உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன்!


இன்று காலை.

"வருகிற சனிக்கிழமை காரடையான் நோன்பு" என்று சொல்லிக் கொண்டே காபி டம்ப்ளரை வைத்து விட்டு என் மனைவி அடுத்த வேலையை பார்க்கப் போய் விட்டாள்.
This is just for your information என்கிற மாதிரி........இதெல்லாம் பெண்கள் சமாசாரம், ஆண்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறாற்போல!

இங்கே இப்படி என்றால், நம்ம ஷைலஜா அம்மா, கொஞ்சம் சலிச்சுக்கிறாங்க,

"என்னவோ போங்க ஆண்கள் , பெண்களுக்காக நோன்பெல்லாம் இருக்கறதா ஒரு தகவலும் இல்லை!?"

வீட்டுக்காரம்மா என்ன சொன்னாலும் அதுக்குத் தலையாட்டுரதுக்கின்னே இருக்கிற ஆம்பளைங்க, அதுதாங்க நாங்க..இதெல்லாம் உங்களுக்கு விரதமாத் தெரியலையா?

தலைமயிர் வெளுத்துவிட்ட (இனிக் "கார் அடையான்") கணவனுக்காகச் செய்யப்படும் நோன்போ :)

இவ்வளவு அப்பாவியாய்க் கேள்வி கேட்ட ஒருத்தருக்கு இவங்க என்ன பதில் சொல்றாங்கன்னா,

வெளுக்கலைனால் கூடச் செய்யலாம்! :))))

இந்த காரடையான் நோன்பு என்பது தமிழ் நாட்டிலும், கர்வா சௌத் என்கிற பெயரில் வடக்கிலும் பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலம் நீடித்திருக்க வேண்டும், கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மேற்கொள்கிற விரதம் தான் இது. மாசியும் பங்குனியும் சந்திக்கும் வேளையில், அதாவது மாசி மாதம் முடிவடைகிற நேரத்திற்கும், பங்குனி மாதம் பிறக்கும் நேரத்திற்கும் இடைப்பட்ட வேளையில், திருமணமான பெண்கள் விரதம் இருந்து, கார் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு அடையும், வெண்ணையும் நிவேதனம் செய்து, நோன்புச் சரட்டினைக் கட்டிக்கொள்கின்றனர். சரடைக் கட்டிக்கொள்ளும் போது பிரார்த்தனையாக, 'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்' என்றுவேண்டிக் கொள்வது மரபு.கதையாகச் சொல்லி, அதன் உட்பொருளைப் புரிந்து கொள்வதற்காகவே அதை ஒரு சடங்காகவும், விரதமாகவும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழி வழியாகத் தொடருகிற மரபு.

அப்புறம், காலப்போக்கில் அங்கே அங்கே கொஞ்சம் இடைச் செறுகல்கள், இது காமாக்ஷியை நினைத்துச் செய்யப் படுவது...அப்படி இப்படி என்று localise பண்ணுவதும், பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கிற ஒரு தரப்பு இதெல்லாம் வெறும் மூடப் பழக்கங்கள், பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக, இட்டுக் கட்டிய கட்டுக் கதை என்று கீறல் விழுந்த கிராமபோன் ரெகார்ட் போல சொல்லிக் கொண்டிருப்பதுமாகச் சுருங்கிப் போயிருக்கிறது.

"மாசிச் சரடு பாசி படரும்" என்பதற்கேற்ப, புதியமாங்கல்யச் சரடை அன்றைய தினம் திருமணமான பெண்கள் அணிந்து கொள்வதும், கன்னிப் பெண்கள் தங்கள் மனதிற்கேற்ற மணவாளன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதும் நம்முடைய மரபு.

மாங்கல்ய பலம் வேண்டிப் பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்திற்குப் பின்னணியாக, மஹாபாரதத்தில் வரும் சத்தியவான் சாவித்திரி கதை இருக்கிறது. சாவித்திரி என்றவுடனேயே எமனிடமிருந்து கணவனைப் போராடி மீட்ட பெண் என்ற அளவுக்காவது நம்மில் பலருக்கு அந்தக் கதை கொஞ்சம் தெரிந்திருக்கும்.

