திருட்டுப் பூனைகளுக்கே ஒன்பது உயிர்கள் என்பார்கள்!
கே ஜி பால கிருஷ்ணன் மாதிரி அரசுக்கு எல்லாவிதத்திலும் வளைந்து கொடுக்கிற மாதிரியான ஒரு தலைமை நீதிபதி இருந்திருந்தால், இன்றைக்கு, உச்சநீதிமன்றத்தில் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று வரிசையாக ஊழல் மந்திரிகள் என்று சிலரை மட்டும் தனிமைப்படுத்தி திஹாருக்குப் பெயரளவுக்கு அனுப்பி வைத்து மற்றவர்கள் எல்லாம் கறைபடாத கைகளுக்குச் சொந்தக் காரர்கள் என்று நாடகமாட வேண்டிய அவசியமே இருந்திருக்காது!
கூட்டணி தர்மம் என்றால் பெட்டிகளை மட்டும் பங்கு போட்டுக் கொள்வதல்ல! மாட்டிக் கொண்டால் , சிறைக்குப் போவதிலும் கூட்டாளியாக வேண்டுமே என்பது கூடத் தெரியாத மண்ணாந்தைகள் தான் நம்மை ஆள்கிற பொறுப்பில் இருக்கிறார்கள்!ஆ. ராசா, தெனாவெட்டாக, நான் என்ன குற்றம் செய்தேன்? பிரதமருக்கும், அன்றைய நிதியமைச்சருக்கும் தெரிந்தே தானே செய்தேன்? வேண்டுமானால், அவர்களையும்சாட்சிகளாக இந்த வழக்கில் விசாரித்துப் பார்க்கலாமே என்று சொல்கிற அளவுக்கு இந்தக் கூட்டணிக் குழப்பம் பப்பரப்பா என்று பல்லை இளித்துக் கொண்டு அம்மணமாக இருக்கிறது.
ஊழல் இருப்பது எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால் அதை சட்ட ரீதியாக நிரூபிப்பது, அப்புறம் அதற்குத் தகுந்த மாதிரி தண்டனை அளிப்பது என்பது சாத்தியமே இல்லாத அளவுக்கு நம்முடைய நிர்வாகம், நீதித்துறை, அரசியல், ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று தங்களைப் பற்றி பீற்றிக் கொள்ளும் ஊடகங்கள் எல்லாமே சீரழிக்கப் பட்டிருக்கின்றன. எமெர்ஜென்சி தருணத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி திரு எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிர அரசுக்கு எதிராகக் குரல் எழுப்ப அன்றைய நீதிபதிகளில் வேறு எவருமே இல்லை.
ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமப்பத்திரிகைகள், ஒன்றிரண்டு, ஜனசங்கப் பத்திரிகைகள், இங்கே தமிழ்நாட்டில் துக்ளக் தவிர்த்து ஊடகங்கள் எதுவுமே எமெர்ஜென்சி காலக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தவை அல்ல!
அரசு அதிகாரிகள் எவருக்குமே முதுகெலும்பு இருந்து, அமைச்சர் பெரு மக்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் தைரியம் இருந்ததில்லை என்பது மட்டுமில்லை, அதை விட அவர்கள் தான் ஊழல் செய்வது எப்படி என்பதை பல அமைச்சர்களுக்கும் கற்றுக் கொடுத்ததே என்பதும், ஊழலின் கூட்டாளிகளாகப் பல அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்! மீதமுள்ளவர்களில் பெரும்பாலோனோர், கோழைகளாகத் தலைவணங்கித் தவறு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நேரடியாகவோ மறை முகமாகவோ உடைந்தையாக இருந்தார்கள் என்பதை இங்கே அழுத்தமாகச் சொல்லித்தான் ஆக வேண்டும்!
இங்கே தமிழகத்தில் திமுக, அரசு இயந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிற கலையில் வேறெவரையும் விடத் தேர்ச்சி பெற்றிருந்தது கூட எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்!ஆனால், அந்த சாமர்த்தியம் ஒன்று தான் கருணாநிதியை மிகப்பெரிய அரசியல் சாணக்கியராகவும், வித்தகராகவும் காட்டிக் கொண்டிருக்கிறது, கட்சித் தொண்டர்களின் வலுவும் கட்டமைப்பும் எப்போதோ காணாமல் போய் விட்டது என்றால் ஒத்துக் கொள்வதற்குச் சங்கடமாகத்தான் இருக்கும்! ஆனால் அது தானே உண்மை!
