாலேயே இன்னமும் தேசீய அளவில் பெரிய பிஸ்தா மாதிரித் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடிகிறது என்பதும் புரியும்.

கட்டெறும்பாகிப்போன காங்கிரசை எல்லாவகையிலும் தோற்கடிப்பது ஒரு ஆரம்பம் மட்டுமே!குறுகின கண்ணோட்டங்களோடு செயல்படும் மாநிலக் கட்சிகளை நிராகரிப்பதும்  இப்போது தேவைப்படுகிற நிவாரணம்.


ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசும், இதர அரசியல் கட்சிகளும் செய்கிற கூத்துக்கள், இது சோனியாவுக்கு வந்த சோதனை என்று மட்டும் ஒரே வரியில் முடித்து விட முடியாது! இந்த தேசத்தின் அரசியல் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது, இதை சரி செய்வதற்கு எவ்வளவு ஜெயப்பிரகாஷ் நாராயணன்கள், அண்ணா ஹசாரேக்கள் வந்து பிரயாசைப்பட வேண்டியிருக்கும் என்பதை யோசிக்கும் போதே தலை சுற்றுகிறது

சோனியாவுக்கு வந்த சோதனை.....!



நாற்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், காங்கிரஸ் கட்சியின் மீதான தன்னுடைய பிடியை இறுக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி தேர்தலை இந்திரா காண்டி பயன்படுத்திக் கொண்ட அதே மாதிரியான சூழ்நிலை இத்தாலிய மருமகள் சோனியாவுக்கும் இப்போது கொஞ்சம் வித்தியாசமான வகையில் ஏற்பட்டிருக்கிறது. இந்திரா, தன்னை டம்மியாக வைத்து சில மூத்த தலைவர்கள் பேக் சீட் ட்ரைவிங் செய்ய முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகத்தில் கட்சியை இரண்டாக உடைக்கக் கூடத்தயங்கவில்லை. கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியைத் தனது கருப்பு ஆடு வி வி கிரியை வைத்து தோற்கடித்தார். கட்சியும் இண்டிகேட், சிண்டிகேட் என்று உடைந்தது.ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இந்திரா காண்டி செய்த அரசியல், அதனுடைய விளைவுகள் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.



காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பதினான்கு ஆண்டுகளில், இத்தாலிய மம்மிக்குத் தான் இன்னும் செல்லுபடியாகக் கூடிய காசுதான் என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம். ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிற உன்னதமான தலைமை என்று தியாக சிகரமான இத்தாலிய மம்மிக்குப் பேர் இருந்தது!(!!) ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டில், அந்த பிம்பம் உடைபட்டுப் போய், எத்தைத் தின்றாலாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்களால் ஆனதுதான் காங்கிரஸ் என்ற உண்மையும், தியாகசிகரத்தின் தலைமைக்கான சோதனையும் பல்லை இளித்துக் கொண்டு இப்போது முன்வந்து நிற்கிறது.

தாங்கள் சொல்வதற்குத் தலையாட்டுகிறவர்கள் தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது இந்திரா காலத்தில் இருந்தே தொட்டுத் தொடரும் காங்கிரஸ் கலாசாரக் கருமாந்திரம்!ஆனால் இப்போது  அந்த கலாசாரக்  கருமாந்திரத்தை தொட்டு தொடர்வதற்குத் தேவையான எண்ணிக்கை அவர்களிடம் இல்லை. காரியம் ஆக வேண்டுமென்றால் கழுதை காலைக் கூடப் பிடிப்பதற்குக் காங்கிரஸ்காரர்கள் எப்போதுமே தயங்கியதில்லை. கருணாநிதியை சந்திக்க அந்தோணி வந்திருப்பது அந்த மாதிரித்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!


                                                                      
மம்தா மாதிரி வெளிப்படையாக எதிர்க்குரல் கொடுக்கும் நிலையில் திமுக இப்போது இல்லை. என்றாலும் கருணாநிதி திடீரென்று டெசோ புசோ என்று தமிழ் ஈழப் பிரச்சினையைக்கையில் எடுத்திருப்பதற்கும், ஜனாதிபதி தேர்தலில் திமுக எம்பிக்கள் ஆதரவைக் காங்கிரஸ் கொஞ்சம் விலை கொடுத்தாவது வாங்க வேண்டியிருப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறதோ? அந்தோணி வந்தார், பேசினார், போனார் என்று ஒரு வரியில் முடிந்து விடுகிற விஷயமில்லையே இது!

