கதை கேளு..! கதை கேளு..! தடுப்பூசி கதை கேளு....!

ராபர்ட் லட்லமின் The Hades Factor கதை, மூன்று ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத, வெவ்வேறு இடங்களில் நடந்த மரணங்கள், அதைத் தொடர்ந்து எழும் கேள்விகளில் இருந்து தொடங்குகிறது.  

சவப் பரிசோதனையில், அதுவரை அடையாளம் காணப் படாத ஒரு வைரசின் தாக்குதல் இருப்பதாகத் தெரிய வரவும், பிரச்சினை என்ன என்பதை ஆராய்வதற்காக  The U.S. Medical Research  Institute for Infectious Diseases (USAMRIID) மற்றும் Center for Disease Control (CDC)  என்ற இரண்டு அமைப்புக்களுக்கும் இறந்தவர்களுடைய உடலில் இருந்து எடுக்கப் பட்ட சாம்பிள் அனுப்பிவைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவில் (USAMRIID) பணியாற்றும் லெப்டினன்ட் கர்னல்  டாக்டர் ஜோனாதன் ஸ்மித் லண்டனில் ஒரு மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, நாடு திரும்பி தன்னுடன் பணிபுரியும், தன்னுடன் காதலி சோபியா ரஸ்ஸலைச் சந்திப்பதை ஆவலோடு எதிர் நோக்கியிருக்கும் தருணத்தில், ஜோனாதன் ஸ்மித்தின் பால்ய  நண்பன் பில்லிடமிருந்து. லண்டனின்  ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் சந்திக்க வருமாறு சங்கேதச் செய்தி வருகிறது. சந்திக்கும்போது, ஸ்மித், மற்றும் சோபியாவின் உயிருக்குப் பெரும்  ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக அமெரிக்கா திரும்பி, சோபியாவையும் காப்பாற்றிக் கொள்ளுமாறு அந்த நண்பன் சொல்லிவிட்டு ஸ்மித் என்ன ஏது என்று கேட்கும் முன்னரே, தன்னுடன் அழைத்து வந்திருந்த நாயுடன் மறைந்து விடுகிறார்.

என்ன ஏது என்று புரியாமல் ஸ்மித் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்புகிற வழியில் அவரைத் தீர்த்துக் கட்ட ஒரு முயற்சி நடக்கிறது.  அவரைக் கொல்ல முயற்சி செய்தவர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டு ஸ்மித் தப்பித்துவிடுகிறார், ஃபோர்ட் டெட்ரிக்கில் இருக்கும் USAMRIID ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் தனது காதலியைக் காப்பாற்ற ஸ்மித் விரைகிறார்.

இங்கே லண்டனில் ஸ்மித்தைக் கொலை செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் அதே நேரம், அங்கே ஆராய்ச்சி மையத்தில் டாக்டர் சோபியா ரஸ்ஸல், அந்த இனம் தெரியாத வைரசை அடையாளம் காணும் முயற்சியில் தீவீரமாக ஈடுபடுகிறார்  பல ஆண்டுகளுக்கு முன்னால், சோபியாவும் இன்னும் சில மருத்துவர்களும் பெரு நாட்டுக்குச் சென்றிருந்த தருணத்தில், அதே மாதிரி நோய்க் காரணிகளுடன்  பாதிக்கப் பட்ட உள்ளூர் மக்கள், ஒரு வகைக் குரங்கின் ரத்தத்தை மருந்தாக எடுத்துக் கொண்ட போது நோயில் இருந்து விடுபட்டதாகக் கேள்விப்பட்டது திடீரென நினைவுக்கு வருகிறது. அப்போது, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த டாக்டர் விக்டர் ட்ரெமான்ட்  என்ற விஞ்ஞானியைச் சந்தித்ததும், குரங்கு ரத்தத்தில் இருந்த ஒருவகை ஆண்டி பாடீஸ் தான் அதற்கு மருந்தாக இருக்க வேண்டுமென்றும் பேசியது நினைவு வரவே,அவரைத் தொடர்பு கொள்ள முயற்ச்சிக்கிறாள். அந்த முயற்சியே, அவளது உயிரைக் கொள்ளை கொண்டுபோகும் என்பதையோ, காதலன் ஜோனாதன் ஸ்மித்துடைய உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை அறியாதவளாக!

ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற புகழ் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உபதலைவராக  இருக்கும் விக்டர்  ட்ரெமான்ட், சோபியாவுடன் பேசுகையில் தனக்கு எதுவும் நினைவு இல்லை என்று மறுத்தாலும், டாக்டர் சோபியாவின் ஞாபக சக்தியைக் கண்டு கலக்கமுறுகிறார். தீர்த்துக் கட்டுவதைத் தவிர வேறு வழியே இல்லை! நாடல் ஹசன் என்ற தேர்ந்த கொலையாளியிடம் சோபியாவையும், ஸ்மித்தையும் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஃபோர்ட் டெட்ரிக்கின் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, சோபியாவுக்கு ஆராய்ச்சிக் கூடத்திலேயே, அந்த கொடும் வைரஸ் ஊசி வழியாகச் செலுத்தப் பட்டு ஒரு விபத்து மாதிரி செட்டப் செய்யப் படுகிறது. சோபியாவின் தொலைபேசி உரையாடல்கள், ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எல்லாமே சுத்தமாக அழிக்கப் படுகிறது.

நோயின் தாக்கத்தோடு வீடு திரும்பும் ஜோனாதன் ஸ்மித் மருத்துவ மனையில் சேர்த்தும், அந்த இனம் தெரியாத வைரஸ் அவளது உயிரைக் கொள்ளை கொள்கிறது. காதலியை  இழந்த சோகத்தில், திசை தெரியாமல் தடுமாறும் ஸ்மித்துக்கு, சவப் பரிசோதனையில், சோபியாவின் உடலில் ஊசி போடப் பட்ட தடம், தடையமாக அது கொலை தான் என்று காட்டிக் கொடுத்து விடுகிறது. 


தன்னுடைய மேலதிகாரி ஜெனரல் கீல்பர்கரிடம், தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லி, ஸ்மித் சோபியாவின் மரணத்துக்குப் பழிவாங்கியே தீரவேண்டும் என்று அனுமதி கோருகிறார். ஆனால், அனுமதி கொடுப்பதற்கு முன்னாலேயே கீல்பர்கரும், அந்த வைரசுக்குப் பலியாகிறார். அது கொலை தானென்றும், அதை செய்தது ஸ்மித் தானென்றும் வேட்டையாடப் படுகிற நிலைக்கு ஸ்மித் தள்ளப் படுகிறார்.   

பீட்டர் ஹோவெல், மார்டிஜெல்லர் பாக் என்ற இரண்டு நண்பர்களுடைய உதவியோடு ஜோனாதன் ஸ்மித், இந்த வைரஸ் கோளாறு ஈராக்கில் பரிசோதிக்கப் பட்டதென்பதை அறிகிறார். ரகசியமாக ஈராக்கிற்குப் பயணமாகிறார். சி ஐ ஏ அதிகாரியாக பணியாற்றும் சோபியாவின் சகோதரி ராண்டி ரஸ்ஸலை எதிர்பாராத விதமாக அங்கே சந்திக்க நேரிடுகிறது. சோபியாவின் மரணத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ராண்டி முதலில் கோபப்படுகிறாள். பிறகு சேர்ந்து செயல்படுகிறாள். தேவையான விவரங்களைத் தெரிந்து கொண்டு ஸ்மித் அமெரிக்காவுக்குத் திருபுவதற்குள், உலகின் பல பகுதிகளிலும் ஒரு இனம் தெரியாத வைரஸ் தாக்குதலுக்கு லட்சக் கணக்கான மக்கள் பலியாகிறார்கள்.

அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஆரம்பிக்கலாம் என்ற நிலையில், இதற்கான மருந்தை ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் வேறு ஒரு ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருந்தபோது தற்செயலாக இந்த வைரஸ் தாக்குதலுக்கும் நிவாரணமாக  இருப்பதைக் கண்டறிந்ததாகவும், அமெரிக்க அரசு ஆர்டர் கொடுத்தால் லட்சக் கணக்கான தடுப்பு ஊசி  மருந்தைத் தயாரிக்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. 


