சண்டேன்னா மூணு,! படம், படம், படங்கள்!

நல்லெண்ணங்களை விதைத்தல், சொன்ஃபில் என்று இந்தப் பதிவுகளில் அவ்வப்போது பார்த்திருக்கிறோம்!


இந்தப் படத்தைப் பாருங்கள்! இந்தக் கோப்பையில் பாதி மட்டுமே நீர் இருக்கிறது. அரை கிளாஸ் என்று தான் சொல்வோம் இல்லையா? உண்மையில் அப்படித்தானா?


இப்போது இந்தப் படத்தைப் பாருங்கள்! இதிலும், அதே பாதியளவு நீர் தான்! ஆனால், மீதியிடத்தில் காற்று இருக்கிறது! அதனால், கோப்பை எப்போதுமே வெறுமையாக, அல்லது வெற்றிடமாக இருப்பதில்லை! 

இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்பது ஒரு ஏற்றுக் கொள்ளப் பட்ட விஞ்ஞான விதி! விஞ்ஞானம் என்று மட்டுமில்லை, உளயலுக்கு, நடைமுறை வாழ்க்கைக்கும் அது பொருந்துவதாக இருப்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தோம் என்றால் நமக்கே புரியும்!

An  idle mind is the Devil's workshop என்று சொல்வார்களே அதைப் போல, நம்முடைய மனமும் வேறு வேலை வெட்டி அல்லது நல்ல பழக்கங்களுக்குத் தயார் செய்யவில்லை என்றால்,இப்போது தமிழ்ப் பதிவுலகில் நடந்து கொண்டிருக்கிற மாதிரி, ஒரு கல்யாணச் செய்தியைக் கூடக் கலவர பூமியாக மாற்றுகிற வேலைதான் நடக்கும்! இருட்டுச் சந்தில் மூக்கில் குத்துவது கூட எப்போதாவது தான் நடக்கும், ஆனால் வார்த்தைகளில் கொடூரமான, ஜாதியைத் தொட்டு இழிவுபடுத்துகிற, வீண் மனக் கசப்புக்களை வளர்க்கிற, தவிர்க்காமல் போனோமேயானால், நிரந்தரமான பகையை வளர்ப்பதாகவும் ஆகிவிடுகிற பரிதாபம் தான் எப்போதும் நடக்கும்!

நல்லெண்ணங்களை விதைப்போம்! ஊருக்கு நன்மை செய்வதற்காக என்று மட்டுமே இல்லை! நமக்கே நல்லதைத் தேடிக்
கொள்ள வேண்டும் என்பதற்காகவும்!

******

வாஜ்பாயி  பிரதமராக இருந்தபோது வெங்காய விலை ஏறிவிட்டது என்பதைக் காரணம் சொல்லி, காங்கிரஸ் கட்சி "சாமானிய" மக்களுக்காகக் குரல் கொடுத்தது! பிஜேபி என்றாலே இங்கே இருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு எட்டிக்காயாகத் தான் கசக்கும்! காங்கிரசோடு சேர்ந்து அவர்களும் நன்றாகவே வேகமாக ஊதினார்கள்! பிஜேபி தோற்றது!  

பிஜேபி மீது இருக்கும் வெறுப்பில், அப்புறம் காங்கிரசை அனுசரிப்பதால் கிடைக்கும் ஆதாயங்கள், அவர்களுக்கென்று இருக்கும் தனி அஜெண்டா என்று இப்படி எத்தனை காரணங்களைச் சொன்னாலும், இந்த ஊடகங்கள் செய்வதில் எது முக்கியமோ அது ஜனங்களுடைய கண்களுக்குத் தெரிய வராமலேயே மூடி மறைக்கப்பட்டு விடுகிறது. இந்தப்படத்தைப் பாருங்கள்!



ஊடகங்களால், அதிகமாக வெறுக்கப்படும் நபர் என்று பார்த்தால், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் முதலில் இருப்பார்! அவருடைய நிர்வாகத் திறமை, தொடர்ந்து சர்வ தேச அளவில் கவனிக்கப்படுவதும், பாராட்டுப் பெறுவதும் வாடிக்கையாக இருக்கிறது. நம்மூர் ஊடகங்கள் நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை! மோடி என்றால் வெறுக்கப் படவேண்டிய கொலைகாரன் தான்!

