பாரதியார்! ஆய்வுகள், அவதூறுகள்..! திரித்துச் சொல்லப்படும் உண்மைகள்!


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் மோகனத் தமிழாக வரும் ஸ்ரீ ரங்கம் வி.மோகன ரங்கனைப் பற்றி, அவருடைய பரந்த வாசிப்பு அனுபவம் பற்றி இந்தப்பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். (சு)வாசிக்கப்போறேங்க வலைத்தளத்தில் ஸ்ரீ ரங்கம் மோகன ரங்கனுடைய "படித்தான் பரிந்துரையாக" சீனி.விசுவநாதன் அவர்கள் எழுதிய பாரதி ஆய்வு:சிக்கல்களும் தீர்வுகளும் நூல் விமரிசனத்தை, மின்தமிழில் இருந்து அப்படியே மீள்பதிவு செய்திருந்தேன்! மின்தமிழில் இருந்து எடுத்துப் போடுவதற்கு அதன் நிர்வாகிகளுள் ஒருவரான  முனைவர் நா.கண்ணன் ஆட்சேபமெல்லாம் சொல்ல மாட்டார் என்ற தைரியம் தான்!

ஸ்ரீ ரங்கம் மோகன ரங்கன், என்னவென்று விவரித்துச் சொல்லாமல், திலகர் மறைந்தபோது பாரதி ஏன் அவரைப் பாடவில்லை  என்ற கேள்வியைத் தாங்களே கேட்டுக் கொண்டு, பாரதியைப் பற்றித் திரித்துச் சொல்வதற்கு, சீனி விசுவநாதன் எழுதிய இந்தப் புத்தகத்தில் தெளிவான விடை இருக்கிறது என்பதை மட்டும் சொல்கிறார். 


எழுத்தாளரும், பதிவருமான ஜீவி தன்னுடைய பின்னூட்டத்தில் திரு. வ.ரா  எழுதிய புத்தகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.

கீற்று தளத்தில் பாரதியாரின் புதுச்சேரி வாசத்தைப் பற்றி பாரதி வசந்தன் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை இது தொடர்பாக வாசித்ததில், அதில் இருந்து ஒரு பகுதியை எடுத்து ஜீவி சாருக்கு பின்னூட்டமாகப் பதிவிலும் எழுதினேன். அது வருமாறு:


"உண்மையில் பாரதியின் இந்தச் 'சித்தக்கடல்” நூல்தான் அவனின் புதுச்சேரி வாசத்தை உள்ளது உள்ளபடி நமக்குக் சொல்லிக்கொண்டிருக்கும் காலக் கண்ணாடி; இலக்கிய சாசனம். 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகே பாரதி புதுச்சேரி வந்திருக்கக்கூடும் என்பது பாரதி ஆய்வாளர்களின் முடிவு. அந்தக் காலம் பாரதியின் இலக்கிய வாழ்வில் மிகவும் நெருக்கடியான காலம். அவன் சூரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்ததும் திலகரின் கொள்கையையும், வழியையும் ஆதரித்துத் தம்முடைய 'இந்தியா” பத்திரிகையில் 'எரிமலையாய்...” எழுதிக் கொண்டிருந்தான். அப்போது திலகருக்கு ஆறு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர்களையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கியபோது பாரதி மீதும் அவர் நடத்திய 'இந்தியா” பத்திரிகை மீதும் சென்னை சர்க்கார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தலைப்பட்டதும் பாரதியின் நண்பர்கள் அவரை உடனே புதுச்சேரிக்குப் போய்விடும்படி ஆலோசனை வைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் பாரதி, தேச விடுதலைக்காகச் சிறை செல்வதைக் காட்டிலும் கவிதைத் தொண்டு மூலமாக விடுதலை வேள்வியை வென்றெடுக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பப்பட, அதன்படியே அவனும் புதுச்சேரி வர நேர்ந்தது.

இந்த அரசியல் பின்புலத்தை அறிந்து கொள்ளாது, 'பாரதியார் கோழை, பயங்கொள்ளி என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். சிலர் வாய்விட்டும் சொன்னார்கள். பாரதி பயங்கொள்ளி அல்ல. ஒரு மனிதனுடைய உள்ளத்தின் உண்மையான நிலைமையை, அவன் பேசுகிற பேச்சு தெளிவாகக் காண்பித்துவிடும். பாரதியின் எழுத்திலே அச்சத்தை, தாட்சண்யத்தை லவலேசமும் காண முடியாது. நெருக்கடியில் பயப்படுகிறவன் அவன் அல்லன். பாரதி புதுச்சேரி போவதற்குக் காரணம் அவனுடைய நண்பர்கள். நண்பர்களின் யோசனைத் திறனில், பாரதிக்கு எல்லையற்ற நம்பிக்கை. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கிப் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தபின் பாரதி பட்ட கஷ்டங்கள், சிறைக் கஷ்டங்களைக் காட்டிலும் நிரம்ப ஜாஸ்தி என்றுதான் சொல்ல வேண்டும். 'எண்ணெய் காய்கிற இருப்புச் சட்டியிலிருந்து, எரிகிற நெருப்பில் வீழ்ந்த கதையைப் போல ஆயிற்று பாரதியாரின் புதுச்சேரி வாசம்...” என்று பாரதியால் 'தமிழ்நாட்டுத் தேசபக்தன்” என்று அரவிந்தரிடத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட வ.ரா. என்கிற வ. ராமஸ்வாமி ஐயங்கார் தம்முடைய 'மகாகவி பாரதியார்” நூலில் குறிப்பிடுவது பாரதியின் புதுச்சேரி வாழ்வின் இன்னுமொரு இலக்கியப் பதிவு."

முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே



அதைப் படித்துக் கொண்டிருந்தபோது, நம்முடைய கட் அண்ட் பேஸ்ட் தமிழ் ஓவியா ஐயா "பாரதி பாடல் புரட்டு: "பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம் " என்ற தலைப்பில் பெரியாரின் குடியரசு கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை வெட்டி ஒட்டி  செய்திருந்த வேலை ஒன்றையும் பார்த்தேன்!


"பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிர பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண் ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து, அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி, ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புத்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன.

இவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அதுதன் ஜாதிப் புத்தியைக் காட்டியேவிட்டது. எப்படியென்றால். சாதாரணமாக அப்புத்தகத்தின்பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்குக் காரணமே அப்புத்தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத்தில் சொல்லியிருந்தாலும். சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும். ஆனால், இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது.

அதாவது பாரதிபாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான மன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில் உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது. இது யாவருக்கும் தெரிந்ததேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்திப் பதிக்கப்பட்டிருக்கின்றதாம். இம்மாதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டியதாகவே இருக்கின்றன.

இரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாகுமன்றி, அது நம்மை ஏய்த்துத் தாழ்த்திவைத்திருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகப்படுகின்றது. நிற்க.

இந்தப் புத்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட யோக்கியர்களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரியமல்ல என்றாலும், நாட்டின் தேச பக்தர்கள் யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர்களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும், முழு மூடர்களுக்கும்கூட உதாரணம் வேண்டுமானால் இந்த பாரதிப் பாடல் புரட்டே போதுமென்று நினைக்கின்றோம்."
-------------------
தந்தை பெரியார்- “ குடிஅரசு”, கட்டுரை, 10.02.1929 -
நூல்: “பெரியார் களஞ்சியம் குடிஅரசு” தொகுதி - 8 பக்கம் 38-39
அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

இது, இரண்டு எதிர்முனைகளைப் புரிந்து கொண்டு யோசிப்பதற்காக! அப்படிப் பேசுகிற நபர்களின்  உள்நோக்கம், அந்தரங்க சுத்தியையும் தெரிந்து கொள்வதற்காக!

இப்படி எதிர்மறையாக, ஆதாரமோ, பகுத்தறிந்து பார்க்கும் திறமோ இல்லாமல் சேற்றை அள்ளி வீசுவதன் மூலம் மட்டும் எந்த உண்மையை இவர்களால் நிறுவ முடிந்திருக்கிறது?

பாரதியைப் பற்றிச் சொல்லியிருக்கும் வாசகங்கள்,  பாரதிக்குப் பொருந்தியதோ இல்லையோ, தனக்கு கன கச்சிதமாகப் பொருந்தியதை, பெரியார் அந்தக் கட்டுரையை எழுதிய நேரத்தில் அறிந்திருக்க முடியாது.  இந்த வார்த்தைகள் பொய்த்துப் போனதை அறிந்த  பிறகும் கூடப் பெரியார் அடிப்பொடிகள் இன்னமும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாதது  ஏன்?   பெரியார் நூல்களின் பதிப்புரிமை யாருக்கு என்ற பிரச்சினையும், அப்படி உரிமை கொண்டாடியது எதற்காக  என்பது வெளிப்பட்டுப் போன பிறகும் கூட, கட் அண்ட் பேஸ்ட்  வேலையைக் கடமையாகச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, இந்தப்  "பகுத்தறிவு" படும், அல்லது படுத்தும் பாட்டை நினைத்துச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!


எவரெவரோ பாரதியைப் பற்றி எழுதுகிறார்கள்! என் கணவர் பாரதி என்று திருமதி செல்லம்மாள் பாரதி, தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதைப் படிக்க இங்கே. (1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

 

2 comments:

  1. செல்லம்மா பாரதியின் வார்த்தைகளை பிரசுரித்திருக்கும் தளத்தின் சுட்டி கொடுத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. சகுந்தலா பாரதி எழுதிய புத்தகத்தில் அவர் தமது தந்தையாருடன் புதுவை சென்று 'மதம் ரிஷர்' (அன்னை)அம்மையாரைச் சந்தித்தது பற்றியும் பாரதியார் அன்னையுடன் ஹிந்து சமூக பழக்க வழக்கங்கள், மேன்மைகள் பற்றி நீண்ட நேரம் சம்பாஷனை நடத்தியது பற்றியும் எழுதி உள்ளார். அன்னை சகுந்தலாவுக்கு உண்பதற்கு நிலக் கடலையும் வாழைப் பழமும், மற்றும் பச்சைப் பாசிமனியால் செய்த மாலை ஒன்றும் தந்ததாய் எழுதி உள்ளார்.

    இந்தக் கட்டுரைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். பாரதியார் என்ற உடன் நான் படித்ததைப் பற்றி சின்னதாய் ஒரு பகிர்வு. அவ்வளவுதான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!