Showing posts with label வாரிசு. Show all posts
Showing posts with label வாரிசு. Show all posts

பாதுஷாக் கனவுகள்....!



"மும்பையில் சிவசேனா எதிர்ப்புக்கு மத்தியில் அந்த தரப்பினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் அங்கு லோக்கல் ரயிலில் திடீர் பயணம் செய்தார். நான் ஒரு இந்தியன் என்று பெருமை பொங்கிட அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். மும்பையில் நுழைய விடமாட்டோம் என்று அச்சுறுத்திய சிவசேனாவின் மிரட்டல் ஒன்றும் எடுபடவில்லை.  முன்னதாக மும்பையில் ராகுல் பேசவிருந்த கூட்ட அரங்கில் நுழைய முயன்ற சிவசேனா தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். மராட்டியர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்ற கருத்துக்கு எதிர்த்து குரல் கொடுத்தன் மூலம் ராகுல் சிவசேனாவின் எதிர்ப்புகளை நேரிடையாக சந்தித்து வருகிறார்."

இந்தப் படமும் செய்தியும் தினமலர் நாளிதழில் இருந்து.

இன்றைய முக்கியச் செய்தியாக மட்டுமல்ல, வரவேற்கப்பட வேண்டிய செய்தியாகவும் இதைக் கருத வேண்டியிருக்கிறது!

ஒரு வலிமையான தலைமை இல்லாத நிலையில் அங்கங்கே தடி எடுத்தவனெல்லாம் தாண்டவராயனாகிவிடுகிற கொடுமையைப் பார்த்துக் கொண்டே இருக்கும் நிலைமையில், இந்த மாதிரிப் பேர்வழிகளின் உண்மையான மாஞ்சாச் சோறு என்ன என்பதைக் கேள்விக்குள்ளாக்குகிற எந்த ஒரு முயற்சியையுமே வரவேற்றுத் தானாக வேண்டிய நிலைமையில், அறுபதாண்டுக் குடியரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

ராகுல் காண்டியின்  மும்பை விஜயத்திற்கு மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த நிலையில், வீர வசனங்கள் வருவது என்ன பிரமாதமா என்று கேட்பவர்களுக்காக- இன்றைய காங்கிரஸ்காரனுக்கு வீரம், முதுகெலும்பு, சுய கௌரவம் இதெல்லாம்  இருந்ததே இல்லை வசனமும் கூட அடுத்தவன் தான் எழுதிக் கொடுக்க வேண்டும் என்ற யதார்த்தத்தைத் தெரிந்து வைத்திருந்தீர்களானால், ராகுல் செய்திருக்கும் அல்லது, உன்னை உள்ளே நுழைய விடமாட்டோம் என்று சவால் விட்டதற்குப் பதிலாக, உள்ளே வந்து, நான்கு மணிநேரம் மின் ரயிலில் சாதாரண ஜனங்களோடு பயணம், மாணவர்களோடு சந்திப்பு இப்படி சூட்டோடு  சூடாக  ஸ்டண்ட் அடிப்பதற்கே கூட தனி தைரியம், மாஞ்சாச் சோறு இருக்கவேண்டும்! 

ராகுல் காண்டி, ஒரு வித்தியாசமான அரசியல்வாதியாக வளர்ந்து கொண்டிருக்கிறார் என்பது நன்றாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இங்கே தமிழ்நாட்டுக்கு சில மாதங்களுக்கு
முன்னால் வந்தபோதே கூட, காங்கிரஸ் கட்சியின் சில வளைந்து கொடுக்கும் தன்மையை உடைத்து ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தது நினைவிருக்கலாம்! 

டில்லியில் இருந்து மட்டுமல்ல, எங்கிருந்து எந்தப் பிரபலம் வந்தாலும் சந்தித்து சால்வை போர்த்தி வணங்கி ஆசி பெற வேண்டிய அளவுக்கு உயர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு நபரை அவர் சந்திக்கவே இல்லை. அதைப் பெரிய விஷயமாகவும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை.  சென்னைச் சங்கமம் தான் நடத்த லாயக்கு, சென்னைப் பாதுஷா எல்லாம் இல்லை என்பது வெளியே கசிந்து விடாமல் மறைக்கவும், ஈகோ பன்க்சராகிப் புகைந்ததும் பழைய வரலாறெல்லாம் இல்லை! இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்று தான்!

உள்ளூரில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அ'லெக்சாண்டர்களுக்கு, ராகுல் காண்டி கொஞ்சம் புகைச்சலாகத் தெரிவதில் வியப்பு இல்லை.

தாக்கரேக்கள், மிரட்டல் வெற்று உதாராகிப் போனதில் நிறையவே உளற ஆரம்பித்திருக்கிறார்கள். கல்யாண வயது தாண்டியும் கட்டைப் பிரமச்சாரியாக ராகுல் இருப்பது பற்றியெல்லாம் உளற ஆரம்பித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், மும்பையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி முதல் அமைச்சர், தாக்கரே பேசுவதை விட, மும்பை மராத்தி மக்களுக்கே முதலில் சொந்தம், டாக்சி ஓட்ட மராத்தி தெரிந்திருக்க வேண்டுமென்றெல்லாம் அதிகமாகப் பேசியதை எதிர்த்து  ராகுல் கருத்து எதுவுமே சொல்லவில்லை.

இதில், சிவசேனாவுடன் கூட்டணியை முறிக்கத் தயாரா என்று பிஜேபிக்கு சவால் வேறு! சேனாவுடனான உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது என்று பிஜேபி வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

சவடால் பேச்சு மட்டுமே பெரிய சாமர்த்தியம் என்று தெனாவட்டாகத்  திரிந்த லொள்ளு யாதவ், முலாயம் சிங், கொஞ்சம் ஆட்டம் காண்பித்த மாயாவதி, ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மகன் ஜகன் மோகன ரெட்டி இப்படிக் கிழடுதட்டிப் போனவர்களுக்கும், வாரிசுகளுக்கும் கூட செம ஆப்பு இந்த இளைஞரிடத்தில் இருந்து தான் ஆரம்பித்திருக்கிறது!  இளைஞர்கள் கவனத்தை, ராகுல் அளவுக்கு வேறெந்த அரசியல் கட்சியுமே கூட, மாநில அளவில், மாவட்ட அளவில் கூட ஈர்க்க முடியவில்லை என்பதையும் சேர்த்துப்பாருங்கள்.

ஆப்போ, ஆப்பமோ தமிழ்நாட்டுக்கும் வருமா? ஒண்ணுமே வெளங்கலையே, ராசா! ஆ...ராசா!

தமிழ்நாட்டுக்கும் விடிவுகாலம் பிறக்கட்டும்!