ஒரு இந்தியக் கனவு......!சில நாட்கள் முன்பு வரை கூகிள் பஸ், அப்புறம் என்னுடைய ஸ்டேடஸ் செய்தியில் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கும் "சுதந்திரப் பொருளாதாரம்" விவாத இழையைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். கிட்டத் தட்டப் பத்து நாட்களுக்கு மேல் இதை மாற்றவில்லை. ஆனாலும், அதைப் பார்த்து விட்டு எத்தனை பேர், அந்த விவாத இழையைக் கொஞ்சமாவது பார்த்தார்கள் என்று கேள்வி கேட்டு பதில் சொல்ல முனைந்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

எவ்வளவு ஆதாரங்கள், தகவல் இன்னும் அதிகமாகக் கிடைக்கும் சுட்டிகள் என்று கொடுத்து இருந்தாலும் அதையும் தேடிப் பிடித்துப் படிக்க முனைபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்பதை நன்றாகவே
அறிந்தே இருக்கிறேன்! இருந்தாலும், மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன என்பது கொஞ்சம் ஆறுதல்! இங்கே குழுமங்கள்,  வலைப்பதிவுகள் முழுக்க முழுக்க, பொழுதுபோக்கும் அம்சமாக மட்டுமே இருப்பது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருப்பதை, இந்த மாதிரி விவாதங்கள் காட்டுவதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. பயனுள்ள விவாதம் என்று நினைப்பவை கூட ஒரு எல்லைக்கு மேல் தொடராமல் அப்படியே அந்தரத்தில் நின்று விடுவதையும், ஒரு இழையில் கவனம் இருக்கும் போது, வேறெங்கோ கொட்டு, மேளச் சத்தம் கொஞ்சம் பலமாகக் கேட்டால் கூட்டமாக அங்கே பாய்ந்து ஓடுவதையுமே நிறையப் பார்த்துவிட்டதால், பதிவு எழுதுகிறவர்கள், வாசிப்பவர்களுடைய இந்தப் பொதுவான தன்மை என்னை ஆச்சரியப் படுத்துவதில்லை.

இந்த விவாத இழை தமிழில் மிக நல்ல முயற்சி என்று சொல்ல வேண்டும்! பொருளாதாரம் என்றாலே அது புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் கடினமானது என்று எதனாலோ நம்மில் நிறையப் பேர் தவறாக எண்ணிக்  கொண்டிருக்கிறோம். நிறையப் புள்ளி விவரங்கள், கோட்பாடுகள், அதை நிரூபிக்க எக்கச் சக்கமான சமன்பாடு, வாய்ப்பாடு என்று அலெர்ஜியாக இருக்கக் கூடிய கணிதம் என்று பூச்சாண்டி மாதிரித் தான் கற்பனை செய்து பழகி இருக்கிறோம். அப்படி எல்லாம் இல்லை, எப்படிப் பட்ட கோட்பாடாக இருந்தாலும், எளிமையாகச் சொல்லவும் முடியும், நாமே நம்முடைய சொந்த அனுபவங்களில்  இருந்து அவற்றைப் பொருத்திப் பார்த்து, பொய் எது, உண்மை எது என்பதையும் சோதித்துப் பார்த்து விட முடியும்
என்கிற மாதிரியான இழையாக திரு செல்வன் இதை எழுதிக் கொண்டிருப்பதைப் படிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

திரு செல்வன், அமெரிக்கப் பொருளாதாரம், சுதந்திரப் பொருளாதாரம் குறித்துச் சொல்பவை அனைத்தும் எனக்கு உடன்பாடானவை அல்ல என்றாலும்,
ஏற்றுக் கொள்ளக் கூடிய பல விஷயங்களையும் தொட்டு எழுதிக் கொண்டிருக்கிறார். உடன்பாடு இல்லைன்றாலும் கூட, திரு செல்வன் பேசியிருக்கும் சில கருத்துக்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும், எதனால் அது நமக்குப் பொருந்தாது என்பதையும் கொஞ்சம் யோசித்துச் சொல்ல வேண்டும் இல்லையா?

இங்கே இந்த விவாத இழையைப் படிக்கலாம்! ஒரு சாம்பிளுக்காக, அங்கே இருந்து ஒரு பகுதி இங்கே, திரு செல்வனுக்கும், மின்தமிழ் கூகிள் வலைக் குழும நிர்வாகிகளுக்கும் நன்றியுடன்!

