குட்டி தாயிடம் கேட்டது."அம்மா, எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன, கேட்டால் சொல்வாயா?"
தாய் சொன்னது :"தாராளமாகக் கேள்! தெரிந்ததைச் சொல்கிறேன்!"
"நமக்கு என் முதுகில் இவ்வளவு பெரிய திமில் இருக்கிறது?"
"நாமெல்லாம், பாலைவனத்தில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லவா? அதனால், நமக்குத் தேவைப் படும் தண்ணீரை, நம் உடலிலேயே சேர்த்து வைத்துக் கொள்வதற்காக திமில் இருக்கிறது."
"சரி அம்மா! அப்புறம் ஏன் நமக்கு மட்டும் உயரமான கால்கள், அகலமான குளம்புகள் என்று இப்படி கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறது?"
"நல்ல கேள்வி! இப்படி கால்கள் உயரமாகவும், குளம்புகளும் இருப்பதால் தான் மணற்பாங்கான பாலைவனத்தில், நம்மால் வேறு எவரை விடவும் வேகமாக ஓட முடிகிறது!"
"சரிதான்! அப்புறம் இந்தக் கண்ணிமைகள் இவ்வளவு பெரிதாக, முடிகளோடு இருக்கிறது? சமயங்களில், சரியாகப் பார்க்கக் கூட முடிவதில்லையே?"
"என் செல்லமே! இது கேள்விகள் வாரமா? கண் இமைகள் பெரிதாகவும், முடிகளோடும் இருப்பதனால் தான், பாலைவனத்தில் அவ்வப்போது ஏற்படும் மணல் சூறாவளியில், கண்களில் மண் விழுந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது?"
" அம்மா!நான் புரிந்து கொண்டது சரிதானா என்று சொல்! திமில்கள் இருப்பது, பாலைவனத்தில் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்வதற்காக. சரிதானா?"
"ஆமாம் செல்லம்!"
"உயரமான கால்கள், வித்தியாசமான குளம்புகள், பாலைவனத்தில் மண் பரப்பில் வேகமாக ஓடுவதற்காக! சரிதானா?"
"சரிதாண்டா செல்லம்!"
"கண் இமைகள் பெரிதாக, முடிகளோடு, கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரி இருந்தால் கூட, அதுவுமே பாலைவனத்தில் அடிக்கடி ஏற்படும் மணல் சூறாவளியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்! அப்படித்தானே?"
"ஆமாண்டா ராசா!"
"அப்புறம் எதற்காக நம்மை மீனாட்சி கோவில் திருவிழாக்களில் கலர்த் துணி எல்லாம் போர்த்தி, முன்னால் இழுத்துச் செல்கிறார்கள்? பாலைவன ஒட்டகங்களுக்கும், மீனாட்சி கோவில் திருவிழாவுக்கும் என்ன சம்பந்தம்?"
" இப்படியே போனால், மதுரையும் ஒருநாள் பாலைவனமாகிவிடும் என்பதை மதுரைமாநகர ஜனங்களுக்கு சிம்பாலிக்காகச் சொல்வதற்காகக் கூட இருக்கலாம்டா செல்லம்!"
"அம்மா! இன்னும் ஒரு கேள்வி!"
"கேளடா செல்லம்!"
"கோவில் திருவிழா ஒட்டகம் முன்னால் வர மதுரையில் தான் சரி! அப்புறம் ஏன் நம் சகோதரர்களை காட்சிப் பொருளாக, மிருகக் காட்சி சாலைகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள் ?"
"இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் நாம் ஒட்டகங்களாகப் பிறந்திருக்கவே மாட்டோமாடா செல்லம்! மனிதர்களாகப் பிறந்திருப்போம்!"
"அப்படியா சொல்கிறாய் அம்மா! இந்த மனிதர்கள் இருக்கிறார்களே, இவர்கள் தங்களை மூளைக் காரர்கள், ஆறறிவு படைத்தவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்களே! அது உணமைதானா?"
"மூளை என்று ஒரு உறுப்பு மனிதர்களிடம் இருக்கிறது! ஆனால்,அதைப் பயன்படுத்துவதே இல்லை! கைகால்களில் உழைக்கத் தெம்பும் இருக்கிறது!
உழைக்கத் தேவையே இல்லை, நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து இலவசங்களால் நிரப்புவோம் என்று சொல்பவர்களிடம் மயங்கி, இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். தொலைக் காட்சி என்று ஒன்று இருக்கிறதாம்! அதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அறிவு சுத்தமாகவே மழுங்கிவிடும் என்று கூடச் சொல்கிறார்கள்!"
"போதுமடா செல்லம்! வியாதிகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது கூட, வியாதிகளுக்கு நாம் கொடுக்கும் வரவேற்பாக ஆகிவிடக் கூடும்! உருப்படியான நல்ல விஷயங்களை பேசலாமடா ராசா!"