ஆனால் ஆம் ஆத்மிக்காகக் குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விலைவாசி எப்போதுமே இறக்கை கட்டித் தான் பறக்கும்.இப்போதும் அப்படியே!

ஊழல் செய்வதில் மட்டும் காங்கிரஸ் கட்சி, நம்மூர்க் கழகங்களுக்குக் கொஞ்சம் கூட சளைத்ததோ, இளைத்ததோ இல்லை என்பது மட்டும் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் நீண்ட கால சாதனையாக இருப்பதை ஏனோ ஊடகங்கள் கண்டு கொள்வதே இல்லை!

கார்கில் போரில், தேசமே இந்திய ராணுவத்தின் பின்னால் நின்றதையும், அது வாஜ்பாயிக்கு பெருமை சேர்த்ததையும் காங்கிரஸ் கட்சியினால் சகித்துக் கொள்ள முடியாமல், அவதூறுகளை விதைத்துக் கொண்டிருந்தது பழைய கதை! அதே கார்கில் போர் வீரர்களுக்காக என்று சொல்லி வீட்டு வசதி செய்து தர ஆதர்ஷ் சொசைடி என்று ஒன்றை ஏற்படுத்தி, காங்கிரஸ்காரர்களே ஆட்டையைப் போட்ட கதை இப்போது செய்திகளில் நாறிக் கொண்டிருக்கிறது! இந்த வீடியோவைப் பாருங்கள்! கார்கில் வீரர்கள் மூவருக்கு மட்டுமே இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் இடம் அளிக்கப் பட்டிருக்கிறது. மற்ற எல்லாவற்றையும், காங்கிரஸ், அதன் கூட்டாளிகள், அரசு அதிகாரிகள் லபக்கிக் கொண்டதை, இந்தக் குடியிருப்பு கார்கில் வீரர்களுக்கானதே இல்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் சொல்வதும், சொல்லும்போதே புளுகு மூட்டை அவிழ்ந்து அசிங்கமான நிலையில், ராஜினாமா செய்ய முன் வந்திருப்பதும் நீங்கள் இதைப் படிக்கும்போது பழைய செய்தியாக ஆகியிருக்கலாம்!
 


பொன்னியின் செல்வன் கதையில், கல்கி தன் எழுத்து வன்மையால் அருள்மொழிவர்மனை ஐந்தாவது பாகத்தில் தியாக சிகரமாக்கி வைத்ததைப் போல, இங்கே உள்ள ஊடகங்களும் ஊழல் சிகரமான காங்கிரசையும், சோனியாவையும் தியாக தீபமாக்கி விட்டன! 

இப்படிக் காசுக்காகக் கூவுவது மட்டும் நிரந்தரமான செய்தியாக இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வெட்கக் கேடான விஷயங்களில் முக்கியமானது! 

நிர்வாகம் செய்வதிலோ, தெளிவான அரசியல் கொள்கை, செயல் திட்டங்கள் இப்படி எந்தவிதத்திலும் தேறாத காங்கிரஸ் கட்சி அரசுகளின் நிர்வாக லட்சணம், இந்த ஊடகங்கள் எவ்வளவுதான் மூடி மறைக்கப் பார்த்தாலும், அதையும் மீறி வெளியே வந்து விடுகிறது. 

சமீபத்தில் சுரேஷ் கல்மாடிக்கும், ஷீலா தீட்சித்துக்கும் நடந்த வார்த்தைப் போர் காங்கிரசின் கையாலாகாத் தனத்தைப் பறை சாற்றியது. இது மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத் தனம், ஊழல் என்று எவ்வளவுதான் வெளிப் பட்டாலும் மீடியாக்கள், தங்கள் சொந்த சௌகரியங்களுக்காக அவற்றைப் பெரிது படுத்துவதில்லை.

ஒன்றுக்கும் உதவாத காங்கிரசைத் தூக்கி எறியுங்கள்! இந்தியா பிழைத்திருக்க அது ஒன்றே சரியான வழி!


