வரலாற்றில் இன்று....! நாகசாகி தினம்!

மாதா பிதா செய்த பாவம் மக்கள் தலையிலே என்று ஒரு சொலவடை  உண்டு!

தாய் தகப்பன் சேர்த்து வைக்கும் சொத்துக்களுக்கு மட்டும் பிள்ளைகள் வாரிசுகள் அல்ல.. ..அவர்கள் செய்கிற தீய செயல்களின் விளைவுகளுக்கும் கூடத் தான்! கொஞ்சம் விரிவு படுத்திப் பார்த்தால், ஒரு தேசத்தின் ஆட்சியாளர்கள் செய்கிற முட்டாள்தனங்களுக்கு, அந்த தேசத்து மக்கள் தான் விலை கொடுத்தாக வேண்டியிருக்கிறது என்பதை நிரூபித்த நாள் இன்று! குண்டு வீசியவர்களுடைய மனோ நிலை இங்கே செய்தியாக

முற்பகல் 11.02, ஆகஸ்ட் 9! 1945

அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா ஒரு அணுகுண்டை வீசியிருந்தது! கொலைபாதக அணு குண்டு சரியாக வேலை செய்கிறதா, அணு வெடிப்பின் பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இருக்கிறதா என்று மறுபடி சோதித்துப் பார்ப்பதற்காக, இன்னொரு அணுகுண்டை நாகசாகி என்ற நகரின் மீது வெடிக்கச் செய்த கொடூரத்தின் அறுபத்தைந்தாவது ஆண்டு நிறைவு தினம் இன்று.

கொடூரமான மரணத்தின் வலியை உணர்ந்தவர்கள், அந்த வெடி குண்டு வீச்சில் உயிர் தப்பி, ஆனால் கதிரியக்கத்தின் விளைவாக ஏன்  இன்னும் உயிரோடிருக்கிறோம் என்று  வேதனையுடன்,  தங்கள் கண்முன்னாலேயே குழந்தைகள், உறவினர்கள், நண்பர்களைப் பறிகொடுத்த துயரத்துடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்  இன்னமும் இருக்கிறார்கள். அப்படி உயிர் பிழைத்தவர்களோடு, நாகசாகி நகரத்து மக்களும், இன்னும் முப்பத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த நினைவுநாளில் ஒன்று கூடி, பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் வேண்டவே வேண்டாம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். .

ஆகஸ்ட் 15 என்றவுடன் இங்கே நமக்கு இந்தியா விடுதலை அடைந்த தினமாகத் தான் தெரியும்! அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 1945 ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி தான்   இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டு, ஏறத்தாழ இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேருக்கு மேல் கதிரியக்க வெப்பத்தில் கருகிய கொடுமைக்குப் பின்னர், ஜப்பான் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை,சரணடைவதை அறிவித்தது. முதல் குண்டு வீச்சின் போதே இந்த முடிவு எடுக்கப் பட்டு விட்டது, அமெரிக்க உளவுத்துறைக்கு அது தெரியும் என்று கூட தகவல்கள் உண்டு.

கிழக்கத்திய நாடுகளில், ஜப்பானியப் பிரபுக்களின் கொடுமைக்கு அண்டை நாடுகளின் மக்கள் ஆளானது சரித்திரம். சீனா, கொரியா என்று பக்கத்து நாட்டுப் பெண்கள் ஜப்பானியர்களுடைய இச்சை தீர்ப்பவர்களாக ஆக்கப் பட்டதும், தொடர்ந்த கொடுமைகளும், இன்றைக்கும் அந்த மக்களின் மனதில் மறக்க முடியாத வடுக்களாக இருக்கின்றன.

வட கொரியாவின் அதிபராக இருக்கும் ஒரு கிறுக்கனின் கையில் இருக்கும் அணு ஆயுதங்கள், இன்றைக்கு வரையிலும் ஜப்பான், தென் கொரியா  உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருப்பது வரலாற்றின் மிகப் பெரிய நகை முரண்! ஆனால், ஜப்பான், தனக்கேற்பட்ட துயரத்தையும், சோதனைகளையும் தாங்கிக் கொண்டு, அவமானத்தை சகித்துக் கொண்டு, அழிவிலிருந்து மீண்டெழுந்த அந்த அற்புதத்தையும் இந்த அறுபத்தைந்து ஆண்டு காலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

அணு குண்டு வீசி அழித்த அமெரிக்கர்களை, ஜப்பான் தன்னுடைய தரமான உற்பத்தி முறை, தொழில் தயாரிப்புக்களால் வெற்றி கொண்டிருக்கிறது! ஆம், அழிக்கத் தெரிந்த அமெரிக்கர்களால், ஜப்பானோடு இன்றைக்கும் கூட, தர வரிசையில், வேலை முறையில் வெற்றி பெற முடியவில்லை!

வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய உண்டு! தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு!

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தெரிந்தவர்கள், பேரழிவுக்குப் பின்னால் கூட தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! சீனா, கடந்த முப்பதே ஆண்டுகளில் அசைக்க முடியாத வல்லரசாகத் தன்னை நிலை நாட்டிக் கொண்டிருப்பதையும் சேர்த்துப் பாருங்கள்!

இந்திய அரசியல்வாதிகளும், இங்கே உள்ள அரசும் எப்போது பாடத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்? இவர்களுடைய மெத்தனத்திற்கு பலியாக வேண்டியிருப்பது சாதாரண மக்கள் தான் என்பதை நினைவு வைத்துக் கொண்டால், இவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டிய பொறுப்பும் கூட ஆம் ஆத்மி என்று ஒட்டுக் கேட்பதற்காக மட்டும் இவர்களுடைய வசனங்களில் இடம் பெறும் அந்த சாமானிய மக்களுக்குத் தான் இருக்கிறது.

இந்த மோசமான அரசியல்வாதிகளுக்குச் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க நாம் தயாராக வேண்டாமா?

நீங்களே சொல்லுங்கள்!






 

5 comments:

  1. பாவம் மற்றும் புன்ணியம் பற்றி கூறியது நன்றாக உள்ளது.
    கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி

    ReplyDelete
  2. நாகசாகி தினத்தை நினைவு படுத்தியதற்கு நன்றிகள் தோழர் ! மனிதம் தேடும் வார்த்தைகள் உங்கள் பதிவெங்கும் விரவிக் கிடக்கின்றன . நன்றி !

    ReplyDelete
  3. சுதந்திர அருள்!

    முதல் வருகைக்கு நன்றி! வலைப் பதிவைப் பிரபலப் படுத்துவது, பிரபல பதிவர் பட்டியலில் சேர்வது மாதிரியான கெட்ட எண்ணம் எல்லாம் எனக்கில்லை! நம்புங்கள்! நாலே நாலு பேர் பார்த்தால் கூட, ஒரு கருத்து, அதன் மீது ஒரு ஆரோக்கியமான விவாதம் இதற்காகத் தான் இங்கே பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். முடிந்தால், அப்படி ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடருங்களேன்!

    வருகைக்கு நன்றி நியோ!

    நாகசாகியை நினைவு வைத்துக் கொண்டால் மட்டும் போதுமா? வரலாறு அல்லது கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்வதென்பது, அவற்றில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்வதற்காகத் தானே!

    நாகசாகி மாதிரி இன்னொரு நிகழ்வு நேரடியாக வராமல் இருக்கலாம். ஆனால், செர்னோபில் அணு உலை விபத்து, கதிரியக்கப் பொருட்களைக் கவனமாகக் கையாளத் தெரியாமல், டெல்லி பழைய இரும்பு விற்கும் கடையில் கதிரியக்கப் பொருள் பழைய கழிவாக விற்கப்பட்டது போன்ற நிகழ்வுகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் டம்மிப் பீஸ் பிரதமர் மன்மோகன் சிங் தெரிந்தே கொண்டுவரும் அணு உலை விபத்து நஷ்ட ஈடு வரையறை செய்யும் மசோதா போன்றவைகளையும் சேர்த்துப் பார்க்கத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

    ReplyDelete
  4. நம்ம மக்கள் தானே, பாடம் கத்து கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க!

    குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கு ஓட்டை விற்பவனிடம் நீங்க அதிகமா எதிர்பார்க்குறிங்க சார்!

    ReplyDelete
  5. காலம் ஒரு நாள் மாறும், இப்போதுள்ள கோலங்களும் சேர்ந்தே மாறும் என்ற நம்பிக்கை தான், வால்ஸ்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!