பொம்மை அசைவதே விந்தையாகத் திரைப்படங்கள் இருந்த காலத்தில் அடுத்த கட்டமாக, திரையில் பொம்மைகள் வசனம் பேசியது மிகப் பெரிய விந்தையாக இருந்ததில் ஆச்சரியமில்லை!அதை விட அர்த்தமிருக்கிறதோ இல்லையோ, அடுக்கு மொழி வசனங்கள், உவமானங்கள் என்று நிறைய அள்ளித் தெளித்துக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடைசியில் ஒன்றுமே இல்லாத ஒன்றை வசனஜாலமாகக் காட்டி வெற்றி பெற்றவர் கருணாநிதி! அன்றைக்கு பொம்மைகள் பேசுவதே விந்தை என்றிருந்த காலத்து டெக்னிக் இன்றைக்கு எடுபடுமா? பெண்சிங்கம், இளைஞன், பொன்னர் சங்கர், உளியின் ஓசை என்று அடுத்தவன் காசைக் கரைத்து எடுக்கப்பட்ட படங்களில் பெருத்த ஓசை எழுப்பிக் கொண்டிருந்த உளி எந்த அளவுக்குத் துருப்பிடித்துக் காணாமலேயே போய்விட்டது என்பதைச் சொல்லுமே!
நவராத்திரி! அடுத்து வரும் இந்த ஒன்பது நாட்களுக்கும், எமெர்ஜென்சி, கருணாநிதி, உளியின் ஓசை, துருப்பிடித்துத் தேய்ந்து போன திராவிட இயக்கம் இவைகளுக்கெல்லாம் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கிறது!
சில தளங்களில், கங்குலி ஒய்வு பெற்ற பிறகு ஸ்பெக்ட்ரம் வழக்கைக் கண்காணிக்கும் பெஞ்சில் யார் இடம் பெறுவார்கள் என்பதை பற்றி மட்டுமே முக்கியமாக சொல்லிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.
சுமார் ஆறுமாதங்களுக்கு முன்னால், உச்சநீதிமன்ற நீதிபதி திரு கங்குலி, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்; பேசியதில் இருந்து ஒன்றிரண்டு வரிகளைச் சொன்னால் இந்தப்பதிவில் முந்தைய பாராக்களில் சம்பந்தமில்லாத பழைய கதைகளைத்தொட்டுப் பேசிக் கொண்டிருந்தது ஏன் என்பது புரியும்!
அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பின் அடையாளமாகத் தொடங்கிய இயக்கம், சிறுபொறி பெரு நெருப்பாகிவிடும் என்று ஆளும் கட்சி பயந்தது. போராட்டத்தை திசைதிருப்ப, களங்கப் படுத்த எல்லாவகையிலும் முயன்றது. ஒரு லோக்பால் மசோதாக் கூட நாற்பத்துமூன்று ஆண்டுகளாக வெறுமே பேசிக் கொண்டே இருந்து, நிறைவேற்றமுடியாத கபடம் வெளிப்பட்டது.
ஊழலுக்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அதோ அவன், இல்லை இல்லை இதோ இவன் என்று எங்கெங்கோ கையைக் கட்டிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது என்று, கூட்டணி தர்மத்தில் கையை வைக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது பாருங்கள், இங்கே தான், பழைய நினைப்புடா பேராண்டி என்று பராசக்தி வசனத்தை வைத்து மட்டுமே சிறந்த கதை வசனகர்த்தா வாகக் காலம் பூராவும் ஓட்ட முடியாது என்று ஆகியிருக்கிற யதார்த்தம் கண் முன்னே நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.
ஒய்வு பெறப்போகும் நீதிபதி கங்குலி என்ன தீர்ப்பு எழுதுவார், அவரிடத்தில் வேறு யார் வருவார், அப்புறம் அந்த பெஞ்ச் முன்னால் உள்ள வழக்குகள் என்னவாகும் என்பதில் எல்லாம் விஷயமே இல்லை!