நம்பிக்கை (hope) இழந்த ஏழைகளே கம்யூனிசத்தின் மூல ஆதாரம். அவர்களை நம்பியே அந்த கட்சி இயங்குகிறது.மக்களிடையே வர்க்க பேதத்தை தூண்டிவிட்டு என்டைடில்மென்ட் மனபான்மையை கம்யூனிசம் வளர்க்கிறது. பணக்காரர்களிடம் இருக்கும் பணம் தன்னிடம் இருந்து பிடுங்கப்பட்டது என்றும் அதை அவர்களிடம் இருந்து வரிகள், சொத்துப்பறிப்பு மூலம் பறிப்பது தான் நீதி,நியாயம் என்றும் ஏழைகள் நம்ப துவங்குகின்றனர். 

செல்வம் சேர்க்க சிறந்த வழி உழைத்து சம்பாதிப்பதே என்ற உண்மை மக்களிடம் இருந்து மறைக்கபடுகிறது. ரி டிஸ்ட்ரிபியூஷன் - மறுவினியோகம் (பணக்காரனிடம் இருந்து செல்வத்தைப் பிடுங்கி ஏழைக்கு அளித்தல்) மூலமே ஏழையின் வாழ்வு மேம்பாடடையும் என்ற நம்பிக்கை ஏழைகள் மனதில் ஊட்டபடுகிறது. 

மறுவினியோகத்தை சாத்தியமாக்கும் பலம் கம்யூனிஸ்டு கட்சிகளிடம் இல்லாதபோது அதை சாத்தியமாக்க ஏழைகள் புரட்சியில் சேர அழைக்கப் படுகின்றனர்.

புரட்சியில் சேரும் ஏழை தன் நம்பிக்கை அனைத்தையும் இழந்த நிலையிலேயே புரட்சியில் சேர்கிறான்.தன்னால் உழைத்து முன்னுக்கு வரமுடியும் என்ற நம்பிக்கை அவனை விட்டு அகலுகிறது.

நம்பிக்கை இழந்த மனிதன் தான் வாழும் வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இருப்பதாக கருதுவதில்லை. பணகாரர்கள், பூர்ஷ்வா வர்க்கம் மீது சுமத்தப்பட்ட கற்பனையான குற்ரசாட்டுகள் மூலம் அவன் மனதில் உண்டான வெறியே அவனை  இயக்குகிறது.தான் வாழ்நாளில் இதுவரை சந்தித்திராத பல பூர்ஷ்வா வர்க்கத்தை சேர்ந்தவர்களை அவன் வெறுக்க துவங்குகிறான்.தன் துன்பத்துக்கு காரணம் அவர்களே என நம்புகிறான்.தனக்கு கிடைக்காத இன்பங்கள் அவர்களுக்கும் கிடைக்க கூடாது என விரும்புகிறான். 

அனைத்துக்கும் அடிப்படை காரணம்.....நம்பிக்கை இழப்பு (losing hope). மனித இனத்தின் மாபெரும் சொத்தான நம்பிக்கையை  (hope) ஏழைகளிடம் இருந்து கம்யூனிசம் பறிக்கிறது.இப்படி நம்பிக்கை இழந்த மனிதர்களே கம்யூனிஸ்டுகள் ஆகின்றனர். 

மாறாக சுதந்திர சந்தை மனிதனுக்கு நம்பிக்கையை அளிக்கின்றது. அதன் மெஸேஜ் பாசிடிவானது.அது மனிதனுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. உழைத்து முன்னேறலாம் வா என  அறைகூவல் விடுக்கிறது.

பணக்காரர்களை எதிரிகளாக அது கருதுவதில்லை. 

உழைத்து முன்னேறிய ஏழைகளாக காண்கிறது." அவன் உழைத்தான் முன்னேறினான்.நீயும் உழை,நீயும் அவனைபோல முன்னேறலாம்" என்கிறது.

அமெரிக்கன் ட்ரீம் (american dream) http://en.wikipedia.org/wiki/American_Dream என சொல்லுவார்கள்.அமெரிக்கன் ட்ரீம் என்பது அமெரிக்காவின் அடிப்படை வேல்யூக்களில் ஒன்று." "உழைத்தால் ஒவ்வொரு குடிமகனும் முன்னேறலாம், வளமான வாழ்வை (பிராஸ்பரிட்டி) அடையலாம்"  என அமெரிக்க சுதந்திர பிரகடனம் குறிப்பிடுகிறது.ஒவ்வொரு குடிமகனுக்கும் " Life, Liberty and the pursuit of Happiness  " என்ற அடிப்படை உரிமைகள் இருப்பதாக அது கூறுகிறது. 

