மியாவ்..!மியாவ்...! இது பூனைக் குரல் அல்ல! உயிரை எடுக்கும் மருந்து.....!




Mephedrone, or 'meow meow' was legal until it was banned in April 2010


மூன்றாவது உலகப் போர் வருமானால், அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? இரண்டாவது உலகப் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது போல, என்ன ஆயுதம் பரவலாகப் பயன்படுத்தப்படும்? இந்தக் கேள்விகளை முன்வைத்து நிறைய விஷமத்தனமாகவும், நிஜமான அக்கறையுடனும் விடைகள் சொல்லப் பட்டுக் கொண்டே இருக்கின்றன.

குடிநீர்ப் பிரச்சினை, குறைந்துகொண்டே வரும் நீராதாரங்களைக் கைப்பற்றுவதற்காகத் தான் அடுத்த போர் நிகழும் என்றொரு கணிப்பு உண்டு. ரசாயன ஆயுதங்கள் தவிர செயற்கையாக நோயை உருவாக்கி பரப்புகிற பயாலஜிகல் வெபன்ஸ்..நோயைப் பரப்புவதே பெரும் ஆயுதமாக என்றொரு கருத்தும் உண்டு. இது முழுக் கற்பனையில்லை, நிஜமாகவே பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருப்பது என்பதும் அவ்வப்போது செய்திகளில் கசிந்து கொண்டு தான் இருக்கிறது.

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய கொள்ளை லாப நோக்கத்திற்காகவும், தங்களுடைய நாட்டுக்கு விசுவாசமாக இருப்பது போல, எதிரிகளை மட்டுப் படுத்தி வைக்க சிறந்த உத்தியாக, நோயை உருவாக்குவது, பரப்புவது, மாற்று மருந்தைக் கண்டுபிடிப்பது, அதை விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிப்பது என்பதைக் கையாண்டு கொண்டுதான் இருக்கின்றன. கேட்பதற்குக் காதில்பூ சுற்றுவது போலத் தோன்றினாலும், சதிகாரர்களையும் மீறி அவ்வப்போது வெளிப்படுகிற ரகசியங்கள் உண்மை நிலவரத்தை உடைத்துச் சொல்லி விடுகின்றன.

சில வருடங்களுக்கு முன்னால், சூரத் நகரில் எலியால் பரவும் பிளேக் நோய் மாதிரியே இருந்த ஒரு நோய் ஒரு நட்பு நாட்டினால் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது என்று ஒரு பலத்த சந்தேகம் உண்டு. ஸ்வைன் ப்ளூ இந்தியாவுக்கு அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் நகரில் தான் முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்டது. நோயைப் பற்றிப் பரபரப்பாகச் செய்திகள் வந்தபோது முன்னெச்சரிக்கை நடவைக்கைகள் இன்று வரையிலும் கூட போதுமானதாகவோ பொறுப்புடனோ மேற்கொள்ளத் திராணியுள்ள அரசுகள்  நமக்கு
வாய்த்ததில்லை  என்பதையும் வேதனையுடன் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

ராபார்ட் லட்லம் எழுதிய ஹேட்ஸ் பாக்டர் புதினத்தில்  இதை உறைக்கிற மாதிரி சொன்னதை, கதைச் சுருக்கமாகக் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.



இந்த செய்தியை படித்து, அதன் மையக் கருத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள்! ஊடகங்கள் முழு உண்மையைத் தான் சொல்லும் என்று இல்லை, சமயங்களில் ஒரு சின்னக் குறிப்பே சொல்ல வேண்டிய மொத்தத்தையும் சொல்லி விடுவதாக ஆகி விடும் தருணங்களும் உண்டு. 

இந்தச் செய்தி இணையத்தில் படித்தது தான்! 

இதன் முழு உண்மையை உறுதிப் படுத்த,  தனிமனிதனாக என்னிடம் எந்தவொரு சாதனமும் இல்லை. பொய்யென்று ஒதுக்கி விட்டுப் போய்விடுகிற அலட்சியம் மட்டும் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்!



An American investigative journalist has uncovered evidence suggesting the CIA peppered local food with the hallucinogenic drug LSD

1951
ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி
! பிரான்சில் உள்ள ஒரு சிறு கிராமம் போன்ட் செயின்ட் ஸ்பிரிட்! இந்த கிராம மக்களுக்கு  சபிக்கப் பட்ட ரொட்டி கிடைத்த  தினம்!  எப்போதும்போல, உணவில் சேர்த்துக் கொள்ளும் ரொட்டி (ப்ரெட்) ஒரு திகிலூட்டும் அனுபவமாக மாறிப் போகும் என்று அந்த கிராம மக்கள் எவருமே நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது தான்! ஆனாலும் அந்த திகிலூட்டும் நிகழ்வு நடந்தது.