மத்ரா தேசத்தின் அரசன் அஸ்வபதி, அவனது ஒரே மகள் சாவித்திரி. திருமண வயது நெருங்கியதும் தகுந்த மணவாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற சுதந்திரத்தை மகளுக்கு வழங்குகிறார் தந்தை. மகளும், தனக்குப் பொருத்தமான மணாளனைத் தேடி வருகையில், அழகிய வாலிபன் ஒருவனைக் காண்கிறாள். அவன்- சத்தியவானுடைய பண்பினால் கவரப்படும் சாவித்ரியும், சாவித்ரியின் அன்பினால் ஈர்க்கப்பட்ட சத்தியவானும் ஒருவரை ஒருவர் யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

சால்வ தேசத்தின் அரசன் த்யுமத்சேனன், உறவினர்களுடைய சதியால் அரசிழந்து, பார்வையும் இழந்து, தன்னுடைய மனைவி மற்றும் ஒரே மகனான சத்தியவானுடன், கானகத்தில் வசித்து வருகிறார் என்பதை சாவித்ரி அறிந்து கொள்கிறாள்.

தந்தையிடம் திரும்பும் சாவித்திரி, சத்தியவான் தான் தன் கணவனாக வரிக்கப் பட்டவன் என்பதைத் தெரிவிக்கிறாள். விசாரிக்கும் போது, சத்தியவானுடைய ஆயுள் இன்னும் ஒரு வருட காலம் தான் என்பது தெரிய வருகிறது. சாவித்ரியின் தாய் கலங்குகிறாள், மகளை முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள். ஆனால், சாவித்திரி, சத்தியவானைத் தவிர வேறொருவரைக் கணவனாகக் கனவிலும் கூட ஏற்க முடியாது என்று உறுதியாக இருக்கிறாள்.

சாவித்திரி விருப்பப் படியே அவளுக்கும், சத்தியவானுக்கும் திருமணம் நடக்கிறது. கணவனோடு கானகத்தில் சந்தோஷமாக வாழ்கிறாள். அந்தக் குறிப்பிட்ட தருணமும் நெருங்குகிறது. ஆம், ஒரு வருடம் நிறைகிறது. கணவனும் மனைவியுமாக, கானகத்தில் கனி, கிழங்குகளை சேகரிக்கப் போகையில், கூற்றுவன் சத்தியவானுடைய உயிரைப் பறித்துச் செல்கிறான்.

சாவித்திரி மனம் கலங்காமல் கூற்றுவனைப் பின் தொடர்கிறாள். உனது நாள் இன்னமும் இருக்கிறது, திரும்பிப் போய் விடு என்று கூற்றுவன் நயமாகவும், பயமாகவும் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய கணவனுடைய உயிரை விட்டுப் பிரிய மாட்டேன், தொடர்ந்தே வருவேன் என்கிறாள்.இடையில், பல உலகங்களைக் கடந்தும் சாவித்ரி உறுதியாக இருப்பதைப் பார்க்கும் கூற்றுவன் பிடிவாதத்தை விட்டு விடு, நீ வேண்டிய வரங்களைத் தருகிறேன், திரும்பப் போய் விடு என்கிறான். என்ன வரம் வேண்டுமானாலும் தருவீரா என்கிறாள் சாவித்திரி! எதுவானாலும் கேள், தருகிறேன் என்கிறான் கூற்றுவன்.

தன் கணவனோடு கூடி நூறு வீரமும் கீர்த்தியும் நிறைந்த பிள்ளைகளையே வரமாகத் தரும் படி சாவித்திரி வேண்டுகிறாள்.

வரமோ, வாக்கோ எதுவானாலும், தருகிறேன் என்று சொன்னால் அதை நிறைவேற்றுகிற தெய்வங்களும், மனிதர்களும், ஏன் மிருகங்களும் கூட வாழ்ந்த புண்ணிய பூமி இது.

[என்ன சாபத்தினாலோ, வாக்குறுதி என்பது மீறப் படுவதற்காகவே, ஏமாற்றுவதற்காகவே என்று செயல்படும் அரசியல் தலைகளையும், அதிகார வர்க்கத்தையும் கொண்டதாகச் சிறுமைப் பட்டுப் போயிருக்கிறது இன்று.]