அமெரிக்காவில் ஒருவன் ஏழையாக இருப்பது அவனுடைய குற்றமாகத் தான் கருதப்படுகிறது."நான் ஏழையாக இருக்கிறேன்" என ஒருவன் நினைத்தால் அதற்கு காரணம் அவன் மட்டுமே...நீ பணக்காரன் ஆனால் அது உன் உழைப்பின் விளைவு, நீ ஏழையாக இருந்தால் அதற்கு காரணம்  உன் முயற்சியின்மை..உன் வாழ்வின் வெற்றி,தோல்வி,உயர்வு,தாழ்வு அனைத்துக்கும் நீ மட்டுமே பொறுப்பு.

இந்த தேசத்தில் பணக்காரர்கள் உண்டு, ஏழைகள் உண்டு...ஆனால் இந்தநாட்டில் இருக்ககூடாத ஒரு வர்க்கம் வர்க்கிங் புவர் (working poor)..அதாவது உழைக்கும் ஏழைகள்.ஒருவன் உழைத்தால் அவன் இங்கே ஏழையாக இருக்க கூடாது என்றே விரும்புகிறார்கள். 

அதற்கேற்ப சற்று உழைத்தாலே இங்கே வீடு, கார் என வாங்கி விடலாம். என்ன புதுகார் வாங்க முடியாது, நல்ல லொகேஷனில் வீடு இருக்காது..ஆனால் வீடும்,காரும் கிடைக்கும். பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்கும். பிசினஸ் துவக்க லோன், அனுமதி எளிதில் கிடைக்கும், வட்டி விகிதம் குறைவு, வரிகள் குறைவு. இத்தனை வாய்ப்புக்கள் மக்களுக்கு உண்டு,.பயன்படுத்தி உயர்வது உன் சாமர்த்தியம். 

சுதந்திர பொருளாதாரத்துக்கும் ஏழைகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் நம்பிக்கை (Hope). கம்யூனிசம் மனிதர்களின் நம்பிக்கையை அழிக்கிறது.சுதந்திர பொருளாதாரம் நம்பிக்கையை ஊட்டுகிறது.நம்பிக்கை கொண்ட மனிதன் அதன்பின் தடம்மாற மாட்டான். அந்த நம்பிக்கையே அவனை இயக்கும் உந்துசக்தியாக மாறிவிடும். 

இதைதான் ரோனல்ட் ரேகன் அழகாக பின்வருமாறு குறிப்பிட்டார் 

Above all, we must realize that no arsenal, or no weapon in the arsenals of  the world, is so formidable as the will and moral courage of free men and women.  It is a weapon our adversaries in today's world do not have.

இப்படி  திரு.செல்வன் சொல்கிற மாதிரி சுதந்திரப் பொருளாதாரம், நம்பிக்கையை ஊட்டுகிறதென்னவோ உண்மைதான்! லாட்டரிச் சீட்டு வாங்குகி ஒவ்வொருத்தரும் தனக்கே முதல் பரிசு கிடைத்து விடும் என்று நம்புகி மாதிரி!

அதுவும், இந்தியச் சூழ்நிலையில்,
ஒவ்வொருவரும் இப்படிப் பட்டு வேட்டி கட்டுகிற கனாவில் இருக்கும்போது கட்டியிருக்கும் கோவணமும் எப்படிக் களவாடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் இல்லையா! அமெரிக்கக் கனவுகள் அப்படியே இந்தியாவுக்குப் பொருந்துமா? இந்த விவாத இழை இன்னமும் இந்தியச் சூழ்நிலையைத் தொட்டுக் குறிப்பாகப் பேச ஆரம்பிக்கவில்லை! 

கொஞ்சம் அங்கேயும் ஒரு எட்டுப் போய்ப் பார்த்து விட்டு, உங்களுடைய கருத்துக்களைச் சொல்லுங்கள்! சுதந்திரப் பொருளாதாரம் குறித்து, அல்லது பொருளாதாரம் என்றால் என்ன என்பதை ஒரு சாமானியனின் பார்வையில் இருந்து இங்கேயும் கொஞ்சம் பேசுவோம்! 
 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!