காத்திருந்து....காத்திருந்து...கலங்கும் வாரிசுகள்! இது திமுக டைம்!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!
காத்திருக்கும் வாரிசுகள்!!

கனிமொழிக்குக் கட்சியில் வேண்டுமானால்முக்கியப் பொறுப்பு, பதவி கொடுத்துக் கொள்ளுங்கள், மந்திரி பதவியெல்லாம் தர முடியாது என்று காங்கிரஸ்காரர்கள்; திட்டவட்டமாக சொல்லி விட்டார்களோ?

கே என் நேரு நேற்று திருச்சி திமுகவினரிடையே பேசும் போது கொஞ்சம் வீராப்பாகப் பேசியதை மேலோட்டமாகப்  பார்த்தால் கூட,திமுக காங்கிரசுக்கு வேறு வழி இல்லாமல் டாட்டா  சொல்ல தயாராகி வருவது போலத்தான் இருக்கிறது.திமுகவில் தலீவரின் கண்ணசைப்பு இல்லாமல் எதுவும் நடப்பதில்லை என்பது தமிழக அரசியல் தெரிந்த எல்லோருக்குமே தெரிந்ததுதான்! பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிற கலையில் தேர்ந்தவர் கலீஞர் என்பதும் தெரிந்ததுதான்! பிப்ரவரி மூன்றாம் தேதி திமுக பொதுக்குழு செயற்குழு கூட்டுவது எதற்காக என்பதும், அதற்கு முன்னாலேயே ராசாத்தி தரப்பு சில உள்ளடி வேலைகளை வெளிப் படையாகவே செய்து வருவதும் கூடத் தெரிந்தது தான்.நேரு அப்படி என்னதான் பேசினார், அதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது என்பதையும் பார்த்து விடலாமே!

இப்படி அவசரப்பட்டு ஊதி ஊதியே மந்திரியாக வேண்டியவரை முதல் குடும்பத்தின் ஆதாயத்துக்காக
திஹார் சிறைக்கு அனுப்பி வைத்தது தான் மிச்சம்!!


திருச்சி மாநகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாஜி அமைச்சர் நேரு பங்கேற்று பேசியதாவது: "தி.மு.க.,வினர்,தைத்திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக சிறப்பாக கொண்டாட வேண்டும். தங்களின் வீடுகளில் கோலமிடும் போது தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதியும், முடிந்தால் புத்தாடை அணிந்தும், வீடுகளில் கட்சிக் கொடியேற்றியும் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

மேற்கு வங்கத்தில் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேறச் சொல்லி மம்தா அறிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் சிறிது இறங்கி வந்தபோதும், மம்தா அதெல்லாம் முடியாது என்றுகூறி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக களம்காண தயாராகி விட்டார். அதுபோல், இங்கும் வெகுவிரைவில் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.

விஜயகாந்த் மீது தாக்கு: "நம்முடைய போதாத காலம் அ.தி. மு.க.,வுடன் விஜயகாந்த் கூட்டு சேர்ந்தார். அவருடைய தயவில் ஜெயித்த அ.தி.மு.க., அக்கட்சியை எட்டி உதைத்து விட்டது. தே.மு. தி.க.,வின் மேட்டூர் எம்.எல்.ஏ., மேல் வழக்கு போட்டு, அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல, அனைத்தையும் மூடிக்கொண்டுள்ளார்,''

தி.மு.க., தோல்விக்கு காரணம்: கடந்த எம்.பி., தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டசபையில் மட்டும் தோற்று, திருச்சி எம்.பி., தொகுதியை இழந்தோம். அதுமட்டும் நடக்காமல் போயிருந்தால், ஜெயலலிதா இங்கு வந்திருக்கமாட்டார். அ.தி.மு.க., வும் ஆட்சிக்கு வந்திருக்காது. தமிழகத்தில் புதிதாக ஓட்டுரிமை பெற்ற, 30 லட்சம் இளம் வாக்காளர்களிடம் நம்மைப்பற்றி அவதூறு பரப்பப்பட்டது. அதற்கு உரிய பதில் கூற நாம் தவறிவிட்டோம். ஆகையால், மாற்றத்தை எதிர்பார்த்த, அந்த இளம் வாக்காளர்கள் மாற்றி ஓட்டு போட்டு விட்டனர்."

இப்படி நேரு பேசியதை வைத்துப் பார்த்தால்,ஆஹா! திமுகவுக்கு வீரம், சொரணைவந்து விட்டது!மம்தா மாதிரி, காங்கிரசே! கூட்டணியை விட்டு வெளியே போ என்று சொல்லி விடப் போகிறார்கள் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு உடனே திமுக அமைச்சர்கள் மத்திய அரசில் இருந்து விலகி, ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள் என்றும் கனவு காண ஆரம்பித்தீர்களானால் உங்களுக்கு தமிழக அரசியல், குறிப்பாகக் கழக அரசியல் கொஞ்சம் கூடப் பிடிபடவில்லை என்று மட்டுமே அர்த்தம்.