'தந்தேன்' என்றான் எமன்.
பாசக்கயிற்றில் சிக்குண்டிருந்த சத்தியவானுடைய உயிர் மீண்டும் அவனது உடலில் புகுந்தது. சாவித்ரிக்கு அளிக்கப்பட்ட வரம், மாமனாருடைய பார்வையை மீட்டுக் கொடுக்கிறது, இழந்த ராஜ்ஜியம் மீண்டு வருகிறது என்று இந்தக் கதை முடிகிறது.

மஹாபாரதத்தில், போகிற போக்கில் சொல்லப் படும் நூற்றுக் கணக்கான கதைகளுள் ஒன்றான இந்த சத்தியவான்-சாவித்திரி கதையினுள் ஒரு மிகப் பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்து கிடப்பதைக் கண்டார் ஸ்ரீ அரவிந்தர். இந்தக் கதை, வேதங்களின் திரண்ட உட்பொருளை, ஒரு சங்கேதமாகக் குறிப்பிடுவதாகவே ஸ்ரீ அரவிந்தர் கண்டார்.

சவித்ரு என்பது சூரியனின் பன்னிரு திருநாமங்களுள் ஒன்று. சாவித்திரி, சூரியனின் மகளாகவே கருதப்படுகிறாள். பன்னிரண்டே மாதங்களில், கணவனது ஆயுள் முடிந்து போகும் என்பது தெரிந்திருந்தும், மனம் கலங்காது உறுதியுடன் மரணத்தை எதிர்த்து வெற்றி கொள்கிறாள். அன்பே அவளது பலமாக இருப்பதைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் காண முடியும்.

ஸ்ரீ அரவிந்தர், 1901 வாக்கில் பரோடாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இந்தக் கதையை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பின்னாளில் சாவித்ரியே அவரது தவமாகவும், யோக சாதனையாகவும் ஆனது. ஏறத்தாழ முப்பத்தைந்து கால ஞான வேள்வியாக, "சாவித்ரி" ஸ்ரீ அரவிந்தரின் பெரும் காவியமாக உருவெடுத்தது. 1930 களில் "சாவித்திரி- ஒரு கதையும் அதன் தரிசனமும் " என்று வெளியானது, தொடர்ந்து மெருகேறி, SAVITRI - A Legend and Symbol என ஏறத்தாழ 24000 வரிகளில் உருவானது.

"நான் சாவித்ரியை மனதளவில் துவங்கினேன். ஒவ்வொரு முறையும் நான் மேல் நிலையை அடையும்போது அந்த நிலையிலிருந்து மறுபடியும் எழுதினேன். உண்மையில் நான் சாவித்ரியை ஒரு செய்யுள் என்ற உணர்வில் எழுதி முடிக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு செய்யுளை ஒருவரின் யோகநிலையிலிருந்து எப்படியெழுதி அதை ஒரு சிறந்த சிருஷ்டியாக்க முடியும் என்ற மனதுடன் செயல்பட்டேன்."

என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரியை எழுத ஆரம்பித்த அனுவவத்தை விவரிக்கிறார். ஏறத்தாழ நாற்பது ஆண்டு கால யோக சாதனையின் வெளியீடாக, "சாவித்திரி" என்னும் பெரும் காவியம் இருக்கிறது. இது வெறும் காவியம் என்றோ, எழுதியவரின் அனுபவக் குறிப்பு என்கிற அளவோடோ, குறுகி நின்று விடாமல், அதை படிக்கிற நமக்கும் ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவத்தை அளிக்கிற மந்திர சித்தியையும் கொண்டிருக்கிறது.

On Savitri

“If you are depressed, if you feel miserable, if you do not succeed in what you do or else if what happens is always the contrary of what you expect, however you try - if it has come to such a pass that you lose your temper, life becomes disgusting and you are unhappy, then immediately take Savitri and, after a moment's concentration, open it at any page and read. You will see that all your misery disappears like smoke. And you will have the strength to overcome the worst sorrows; you will no longer feel that which was tormenting you. Instead you will feel a strange happiness, a reversal of consciousness along with the energy and force to conquer everything, as though there were nothing impossible. And you will feel this inexhaustible joy that purifies all. 

