தகவல் அறியும் உரிமை! சட்டமா? மாயையா?



முதுகெலும்பில்லாத தகவல் ஆணையம் எதற்கு?

பொதுமக்களை அரசாங்கத்தின் வாசற்படிகளில் தவம் கிடக்கும் மனுதாரராக இருப்பதை மாற்றி தமது உரிமைகளைத் தட்டிக்கேட்கும் மன்னர்களாக்கிய ஓர் அற்புதமான சட்டம்தான் 2005-ல் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டிய தகவல் உரிமை ஆணையங்களே அப்படியொரு புரட்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளன. அந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளது தமிழகத் தகவல் உரிமை ஆணையம். 

தமிழகத் தகவல் ஆணையத்தின் செயல்பாட்டில் நேர்மையோ, நியாயமோ இல்லை என்று தகவல் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து விமர்சித்தும், அந்த ஆணையம் தன்னைத் திருத்திக்கொள்ளாத நிலையில், இப்படிப்பட்ட ஓர் ஆணையம் தேவையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

மாநிலத் தகவல் ஆணையங்களில் தலைமை ஆணையர் உள்பட 11 பேர்வரை அங்கம் வகிக்க தகவல் உரிமைச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், தமிழகத் தகவல் ஆணையத்தில் 4 பேர்தான் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை? 

தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான மனுக்கள் தேங்கியுள்ளன. மக்களுடன் அதிகத் தொடர்புடைய வருவாய், காவல்துறைகளில் ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ளன. இதற்கு உடனுக்குடன் தீர்வு காண தகவல் ஆணையம் முனைப்புக் காட்டாதது ஏன்? வருவாய் அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்குப் பதில் அளிப்பது அந்தந்த துணை வட்டாட்சியர்களுக்குக் கூடுதல் பொறுப்பாகவே அளிக்கப்படுகிறது. இதுவே மனுக்கள் தேக்கத்துக்கு காரணம் என்று துணை வட்டாட்சியர்கள் புலம்புகிறார்கள். இது ஏன் அரசின் செவிக்குக் கேட்கவில்லை? 

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட துறை பதில் அளிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இதைத் தமிழகத்தில் உள்ள எந்தத் துறையும் பின்பற்றுவதில்லை. இதற்கு முழுக் காரணம் மாநிலத் தகவல் ஆணையமே. 


மனுதாரர்களுக்கு 30 நாள்களுக்குள் பதில் அளிக்காத அதிகாரிக்கு அதிகபட்சம் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கச் சட்டம் அனுமதிக்கிறது. பெரும்பாலும் இதைத் தமிழகத் தகவல் ஆணையம் செய்வதில்லை. மாறாக, தவறு செய்யும் அதிகாரிகளைத் தப்பிக்கவைக்கும் பணியை மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகிறது. 

சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பதில் கிடைக்காவிட்டால் மனுதாரர் மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு மனுக்களைப் பெறும் தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட துறையை அணுகி ஏன் தகவல் கொடுக்கவில்லை என்று வினவி, நியாயமான காரணம் சொல்லப்படாதபட்சத்தில் அபராதம் விதிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த நடைமுறை தலைகீழாக உள்ளது. 


மேல்முறையீட்டு மனுக்களைப் பெறும் ஆணையம், தவறு செய்த அதிகாரிகளைத் துணிச்சலாகத் தண்டித்து, தகவலைப் பெற்றுத்தருவதை விடுத்து, அதிகாரிகளை அணுகி மனுதாரருக்குத் தகவல் கொடுங்கள் என்று கெஞ்சுகிறதாம். இவ்வாறு கெஞ்சுவது எதற்கு? மாநிலத் தகவல் ஆணையம் இப்படி நடந்து கொள்வதால்தான் தவறு செய்யும் அதிகாரிகள் துணிச்சலுடன் உலா வருகின்றனர். சில துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மனுதாரருக்கு அலுவலகக் கவரில் வெற்றுத்தாளை வைத்து அனுப்பி தாங்கள் தாமதிக்காமல் மனுதாரருக்குப் பதில் அளித்துவிட்டதாகப் பதில் கூறிவிடுகின்றனர்.

தகவல் ஆணைய அதிகாரிகளின் பணி நியமனத்தில் அரசியல் குறுக்கீடும், மக்கள் பிரச்னைகளின் வலியை அறிந்திராத, அக்கறையில்லாதவர்கள் நியமிக்கப்படுவதுமே ஆணையத்தின் மெத்தனச் செயல்பாட்டுக்குக் காரணம். எனவே, மக்கள் நலனில் அக்கறையுள்ள, தகவல் உரிமை ஆர்வலர் ஒருவரையும் தகவல் ஆணையராக நியமிக்கலாம். 