இத்தாலிய மம்மிக்கு வந்திருக்கிற சோதனை, இந்திரா காண்டிக்கு வந்ததை விடக் கொஞ்சம் வித்தியாசமானது! 2014 பொதுத்தேர்தல்கள் வரை பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை, வெடித்துக் கிளம்பிய ஒவ்வொரு ஊழலும்  கட்டாயமாக்கி இருக்கிறது. அம்மணியின் தலைமை, அதன் மீது கூட்டாளிகளுக்கு இருக்கும் நம்பிக்கை எல்லாம் சிதறுகாயாக உடைந்து போய்க் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்றால், என்ன ஜகஜாலம் செய்தாவது, எத்தை விட்டுக் கொடுத்தாலும் சரி, காங்கிரசுக்குக் கொஞ்சம் ஒத்துப் போகிற ஒரு நபரை ஜனாதிபதியாக்கியே ஆக வேண்டும். அப்படி ஒன்று மட்டும் நிறைவேறி விட்டால், திடீர்த் தேர்தல், அதன் பின்விளைவுகள், ஊழல் குற்றத்தில் நிறையப்பேர் (அம்மணியும் உள்ளிட்டுத்தான்)  உள்ளே போக வேண்டிய அபாயம் எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளிப் போட்டுவிடலாம்! 

ஆசைகள் எல்லாம் குதிரைகளானால், இத்தாலிய மம்மி நினைப்பது கூட நடக்கலாம்!
                                                                          

இந்திய அரசியல் களத்தில் அதிக அதிகாரங்கள் இல்லாத வெறும் பெயருக்கு மட்டுமே அரசின் தலைவராக இருக்கும் ஜனாதிபதியை வருகிற ஜூலை மாதம் தேர்ந்தடுப்பதில் இத்தனை சிக்கல்களை, இத்தாலிய மம்மி சந்தித்தாக வேண்டியிருக்கிறது.கூட்டணி  தர்மங்கள் முடிந்து, கூட்டாளிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பங்கு சதையை, ஷைலக் மாதிரி டிமாண்ட் செய்கிற அளவுக்கு ஐமு கூட்டணி குழப்பம் பிளவு பட்டிருக்கிறது. கூட்டாளிகளைத்திருப்தி செய்வது ஒரு பக்கமிருக்க, வெளியே இருந்து வேறு நிர்பந்தங்களால் ஆதரவளிக்கிற முலாயம் சிங் யாதவ், மாயாவதி இவர்களைத் தவிர பிஜேபிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே எதை வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருக்கும் இடதுசாரிகள், இவர்களையும் கட்டி மேய்க்க முடியுமானால் இத்தாலிய மம்மி தான் நினைப்பதை சாதித்துக் கொள்ள முடியும்.

பிரகாஷ் காரத்தினால் கைகாட்டப்பட்டு, இப்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் முகமது ஹமித் அன்சாரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால், முலாயம் சிங் யாதவ் ஆதரவளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், இடது சாரிகள் ஆதரவும் மம்தாவின் ஆதரவும் வெவ்வேறு திசைகளில் பயணிப்பவை. இடது சாரிகளின் ஆதரவிருக்கும் வேட்பாளரை மம்தா ஆதரிக்க மாட்டார்.தவிர பிஜேபி, அன்சாரி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது என்பது இன்னும் கொஞ்சம் சிக்கல்.

முலாயம் சிங் யாதவ் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமைப் பொது வேட்பாளராக அறிவிக்க இருப்பதாக செய்திகள் கசிகின்றன. கலாமை மறுபடி ஜனாதிபதியாக்குவதில் காங்கிரசுக்கு இருக்கும் தர்மசங்கடம் புரிந்துகொள்ளக் கூடியதே! சோனியாவைப் பிரதமராக விடாமல் தடுத்ததில் கலாமின் பங்கு, அவ்வளவாக அறியப்படாத ஒன்று தான் என்றாலும்,தாங்கள் சொல்வதற்குத்  தலையாட்டுகிறவராக கலாம் இருக்க மாட்டார் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. கலாமை ஏற்பதில் இடதுசாரிகளுடைய தயக்கம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்!