 
Read just a few lines and that is enough to establish the contact with your inmost being. Such is the extraordinary power of Savitri.

Or else, after having read some lines, if you concentrate deeply, then too you will find the solution to what was tormenting you. You have only to open Savitri just at random without thinking and you will have the answer to your problems. Do this with faith and simplicity, the result is certain.”


The Mother
5-11-1967

நம்பிக்கையோடு இரு, எல்லாம் கை கூடும்!

ஸ்ரீ அன்னை சாரதாமணி தேவியுடன் சகோதரி நிவேதிதை

"நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, தீயவர்கள் என்று கருதப் படுகிறவர்களுக்கும், நான் தாயாக இருக்கிறேன்.

உனக்கு ஏதாவது இடைஞ்சல், பிரச்சினை என்று வரும் போது, என் அன்னை இருக்கிறாள், அவள் பார்த்துக் கொள்வாள் என்று நம்பிக்கையோடு இரு."

"I am the mother of the wicked,
as I am the mother of the virtuous.
Whenever you are in distress,
just say to yourself, 'I have a mother'

இருபது வருடங்களுக்கு முன்னால், கன்யாகுமரி ஸ்ரீ விவேகானந்தர் நினைவுப் பாறைக்குச் சென்று திரும்புகையில், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அன்னை சாரதாமணி இவர்களுடைய அமுத மொழிகளை மிக நேர்த்தியாக அலுமினியத் தகட்டில் படங்களுடன் பொறித்த சிலவற்றை வாங்கி வைத்திருந்தேன். அதில் மேலே கண்டது ஸ்ரீ அன்னை சாரதாமணியினுடைய அமுத மொழி.

ஸ்ரீ அரவிந்தராலும், பிறகு எல்லோராலும் அன்னை என்று அழைக்கப் பட்ட அற்புதப் பேரொளியைக் கண்டு கொள்கிற தருணம் நம்மில் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் தான், தேடி வருகிற இறையருளை உணராமல் இருக்கிறோம். அறியாமை, ஆர்வமின்மை, நானே எனதே என்று பழக்கங்களின் பிடியில் சிக்கி புலன்களுடைய அடிமையாகவே இருப்பது இப்படி, நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

இறையருள், நம்மை விட்டு விலகுவதே இல்லை; அதே நேரம், நம் மீது நம் விருப்பத்திற்கு மாறாகத் தன்னை திணித்துக் கொள்வதும் இல்லை. நாமாக, விரும்பி அழைப்பதற்காக, ஏற்றுக் கொள்வதற்காகப் பொறுமையோடு காத்திருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் முடிவெடுக்கிற சுதந்திரத்தை நமக்களித்து விட்டு, அந்தந்த முடிவுக்குத் தகுந்த பலனையும் அனுபவத்தையும் தந்து கொண்டே, அதிலிருந்தே, உள்ளார்ந்த ஒரு ஆன்மீக அனுபவத்திற்கான பாதையையும் திறந்து வைக்கிறது. நம்மை அறியாமலேயே, அல்லதே அறிந்தே கூடக் கிணற்றுக்குள் தான் விழுவேன் என்று பிடிவாதமாக விழுந்தாலும் கூட,கிணற்றில் விழுந்த பிறகு அதிலிருந்தே வேறொரு பாதையில் இறையருள் வழிநடத்துகிறது.

நல்லவை என்பன மட்டும் அல்ல, மிகத் தீயவை என்று சொல்லப் படுபவையும், தெய்வ சித்தத்தின் படி இயங்கும் கருவிகளாகவே இருப்பதை அப்போது தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. "வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க" என்று அனுபவித்துப் பாடிய வரிகளின் பொருள் இப்போதுதான் புரிகிறது.