தில்லி அரசு சைலேஷ் பாபு என்ற தகவல் உரிமை ஆர்வலரைத் தகவல் ஆணையராக  நியமித்துள்ளது. இந்த நடைமுறையைப் பின்பற்றுவது குறித்து தமிழக அரசும் பரிசீலிக்கலாமே?  




பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தச் செயலர், தகவல் ஆணையாளர்கள், பொதுத் தகவல் அலுவலர்கள், தகவல் உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டம் சென்னையில் 2008-ல் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், முதல் கூட்டத்திலேயே தகவல் அறியும் மனுக்கள் மீது எடுக்கப்படும் அலட்சிய நடவடிக்கை குறித்து பொதுமக்களும், தகவல் ஆர்வலர்களும் சரமாரியாக எழுப்பிய வினாக்களுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை. இந்தக் கூட்டத்தை ஏன் கூட்டினோம் என்ற நிலைமைக்கு ஆளாகித் தொடர்ந்து கூட்டம் நடத்துவது கைவிடப்பட்டது. 

இந்தக் கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும்.

மேல்முறையீட்டு மனுக்களை கையாளும் விஷயத்தில் வெளிப்படைத் தன்மையை தகவல் ஆணையம் பின்பற்றுவதில்லை. இதில் உள்ள நியாயம் என்ன என்பது புரியவில்லை. சாதாரண மக்களின் மனுக்களுக்குக்கூட தகவல் ஆணையம் ஆங்கிலத்தில்தான் பதில் அளிக்கிறது. இது அவர்களைச் சிரமத்துக்கு ஆளாக்கி வருகிறது. இதனால் தமிழில் மனு தாக்கல் செய்பவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்தில் தாக்கல் செய்வோருக்கு ஆங்கிலத்திலும் கடிதத் தொடர்பு இருப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்து 5 ஆண்டுகள் ஆகியும் இச்சட்டம் குறித்து தமிழக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. 


இப்படியொரு சட்டம் இருப்பதே 90 சதவீத மக்களுக்குத் தெரியவில்லை. அரசின் இலவசத் திட்டங்களை விளம்பரப்படுத்துவதுபோல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் மாநிலத்தின் கடைக் கோடியில் வசிக்கும் குடி மகனும் அறியச் செய்திட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பள்ளிப்பாடங்களில் சேர்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  அதிகாரிகள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படாமல் இருப்பதால்தான் தகவல் ஆணையம் அவசியமாகியுள்ளது.

அதிகாரிகள் மக்கள் நலன் கருதி செயல்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்துவிட்டால் இந்தத் தகவல் அறியும் சட்டம் எதற்கு? ஆணையம்தான் எதற்கு?  


இங்கே! தினமணி நாளிதழில் கடந்த பதினொன்றாம் தேதி, செங்கோட்டையன் என்பவர் எழுதிய கட்டுரை இது.

இங்கே வலைப்பதிவுகளில் "சட்டம் என்கையில்" என்று திரு திரவிய நடராஜன் போன்ற சில ஆர்வலர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுதி வருகிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசு நடவடிக்கைகளில் ஒரு வெளிப்படையான, நம்பகத்தன்மையை நிரூபிக்க உதவுகிற ஒரு கருவியாகவே ஆரம்பத்தில் கருதப்பட்டது.

ஆனால் தமிழக நிலவரம் என்ன என்பதை இந்தக் கட்டுரை மிகத் தெளிவாகவே காட்டி இருக்கிறது.


இன்னும் அறிமுக நிலையிலேயே இருக்கும் இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாகத்திருத்தி, சுத்தமாக முடமாக்கும் முயற்சியும் தொடர ஆரம்பித்திருக்கிறது

என்ன செய்யப் போகிறோம்? வெறும் இலவசங்களிலேயே மதிமயங்கி, இருப்பதையும் பறிகொடுத்துவிட்டு நிற்கப் போகிறோமா?
 

என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோமா? 

நம்முடைய சுதந்திரம் உரிமைகள் பறி போய் விடாமல் பாதுகாத்துக் கொள்ளத்தயாராக இருக்கிறோமா?
 

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!


  

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

 

கூடாரை வெல்லும் கோவிந்தன்



27. சர்க்கரைப் பொங்கல் பாட்டு.
         