அமெரிக்க மக்களைக் காப்பதற்காக, கோடிக்கணக்கான டாலர்களைக் கொடுத்து அமெரிக்க அரசு இந்த மருந்துகளை வாங்க ஆர்டர் கொடுக்கிறது. அத்தோடு விடாமல், இந்த மருந்தைக் கண்டு பிடித்ததற்காக, டாக்டர் விக்டர் ட்ரேமான்ட்டிற்கு, அமெரிக்க அதிபரே நேரடியாக சுதந்திரப்  பதக்கம் என்ற உயர்ந்த விருதை வழங்கி கௌரவப் படுத்துவதற்கும்  ஏற்பாடாகிறது.

கதையின் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழும் தருணங்கள் மிக சுவாரசியமாகக் கையாளப் பட்டிருக்கின்றன.

பெருவில் ஏற்படும் ஒருவிதமான காய்ச்சலுக்கு, மருந்தாக ஒருவகைக் குரங்கின் ரத்தத்தில் இருக்கும் ஆண்டிபாடீஸ் பயன் படுவதைக் கண்டறியும் டாக்டர் ட்ரெமான்ட், நோயை உண்டாக்கும் காரணியையும், நோயைக் குணப்படுத்தும் ஆண்டி பாடீசையும் தயாரித்து, நோயை பரப்பி அதற்குப் பிறகு அதற்கு மருந்தையும் கண்டுபிடித்துக் கோடிக் கணக்கில் காசாக்குகிற சதியை ஹேட்ஸ் ப்ராஜக்ட் என்ற பெயரில், அமெரிக்க அரசின் மிகப் பெரிய பதவியில் இருப்பவர்களுடைய கூட்டணியோடு உருவாக்குகிறார். 


ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற பழமையான நிறுவனத்தின் உரிமையாளருக்குத் தெரியாமலேயே, மிக நவீனமான ஆய்வுக் கூடம், மருந்து தயாரிப்பு எல்லாம் நடக்கின்றன.

நோயை உருவாக்கும் வைரஸ்,  குறிப்பிட்ட சிலருக்கு மருத்துவ உதவி என்ற பெயரில் செலுத்தப் படுகிறது. மாற்று மருந்து ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப் பட்டு, மருந்து சரியாக வேலை செய்கிறது என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. மற்றவர்கள், பெரும் அவஸ்தையுடன், இன்னதென்று நிர்ணயிக்கமுடியாத காரணத்தால் சாக விடப் படுகிறார்கள். 


நோயை உருவாக்குவதற்காக  ஆண்டி பயாடிக்ஸ் மருந்து என்ற போர்வையில், நோயைப் பரப்பும் மருந்துகள் ஏராளமாக சந்தையில் விடப் படுவதும், சரியான விலை கிடைத்ததும் மாற்று மருந்தும் கிடைக்கச் செய்வதுமான மருந்துத் தயாரிப்பு  நிறுவனத்தின் சதி மோசடி இப்படியாக அம்பலமேறுகிறது.

கதாநாயகன் ஜோனாதன் ஸ்மித், ஈராக்கில் இருந்து திரும்புகிற சமயம், அவரது நண்பர்களில் ஒருவரான மார்டி எதிரிகளிடம் சிக்கிவிடுகிறார். ஆரம்பத்தில் அவரை எச்சரித்த பால்ய நண்பர் பில், இந்த சதிகாரர்களுடைய கூட்டத்தில் ஒருவர் என்பதும், தன்னுடைய நண்பனைக் காப்பாற்ற முயற்சிப்பது தெரிந்த நிலையில் அவரை வைத்தே ஸ்மித்தை வலையில் சிக்க வைக்கிற முயற்சியும் நடக்கிறது. நண்பனைக் காப்பாற்றுகிற முயற்சியில் பில் தன்னுடைய உயிரைக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு, ஜோனாதன் ஸ்மித் எதிரிகளை எப்படி சமாளிக்கிறார் என்பது விறுவிறுப்பான க்ளைமாக்சில் வந்து முடிகிறது.


துறை சார்ந்த புதினமாக ராபர்ட் லட்லம், இன்னொரு எழுத்தாளருடன் சேர்ந்து எழுதிய கவர்ட் ஒன் தொடர் புதினங்களாக எழுதியதில் இது முதலாவது! இதற்கடுத்த கதைகள் எல்லாம் 2001 இல் ராபர்ட் லட்லம் மரணமடைந்த பிறகு, அவர் எழுதி வைத்திருந்த குறிப்புக்களின் அடிப்படையில் இன்னொரு எழுத்தாளரும் சேந்து எழுதி வெளிவந்தவை என்பது கூடுதல் தகவல்.
 

