Showing posts with label எதிர் கவுஜ. Show all posts
Showing posts with label எதிர் கவுஜ. Show all posts

எங்களுக்கும் கவுஜ எழுதத் தெரியுமில்லே .....?!


இது சத்தியமா இதுக்கு எதிர்க்கவுஜ இல்ல.... தற்செயலா அமைஞ்சது! நம்புங்க!

அட எங்களுக்கும் கவுஜ எளுத வரும்ல......மருதேய்ய்ய்ய்ய்ன்னு ஒருக்காச் சொல்லிப் பாருங்க! மருதையும் கவுஜையும் சேர்ந்தே இருப்பது தெரிய வரும்!

கிளர்ந்தெழும் உணர்வுகள் அடங்கின பிறகு
வளர்ந்திடும் அமைதியின் பாசக் கரங்களிலே
அழிந்தது முடிந்தது எனப் புலம்பாமல்
இழிந்ததன் காரணம் நம்மிடம் தான்
என்பதை உணரும் வேளை வரும்
கண்ணீர் விடுவதை நிறுத்திக் காரியமாற்றும்
உறுதியும் அங்கே கூட வரும்
விடுதலை எவரோ தருவதல்ல
கும்பல்கள் கூச்சலில் விளைவதல்ல
நடந்ததை மாற்றும் வல்லமை இல்லை
நடப்பதைச் சரியாய்ச் செய்யும் வரை
நேற்றைய கதையைப் பேசுதல் பயனில்லை.

இந்தத் தருணம் செய்கிற காரியம்
எந்தவோர் இழுக்கையும் அகற்றிவிடும்
நொந்ததைப் பேசும் நிலைவிடுத்து
வந்ததும் இனி வருவதும் எதிர்கொள்ளும்
இலக்கினைக் கொள்க! இனிது வாழ்க!

இலங்கை மாநகரம் என்ற பதிவில் நண்பர் ராதாகிருஷ்ணன் ஆற்றாமையோடு எழுதியிருந்ததற்கு, வாசித்த எதிர்க்கவுஜ தான் மேலே இருப்பது.

அம்மன் பாட்டு, அம்மாவைப் பாடுவதாக இருக்கும்இந்தப் பக்கங்களில் அவ்வப்போது கவிநயா எழுதும் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு எழுதுவது வாடிக்கையாகி விட்டது. அங்கே இருந்து கவிநயா பக்கங்களில் நான் படிச்ச முதல் கவுஜ இதுதான்னு நினைக்கிறேன்! கல், செங்கல் இப்படி எதுவும் வராத தைரியத்தில் கவுஜ அடுத்தடுத்து எழுத ஆரம்பிச்சேன்.

சிறுகுருவிக்கு ஏக்கத்தைத் தந்ததும் நான்
சிறுதுளிக்குள் இருந்துன் தாகத்தைத் தீர்ப்பதும் நான்
சிறுதுளிதான் பெருங்கடலாய் ஆனதை நீ அறியாயோ
சிறுகுருவி நீ சொல்லு! ஏக்கம் எதுக்கென்று!
கன்றும் மறந்து விடும் விளையாட்டு ஆசையிலே
கன்றை மறக்காமல் தாய்ப்பசு கதறுது பார்!
புவனங்கள் படைத்தாலும், தாய்மை போய்விடுமோ?
கன்றுக்குக் குரல்கொடுத்து தாயிங்கு அழைப்பதைப் பார்!

என் அன்னைநீயே இது அவங்க பாட்டு. அதுக்கு எதிர்ப்பாட்டு நம்மோடது.
ஒரேயொரு வார்த்தை சொல்வாய்ன்னு தான் ஆரம்பிச்சாங்க! நமக்கு ஒரே வார்த்தையில், ஒரே எழுத்தில் பதில் சொல்லிப் பழக்கம் இல்லீங்களா, அதான்..?

சரியென்று ஒரு வார்த்தை சொன்னால் சரியாகப்போய் விடுமா?
கதைமுடிவைத் தெரிந்து கொண்டு
கதை படித்தால் சரிவருமா?

பிறவிதொறும் தொடரும் சொந்தம்
மறந்தேதான் போய் விடுமா?
மறந்தால் அது சொந்தமென ஆகிடுமா?
பிறந்ததற்கொரு பொருள் வேண்டாமா?

மாறிமாறிப் பிறப்பதுவும் ஓர் விளையாட்டே!
விளையாட்டை அறிந்துகொண்டால்
வினைஎதுவும் தொடர்வதில்லை!
துயரென்று ஒன்றுமில்லை! என்றுமில்லை!

