ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா அல்லது ஊமைச்சனங்களாகவே இருந்துவிடப் போகிறோமா?

தினமணி தலையங்கம்: மரபும், திரிபும்...


ரண்டு மாதங்களுக்கு முன்னால். குடியரசுத் தேர்தலைத் தொட்டு ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா என்ற கேள்வியுடன் ஒரு பதிவை முடித்திருந்தேன்! ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஆளும் ஐமு கூட்டணிக் குழப்பம், தேமு கூட்டணிக் கலகம் இரண்டிலுமே ஒருதெளிவான முடிவை எடுக்கத் திணறிக் கொண்டிருந்த நேரம் அது!ஆளும் தரப்பு, எதிர்த் தரப்பு இரண்டுமே குழப்பத்தில் இருந்தாலும், தெளிவாக இருந்த ஒரே நபர் பிரணாப் முகர்ஜி ஒருத்தர்தான் என்பதை அடுத்தடுத்து ஏற்பட்ட  திருப்பங்கள், முறுகல்கள், பிரணாபைக் கொஞ்சமும் நம்பாத சோனியா வேறு வழி ல்லாமல், பிரணாபை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நன்றாகவே வெளிப்பட்டது!

1969 களில் இந்திரா மனசாட்சிப் படி ஓட்டு போடுங்கள் என்று சொல்லி, பேக்சீட் டிரைவிங் செய்ய முயன்ற முதுபெருந்தலைகளைப் புறக்கணித்துக் காங்கிரசையே இண்டிகேட், சிண்டிகேட் என்று இரண்டாக உடைத்தார். அந்த இண்டிகேட் மரபு இன்றைக்கு ஜனாதிபதிதேர்தலில் வெளிப்படையான குதிரை பேரம், சிபிஐ, மற்றும் அமலாக்கத்துறை உதவியோடு இத்தாலிய மம்மி காங்கிரஸ் ஒரு புதிய மிரட்டல் தொனியில் நடத்திக் கொண்டிருக்கிற அளவுக்கு சீரழிந்திருக்கிறது.

ந்த இரண்டு மாதங்களில், இந்த போக்கைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததில், ஒருஅரசியல் மாற்றத்துக்கு தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியே அமுங்கிப் போயிருப்பதை நன்றாகவே அனுமானிக்க முடிந்தது. 1973 ஆம் வருடம்ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையேற்று நடத்திய பீகார் இயக்கம் இந்திரா ஆட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆரம்பத்தில் மாணவர்கள் போராட்டமாக இருந்தது, ஒரு மக்கள் இயக்கமாக மாறியதை தினமணியின் அந்நாள் ஆசிரியர் திரு ஏ என் சிவராமன் கணக்கன் என்ற பெயரில் எழுதிய கட்டுரைகள்,பீகார் இயக்கம் - ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமை :நிகழ்ச்சிகள், தத்துவங்கள், குறிக்கோள் என்ற புத்தகமாக தினமணி வெளியீடாக முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னால் வந்தது.

ப்போது அந்தப் புத்தகத்தை, புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தின் உதவியோடு மீண்டும் படித்துக் கொண்டிருப்பதில், Youth for Democracy ஜனநாயகத்துக்கான இளைஞர்கள் எழுச்சி ஏற்பட்டால் தவிர, இந்த தேசத்துக்கு விடிவு காலம் இல்லை என்று வார்தாவில் இருந்து  இளைஞர்களுக்கு ஜேபி விடுத்த அறைகூவல் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பதை இங்கே கவனப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஆனால்,நேற்றைய தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் கொஞ்சமல்ல நிறையவே ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்பதோடு, பிரச்சினையை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில்  பார்த்து எழுதப் பட்டதாக இல்லை. இந்தத்தலையங்கம் நேரு என்னவோ மரபுகளைத் திரிக்காமல் ஜனநாயகத்தை வளர்த்த மாதிரியும், இப்போது மட்டும் தான் மரபுகள் திரிக்கப்படுவது போலவும் எழுதப்பட்டிருப்பது விந்தையாக இருக்கிறது. 

போதாக்குறைக்கு, கருணாநிதியின் "குடியரசுத் தலைவர் தேர்தலில் தெற்கு வடக்கு பார்க்கத் தேவையில்லை" வசனத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கிறது. 


காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பதினான்கு ஆண்டுகளில், இத்தாலிய மம்மிக்குத் தான் இன்னும் செல்லு படியாகக் கூடிய காசுதான் என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம்!  

ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிற உன்னதமான தலைமை என்று தியாக சிகரமான இத்தாலிய மம்மிக்குப் பேர் இருந்தது!(!!) ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டில், அந்த பிம்பம் உடைபட்டுப் போய், எத்தைத் தின்றாலாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்களால் ஆனதுதான் காங்கிரஸ் என்ற உண்மையும், தியாக சிகரத்தின் தலைமைக்கான சோதனையும் பல்லை இளித்துக் கொண்டு இப்போது முன்வந்து நிற்கிறது.

தாங்கள் சொல்வதற்குத் தலையாட்டுகிறவர்கள் தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது இந்திரா காலத்தில் இருந்தே தொட்டுத் தொடரும் காங்கிரஸ் கலாசாரக் கருமாந்திரம்! என்றெழுதிய இந்தப்பதிவையும் ஒருதரம் வாசித்துப் பார்த்துவிடுங்கள்!காட்சிகள் மாறிவிட்டமாதிரித் தோன்றினாலும் பின்னணியில் இருப்பது பிரதானமாக இது ஒன்றுதான்!

தினமணி தலையங்கம்: First Published : 12 Jul 2012 02:29:00 AM IST


குடியரசுத் தலைவர் பதவி என்பது முதல் குடிமகன் என்கிற மரியாதைக்கு உரிய பதவியாக மட்டுமே நாடாளுமன்ற ஜனநாயக முறையில் கருதப் படும் என்பது உண்மை. ஆனால், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்கிற அதிகாரத்தையும் எந்த ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ பெரும் பான்மை இல்லாத நேரத்தில் ஜனநாயகத்தைக் கட்டிக் காக்கும் கடமையையும் அரசியல் சட்டம் குடியரசுத் தலைவரிடம் தான் ஒப்படைத்திருக்கிறது.

இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது முதல் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்வில் இரண்டு மரபுகள் கடைப் பிடிக்கப்பட்டன. முதலாவது மரபு, குடியரசுத் தலைவர் அல்லது துணைத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராக இருப்பது; இன்னொரு மரபு, இருவரில் ஒருவர் சிறுபான்மை அல்லது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிரதிநிதியாக இருப்பது என்பவைதான் அவை. இந்த இரண்டு மரபுகளும் வாக்குவங்கி அரசியலுக்காகவோ, குறுகிய கண்ணோட்டத்துடனோ ஏற்பட்டவை அல்ல.

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையோ, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையோ, அதிகாரமில்லாத குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்துவதால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று சிலர் கேட்கக்கூடும். அதன் மூலம் மதக்கலவரங்களும், சாதிக் கலவரங்களும் இல்லாமல் போய்விடாதுதான். ஆனாலும், சிறுபான்மையினராக, தாழ்த்தப்பட்டவர்கள் என்று தனிமைப்ப டுத்தப்பட்டவர்களாக இருப்பவர்களுக்கு, நீங்களும் இந்த இந்திய சமுதாயத்தின் இன்றியமையாத அங்கம் என்பதை உணர்த்தும் அடையாளம்தான் தேசத்தின் முதல் குடிமகனுக்கான அங்கீகாரத்தை வழங்கும் செயல்.

சின்ன நாடான சிங்கப்பூர் ஒரு தமிழனைக் குடியரசுத் தலைவராக்கி சிறப்பிப்பது இதனால்தான். இப்படிச் செய்ய மறுத்ததால்தான் இலங்கையின் சிறுபான்மை தமிழ்ச் சமுதாயத்தினர் அந்த தேசத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியாமல், இரண்டாம்தரக் குடிமக்களாக்கப் பட்டதாகக் குமுறத் தொடங்கினார்கள். தொலைநோக்குப் பார்வையுடன் இதை உணர்ந்துகொண்ட அன்றைய பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு எடுத்த தேர்ந்த முடிவுதான் 1952-ல் டாக்டர் ராதாகிருஷ்ணனையும், 1962-ல் ஜாகீர் ஹுசைனையும் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது.