இவர்கள் இருவரை விட்டால், அப்புறம் எல்லோருக்கும் நல்லவராக இருக்கும் பிரணாப் முகர்ஜி! இவர் ஒருத்தர் விஷயத்தில் மட்டும் பிஜேபி, இடதுசாரிகள் ஆதரவு இருக்குமாம் என்பது இந்திய அரசியலின் நகைமுரண்! 

இவரை ஏற்றுக் கொள்வதில் யார் தயக்கம் காட்டுகிறார்களோ இல்லையோ, காங்கிரஸ் கட்சியே அவரை முன்னிறுத்துவதில் அக்கறை எடுத்துக் கொள்ளாது! அவரது சேவை வேறு திசைகளில் தேவையாம்!!

“Ansari seems to be the potential consensus candidate, given that Pranab Mukherjee seems to have the backing of all parties except the Congress,” a senior NCP leader told The Indian Express on Wednesday.

அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், அகாலிதளத்தின் பிரகாஷ் சிங் பாதல், கரன் சிங், பாரூக் அப்துல்லா என்று வேறு பெயர்களும் அடிபடுகின்றன.

ஆனால், இத்தனை குழப்பங்களுக்கு இடையிலும் காங்கிரஸ் கட்சி, தான் நினைக்கும் வேட்பாளரையே தன்னிச்சையாக அறிவிக்கும் என்றும் தகவல்கள் சொல்கின்றன.அது மட்டும் உறுதியானால், சோனியா ஒரு பலப்பரீட்சைக்குத் தயாராக இருப்பது போல ஒரு சித்திரம் எழுகிறது

இத்தனைக்குப் பின்னாலும் கிழிந்து பரிதாபமாகத் தொங்கும் சோனியாவின் தலைமை, எதிர்காலம் இருக்கிறது.

உண்மையின் குரலை ஒடுக்க நினைத்தால்...


 
தினமணி நாளிதழில் இன்றைக்கு வெளியாகி இருக்கும் இந்த செய்திக் கட்டுரை, சில அடிப்படையான கேள்விகளை எடுத்து வைக்கிறது. ஆளுவோர், ஜனங்களைத் தொடர்ந்து உதாசீனம் செய்து கொண்டே, ஊழல்களைத் தொடர்ந்துகொண்டே போனால் இன்னொரு விடுதலைப் போராட்டம் தவிர்க்க முடியாதது என்று திரு உதயை மு. வீரையன் சொல்கிறார்.

1947 இல் விடுதலை வாங்கினோம் என்று சொல்வார்கள்! இருட்டிலே வாங்கினோம்! அதுதான் இன்னும் விடியவில்லை! என்று கவிதை எழுதுவார்கள்.

ஒவ்வொரு அரசியல்கட்சியும் தாங்கள் தான் இந்த தேசத்தில் புரட்சியை சாதிக்கப் பிறந்தவர்கள் என்றுசொல்வார்கள்!சாதாரண விஷயங்களில் கூட, கேப்பையில் நெய் வடிகிறதே என்று சொன்னால் கேட்பவனுக்கு எங்கே போயிற்று புத்தி என்று கேட்கத் தெரிந்த மகாஜனங்களுக்கு, இந்த அறுபத்தைந்தாண்டுகளில் இந்த அரசியல்வாதிகள் சொல்கிறவற்றிலும் அதையே கேட்க வேண்டுமென்று இன்னமும் தெரிந்தபாடில்லை! ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்து வைத்திருப்பார்கள், தனிப்படப் புழுங்குவார்கள்,  கொஞ்சம் படித்து எழுதவும் தெரிந்தவர்கள் பத்திரிகைகளுக்கு ஆசிரியருக்குக் கடிதம் எழுதி அனுப்பி வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதென்று நினைத்துக் கொள்வார்கள்.

சுதந்திரம் என்பது சில பொறுப்புக்களோடு வருவது! இலவசமில்லை! சுதந்திரம் என்பது அதைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கிடைப்பது. அதையாவது புரிந்து வைத்திருக்கிறோமா?

இந்தக் கேள்விகளோடு, இன்றைய தினமணி கட்டுரையை வாசிக்கப் போகலாம்!

உண்மையின் குரலை ஒடுக்க நினைத்தால்...