 

இந்தக் கதைகளில் முக்கியமாக, ஒரு விஷயம் எப்படி நடக்கிறது என்பதை விட அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்பதில் தான் மனிதனின் கவனம் இயல்பாக இருக்கிறத் தன்மை வெளிப்படுவதைப் பார்க்கலாம். இந்த முதல் கதை அமெரிக்காவில்  கவர்ட் ஒன் என்ற ரகசிய அமைப்பு ஏற்படுத்தப் படுவதன் பின்புலமாக இருக்கிறது. 

இந்த அமைப்பு, கதாநாயகனுக்கு இதில் எதனால் ஒரு பிடிப்பு அல்லது லட்சிய வெறி ஏற்படுகிறது என்பதை, இந்தக் கதையில், கதா நாயகனுக்கு ஏற்படும் சொந்த இழப்பு வலுவான மோடிவாக  ஆரம்பித்து, தன் உயிரையே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய  சர்வைவல், அப்புறம் இப்படியெல்லாம் அலைய, அழ வைக்கிறவர்களின் மீது வருகிற கோபம் என்று நாடகத்தனமான லாஜிக்குடன் கதை நகர்கிறது.

இப்படி நாடகத் தனமான லாஜிக் இருந்தால் தான் ஜனங்களிடம் இன்றைக்கு எடுபடுகிறது என்பது தான் மிகப் பெரிய சோகம்!

ராபின் குக் எழுதிய சுரம் புதினத்தில் இருந்த பலவீனம் இது தான்!


The Fever கதையின் நாயகன்,  சார்லஸ் மார்டெல் ஒரு மருத்துவர். லுகேமியா என்ற ரத்தப் புற்றுநோய்க்குத் தனது மனைவியை பறிகொடுத்தவர். அதை அடுத்து புற்றுநோய்க்கு மருந்து கண்டு  பிடிக்கும் ஆராய்ச்சியில்  தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.  மருத்துவருடைய மகளுக்கும்அதே மாதிரியான மிக அரிதான புற்று நோய் இருப்பதைக் கண்டறிகிறார். 

ரசாயனக் கழிவை சுத்திகரிக்கிறேன் என்ற பெயரில் அந்த சிறுமி விளையாடும் இடத்தின் அருகே இருந்த சிறு குட்டையில் பென்சைன் என்ற புற்றுநோயைத் தூண்டுகிற காரணியாக இருக்கும் நஞ்சை, ஒரு மருத்துவக் கழிவை சுத்திகரிக்கும் ரசாயனக் கம்பனி தொடர்ந்து கொட்டிக் கொண்டிருப்பது தான் காரணம் என்று தெரிய வருகிறது.

தன் மகளை மருத்துவமனையின் அனுமதியில்லாமல் வெளியே கொண்டு வந்து மாற்று மருத்துவ முறையில் சிகிச்சையைத் தொடருகிறார். மருந்து ஒன்றையுமே கூடக் கண்டுபிடித்து விடுகிறார்.வில்லனாக, ஒரு மருந்துக் கம்பனி வந்து குறுக்கிடுகிறது. மருத்துவர் என்ற தகுதியையும், மகளுடைய உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக முயற்சிகளைச் செய்வதில்  பேராசை பிடித்த அந்த மருந்துக் கம்பனியின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறார்.  

பெரும்பகுதிக் கதையில்  சார்லஸ் மார்டெல் எதன் மீதோ, எவர் மீதோ கோபத்தைக் கக்கிக் கொண்டிருப்பவராகவே சித்தரிக்கப் படுவதும், நிறைய ரசாயனக் கூட்டுப் பெயர்கள், விளைவுகள் என்று அடிக்கடி குறிப்பிடப் படுவதால், அடிப்படை ரசாயனம் அறியாதவர்களுக்குக் கொஞ்சம் கூடப் புரியாத வகையிலும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை, பக்கத்திலேயே ஒரு அகராதியை வைத்துக் கொண்டு பொருள் தெரிந்துகொண்டு படிக்க வேண்டியதாக இருந்ததும் , இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கையில் எடுத்த அந்த நாட்களில் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது.

ராபின் குக் மருத்துவராக இருந்து கொண்டே தன்னுடைய துறையில் நடக்கும் கொஞ்சம் அதீதமான அக்கிரமங்களை அம்பலப் படுத்துகிற வகையில் பல புதினங்களை எழுதியிருக்கிறார்.