இப்படித்தான் 1965-66 களிலேயே ஸ்ரீ அரவிந்த அன்னை, என்னுடைய அன்னையாகவே தோன்றித் தன்னை அறிவித்துக் கொண்டாலும், என் ஈர்ப்பு, கவனமெல்லாம் வேறு எதில் எதிலேயோ இருந்ததால், தேடி வந்த அன்னையை அறியவில்லை. ஸ்ரீ அரவிந்தரோடு அணுக்கமாக இருந்த நண்பர்களே `ஆரம்ப காலங்களில் ஸ்ரீ அரவிந்த அன்னையை 'அன்னையாக' அறிந்திருக்கவில்லை. அவரும் ஏதோ தங்களைப் போலவே, ஸ்ரீ அரவிந்தருடைய இன்னொரு சீடர் என்ற அளவிலே தான் நினைத்திருந்தார்கள். ஒரு சாதகருக்கு எழுதிய கடிதங்களில் அன்னையைப் பற்றி, அவருடைய அவதார நோக்கங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார். 'மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்காதே, அந்த பராசக்தியே தான் இங்கே மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாள்' என்று உறுதியாகச் சொல்கிறார். ஆசிரமத்தில் இருக்கும் இந்த அன்னையைப் பற்றியா சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு 'ஆமாம்' என்று உறுதிபடச் சொல்கிறார்."அன்னை" என்ற தலைப்பில் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கடிதங்களின் [மொத்தம் ஆறு] தொகுப்பு, அதையொட்டி சாதகர்களுக்கு எழுந்த கேள்விகளுக்கு ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பதில்கள், இவைகளைத் தமிழில் தொடர்ந்து தரவும் விருப்பம். ஸ்ரீ அன்னை திருவுள்ளம் உகந்தால் அதுவும் கை கூடும்.

இருபது, இருபத்திரண்டு வருடங்களுக்குப் பின்னால், வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்கள் தானாகவே, ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் அழைத்துச் செல்வதாக அமைந்தன. அப்போதும் கூட, ஒரு முழுமையான அர்ப்பணிப்புடன் அன்னையிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன் என்று சொல்ல முடியாது. [அப்போது மட்டுமில்லை, இப்போதும் கூடத்தான் என்று உள்ளேயிருந்து ஒரு மூலையில் ஒரு குரல் ஒலிக்கிறது]

ஸ்ரீ அரவிந்த அன்னை தன்னை ஒரு போதும் ஒரு குருவாக அறிவித்துக் கொண்டதில்லை. மாறாக, தன்னிடம் வருபவர்களுக்குச் சொன்னதெல்லாம், இது தான்: "என்னிடம் வரும் போது, அன்னையிடத்திலே தானாகவே ஆர்வத்தோடு ஓடி வருகிற குழந்தையின் மனப்பாங்கோடு வா. அப்படி வருவது, எண்ணற்ற தடைகள், கஷ்டங்களில் இருந்து உன்னைக் காப்பாற்றும்"

["Try to be spontaneous and simple like a child in your relation with me- it will save you from many difficulties.”- The Mother]

"Never forget that you are not alone.

The Divine is with you helping and guiding you.

He is the companion who never fails, the friend whose love comforts and strengthens.

The more you feel lonely, the more you are ready to perceive His luminous Presence.

Have faith and He will do everything for you."

-The Mother

27 September 1951

தனித்து விடப்பட்டதாகவோ, கைவிடப்பட்டதாகவோ, ஒருபோதும் எண்ணாதே; ஏனெனில் தெய்வீக அருள் உன்னோடு எப்போதும் பிரியாமல் இருக்கிறது. உன்னை வழி நடத்துகிறது,துணையாக வருகிறது. உன்னை விட்டு ஒருபோதும் பிரியாத துணையாக, உற்ற நண்பனின் இதமான துணையாக, உன்னை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. தனித்துவிடப்பட்டதாக, அல்லது தனியாக இருப்பதாக நீ கருதும் நேரம், தெய்வீக அருளின் ஒளியைப் பெறுவதற்குச் சித்தமாய் இருக்கிறாய். நம்பிக்கையோடு இரு, எல்லாம் கை கூடும் என்கிறார் ஸ்ரீ அன்னை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம், ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம். பஞ்சதந்திரக்கதைகளில் வருகிற அந்தணன், கதை சொல்லியே முட்டாள் ராஜ குமாரர்களைப் படிப்பிக்க வைத்தது போலவே, எனக்கும் என்னுடைய சொந்த முட்டாள்தனங்களில் இருந்தே ஸ்ரீ அன்னை பாடம் நடத்திக் கொண்டிருப்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

நன்றியோடு வணங்குகிறேன்.