******

பதிவர் மயில் ராவணனுக்கு, The Guns of Navarone கதையைப் படிக்கும்படி நீண்ட நாட்களுக்கு முன்னால் சிபாரிசு செய்திருந்தேன். திரைப் படமாக வந்ததில் இருந்து ஒரு பகுதியையும் யூட்யூப் சுட்டி கொடுத்து, அந்தத் திரைக்கதை முழுக் கற்பனை என்றாலும், நிஜத்தை விட பார்த்தவர் மனதில் ஆழமாகப் பாதித்ததை, பிரிட்டிஷாரை மிகச் சிறந்த வீரர்களாகச் சித்தரித்திருந்ததை, அதன் க்ளைமாக்ஸ் காட்சியை மையமாக வைத்தே, மொத்தத் திரைக் கதையும் நகர்வதான கதை சொல்லும் உத்தியை, அவருடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அலிஸ்டர் மக்லீன் எழுதிய Where Eagles dare கதையை வைத்து அதே பெயரில் வெளியான திரைப்படம்! ரிச்சர்ட் பர்டன் கதாநாயகனாக நடித்து வெளியான, மிகப் பெரிய வெற்றிப் படமாக அந்த நாட்களில் இருந்தது. கதையில், இரட்டை உளவாளியாகப் பணியாற்றிய ஒருவரை மீட்கக் கதாநாயகன் தலைமையில் ஒரு குழு கழுகுக் கோட்டை என்று அழைக்கப்படும் ஜெர்மானியக் கோட்டைக்கு அனுப்பப் படுகிறது. கிளான்ட் ஈஸ்ட்வுட், அதில் அமெரிக்க ரேஞ்சர்ஸ் படைப் பிரிவில் இருந்து இந்த மீட்புப் பணியில் பங்கு கொள்ள அனுப்ப பட்டிருப்பார்.

கதாநாயகனிடம், கிளின்ட் ஈஸ்ட்வுட் கேட்கும் ஒரு கேள்வி, " இது முழுக்க முழுக்க பிரிடிஷார் சம்பந்தப்பட்ட மீட்புப் பணி. இதில் அமெரிக்கனான என்னை எதற்கு ஈடுபடுத்த வேண்டும்?" ரிச்சர்ட் பர்டன் அதற்குச் சொல்லும் பதில், "காரணம் நீ ஒரு அமெரிக்கன் என்பதனால் தான்!" அமெரிக்கர்களைக் குறித்த ஒரு மெல்லிய நையாண்டி அந்த வசனத்தில் வெளிப்படும் என்று நினைவு. 



 
தேடிப்பார்த்ததில் இந்த வீடியோத் துண்டு கிடைத்தது. நீங்களும் பாருங்களேன்!

நம்மூர் விஜய் பன்ச் டயலாக் பேசிக் கெட்ட மாதிரி, இந்த மாதிரி நையாண்டிஎல்லாம், பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போனது தெரியுமோ! 

ஆம்! இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்ற பன்ச் டயலாக் பங்க்சராகி, பிரிட்டன் திவாலாகி ஓட்டாண்டியானது தான் மிச்சம்!



 

7 comments:

  1. Gujatai munnethinaan enbatharkaga modiyai matravarkalum aetrukollavenduma.

    appadiyanal mudhalam ulagaporil nodinthupona germaniyai ulagin sakthi porundhiya naadaga germaniyai hitler matrinan enbadharkaga avan seitha kodura kulaikalaiyum,inaveri adakkumuraikalaiyum ulagathinar aetrukolvarkala.

    adhai polthan ulladhu neengal modikku vangum vakkalatthu.

    Congressthan oolalin mottha uruvamga sittharippadharkku mun karnatakavaiyum,jarkhandil arjun mundavin oolal aatchiyaiyum,karkil poril maraindha veerarkalukku savapetti vangiyathil nadantha oolalaiyum ninaivil konduvarunkal.

    ReplyDelete
  2. முதல் வருகை, கருத்துக்கு நன்றி! கூகிள் இண்டிக் மாதிரி உதவிகள் இணையத்தில் கிடைக்கும் போது தமிழை எதற்காக கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் எழுதி, படிக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.