ரொட்டியை சாப்பிட்ட மக்களுக்கு, பயமுறுத்தும் மிருகங்களும் பற்றி எரிகிற தீயாகவும் தெரிகிற உணர்வு ஏற்பட்டது. ஒரு மனிதன்  தன்னுடைய வயிற்றைப்  பாம்புகள் கடிப்பது போல பயங்கரமாகக் கூச்சலிட்டுக் கொண்டே தண்ணீரில் குதித்து முழுகிப் போனான். பதினோருவயதுச் சிறுவன் ஒருவன் தன்னுடைய பாட்டியைக் கழுத்தை நெறித்துக் கொல்ல  முயன்றான். இன்னொருவனோ , நான் ஒரு ஆகாய விமானம் என்று கூவிக் கொண்டே இரண்டாவது மாடியில் இருந்து குதித்துக் கால்களை ஒடித்துக் கொண்டான்  

இன்னொருவனுக்கோ  தன்னுடைய இதயம்  கால் வழியாகக் கழன்று போவதுபோல உணர்வு, சரி செய்யும்படி டாக்டரிடம் கெஞ்சல் இப்படி நரகமே  அந்த கிராமத்துக்கு இறங்கி வந்து விட்டது போலத் தொடர் நிகழ்வுகள்! இந்தக் கொடூரத்தை அமெரிக்க டைம் பத்திரிகை வர்ணித்து எழுதியதும்,   உள்ளூர் பேக்கரித் தயாரிப்பாளர் தெரியாத் தனமாக ரொட்டி தயாரிக்கப் பயன் படுத்தப் பட்ட  ரை (rhye) தானிய மாவில் எதையோ கலந்து விட்டதாக, இன்னொரு செய்தி ரொட்டி மாவில் பாதரச நஞ்சு கலந்து விட்டதாக இப்படி அந்த நிகழ்வுக்குப் பல காரணங்கள் அப்போது சொல்லப் பட்டன.

1951 ஆம் ஆண்டில், போன்ட் செயின்ட் ஸ்பிரிட் என்ற க்ற்றாமத்தில் ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தப் படும் மாவில் எல்எஸ்டி என்ற போதை ரசாயனத்தைக் கலந்து, மனிதர்களுடைய மனத்தைக் கட்டுப் படுத்துகிற, பரிசோதனையைத் தன கூட்டாளி நாட்டு மக்கள் மீதே அமெரிக்க சி ஐ ஏ நிறுவனம் நடத்திப் பார்த்தது என்பதை சமீபத்தில், ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர் அம்பலப் படுத்தியிருக்கிறார். 

போதை மருந்தை சப்ளை செய்தது சாண்டோஸ் பார்மசூடிகல்ஸ்  (இந்தியாவில் கால்ஷியம் சாண்டோஸ் என்று குழந்தைகளுக்குத் தேவையான கால்ஷியம் மாத்திரைகளைத் தயாரிக்கும் அதே ஸ்விட்சர்லாந்து நாட்டு  சாண்டோஸ் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தான்) என்ற செய்தியை தி டெலிகிராப் பத்திரிகை வெளிப்படுத்தி யிருக்கிறது.

பிரான்ஸ் ஒரு ஐரோப்பிய நாடுதான்! வெள்ளைத் தோல் கொண்ட மனிதர்கள் வாழும் நேச நாடுதான்!  அமெரிக்க சுதந்திரத்திற்குப் பரிசாக, சுதந்திர தேவி சிலையை வடிவமைத்துப் பரிசாகக் கொடுத்த நாடுதான்! நேடோ அமைப்பில், அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளிதான்! இத்தனை தான்களையும் தாண்டி அமெரிக்கா,  பிரான்ஸ் நாட்டு கிராமம் ஒன்றில் ஒரு விஷப் பரீட்சையை மிக ரகசியமாக நடத்திப் பார்த்தது.  


அமெரிக்கர்கள் மீது கையை வைத்தால்.... என்று சவடால், சண்டியர்த்தனம் பண்ணுகிற அமெரிக்க அரசு, தன்னுடைய சொந்த மக்கள் மீதும் இது மாதிரிப் பரிசோதனைகளை நடத்தவும்  தயங்கியிருக்காது என்பதே அப்பட்டமான உண்மை. கடும்புயல், வெள்ளத்தால் கறுப்பின மக்கள் வாழும் பகுதிகள் பாதிக்கப் பட்ட தருணத்தில் அன்றைய புஷ் நிர்வாகம் எவ்வளவு மெதுவாக, அலட்சியமாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது புதிய செய்தி ஒன்றும் அல்ல. பொய்யானதுமல்ல!