உதயை மு. வீரையன்

First Published : 06 Apr 2012 01:00:03 AM IST


ஆலமரமாக இருந்தாலும் அதன் அடிவேர்கள் அரிக்கப் பட்டு விட்டால் என்னாகும்? அந்த மரத்தை அதன் விழுதுகள்தான் காப்பாற்ற வேண்டும். விழுதுகளும் பழுதானால் ஆலமரத்தின் நிலை என்ன?

இந்தியா உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை இருக்கிறது. அந்தப் பெருமையைச் சீர்குலைப்பது எங்கும் நிறைந்திருக்கும் லஞ்சமும், ஊழலும், எதேச்சாதிகாரப் போக்குமே. அலைக்கற்றை ஊழலைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு நிலக்கரிச் சுரங்க ஊழல் தலையெடுத்திருக்கிறது. இது ரூ.10 லட்சம் கோடி என்றால் பெரிய மலைப்பே ஏற்படுகிறது அல்லவா!

"இந்த ஊழலை ஒழிக்க யாராவது வர மாட்டார்களா?' என்று நாட்டின் மீது அக்கறை கொண்ட நல்லவர் உள்ளங்கள் எல்லாம் ஏங்கின. அண்ணா ஹசாரே அடுத்த காந்தியாய் அவதாரம் எடுத்தார்; நாடே எழுந்து நின்றது; கைதட்டி வரவேற்றது. அரசுகளுக்கே அச்சம் ஏற்பட்டது. என்றாலும் அவர் திட்டத்தை மத்திய அரசு பெயரளவுக்கு ஏற்றுக் கொண்டதே தவிர, முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை; லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த ஆதரவு ஏற்படவில்லை என்று கூறிவிட்டது.

கடந்த மார்ச் 25 அன்று தில்லியில் மறுபடியும் ஒருநாள் உண்ணாவிரதம் தொடங்கினார் அண்ணா ஹசாரே. அவரது குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்ணியமற்ற முறையில் விமர்சனம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு எதிராகப் பேசுவதன் மூலம் ஹசாரே குழுவினர் சர்வாதிகாரத்தை மறைமுகமாக வரவேற்கிறார்கள் என்றும், எம்.பி.க்களை ஊழல்வாதிகள் என்று கண்ணியமற்ற முறையில் விமர்சித்ததற்காக அண்ணா குழுவினருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் நாடாளு மன்றத்தில் பேசப்பட்டுள்ளது.

"எம்.பி.க்கள் மீதான தாக்குதல் தனி ஒருவரின் மீதான தாக்குதல் அல்ல, நாடாளுமன்றத்தின் கெüரவத்தின் மீதான தாக்குதல்' என்று மார்க்சிஸ்ட் எம்.பி. வாசுதேவ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஹசாரே குழுவினரைக் கண்டித்து உறுப்பினர் சிலர் பேசியதற்கு அனைத்து உறுப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்களைப் பற்றிய குறைபாடுகளைக் கூறினால் யாருக்கும் கோபம் வருவது இயல்புதான்; அதிலும் வானளாவிய அதிகாரம் படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறை கூறினால் கேட்க வேண்டுமா? எனினும், "அந்தக் குறைபாடுகளில் உண்மை இருக்கிறதா?' என்று எண்ணிப் பார்க்க வேண்டிய பொறுப்பும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கிறது.

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைப் பாதுகாக்க வலுவான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தில்லியில் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

மத்திய அமைச்சர்கள் 14 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன; அவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்; இவர் 2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ. ராசாவுடன் சேர்ந்து அலைக்கற்றைக்குக் குறைவான தொகையை நிர்ணயித்தார்; அவர்களைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அஜீத் சிங், ஃபரூக் அப்துல்லா, ஜி.கே. வாசன், கபில்சிபல், சரத் பவார், மு.க. அழகிரி, எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று அண்ணா ஹசாரே குழுவினர் கூறுகின்றனர்.

இவர்கள் மேல் யார் நடவடிக்கை எடுப்பது? வலுவான லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் 14 மத்திய அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் கபில்சிபல் போன்றவர்கள் இந்தச் சட்டத்தை நிறைவேற்றத் தடையாக இருக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத்தை மிகுந்த பெருமைக்குரிய மாமன்றமாக மக்கள் மதிக்கின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் 162 எம்.பி.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்றும், இதே நிலைதான் மாநில அரசுகளிலும் நீடிக்கிறது என்றும் இவர்கள் கூறும்போது இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகத் தெரிகிறது.