விரதத்திற்கு உரிய சங்கு பறை முதலியவற்றையும் பல்லாண்டு இசைப்பாரையும் அருளவேண்டும் என்று கேட்ட ஆய்ச்சியரை நோக்கிக் கண்ணன், 'பெண்களே! இவ்வளவு தானா உங்கள் தேவை? தருகிறேன்' என்று சொன்னதாகக் கருதலாம். அதற்குப் பெண்கள் பதில் சொல்வதுபோல், விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து மேலும் தங்களுக்கு வேண்டியவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.

'எம்பெருமானே! மார்கழி நீராட்டத்தை ஒட்டி நோன்பு நோற்கத் தேவையான சாதனங்களை ஏற்கனவே குறிப்பிட்டோம். நோன்பு நோற்று முடிந்த பின் நாங்கள்  உன்னிடத்தில் பெறவேண்டிய சம்மானங்களும் உண்டு. அவற்றையும் நாங்கள் பெற்று மகிழும்படி அருள் புரிய வேணும்' என்கிறார்கள் இந்தப் பாசுரத்திலே.


சம்மானத்தை வேண்டிக் கொள்ளும்போது, 'கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!' என்று கூப்பிடுகிறார்கள் கண்ணபிரானை. அடிபணியாதவர்களை – பகைவர்களை – வெல்லும் சிறப்பை உடையவன் கண்ணன் என்பது பொருள்.  

கூடாதவர்களை (பகைவர்களை) வெல்லுகிறவன், கூடும் அவர்களுக்கு – அன்பர்களுக்கு – தோற்று நிற்கிறான் என்பது குறிப்பு.

தங்களுடைய அன்பையே, ஆசையையே, பேசி வந்தவர்கள் கண்ணனுக்குத் தங்கள் மீதுள்ள ஆசை தங்கள் ஆசையைக் காட்டிலும் எவ்வளவோ பெரிது என்று கண்டுபிடித்தார்கள் அல்லவா? அப்படியே இப்போதும் ஒரு புதுமையைக் கண்டுபிடிக்கிறார்கள். 'கண்ணனுடைய கலியாண குணங்களுக்கு நாங்கள் தோற்றோம், தோற்றோம்!' என்று இதுவரை நம்பியிருந்தார்கள்; சொல்லி வந்தார்கள். இப்போது 'கண்ணன் தோல்வி' என்ற ஒரு புதுமையைக் கண்டுபிடிக்கிறார்கள். அன்பர்கள் விஷயத்தில்  கண்ணனுக்குத் தோல்வியே வெற்றி! – என்கிறார்கள். சிறுமியர்களாகிய தங்களுடைய மழலைச் சொற்களுக்குத் தோற்றுப் பறை முதலியவற்றையும் இவர்கள் வேண்டின படியே தந்தருள இசைந்து விட்டானல்லவா?

கூடாரை (எதிரிகளை) சக்தியாலே வெல்லும் பெருமான் சௌந்தர்யத்தாலே – ரூப சௌந்தர்யத்தாலும் குண சௌந்தர்யத்தாலும் – கூடும் அன்பர்களை வெல்லுகிறான் என்பது உண்மைதான். எனினும், அம்புக்குத் தோற்காத பெருமாள் அன்பிற்குத் தோற்கிறானாம். இந்தத் 'தோல்வி'யைப் புலப்படுத்தி இறைவனது சீலத்தையும் எளிமையையும் வெளியிடுவது 'கோவிந்தன்' என்னும் பெயர்.

இவர்கள் சம்மானம் கேட்கிறார்கள். இப்போது யாசகம் கேட்பது போல் கேட்கவில்லை. தோற்றவனிடம் வென்றவன் கப்பம் கேட்பது போலச் சம்மானம் கேட்கிறார்கள். 'யாம் பெறு சம்மானம்' என்று கம்பீரமாய்க் கூறுவதைக் கேளுங்கள்.

'நாடு புகழும்படி நாங்கள் சம்மானம் பெறவேண்டும்' என்கிறார்கள். அணிமணிகள் துறந்து, கண் மை துறக்கக் கூந்தல் மலர் மறக்க, நோன்பு நோற்றார்கள் அல்லவா? 'நோன்பு முடிந்தபின் அணிமணிகளை யெல்லாம் நாங்கள் பெற்றுக் கொள்வோம்' என்கிறார்கள். 'அனைவரும் கொண்டாடும்படி நீ எங்களுக்கு அவற்றையெல்லாம் சம்மானிக்க வேணும்' என்கிறார்கள்.