    உங்களுடைய பின்னூட்டத்தில் மோடி மீதான வெறுப்பு மட்டும் தான் முன்னுக்கு நிற்கிறதே தவிர, பதிவில் சொல்லியிருப்பதற்குப் பொருத்தமாக எதுவும் இல்லை. இந்தப்பக்கங்களில் "எவருக்கும்" வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்ததில்லை. ஜெர்மானிய சரித்திரத்தை, குறிப்பாக ஹிட்லர் கையாண்ட அதீத நடவடிக்கைகள் ஜெர்மனிக்குப் பெருத்த சேதத்தை உண்டாக்கும் என்று அஞ்சிய ஜெர்மானிய இராணுவத்தினரில் சிலரே, ஹிட்லரைப் படுகொலை செய்யத் திட்டமிட்ட வரலாறு உட்படக் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டு அப்புறம் தான் என் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன். இங்கே மோடியை திரும்பவும் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட, ஜனங்கள் வாக்குச் சீட்டினால் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். திறமையான நிர்வாகம், ஜனங்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்ட, அடிப்படைக் கட்டமைப்புக்களில் கவனம் செலுத்துகிற நிர்வாகத் திறமை மட்டுமே இங்கே, ஊடகங்களால் மறைக்கப்பட்டபோதிலும் கூட சர்வ தேச அங்கீகாரம் பெற்றிருப்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறது. எங்கே பாராட்டவேண்டும், எங்கே குட்டவேண்டும் என்பதை உங்களிடமிருந்து அனுமதிவாங்கிக் கொண்டுதான் செய்யவேண்டுமா என்ன?

    கர்நாடகாவையும் கார்கில் சவப்பெட்டியையும் பேசிப்பேசியே முந்த்ரா ஊழல் முதல், இப்போதைய ஆதர்ஷ் சொசைடி ஊழல், காமன் வெல்த் ஊழல் வரை மறைத்துவிடலாம், மறந்துவிடலாம்! அப்படித்தானே! அது உங்கள் அபிப்பிராயமானால், அதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை! அதை அப்படியேஎன்னுடைய அபிப்பிராயமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற அவசியமும் இல்லை என்பதாவது புரிகிறதா?

    ReplyDelete
  3. இந்திய ஊடகங்கள் இப்போது இருக்கும் நிலை மிகக்கேவலமானது.மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் அவைகள் பணம் பண்ண ஆரம்பித்து விட்டதால் உண்டான நிலைமை இது. தமிழ் நாட்டு ஊடகங்களின் நிலையோ மகா மகா கேவலம் . எல்லாம் "ஜிஞ்சா " கோஷ்டிகளாகிவிட்டன. இங்கு வட மாநில செய்திகள் வருவது மிககுறைவே. காங்கிரஸ் அரசின் செயைல்பாடுகளை எந்த ஊடகமும் "விமர்சிப்பது" இல்லை. இங்கு எஞ்சியுள்ளது சினிமா மற்றும் தினசரி விளம்பரங்களே. அவரை விதைத்தால் கரும்பா முளைக்கும்?

    ReplyDelete
  4. நல்லதொரு பத்தி. வழமைபோல் காங்கிரஸ் நீங்க திட்ட திட்ட அருமையான வளர்ச்சி பெற்றுக்கொண்டு இருக்கிறது.சோனியாவும்,ராகுலும் ரெம்ப தெளிவு.மேலே கூட்டணி மாறினாலும் ஆட்சி மாறாதுன்னு ஆக்டோபஸ் சொல்லிட்டு செத்துருச்சு...
    'Where eagles dare' இருக்கு.பாத்துபுடுறேன்.நன்றி.
    மோடி- நோ காமெண்ட்ஸ் :(

    ReplyDelete
  5. வாருங்கள் மாணிக்கம்!