இப்படி வெறும் மலர் மகுடம் வைத்தே இத்தனை நாள் ஒட்டி விட்டார்களே! இனிமேலாவது தலைமை மகுடம் தலைக்கு வருமா?

அதே செய்திகளில் இன்னொரு பக்கம் திமுக இளைஞரணி குறித்த சில செய்திகளில், வரலாற்றில் முதல் தடவையாக, நாற்பது வயதுக்கு மேற் பட்டோரெல்லாம் இளைஞர்கள் அல்ல என்பதைத் திமுகவினர் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதனால் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இளைஞர் அணிப் பொறுப்பில் இருக்க முடியும் என்று தீர்மானம் கொண்டு வந்து அதை அமல்படுத்த  ஆரம்பித்திருக்கிறார்கள். அமல் படுத்தியது தலையில் இருந்தல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்! 

மாற்றங்கள் வந்து சேர்வது தலையைப் பொறுத்தவரை எப்போதுமே கடைசியில் தான்! அதுவும் வேறு வழி இல்லை என்றால் தான் என்பது அரசியல் கட்சிகளில், குறிப்பாக வாரிசு அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் கட்சிகளில் காணப்படும் விசித்திரங்களில் ஒன்று.

விழுப்புரத்தில் நடந்த, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் தேர்வை துவக்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது: "தி.மு.க., இளைஞரணி தற்போது மந்தமான சூழலில் உள்ளது, இதில் மாற்றத்தை ஏற்படுத்தி முனைப்புடன் செயல்படுத்திட தலைவர், பொதுச்செயலர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். நகர, ஒன்றிய, பேரூர் பகுதி இளைஞரணி நிர்வாகிகளுக்கு படிவங்கள் வழங்கி தேர்தலுக்கு அழைத்துள்ளோம். ஒவ்வொரு பதவிக்கும், 10 முதல் 20 பேர் வரை பெயர் கொடுத்துள்ளனர். இளைஞரணி பொறுப்பாளர்கள், 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்சிப் பொறுப்பிற்கு செல்லுங்கள். மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதே போல் மாநில அளவிலும் வயது நிர்ணயிக்கப்பட உள்ளது. நானே கூட பொறுப்பிலிருந்து விலக வேண்டி வரும்"

அப்புறம் நடந்த தமாஷையும் பாருங்கள்!

விழுப்புரத்தில், தி.மு.க., மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது. கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். நகர, ஒன்றிய வாரியாக இளைஞர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேர்காணலின் போது வயது சான்றுகளை வாங்கி பார்த்த ஸ்டாலின், சில கேள்விகளை கேட்டார். 30 வயதை கடந்து ஒரு மாதமான நபரை கூட ஏற்க முடியாதென வெளியே அனுப்பினர். நேர்காணலின் போது, இளைஞரணி அமைப்பாளர் (ஸ்டாலின்) பெயர் தெரியாமல் விழித்தவரை, "நீங்கள் வெளியே போகலாம்" என, ஸ்டாலின் கூறினார்

இளைஞர் அணி அமைப்பாளரிடமே , யார் என்று தெரியாது என்று சொல்கிற அளவுக்குத் தான் அந்தக் கட்சியின் செயல்பாடு இருந்து வந்திருக்கிறது என்பது ஒரு புறம்! ஸ்டாலினிடம் இருந்து, ராசாத்தி வகையறா குறிப்பிட்டுப் பறிமுதல் செய்யக் கண் வைத்திருக்கும் இடமேஇளைஞர் அணி என்பதும், அதைக் காபந்து செய்து கொள்வதற்காகத்தான் இப்போது அவசர அவசரமாக  இந்த வயது உச்சவரம்பு சீர்திருத்தம் எல்லாம் என்று சொன்னால் மிகையில்லை, தவறுமில்லை.

ஆக நேரு சொன்னதை வைத்து காங்கிரஸ் திமுக உறவு முடிந்து விட்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டீர்களானால் அது சரியாக இருக்காது!

இங்கே அரசியல் வெளிப்படையாகத் தெரிகிற விஷயங்களில் இல்லை! திரைமறைவு நாடகங்களிலேயே நடந்து முடிந்து விடுகிறது!


5 comments:

  1. நேரு காண்டி குடும்ப‌ வாரிசுக‌ளால், தேச‌ம் அழிகிற‌து,
    முக‌ குடும்ப‌ங்க‌ளின் ச‌ண்டைக‌ளால், த‌மிழ‌க ம‌க்க‌ள் அல்ல‌ல் ப‌டுகிறார்க‌ள்.
    விஷ‌கிருமிக‌ளை ப‌ர‌ப்பும் விஷ‌ விருஷ்ச‌ங்க‌ள்.

