Showing posts with label ஊட்டி வளர்ப்பது. Show all posts
Showing posts with label ஊட்டி வளர்ப்பது. Show all posts

கொஞ்சம் செய்திகள், கொஞ்சம் வினோதம், சில வரிகளில்!


 வெர்செயில்சில் திணிக்கப்பட்ட ஒப்பந்தம் 1919

முதலாவது உலகப் போர் 1914 இல் ஆரம்பித்தது என்று தெரியும். அந்த முதல் உலகப் போர் தொடர்பான தாவா, இழப்பீட்டை ஜெர்மனி வருடா வருடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதும், அதன் கடைசித் தவணையான சுமார் ஏழு கோடி யூரோ இந்த மாதம் கொடுப்பதோடு முதல் உலகப்போர் மீதான தாவா முடிவுக்கு வருகிறதும் கொஞ்சம் நமக்குப் புதிய செய்தி தான் இல்லையா!


இந்த நஷ்டஈடு எவ்வளவு தெரியுமா? சுமார் 9600000 கிலோ  தங்கத்திற்குச் சமமான 269 பில்லியன் தங்க மார்க்குகள்(மார்க் என்பது ஜெர்மானியச் செலாவணி) 1929 ஆம் ஆண்டில் இது 112 பில்லியன் தங்க மார்க்குகளாகக் குறைக்கப்பட்டது. இதை 59 வருடங்களில் வர்டாந்திரத் தவணைகளில் கொடுக்க வேண்டும் என்பது ஜெர்மனி மீது விதிக்கப்பட்ட ஒப்பந்தம்.

1920 இல் தோற்றுப்போன ஜெர்மனி மீது நஷ்டஈட்டை  நேச நாடுகள் வலியுறுத்தி வாங்கிக் கொண்டதில் ஜெர்மனி கிட்டத்தட்ட திவாலாகிப் போனதை சாக்காக வைத்துத் தான் ஹிட்லரின்  நாஜிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 1929 வாக்கில் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவை சந்தித்தபோதும், நாஜிக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் இந்த நஷ்டஈடு நிறுத்தப்பட்டிருந்தது. 1953 இல் மறுபடி ஆரம்பித்து, அதன் கடைசித் தவணை இந்த மாதம் மூன்றாம் தேதி  முடிகிறது. இருபது வருடங்களுக்கு முன்னால் இதே  அக்டோபர் மூன்றாம் தேதியில் தான் இரண்டாம் உலகப் போரில் இரண்டாகப் பிரிந்த ஜெர்மனி, மறுபடி ஒன்றாக இணைந்தது என்பதும், முதலாவது உலகப் போர் முடிந்து 92 ஆண்டுகள் நிறைவாகிறது என்பதும் கொஞ்சம் கூடுதல் செய்திகள்.

இந்த அடித்துப் பிடித்து வாங்கும் நஷ்ட ஈட்டின்  பின்னணியில் வேறு ஒன்றும் இருக்கிறது! ஜெர்மனியிடமிருந்து இந்த நஷ்டஈட்டைப் பெறும் இங்கிலாந்தும், பிரான்சும் உலகப் போர் மூண்ட தருணத்தில் யுத்தச் செலவுக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கிய கடனை இதில் இருந்து தான் திருப்பிச் செலுத்த வேண்டும்! இது எப்படி இருக்கு!


இதை விட வினோதமான செய்தி இங்கே
இரண்டரை லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் வர்த்தக உபரியை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் சீனா, ஏறத்தாழ  அதே அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து உதவியாகப் பெறுகிறது! 

வருடாவருடம் சுமார் ஆயிரத்து இருநூறு கோடி அமெரிக்க டாலர்களை, ஜப்பான் சீனாவுக்கு உதவித் தொகையாகக் கொடுக்கிறது. எதற்காக என்றால், இரண்டாவது உலகப் போரை ஒட்டிய காலங்களில், ஜப்பான் சீனாவில் செய்த தவறுகள், அட்டூழியங்களுக்குப் பிராயச் சித்தம் தேடுகிற மாதிரி! அல்லது தண்டம்  அழுகிற மாதிரி என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்களேன்! 

உதவியையும் வாங்கிக் கொள்வார்கள், உதவுகிற நாட்டுக்குக் குடைச்சலும் கொடுப்பார்கள்!
 

சமீபத்தில் படகில் மோதியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு சீன மாலுமியை வைத்து சீனா ஆடிய ஆட்டத்தை செய்திகளில் படித்திருப்பீர்கள் தானே!

சண்டியரை ஊட்டி வளர்க்கும் உதவி

என்பது இது தான்! அமெரிக்கா  இதே மாதிரி உதவிகளில்தான் பாகிஸ்தானை சண்டியராக வளர்த்துக் கொண்டிருக்கிறது. பின் லேடனையும் இதே மாதிரி உதவிகளில் வளர்த்துவிட்டுத் தான் இப்போது குத்துதே குடையுதே என்று அலறிக் கொண்டு அதே அய்யம்பேட்டை வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கிட்டத் தட்ட இதே மாதிரியான விஷயம் இங்கே இந்தியாவில் கொஞ்சம் வினோதமாகத் தான் நடந்து கொண்டிருக்கும்!அதையாவது புரிந்து கொண்டிருக்கிறீர்களா?

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிற மாதிரி என்று சொல்வார்களே அதே கதைதான்! நேரடியாக, மறைமுகமாக என்று பலவிதமான வரிகளில் உங்கள் பாக்கெட்டில் இருந்து பறி முதல் செய்து கொள்வார்கள். அதில் இருந்து கொஞ்சம் இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் என்று வழங்குவார்கள். வழங்குவது ஒரு பங்கு என்றால் அதைத் தம்பட்டம் அடிப்பது நூறு பங்காக இருக்கும். இலவசங்களில் கொஞ்சம் மயங்கி, அவர்களையே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறீர்கள் பாருங்கள்! அதற்கு தண்டனையாக உங்களிடமிருந்து வேறு வழிகளில் தேட்டை போடுகிற வேலை நடக்கும்.

அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

சர்வதேச அளவில் சீனாவாக இருக்கட்டும், உள்ளூரில் கொட்டம் டிக்கும் அரசியல்வியாதி, தாதா எவராக இருக்கட்டும், அவர்களை ஊட்டி வளர்ப்பது நாம் தான் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?