/சரின்னு சொல்ல வேணாம்; ஏதேனும் சொன்னா போதும் :)/
அப்படீன்னு அவங்க பதில் வேற சொன்னாங்களா, அதனால, நடுவுல கொஞ்சம் வசனம், வசன கவுஜயின்னே வச்சுக்கோங்களேன்!

அதுக்குத்தான்
'கதைமுடிவைத் தெரிந்து கொண்டு
கதை படித்தால் சரிவருமா?'ன்னு ஏற்கெனெவே சொல்லியாச்சே:-)

நாம் இது வரை பார்த்திருக்கும் கேட்டிருக்கும் மகான்களில்,சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் இருவருமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள். அவர்கள் இருவருமே அழுத்தம் திருத்தமாகச் சொல்வது, கடவுள் இந்த ஸ்ருஷ்டியைத் தொடங்கும் போது விளையாட்டாகவே, விளையாடுவதற்காகவே தொடங்கினானாம்!அவனுடன் விளையாட்டில் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்வது தான் படைப்பின் ஒரே வேலை!

வள்ளலார் கூட இதைக் கொஞ்சம் சீரியசான வார்த்தைகளில்,
"முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்,
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்"
என்று சொல்கிறார்.

விளையாடும் போது விளையாட்டிலேயே லயிக்கப் பழக்கினால், விளையாடும் போது ஏற்படுகிற வலி தெரியாது. வலியை மட்டும் பார்க்கப் போனால் விளையாட்டு ருசிக்காது! அப்படி விளையாட்டு ருசிக்காமல் போகிறவர்கள் மட்டுமே எனக்கு இதிலிருந்து விடுதலை-பிறவா வரம் தாரும் என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் எப்படியிருக்க வேண்டுமென்று உத்தேசம்?!

முன்னால் ஒரு பாட்டுக்கு எசப் பட்டா எழுதினது தான்! இங்கே ராமனைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ராவணனும் வேண்டியிருக்கிறது.

நடப்பதெல்லாமோர் நாடகமே
நடிப்பதுதான் இங்கே நம்வேலை!
நடப்பதை அவன் செயல் என்றே
நடக்கட்டும் அவன் செயல் என்றே
நடிக்கச் சொல்லிக் கொடுத்தபடி
நடிப்பது மட்டும் நம் வேலை
திரைக்குப் பின்னால் பார்க்கையிலே
ராமனோடு ராவணனும் ஒன்றே என்று தெரியவரும்

நீ எந்தன் உயிரிலேன்னு அவங்க பாட்டெழுதவும், எதிர்க்கவுஜயும் வந்தாச்சு!

உறவென்று சொன்ன பொழுதில் ஓம்காரமாகி வருவாள்
வரமென்று நாடுபவர் சிந்தை குளிரத் தருவாள்
பவமென்னும் பிணியகற்றிச் சுக ஆனந்தம் நிறைப்பாள்
புவனங்கள் காக்கின்ற நாயகி என்னையும் மறப்பாளோ?

மறவாத வரம் வேண்டும்னு அவங்க அம்மாகிட்ட தான் கேட்டாங்க! எதிர்ப்பாட்டு நம்மோடது மறக்காம வந்தது!

விளையாட்டில் ஆசைவரும் விளையாடித்தான் பாரேன்
விளையாட்டு மறந்ததென்றால் பிறவாத நிலை சேரும்!
விளையாடச் சொல்லுபவள் அன்னைதான் என்கையிலே
விளையாட்டை மறுப்பது யார் மறப்பதும் யார் சொல்லேன்!
நினைவே தவமாகும் நிலை சேர்க்கும் வரமாகும்
மறவாத வரமென்றால் பிறவாத நிலைதானே?

இதைப் படிச்சுட்டு, திரு சுப்புரத்தினம் என்கிற சூரி ஐயா, "பொறுமையுடன் நீங்கள் கேட்பீர்கள் தெரியும். ஆனால், . திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கேட்கவேண்டுமே !”ன்னு அங்கேயே கேட்டாருங்க!

சுப்புரத்தினம் சார் சொன்னபடி, கேட்பதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், சாஸ்த்ரீய இசை ஞானம் சுத்தமாக இல்லாதவன் நான். அதைக் கண்டுபிடித்ததாலோ என்னவோ, உங்களுக்கு என்னுடைய பொறுமையைப் பற்றி சரியாகக் கணிக்க முடிந்திருக்கிறது:-)

இது அங்க சொன்னது, சாஸ்த்ரீய இசை ஞானம்ன்ற இடத்துல, எல்லாத்துலேயும்னு வச்சுப் படிங்க! நான் எப்போதும் உண்மையே பேசறவன்னு தெரியுமே?!

