இட்லி வடை பொங்கல்! #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா?

இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந்திய அரசியல் போய்க்கொண்டே இருப்பதால் இந்த 70வது பதிவை எழுத முயன்று நிறைய சனிக்கிழமைகளில் கைவிட்டிருக்கிறேன். இந்தப் பக்கம் எழுதி ஒருமாதத்துக்கும் மேலாகி விட்டதால், இன்றைக்குக் கொஞ்சம் எழுதலாமே என்ற எண்ணம் வலுத்ததால் இந்தப் பதிவு. தூண்டுதலாக இந்த ட்வீட்டர் செய்தி இருந்தது என்று தனியாகச் சொல்ல வேண்டுமா?    

ஒரு காங்கிரஸ் விசிலடிச்சான் குஞ்சு ஒரு கட்டுரையை காங்கிரஸ் தொண்டர்களுக்கு (அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?! ) புளகாங்கிதத்துடன் வாசிக்கச் சொல்லிப் பரிந்துரைத்திருக்கிறார்!
 
 
மேலே படத்தில் இருப்பது பரத் பூஷன். Sr.Journalist  இந்த மூத்த பத்திரிகையாளர் என்ற அடைமொழிக்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறீர்கள்? ஒருவர் எதைப்பற்றி எழுதுகிறாரோ அதைப்பற்றிய தெளிவுடன் அனுபவமும் கூடியவர் என்று தானே நினைக்கிறீர்கள்? இந்திய சூழ்நிலையில், அப்படி உறுதியாகச் சொல்ல முடியாது. இங்கே பெரும்பாலான பத்திரிகையாளர்கள் ஒருபக்கச் சார்பாகவே எழுதுகிறவர்கள், தங்களை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகவே  நினைத்துக் கொண்டு கருத்துக்கள், உபதேசங்களை அள்ளி வீசுகிறவர்கள் என்றொரு யதார்த்தமும் இருக்கிறதே! 25+ வருடங்கள் அனுபவமுள்ள பரத் பூஷன் மட்டும் விதிவிலக்கா என்ன?

  
இது The Quint தளத்தில் நேற்று பரத் பூஷன் எழுதிய விமரிசனக் கட்டுரையின் சாராம்சம்.  என்ன சொல்ல வருகிறார் என்று பார்த்தால், மூத்த பத்திரிகையாளர், இருபத்தைந்து வருடங்களுக்கும் மேல் பல இதழ்களின் நிர்வாகப்பொறுப்பிலும் இருந்த ஒருவர் என்பதெல்லாம் காணோம்!  சோனியா காங்கிரசின் பழந்தலைகள் அல்லது பெருசுகளை மட்டுமே விமரிசிக்கிற மாதிரி காரணங்களை அடுக்கினால் அது எந்த அளவுக்குப் பொருத்தமானதாக இருக்கும்? கட்சி அமைப்பைத் தனது சௌகரியத்துக்காக பாட்டி இந்திரா உடைத்து நொறுக்கிய அதே பாணிதானே இன்றைக்கும் தொடர்கிறது? பானாசீனாவின் உபயோகமே வேறு! அவரையோ அவர் மகனையோ போய்க் களத்தில் இறங்கி. கட்சியைக் கீழே இருந்து கட்டு என்றால் நடக்கிற காரியமா? காங்கிரசுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி இருக்கிறது என்பதைத்தவிர கட்சி அமைப்போ. தொண்டர்களோ, அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர்களோ கடந்த 55+ வருடங்களில் இருந்ததே இல்லை. 

கட்சியைக் கீழே இருந்து கட்டுவதில் அனுபவமுள்ள கம்யூனிஸ்டுகளே ஸ்தாபன அமைப்பு வலுவிழந்து சிதறிக் கிடக்கிறார்கள் என்கிறபோது, கட்சித் தலைமையே தனது சௌகரியங்களுக்காக கட்சியை உடைக்கிற பாரம்பரியமுள்ள காங்கிரஸ் கட்சி, எப்படிக் கட்சி அமைப்பை வலுவாக்குமாம்? கட்சி அமைப்பைக் கட்டக்கூடிய திறமையுள்ள காங்கிரஸ் ஆசாமி யாரேனும் இருக்கிறாரா என்ன? 

The real issue that the Congress party must urgently address is to revive party institutions – from booth level to the All India Congress Committee. Unless these institutions are activated, made vibrant and meet regularly, there cannot even be an accountable discussion of the party’s performance. Where will Congressmen air their opinions when the AICC does not meet regularly—the party Constitution mandates six monthly meetings but there is often not even an annual meeting? என்று எழுதத் தெரிந்த பரத் பூஷனுக்கு இப்படியொரு கோளாறைத் தொடங்கி வைத்ததே இந்திரா காண்டி தான் என்பது தெரியாதா? மாமியாரை மிஞ்சிய மருமகள் சோனியா, கட்சியைத் தனது குடும்பக் கம்பெனியாகவே குறுக்கி விட்டார் என்பதும் தெரியாதா? 

தெரிந்தே தான் சோனியா, ராகுல், ப்ரியங்கா இவர்கள் மீது வைக்கப்படும் விமரிசனங்களை நிராகரிக்கிறார். நிராகரிக்கிற அளவுக்கு சோனியா அல்லது அவரது மக்குப்பிள்ளைகள் அப்படி என்ன உருப்படியான அரசியல் செய்து கொண்டிருக்கிறார்களாம்? அதைப்பற்றி ஒன்றையும் சொல்லக்காணோம்! இருந்தால்தானே சொல்ல? 

ராகுல் காண்டி வழக்கம்போல ட்வீட்டரில் மட்டும் வந்து அக்கப்போர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பப்பி அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார். கட்சித்தலைமையை வேறு எவருக்கும் விட்டுக்கொடுக்க மனமில்லாத சோனியா காண்டி தன் மக்குப்பிள்ளைகள் அரசியல் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்புறம் என்ன? சோனியா காங்கிரஸ் அப்படியே எழுந்து நின்றுவிடும் என்று நம்புகிறவர்கள் மிகவும் கம்மியான நபர்கள்தான்! பரத் பூஷன் கூட அப்படி நம்புகிற ஆள் மாதிரித் தெரியவில்லை, மோடி மீதான வெறுப்பு மட்டுமே பலரை ஒருபக்கச்சார்புடன் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.

மீண்டும் சந்திப்போம். 

1 comment:

  1. ஒரு நாளைக்கு மூன்று இடுகைகள் போடுவீங்க. இப்போ ரொம்ப நாளா இணையம் பக்கமே உங்களைக் காணோமே. என்னாச்சு?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!