எதை எடுத்தாலும் நம்ப வேண்டாமென்று அவநம்பிக்கையை விதைப்பதற்காக இதை இப்போது சொல்லவில்லை! அமெரிக்கர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பல தருணங்களில் நிரூபிக்கப் பட்டது தான்! தெரிந்ததுதான்!

அமெரிக்காவில் உள்ள நல்லவிஷயங்களை விட, அதன் ஆணவம், அதிகார வெறி, பேராசை, சூதாடி மனோபாவம் தான் எப்போதுமே, அதை ஒரு நாடாக இயக்குவிக்கிற சக்தியாக இருந்து வந்திருக்கிறது. பேராசை கொண்ட நிறுவனங்கள், தனிமனிதர்கள், அமெரிக்க மக்களோடு, உலகையும் சீரழித்து வருகிற கதை, இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும். 


இந்த எல் எஸ் டி பின்னாட்களில் அமெரிக்க இளைஞர்களைச் சீரழிக்கிற போதை மருந்தாக ஆகிப் போன பரிதாபமும் மறந்துபோன ஒரு சமீபத்திய நிகழ்வு தான்..!

இந்தப் பழங்கதை இப்போது எதற்கு என்கிறீர்களா?

இது மாதிரியான நிகழ்வுகள் இன்னமும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. மருந்து என்ற பெயரில் ஒரு மோசமான விஷயம், அரசின் சம்மதத்துடனேயே, சட்டப் பூர்வமானதாக விற்கப்படுவதும், விஷயம் கொஞ்சம் கைமீறிப் போவதாகவோ, அல்லது வெளியே அம்பலப் படுத்தப் படும் போதோ, தடை செய்யப்படுகிற நடவடிக்கைகளுமாகத் தொடர்வதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

கடந்த இரண்டு வாரங்களாக,  பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளில் கவனத்தை ஈர்ப்பதாக இந்தச் செய்தி இருந்தது.


மியாவ் மியாவ் ஒன்று!  கவலையைப் போக்கும் மருந்தா? போதையில் கலந்த விஷமா? இந்த மூன்று இணைப்புக்களில், அலோபதி  மருத்துவம் எந்த அளவுக்கு லாபம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டது, அரசுகள் எப்படி அதற்கு ஒத்து ஊதுகின்றன என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். பிரான்சில் நடந்த விஷப்பரிசோதனையை நடத்தியது, ஏதோ ஒரு சதிகாரக் கும்பல் இல்லை. சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு மருந்துத் தயாரிப்பு நிறுவனம் தான்!

ஸ்வைன் ப்ளூ தடுப்பூசி  விவகாரத்திலும் சரி,  அதற்கு முந்தைய ஆந்த்ராக்ஸ் தடுப்பூசியிலும் சரி, வியாதியைப் பரப்பி, லாபம் சம்பாதித்ததும்  ஏதோ ஒரு அல் கொய்தாவோ, வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த தீவீர வாதிகளோ இல்லை! ஆராய்ச்சி வசதிகளை இந்த மாதிரித் திரிப்பதற்காகவே பயன்படுத்துகிற மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தான்!

நேற்று வரை மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, சட்ட பூர்வமாக பரிந்துரைசெய்யப்பட மருந்தாக இருந்தது, இன்றைக்கு எமனாக மாறி உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறது  என்ற தகவல் வெளியே வந்ததும், பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப் பட்டிருக்கிறது. ஒரு மருந்து,
எப்படி வேலை செய்கிறது, என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது, பக்கவிளைவுகள் குறித்து எப்படிப்பட்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்பது எலிகள், முயல்கள், குரங்குகள் என்று முதலில்மிருகங்கள் மீது பரிசோதிக்கப்பட்டு, அதற்கு அடுத்த கட்டமாக மனிதர்கள் மீதும் பரிசோதிக்கப் பட்டு, அதற்கு அப்புறமாகத் தான் சந்தைக்கு வருகிறது என்று சொல்லப் படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் பரிசோதனை முடிவுகள், ஆவணப்படுத்தப் பட்டு, உறுதி செய்யப் பட்ட பிறகே ஏற்றுக் கொள்ளப் படுவதாக, அலோபதி முறையில்  மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்லிக் கொள்கின்றன.