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் பதவிகளை வடக்கின் பிரதிநிதியும், தெற்கின் பிரதிநிதியும் மாறி மாறி அலங்கரிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததும் பண்டித ஜவஹர்லால் நேருதான். 1952-ல் குடியரசின் துணைத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்வி எழுந்தது.

அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த கைலாஷ்நாத் கட்ஜு (உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜுவின் தந்தை) குடியரசின் துணைத் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணனைப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஏன் தேர்வுசெய்ய விரும்பினார் என்பதைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.  இந்திய சரித்திரத்தில் ஆழ்ந்த தேர்ச்சியுள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அப்படி ஒரு முடிவெடுத்ததற்கு சில சரித்திரக் காரணங்கள் இருந்தன என்று கைலாஷ்நாத் கட்ஜுவின் பதிவு தெளிவுபடுத்துகிறது.

தினமணி  தலையங்கத்தை  முழுமையாகப் படிக்க இங்கே

***** 

இப்போது கொஞ்சம் யோசித்து விட்டுசொல்லுங்கள்! நாம் ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறோமா? அல்லது ஊமைச் சனங்களாகவே குறுகிப் போய்க் கிடக்கப்போகிறோமா?

..

8 comments:

  1. என்ன சந்தேகம்.. ஊமைச் சனங்களாகவே குறுகிப் போய்க் கிடக்கப்போகிறோம்!!! நுகர்வு கலாசாரம் மொத்தமாக மற்ற எல்லா உணர்வுகளையும் அடித்து துரத்திவிட்டது!

    ReplyDelete
  2. 1973-74 இல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய இயக்கத்திலும் அண்ணா ஹசாரே நடத்திய இயக்கத்திலும்,ஜனங்கள் அப்படியொன்றும் மொத்தமாகக் கடையழிந்து போய் விடவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜனநாயகத்தைக் காப்பதில் இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்கவேண்டும் என்ற ஜேபியின் குரல் இன்றைக்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

    கிழடு கட்டைகள், கிழடுதட்டிப் போன சிந்தனை உள்ளவர்களை அகற்றிவிட்டு, இளைஞர்கள் assertive ஆகத் தங்களிருப்பை அரசியலில் உணர்த்த வேண்டும். அதற்கும் கூடத் தேர்தல் சீர்திருத்தங்கள் முதல் தேவையாக இருக்கிறது.

    ReplyDelete
  3. ஜனாதிபதி தேர்தலில் என்ன பெரிய மாற்றம் எதிர்பார்ப்பது? பாராளுமன்றத் தேர்தலிலேயே மாற்றம் கொண்டுவர அடையாளம் காட்டுமளவு எதிர்க் காட்சிகளில் ஆளில்லை.
    நேருவைப் பாராட்டும் ஓரிரு வரிகளை உங்கள் பதிவில் பார்த்தது ஆச்சர்யம்! :)))

    ReplyDelete
  4. ஸ்ரீராம்! சரியாகக் கவனிக்கவில்லை போல இருக்கிறது! :-)

    //நேரு என்னவோ மரபுகளைத் திரிக்காமல் ஜனநாயகத்தை வளர்த்த மாதிரியும், இப்போது மட்டும் தான் மரபுகள் திரிக்கப்படுவது போலவும் எழுதப்பட்டிருப்பது விந்தையாக இருக்கிறது.// பச்சையாகவே சொல்லியிருக்கிறேனே! கீழே நீலவண்ணத்தில் இருப்பது தினமணி தலையங்கத்தில் வந்திருப்பது! இந்தத் தலையங்கத்தோடு கருத்து வேறுபாடுகள் இருப்பதையும் சொல்லியிருக்கிறேன்!