    ஊடகங்களுமே கூட "சாஞ்சா சாயுற பக்கம் சாயுற செம்மறி ஆட்டுக் கூட்டம்" தான்! கொஞ்சம் ஓரம் கட்டிப் புறக்கணித்துப் பாருங்களேன்!
    ஊடகங்களில் என்ன செய்தி வந்தாலும் அதை அப்படியே முகமதிப்பில் ஏற்றுக் கொள்ளாமல், அது அப்படித்தானா என்பதைக் கேள்வி கேட்டு அதற்கப்புறம் ஏற்றுக் கொள்கிற வழக்கம் ஆரம்பித்தால், ஊடகங்களின் கொட்டம் அடங்கிப் போகும். குறைந்தபட்சமாக, அப்படிக் கொட்டமடிக்கிற ஊடகங்களின் யோக்கியதை அம்பலப்பட்டுப் போகும்!

    அப்புறம் தமிழ்நாட்டு ஊடகங்களைப் பொறுத்தவரை, டிவி சீரியல்களைப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டாலே தொண்ணூறு சதவீதப் பொய்கள், திசைதிருப்பும் வேலைகளைத் தவிர்த்துவிடலாம்.

    அப்புறம், மரா!

    நான் திட்டத் திட்ட காங்கிரஸ் வளர்ந்து கொண்டே இருக்கிறதா?! "போகிறபோக்கில்" எவர் காதிலாவது விழுந்தால் இன்பத் தேன்மாரி பொழிந்த மாதிரித் தான் இருக்கும்! ஆனால், அது அப்படித் தானா?

    ஆக்டோபசை அப்படிச் சொல்லவைத்து விட்டு, சாக அடித்துவிட்டார்களா என்ன :-)))

    ReplyDelete
  6. "நல்லெண்ணங்களை விதைப்போம்! ஊருக்கு நன்மை செய்வதற்காக என்று மட்டுமே இல்லை! நமக்கே நல்லதைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்!" - What a wonderful lines!
    இந்த வரிகள் ஒவ்வொரு குழந்தைகளின் மனதிலும் விதைகப்படவேண்டும்.

    குஜராத்திகள் எப்பவுமே அசாதாரண மனிதர்கள் தான். மகாத்மா, அம்பானி, மோடி என.
    NDTV,THE HINDU, CNN-IBN போன்ற ஊடகங்கள் தான் மகா கேவலமாக நடந்து கொள்கின்றன. இவைகளை தவிர எந்த ஊடகமும் மக்கள் மனதில் இல்லை. இப்போதெல்லாம் டிஷ்கோவேரி தமிழும், போகோ சேனலும் தான் பார்கிறேன். PRANNOY ROY, HINDU RAM போன்றோர்களுக்கு கேவலமாகவும் Journalism நடத்த தெரியும் போல.

    இந்தியர்களுக்கு எப்பவுமே மறக்கிற புத்திதான். இந்த பிஜேபி காரர்கள் தாங்கள் செய்த நல்ல காரியங்களையாவது மக்களுக்கு நினைவு படுத்தி ஓட்டு கேக்க பழகிக்கணும்.

    ReplyDelete
  7. வாருங்கள் திரு அமர் ஹிதூர்!

    நீண்ட நாட்களுக்குப் பின் இந்தப்பக்கங்களில் சந்திக்கிறோம்! தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள். ஜனங்களுடைய மறதியை நம்பித்தான் உலகத்தில் அத்தனை அரசியல்வாதிகளுமே தங்களுடைய பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் இந்தியர்கள் மட்டும் என்ன விசேஷமான விதிவிலக்காக இருந்து விட முடியும்?

    காங்கிரசுக்கு மாற்றாக, ஒரு வித்தியாசமான பொறுப்புள்ள அரசியல் கட்சியாக வளருவார்கள் என்று நம்பிய பிஜேபி, தானும் பதவிப் பயத்தில், ஊழலில் இன்னொரு காங்கிரஸ் தான் அல்லது, இவர்கள் ஒன்றும் அவர்களை விட வித்தியாசமானவர்கள் இல்லை என்ற எண்ணத்தை ஜனங்களிடம் ஆழமாகவிதைத்து விட்டார்கள். அதைத் தான் இப்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள்.

    என்னைப் பொறுத்தவரை, காங்கிரசோ, பிஜேபியோ, இப்போது உள்ள Winner takes all என்ற மாதிரியான தேர்தல் அமைப்பில் வேறு விதமாக, பொறுப்போடு செயல்பட முடியாது: இப்போது அவசியமானது தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் என்பது தான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!