உண்மைதான்! ஆராய்ச்சி, ஆவணப்படுத்துதல், பல கட்டங்களில் பரிசோதனைக்குட்படுதல், உறுதிப்படுத்துதல் எல்லாம், மாற்று மருத்துவ முறைகளை விட, அலோபதி மருத்துவத்தில் மிக விரிவாகச் செய்யப்படுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு, மருந்துத் தயாரிப்பாளர்களால் உண்மை மூடி மறைக்கப்பட்டு, எல்லாமே ஒழுங்காக, முறையாக  இருப்பது போல ஆவணப்படுத்தப் பட்டு, மருந்துகள் என்ற பெயரில் என்னென்னமோ வெளியே வருவதும் அதே அளவுக்கு உண்மை.

இங்கே அலோபதி மருத்துவத்தைக் குறை கூறுவதாக, இதையே மற்ற மருத்துவ முறைகளைக் கேட்க மாட்டேன் என்று வருத்தப் படுகிறவர்களுக்காக ஒரே ஒரு விஷயம் தான் சொல்ல முடியும்!

விரும்பியோ,விரும்பாமலோ இன்றைக்கு அலோபதி மருத்துவம் தான் உலகெங்கும் பிரபலமாக இருக்கிறது, பரவலாகவும் இருக்கிறது. அறுவைச் சிகிச்சை முறையில் அலோபதிக்கு மாற்றாக, ஏனைய மருத்துவ முறைகளில் போதுமான தேர்ச்சியும், பயிற்சியும் இல்லை என்பதும் உண்மை.

ஏகபோகமாக வளரும் எதுவும் இங்கே அரசுத்துறை நிறுவனங்கள் மாதிரிச் சீரழிந்ததாகத் தான் மாறும். மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுடைய பேராசை, மக்களுடைய உயிரைத் துச்சமாக தூக்கி எறிகிற அளவுக்கு வளர்ந்து கொண்டிருப்பதை நிறைய நிகழ்வுகள்  காட்டிக் கொண்டிருக்கின்றன.

சிட்டுக் குருவி லேகியம் விற்பவர்களையும், காசு கொடுத்துக் கீரை வைத்தியம் செய்து கொண்டால் சிறுநீரகப் பிரச்சினைகளைக் குணப்படுத்த முடியும் என்று விளம்பரம் செய்கிற வைத்தியர்களையும், நாங்களும் அலோபதி மருந்தைப் பரிந்துரை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுக்கும் போலிகளையும் ஆதரிப்பதோ, அலோபதி வைத்தியம் தான் சிறந்தது என்று பிளாங்  செக் எழுதி உத்தரவாதம் தருகிற வேலையோ எனக்கு அவசியமில்லை.

மாற்று மருத்துவம் என்று ஒற்றை வார்த்தையில் அழைக்கப் படும் அலோபதி தவிர்த்த இதர மருத்துவ முறைகளைக் குறித்து ஒரு ஆரோக்கியமான விவாதம், மாற்றுச் சிந்தனை இப்போது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?




 

4 comments:

  1. வியாதிகள் நாள்தோறும் புதுப்புதுப் பெயர்களில் பெருகிக் கொண்டே வ்ருகின்றன; அதே மாதிரி தான் மருந்துகளும். இப்பொழுதெல்லாம் மருந்துக் கடைகளில் மளிகைக் கடைகளில் இருக்கிற மாதிரி கூட்டம் அலைமோதுகிறது.

    'மருந்தே உணவாகி விட்டதோ' என்று யோசிக்கிற அளவுக்கு மருந்துகளின் தாக்கம் நாள்தோறும் பெருகிக் கொண்டு போகிறது.

    அதையே மாற்றி யோசித்தால், உணவே மருந்தாகாதோ?

    'மருந்தாகும் உணவு'ம் சொல்லித் தெரிவதில்லை. இதுபற்றி அவரவர் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய காலகட்டம் இது.

    இப்படி மருந்தாகும் உணவு கொண்டு, உடலில் எதிர்ப்பு சக்தியைக் கூட்டிக் கொள்வதின் மூலம் 'தொட்டால் சுருங்கி' மாதிரி, இயற்கை சுற்றுச்சூழல் மாறினாலே ஏற்படும் சிறு சிறு தொந்தரவுகளைச் சமாளித்து விடலாம். சளி,காச்சல்,இருமல் இத்யாதி..இத்யாதி.

    நடைப்பயிற்சி, ஆரோக்கியமான அட்டவணை கொண்ட வாழ்க்கைமுறை மூலம் எதிர்கால உத்திரவாதங்களைக் கூட ஓரளவு பெறலாம்.