    ReplyDelete
  5. உண்மையில் எவருக்கும் நாட்டை பற்றியோ மக்களை பற்றியோ கிஞ்சித்தும் அக்கறை இல்லை. ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் இந்த வகையில் சமம்தான்.மக்களுக்கோ யார் எக்கேடு கேட்டாலும் சரி என்ற மன நிலையில் வந்துவிட்டனர். இளைய சமுதாயம் பற்றி குறை கூற இங்கு எவருக்கும் அருகதையும் இல்லை. இந்த வெட்க கேட்டிற்கு முழுக்க முழக்க நாமே காரணம்
    (இந்திய ஜன நாயகமே) இவைகள் "இப்படி மட்டுமே " இருபதற்கு நிறைய காரணிகளும் இங்குண்டு. ஜாதி, மதம், இனம் சார்ந்த சிந்தனைகள் நன்றாகவே தங்களுக்கு சாதகமாக இருப்பதற்கு ஏற்ற வகையில் வளர்த்து விடப்பட்டுள்ளன. இவைகளை எல்லாம் மீறி இனியும் ஒரு மாற்றம் வந்துவிடும் என நம்புவது சற்று அல்ல நிறைய பேதமையான ஒன்று.

    நேர்மையுடன் மட்டுமே கவனித்தால் ஒன்று மிக எளிதாக விளங்கும். அரசியல் கட்சிகள் எல்லாமே ஒரே அணியில் நிற்பதை புரிந்து கொள்ளலாம். அவர்களின் நோக்கம் அதிகாரமும், கொள்ளயடித்தலும் தான் அன்றி வேறு எந்த நோக்கமும் எவருக்கும் இங்கில்லை.

    "நாம் இன்னமும் இப்படி இருகின்றோமே" என்ற மனகிலேசதில் எழுதி எழுதி மாய்த்து போவது மட்டுமே இங்கு நாம் செய்ய இயலும் ஒன்று.

    காலையில் எழுந்தோமா, சூடாக ஒரு கப் காப்பி சாப்பிட்டோமா என்று இருப்பதே இன்று மரியாதையாக இருக்கிறது.

    ReplyDelete
  6. வாருங்கள் மாணிக்கம்!

    இந்திய அரசியலின் ஆரம்ப காலங்களில் இருந்தே ஜனங்களுடைய ஈடுபாடு அல்லது பங்களிப்பு அறவே இருந்ததில்லை.ஜனங்கள், ஜனநாயகம் என்பதை ஒரு வார்த்தையாக மட்டுமே தெரிந்துவைத்திருக்கிறார்கள் அல்லது அதற்குமேல் தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றி அறிந்திருக்கவுமில்லை, அலட்டிக்கொள்வதுமில்லை!

    தலைவர்கள் நல்லவர்களாக, ஜனங்களை நேசிக்கிறவர்களாக இருந்த தருணத்தில் மட்டுமே ஜனங்களைத் திரட்டி சுதந்திரம், ஜனநாயகத்தைக் காப்பாற்றிக் கொண்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. மகாத்மா காந்தி ஒருவர் மட்டுமே, அவரைப் பற்றி இன்றைக்கு எவ்வளவு மோசமான பரப்புரைகளை, இங்கே ஒவ்வொரு அரசியல் இயக்கமும் செய்து கொண்டிருந்த போதிலும், ஜனங்களுடைய மனதை நன்றாகப்புரிந்து கொண்டவராகவும், போராட்டங்களில் ஜனங்கள் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டுவிடாமல் இருப்பதில் விசேஷ கவனம் எடுத்துக் கொண்ட தலைவராகவும் இருந்தார். பிரிட்டிஷ் அரசு இயந்திரம், ஒரு சின்ன சலசலப்பு இருப்பதாக சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் மிருகத்தனமாகப் பாய்ந்து அடக்கி அழித்திருக்கும் என்ற சூழலில், அந்த மிருகங்களுக்குப் புரியாத அஹிம்சையைக்கையில் எடுத்தார். தியாகம் செய்யத் தயாராக இருந்தவர்கள் அடக்குமுறைகளை அமைதியாகத் தாங்கிக் கொண்டார்கள்.அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாமர ஜனங்கள் ஒவ்வொருவருடைய இதயத்தையும் ஊடுருவி, எங்கிருந்தோ வந்த அந்நியன் சொந்த ஜனங்களை அடக்கி ஆள்வதா என்ற சத்திய ஆவேசம் தீயாகப் பரவ ஆரம்பித்தது.

    இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், காந்திஜி, போராட்டம் கையை மீறிப் போய்விடாமல் ஒவ்வொரு தருணத்திலும் கட்டுக் கோப்பாக வைத்திருந்தது! உணர்ச்சி மேலீட்டில் ஜனங்கள் எல்லை மீறுகிறார்கள் என்றுதெரிய வந்த தருணத்தில் போராட்டத்தைக் கைவிட அவர் தயங்கியதே இல்லை. மேலோட்டமாகப் பார்க்கையில் சர்வாதிகாரம் போலத் தோன்றினாலும், ஜனங்களை வீணாகப் பலி கொடுக்க விரும்பாத ஒரு தாயின் மனோபாவத்துடன் இருந்தது.

    நேரு கதையைஎடுத்துக் கொண்டால்,காந்தியைப் போல நேரடியான பரிச்சயத்தின் வழியாக இந்த தேசத்தின் பன்முகத்தன்மை, ஏழ்மை, ஜனங்கள், ஜனங்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டவரே அல்ல. அவர், வெள்ளைக்காரர்கள் எழுதி வைத்த சரித்திரங்கள் வாயிலாகவே இந்த தேசத்தை முழுக்க அறிந்து கொண்டவராகத் தனக்குள் நினைத்துக் கொண்டிருந்தவர்.நல்ல எண்ணம் படைத்த ஒரு முட்டாள் என்றுமூன்றே சொற்களில் நேருவைப் பற்றிய விமரிசனத்தை முடித்துக் கொள்ளலாம்.

    ஆக, காந்திக்குப் பின்னால், இந்த தேசத்தை முழுமையாகப்புரிந்து கொண்ட தலைவர்கள் எவருமே இல்லை என்பது இந்த தேசத்தைப் பிடித்த பெரும் சோகம். 1973 ஆம் ஆண்டு, ஊழலுக்கெதிராக மாணவர்கள் பீகாரில் ஒரு போராட்டத்தைத் தொடங்கினார்கள்.ஆரம்பமான சிலகாலத்துக்குள்ளாகவே பீகார் இயக்கம் என்ற பெயரில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில், அரசியல் சாசனம் உறுதியளித்திருக்கும் அடிப்படை உரிமைகளில் கைவைக்க முயன்ற இந்திரா காந்திக்கு எதிரான போராட்டமாக, ஜனங்களுடைய பேராதரவைப் பின்புலத்தில் கொண்டு வளர்ந்தது. எமெர்ஜென்சியில் முடிந்து, இந்திரா காந்தியைத் தேர்தலில் தோற்கடித்ததில், சுதந்திரம், விடுதலை என்பதெல்லாம் அதைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் என்ற பாடம் கிடைத்தது.

    இரண்டாவது விடுதலைப்போர் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணனைமறந்து பேசும் அண்ணா ஹசாரே குழுவினர்,இப்போதும் கூட ஜனங்களோடு நேரடித்தொடர்பில் இருக்கத்தவறிக் கொண்டிருப்பதே அவர்களுடைய மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. ஊடகங்களால் பெரிதாக்கிக் காட்டப்பட்ட அவர்களுடைய போராட்டம் அதே ஊடகங்களாலேயே கண்டு கொள்ளாமல் விடப்பட்டு, இன்றைக்குத் திக்குதிசைதெரியாமல் அம்போவென அந்தரத்தில் நிற்கிறது.

    ஆக, நாம் விரும்பியோ விரும்பாமலோ ஒரு மாற்றத்தின் ஊடே தான் கடந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் நிச்சயம். என்ன மாறிவிடப் போகிறது என்று சோம்பிக் கிடக்கத் தேவை, தளர்ச்சி எங்கிருந்து வந்தது?

    ReplyDelete
  7. நாட்டைப் பற்றி கவலைப்படும் அன்பு உள்ளங்களே? உங்களுக்கு ஒன்றுபட்டு போராட தைரியம் இருக்கிறதா? வெரும் வார்த்தைகளால் உங்கள் ஆதங்கத்தை காட்டி பிரயோசனம் இல்லை?

    பூனைக்கு மணிகட்ட எத்தனைபேர் முன் வருவீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. சுவனத்தை மட்டும் தேடுகிற அன்புள்ள அனானியே! (வலைப்பதிவிலோ, அல்லது ப்ரோஃபைலிலோ வேறு எந்தக் குறிப்புமில்லை)

      இந்தக் கேள்வியைக் கேட்கிற உங்களிடம் ஏதாவது பதில் இருக்கிறதா?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!