ஓமென்றொலிக்கும் ஔஷதம் நீயே !ன்னு அவங்க எழுதினதுக்கு நம்மோட எதிரொலி!

மணியும் மந்திரம் தன்னொடு அவுடதம் ஆனவள் நீயே
பிணிஎதும் அண்டாமல் காப்பவள் நீயே !
கண்ணுள் மணி நீ! சொல்லுள் பொருள் நீ!
கவிதைப் பொருளாய்த் தமிழும் தந்தாய்!

அன்னையும் நீயே! அண்மையும் நீயே
நன்மையும் நீயே! அன்மையும் நீயே!
என்னையும் உன் மயமாக்குவள் நீயே
தன்னையும் அறிந்திடத் தருபவள் நீயே!

இதுல வர்ற ஒரு வார்த்தை, "அன்மை"ன்னா என்ன?ன்னு கேட்டுட்டாங்க! கவுஜ எழுதறத விட தான் எழுதின கவுஜைக்குத் தானே கோனார் நோட்ஸ் எழுதத் தெரிஞ்சிருக்கணும்னு அது வரைக்கும் தெரியாதுங்க!

மருதையில வளர்ந்தவனுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? ..ப்பூன்னு ஊதித் தள்ளிட மாட்டோம்?

எங்க வைகைப் புயல், வடிவேலு எத்தனை படங்கள்ல, குப்புற விழுந்து மீசையில மண் ஓட்டலையே, ஏன்னாக்க நான் விழுந்தது சிமென்ட் ரோட்டுல தானேன்னு சமாளிச்சிருப்பாரு! ஹைய்யோ! ஹைய்யோ!

அன்மை என்பது அல்லாததைக் குறிக்கும். நன்மை என்று சொல்லும் போதே நன்மை அல்லாதது என்ற பாகுபாடும் வந்து விடுகிறது. அதுவாகவும் இருப்பவள் என்ற பொருளிலேயே, அங்கே அந்தப் பிரயோகம்.

'தீது நன்மையெல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை' பாரதியின் காளிபாட்டு.

இப்படிச் சொல்லிச் சமாளிச்சாச்சு! சீத்தலைச் சாத்தனார் யாரும் அந்தப் பக்கமா வரலேங்கிறதால தப்பிச்சேன்!

அம்மா எனக்கொரு வரம் வேணும்..... ன்னு அவங்க கேட்டதுக்கு வரமா வந்த கவுஜ!
உண்டென்றிருந்தாலும் இல்லையென மறுத்தாலும்
கண்ணில் வைத்துப் பார்ப்பதுவும் நானல்லவோ?
கண்ணில் வைத்துப் பார்ப்பதனால் கயற்கண்ணி ஆனவள் நான்
பெண்ணே கலங்காதே மறந்தேன் என நினையாதே!

கற்சிலையில் மட்டுமில்லை கருத்திலும் வந்திடுவேன்
கருணைக்குப் பஞ்சமில்லை வார்த்தைக்கு உருவமில்லை
மண்ணாய் இருப்பதும் நான் உயர் விண்ணாய் இருப்பதும் நான்
எல்லாம் என்செயல் எனும்போது ஏங்குவதும் எதற்காக?

ஏக்கங்கள் தவிர்த்துவிட்டு உயர் ஆக்கங்கள் உறுதிகொள்வாய்!
ஏதுமில்லை துணைஎனக்கே என ஒருபொழுதும் எண்ணாமல்
வேதனைக்கு இடமில்லை சோதனைகள் எதுவரினும்
சோதியாய்த் துணையிருக்கும் தாய் நான் அருகிருக்க!
சிறுகுருவிக்கு ஏக்கத்தைத் தந்ததும் நான்
சிறுதுளிக்குள் இருந்துன் தாகத்தைத் தீர்ப்பதும் நான்
சிறுதுளிதான் பெருங்கடலாய் ஆனதை நீ அறியாயோ
சிறுகுருவி நீ சொல்லு! ஏக்கம் எதுக்கென்று!

கன்றும் மறந்து விடும் விளையாட்டு ஆசையிலே
கன்றை மறக்காமல் தாய்ப்பசு கதறுது பார்!
புவனங்கள் படைத்தாலும், தாய்மை போய்விடுமோ?
கன்றுக்குக் குரல்கொடுத்து தாயிங்கு அழைப்பதைப் பார்!

பாட்டுக்கொரு புலவன் பாரதியின் கையெழுத்தில்....