    இதெல்லாம் மீறி, அடுத்து நம்மாலேயே தடுதாட்கொள்ளமுடியாத, கைமீறிய சமாச்சாரங்கள் உடல் உறுப்புகள் செயல்பட முடியாமல் போவது
    சம்பந்தப்பட்ட நோய்கள் தாம்.

    இந்த தகவல் தொழில்நுட்ப கால கட்டத்தில், இவற்றிற்கான தீர்வுகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன. அவரவர் அறிந்து தெளிந்து இதில் அக்கறை கொண்டால் இப்படித் தெரிந்துக் கொள்வதே கூட மருந்தாகி ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும்.

    உங்களது சிறப்பான தொடர் விழிப்புணர்வு கட்டுரைகளுக்கு மிக்க நன்றி, கிருஷ் சார்!

    ReplyDelete
  2. வாருங்கள் ஜீவி சார்!

    இது தொடர்பாக ஜெயமோகன் தளத்தில் இந்தச் சுட்டி http://www.jeyamohan.in/?p=7639

    விஜய் டீவீயில், மருத்துவர்கள் வெர்சஸ் பப்ளிக் என்ற தலைப்பில் இந்த மாதம் முதல் தேதி அவர் பங்கு கொண்ட நீயா நானா நிகழ்ச்சியின் பதிவுகள் யூட்யூப் துண்டுகளாக இந்தச் சுட்டியில் பாருங்கள்! ஒரு மருத்துவர், அரசியல்வாதியைப் போல, நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாரா என்று என்ன சவடாலாகக் கேட்கிறார், மற்ற மருத்துவர்கள் ஜனங்களுடைய அவநம்பிக்கை என்ற விஷயத்தையே விட்டு விட்டு வேறென்ன கதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம்.

    உணவே மருந்து என்பது, நம்முடைய பாரம்பரியவாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சமாக இருந்தது. சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகள் இதை அடிப்படையாகக் கொண்டவை தான். அறுசுவைகளையும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய வாழ்க்கை முறை நம்முடையது.

    இங்கே இங்கிலாந்தில் ஹோமியோபதி மருத்துவத்தைக் குறிவைத்து நடத்தப்படும் பிரசாரத்தைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. பின்னணி என்ன என்பதைத் தேடிப் பார்த்தபோது, வேறு விவரங்களும் கிடைத்தன. என்னுடைய சொந்த அனுபவங்கள், மருத்துவர்களாகப் பணியாற்றும் நண்பர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், இங்கே போலி மருந்துகள் குறித்து தினமணி தலையங்கம், அப்புறம் இதே மாதிரியான செய்திகளைப் பார்த்தபோது, மருத்துவர் வாக்கை வேத வாக்காக நம்பும் நோயாளியை, அலோபதி மருத்துவம் பல தருணங்களில் தெரிந்தே மோசடி செய்வதையும், மருந்து, மருத்துவச் செலவுகள் பெரும் சுமையாகிக் கொண்டே வருவதையும் பார்த்து, மாற்று மருத்துவம் குறித்து ஒரு சிந்தனை, விழிப்புணர்வு வேண்டும் என்று சில பதிவுகளை எழுத ஆரம்பித்தேன்.

    அலோபதி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களைப் பற்றி, அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் எப்படி சௌகரியப்படுகிற மாதிரி வெட்டி ஒட்டப்படும் என்பது இங்கே மருத்துவர்களுக்கே ஓன்றும் தெரிவதில்லை என்பது மிகப்பெரிய பரிதாபம்!

    ReplyDelete
  3. nothing surprise.

    you too late.

    india already converted trial mouses.

    lot of articles,warning cames.

    that awareness sound dumped by global warming sound.

    - whatever jayamaohan told onthat day its happening to common man.

    this is big chapter- you follow it further and try to write in deeply.

    ReplyDelete
  4. வாருங்கள் திரு.பாலு!

    எங்கேயோ மழை பெய்கிறது என்று அலட்சியமாக இருந்தோமானால், இங்கே எதுவுமே அதிசயமில்லை தான்! கினியாப் பன்றிகள் மாதிரிப் பரிசோதனைக்குட்படுத்துகிற கொடுமை அமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் இரண்டு பெரிய மருத்துவமனைகளில் அரங்கேறுவதாகத் தொலைக் காட்சியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தன.

    விவாதங்களில், ஒருவரை ஒருவர் மறுப்பது மட்டுமே இங்கே நிகழ்கிறது. நீயா நானா நிகழ்ச்சியும் அதற்கு விதிவிலக்கல்ல.

    மறுப்பதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இரண்டு பக்கத்திலிருந்துமே வருவதில்லை என்பது இன்னொரு சோகம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!