இந்த நிலைக்கு நம்மைவிட நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகம் கவலைப்பட வேண்டும். இந்தியாவை ஆட்சி செய்யும் அதிகார மன்றத்தின் கண்ணியத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே இருக்கிறது. ஆத்திரப்படாமல் அமைதியாகச் சிந்தித்துப் பார்ப்பது அவர்களுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது. அதிகாரம் இருக்கிறது என்பதற்காகக் குறை கூறுபவர்களையே தண்டிக்க நினைப்பது என்ன நியாயம்?

"இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் வெளிநாட்டுச் சக்திகள் சில தன்னார்வக் குழுக்கள் மூலமாக இந்திய ஆட்சியைத் தகர்க்கப் பார்க்கின்றன'' என்று ஒரு காங்கிரஸ் உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார். இப்படிக் குற்றம் சாட்டுவது ஒன்றும் புதிதல்ல. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்துக்கு வெளிநாட்டு அமைப்புகள் நிதி உதவியளிப்பதாக பிரதமரே கூறினார்.

அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதும், அரசாங்கத்தின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால், சுட்டிக் காட்டுபவருக்கு எதிராகவே நடவடிக்கை எடுப்பதும் ஆளுவோருக்கு இருக்கும் அரிய வாய்ப்பாகும். அறிவுள்ளவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிப் போவதற்குக் காரணமும் அதுதான்.
அணுமின் உலைக்கு எதிரான போராட்டம் உலகெங்கும் நடைபெறுகிறது. பன்னாட்டுச் சிந்தனையாளர்கள் அணுமின் உலைக்கு எதிரான நிலையையே எடுத்துள்ளனர். கூடங்குளத்தில் அப்பகுதி மக்களின் ஆதரவோடு 8 மாதங்களாகப் போராட்டம் நடக்கிறது; இதனை மத்திய, மாநில அரசுகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதற்கிடையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீதான நடவடிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

"வெளிநாடுகளிலிருந்து பெற்ற நிதியைத் தவறாகப் பயன்படுத்திய புகாரின் பேரில் 24 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 7 வழக்குகளை மாநில காவல் துறை விசாரித்து வருகிறது. 30 தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து நிதி பெற 70 நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்று மத்திய உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

"ஆட்சியாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்த சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தலாம்' என்பது அரச நீதியாகும்; ஆனால் மக்களின் கருத்துகளுக்குச் செவி சாய்ப்பதும், செயல்படுவதும் மக்களாட்சியில் மறுக்க முடியாத கடமையாகும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.


"மக்களும், ஆட்சியும் விலகி நிற்கும் எந்த நாடும் முன்னேறுவது இல்லை'' என்றார் விடுதலைப் போர் நடத்திய வீரர் நேதாஜி. மக்களாட்சி என்பதற்கு அடையாளமே மக்களும் ஆட்சியும் ஒன்று என்பதால், இங்கே இரண்டும் விலகி நிற்க வேண்டிய அவசியமே ஏற்படாது.ஆனால், இன்று நாட்டில் மக்களும், ஆட்சியும் விலகி நிற்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது; மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடைவெளி அதிகமாகி விட்டது. நடுநிலையாளர்கள் தங்கள் கருத்துகளைக் கூறவும் அஞ்சுகின்ற நிலை; அறிவாளிகள் பதவிகளுக்காகக் கெஞ்சுகின்ற நிலை. இது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.

தேசத்தின் விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்களை நினைத்துப் பார்க்க யாருக்குமே நேரம் இல்லை. அவர்கள் சிந்திய குருதி, வடித்த கண்ணீர், பெருக்கிய வியர்வை, இழந்த வாழ்வு இவையெல்லாம் சிலர் வாழவும், பலர் வாடவும்தானா? எங்கிருந்து பார்த்தாலும் எப்போதும் கோபுரங்கள் எல்லோருக்கும் தெரியும்; ஆனால் அந்தக் கோபுரங்களைத் தாங்கும் அடித்தளங்கள் யாருடைய கண்களுக்கும் தெரிவதில்லை; தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

அடக்குமுறைகளால் உண்மையின் குரலை ஒடுக்க முடியாது!

அரசியலில் உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும் சிதைந்து, மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்போது, இந்தியாவில் இன்னொரு சுதந்திரப் போர் ஏற்படுவதை யாராலும் தடுக்கவும் முடியாது.