Showing posts with label Lead Kindly Light. Show all posts
Showing posts with label Lead Kindly Light. Show all posts

இருள் மூடிக் கிடக்கும் மனமும் வெளுத்து...! ஒளி பிறக்கட்டும்!




தீபாவளிக் கொண்டாட்டங்களின் பரபரப்பு நம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டிருக்கும் இந்த இனிமையான தருணத்தில், இதயம் நிறைந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.



தீபாவளி என்றாலே பட்டாசுச் சத்தம், புதுத்துணி, இனிப்புப்பலகாரங்களோடு, நண்பர்கள், சுற்றம் உறவுகள் என்று அனைவரோடும் பகிர்ந்துகொள்கிற தருணமாக இருப்பது, இந்த நாளை விசேஷமான பண்டிகையாகக் கொண்டாடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பண்டிகைக்கான காரணங்கள் பலவிதமாக சொல்லப்பட்டபோதிலும், முக்கியமான உள்ளடக்கம் தீமையை, இருளை அழிக்கும் ஒளியைக் கொண்டாடுவதே!


அசதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம்! சாந்தி, சாந்தி, சாந்தி:


பொய்மையிலிருந்து சத்தியத்திற்கு அழைத்துச் செல்வாய்
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய்
மரணத்தில் இருந்து மரணமற்ற தன்மைக்கு இட்டுச் செல்வாய்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

இப்படி  திரிகரண சுத்தி, திரிதேகத்திலும் அமைதியும் சாந்தமும் நிலவ வேண்டிப் பிரார்த்தனை செய்வதே தீபங்களின் வரிசை என்று பொருள்படும் தீபாவளிப் பண்டிகையின்  முக்கியமான உட்கிடக்கையாக இருக்கிறது. ஸ்வாமி சிவானந்தரின் வார்த்தைகளில் தீபாவளிப் பண்டிகையை பற்றிக் கொஞ்சம் கேட்போம்.

தீபாவளி என்றால் காசைக் கரியாக்கிப் பட்டாசு கொளுத்துவது இல்லை! இந்தப் பட்டாசு கலாசாரம் மிகப் பிந்தைய காலத்தில் பண்டிகையோடு சேர்த்து ஆரவாரமான ஒரு  வியாபாரமாக்கப் பட்டது.  தீபங்களின் வரிசை என்று பொருள் தரும் இந்தப்பண்டிகை, வெளியே விளக்கேற்றி வெளிச்சத்தைக் கொண்டாடுவது என்று மட்டுமில்லை, நம்முடைய அகத்திலும் ஒளி பிறக்கவேண்டும் என்ற பிரார்த்தனையை உள்ளடக்கியது.பட்டாசுகளின், புத்தாடைகளின் பகட்டில் இந்த உள்ளார்ந்த பிரார்த்தனையை நாம் இழந்து விடக் கூடாது இல்லையா?

பிரார்த்தனை என்று சொல்லும் போதே Lead Kindly Light என்று துவங்கும் இந்தப் பாடல் என்னுடைய சிறுவயதில் இருந்தே எனக்குப் பிடித்தமான ஒன்றாக, இன்றைக்கும் என்னுடைய பிரார்த்தனைகளில் மிகவும் பிடித்தமானதாக ஒளியைக் கொண்டாடுவதாக மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.


இருள் மூடிக் கிடக்கும் மனங்கள் வெறுப்பில் எரியும்மனங்கள் என்று எதுவானாலும் சரி,
இருள் விலக்கும் தூய ஒளி பிறக்கட்டும்!

அனைவருக்கும் எனது தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்!