 

ஆனால், ஊர்க் குளத்தில் ரசாயனக் கழிவைக் கொட்டிய நிறுவனம் வேண்டுமென்றே கான்சர் நோயைப் பரப்புவதற்காக அதைச் செய்யவில்லை என்று தானே சாதாரணமாகப் படிப்பவருக்குத் தோன்றும்! அதைப் போலத்தான் ஒரு மருத்துவராக இருந்தும் கூட, டாக்டர் ப்ருனோ தொடர்ந்து ஸ்வைன் ப்ளூ தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப் பட்டு கொஞ்ச நாட்கள் தான் ஆகிறது, அதனால் அதை விமரிசிப்பதே தவறு என்ற ஒரு விசித்திரமான வாதத்தை முன்வைத்திருக்கிறார். 

வேடிக்கை என்னவென்றால், இந்தத் தடுப்பு ஊசியைத் தயாரித்த கிளாக்சோ ஸ்மித் கிளீன் நிறுவனம், வேறு ஒரு மருந்துத் தயாரிப்பிலும் இதே மாதிரி அய்யம்பேட்டை வேலையைத் தான் செய்திருக்கிறது. வியாதியைப் பரப்பிக் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது என்று ஒரு புத்தகமே எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொன்ன போதிலும் கூட, மனிதர் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. முந்தைய பதிவுகளில் இதன் தொடுப்புக்கள் இருக்கின்றன.

இந்த வருடம் இந்தத் தடுப்பு ஊசியைக் கொள்முதல் செய்யப் போவதில்லை என்று சில மேற்கத்திய நாடுகளின் அரசுகள் முடிவெடுத்திருக்கும் நேரத்தில், அமெரிக்காவில், இந்த தடுப்பு ஊசியைக் கொள்முதல் செய்ய அனுமதி அளித்திருக்கும் செய்தியும் நேற்று அமெரிக்க Center for Disease Control(CDC) தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பன்றி காய்ச்சல் பீதி கிளப்பப் பட்டது 2009 ஆரம்பத்தில்! அதன் நோய்க்கூறுகளைப் பேடன்ட் செய்தது அதற்கும் முந்தைய ஆண்டில். 

தடுப்பு ஊசியின் ஆராய்ச்சி முடிவுகள் கேள்விக்குள்ளாகி, மேற்கத்திய நாடுகளில் எதிர்ப்பு இயக்கங்கள் நடந்து கொண்டிருப்பதையும் மீறி, பல பில்லியன் டாலர்கள் மருந்துத் தயாரிப்பாளர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர், அப்படியே புல்லுக்கும் பாய்கிற மாதிரி வேறெங்கெல்லாம் போயிருக்கும் என்பதையும் இணையத்தில் வெளிவரும் செய்திகள் அம்பலப் படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.
 


போபால் விஷவாயு வழக்கில் கூட நடந்த படுகொலையை நீதிமன்றம் திட்டமிட்ட படுகொலை அல்லது, அங்கே ஜனங்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்ததும், லட்சக் கணக்கானோர் பாதிக்கப் பட்டிருப்பது கண்கூடாக இருந்த போதிலும், சட்டத்தின் பார்வையில் அதைக் கொலையாகவோ, ஒரு பெரும் குற்றமாகவோ  பார்க்க முடியவில்லை என்பது தெரியும் தானே!

நாம் கூட இருக்கிற சட்டத்தின் அடிப்படையில் இவ்வளவு தான் தண்டிக்க முடியும் என்று வாதம் செய்த  ஒரு  நீதிபதியைப் போல, (நீதிபதி அஹமதி) இவ்வளவு பேர் மடிந்த விவகாரத்தை செய்தித் தாளின் ஒரு ஓரத்தில் நாலைந்து நாட்களுக்கு வந்து அப்புறம் மறந்து போய் விடுகிற சமாசாரமாகத் தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம், இல்லையா!


சூடு பட்டுக் கொண்டே இருந்தும் சுரணை வராத ஊமைச் சனங்களாகவே இருந்துவிடப் போகிறோமா என்ற ஆதங்கத்தைத் தான் இந்தப் பக்கங்களில் திரும்பத் திரும்பப் பகிர்ந்து கொண்டு வருகிறேன். 




 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!