    ReplyDelete
  2. வாருங்கள் திரு.வாசன்!

    இனி பொறுப்பதில்லை எரிதழல் கொண்டு வா என்று எந்த ஜனமும் கொந்தளித்து வரப்போவதில்லை, அப்படியே கூக்குரல் இட்டாலும், சில்லறை இலவசங்களிலேயே சரிக்கட்டி விடலாம் என்ற மமதையில் இந்திய அரசியல் நடந்து கொண்டிருக்கிறது!காலம் ஒரு நாள் மாறும்!

    ReplyDelete
  3. term limit போன்ற திருத்தங்கள் வந்தால் இந்தியாவின் அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் அரசியலுக்கு வருவதில் தவறில்லை - அவர்களுக்கும் உரிமை உண்டே? ஆனால் சந்ததி சந்ததியாக அவர்களே ஆட்சியில் இருக்கையில் மக்களாட்சி என்பதற்கு பொருளே இல்லாது போய்விடுகிறது. மன்னராட்சி இன்னொரு வடிவில்.

    term limit போன்ற திருத்தங்களைக் கொண்டு வர அன்னா மாதிரி ஆட்கள் உண்ணாவிரதம் இருப்பதில்லையே, ஏன்? பாமர மக்கள் அளவில் இது பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்? அரசியல் சட்டம் அறிந்த பொறுப்புணர்ச்சியுடைய ஒன்றிரண்டு வக்கீல்களின் உதவியுடன் இது போன்ற குடிமகன் மசோதாக்களை சமர்ப்பிக்க முடியாதா? (ஒரு வேளை இதெல்லாம் ஏற்கனவே செய்யப்பட்டு தோல்வி கண்டதோ?)

    ReplyDelete
  4. அண்ணா ஹசாரே அடுத்து, தேர்தல் சீர்திருத்தங்களை கையில் எடுத்துக் கொள்ளபோவதாக சொன்னதோடு சரி!

    அவ்வளவு முக்கியமானதாக இல்லாததாக ஒன்றிரண்டு சீர்திருத்தங்கள் மேலோட்டமாக செய்யப்பட்டதும் இங்கே நடந்திருக்கிறது.ஆனால், இப்போதிருக்கும் ஊழல், நிர்வாகக் கோளாறுகள் அத்தனைக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது இந்தியத்தேர்தல் முறையில் உள்ள கோளாறுகளே என்பதை முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் யோசித்து, தேர்தல் சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தி தினமணி ஆசிரியர் திரு ஏ என் சிவராமன் கணக்கன் என்ற பெயரில் தினமணி நாளிதழில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். பின்னால், தினமணி கதிர் வெளியீடாக, அது புத்தகமாகவும் வந்தது.அவர் அளவுக்கு, தேர்தல் சீர்திருத்தங்களை, வலியுறுத்தி வேறெவரும் பேசியதாக நானறிந்த அளவுக்கு இல்லை.

    வெஸ்ட்மினிஸ்டர் மெதட் என்றழைக்கப்படும் Winner takes all தேர்தல் முறை, இந்தியா மாதிரி வளர்ந்துவரும் ஜனநாயகத்தில் எப்படிப்பட்ட சீரழிவுகளைக் கொண்டு வரும் என்பதையும், உலகத்தின் வாக்குச்சீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் இயங்கும் ஒவ்வொரு நாட்டில் என்ன மாதிரி தேர்தல்கள் கையாளப்படுகிறது என்பதையும், பிரதமர் தலைமையிலான ஒரு மந்திரிசபை என்பதற்கு மாற்றாக அமேரிக்கா மாதிரி ஜனாதிபதியே நேரடியாக அரசை நிர்வகிக்கிற முறை இப்படி எல்லாவற்றையும்,வாசகர்கள் யோசிக்கிற மாதிரி அந்தக் கட்டுரைகள் இருந்தன.

    https://groups.google.com/group/mintamil/msg/9509fbc643b7a69b?hl=ta&&q=49(O)

    மேலே உள்ள சுட்டியில், சென்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் சமயத்தில் இது தொடர்பாக ஒரு குழுமத்தில் எழுதியது, கொஞ்சம் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  5. https://plus.google.com/u/0/101258957068620539200/posts/BhQbmgnYHKz

    கூகிள் ப்ளஸ்சில் இது தொடர்பாக ஒரு விவாதத்தைத் தொடங்கும் நிலையிலேயே ஒரு விந்தையான வாதம், சம்பந்தமே இல்லாமல் எப்படிக் குழப்பி விட்டுப் போயிருக்கிறது என்பதையும் பாருங்கள்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!