நகைகளின் பெயர்களை இவர்கள் 'பட்டியல்' செய்து பேசுவதே எவ்வளவு அழகாய் இருக்கிறது!

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றுஅனைய பல்கலனும் யாம்அணிவோம்

என்ற ஓசையின்பத்திலேயே இவர்களுடைய மகிழ்ச்சி இனிது புலனாகிறது.
        
இந்த நகைகளையும் வேறு நகைகளையும் கண்ணன் சம்மானித்தால் போதாது என்கிறார்கள். தலைவனும் இஷ்ட தெய்வமுமாகிய அவன் தன் கையால் தங்களுக்கு அணிய, தாங்கள் அணிந்து மகிழ வேணும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியே ஆடை உடுப்போம் என்கிறார்கள்.


சம்மானங்களில் எல்லாவற்றுக்கும் மேலாகச் சர்க்கரைப் பொங்கலை எவ்வளவு ரசமாய்க் குறிப்பிடுகிறார்கள் பாருங்கள்! 'அதன் பின்னே பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார' வழங்கவேணும் என்கிறார்கள். 'நெய்யுண்ணோம், பாலுண்ணோம்' என்று விரதம் கிடந்தவர்கள் இப்போது ஆசை தீரச் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வேணும் என்கிறார்கள்.

கூடியிருந்து சாப்பிட வேணும் என்கிறார்கள். கண்ணனும் தாங்களுமாகக் கூடியிருந்து சாப்பிட வேணுமாம். பசிதீரச் சாப்பிடவேணும் என்று சொல்லவில்லை; ஆசைதீரச் சாப்பிட வேணும் என்று சொல்லுகிறார்கள். ஆம்; கண்ணனைப் பிரிந்து இருந்ததால் அதிகரித்திருந்த ஆசைதீர உண்ண வேணுமாம்.

உண்பதுகூட முக்கியமில்லை. எல்லாரும் கூடிக் களிப்பதுதான் இந்த விருந்தில் முக்கியமான அம்சம் என்பதை வற்புறுத்தி, 'கூடியிருந்து குளிர்ந்து' என்கிறார்கள்.

'முழங்கை வழிவார' என்று சொல்லிப் பிறகு உண்பதைச் சொல்லாமல் 'கூடியிருந்து குளிர்ந்து' என்று முடிக்கிறார்கள். கண்ணனைக் கண்குளிரக் கண்டதுமே பசி தீர்ந்ததால் உண்ண வேண்டிய தேவைகூட இல்லை!

உண்ணவும் மறந்தனரோ!

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றுஅனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவார
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

'நீங்கள் நோன்பிற்கு வேண்டியதைக் கேட்கிறீர்கள்;தருவோம்; நோற்ற பின்பு பெறும் பேறு யாது?' என்று கண்ணன் கேட்கிறானாம். அந்தக் கேள்விக்கு இவர்கள் சொல்லும் பதில் இந்தப் பாசுரம்.

நெய்யுண்ணாமலும், மலரிட்டு முடித்துக் கொள்ளாமலும், அணிகளால் அலங்காரம் செய்து கொள்ளாமலும், கண்ணுக்கு மைதீட்டிக் கொள்ளாமலும் இருந்து நோன்பு நோற்றார்கள். விடியும் முன்பே எழுந்திருந்து பனி தலையில் வீழத் தெருவெல்லாம் நடந்து ஒருவரையொருவர் எழுப்பினார்கள். கண்ணனையும் துயில் எழுப்பினார்கள். பனி நீராடி விரதம் கொண்டாடத் துணிந்தார்கள். 

அத்தகைய வருத்தங்கள் எல்லாம் தீரத் தாங்கள் பெறும் சம்மானம் கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியும் அலங்கரிக்க, ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து கொள்வதும், அவர்கள் உண்பிக்க உடன் இருந்து உண்பதுமே ஆகும் என்கிறார்கள்.


'கூட இருந்து குளிர்ந்து' என்பதுதான் சம்மானத்தின் முக்கிய அம்சம்.



புல்லாணிப் பக்கங்களில்
திருத் திரு என்ற பெயருடன் எழுதிவரும் அன்பரின் எழுத்தோவியம் இது! சென்ற வருடம் ஜனவரி பதினொன்றாம் நாள் வெளியானது! ஒரு வைணவனின் பார்வையில், ஆண்டாளின் பாசுரத்தை அனுபவிக்கிற அழகே தனி தான்! அதனால் நன்றியுடன் இங்கே மீள்பதிவாக!

படித்ததும் பிடித்ததும் வகையில் இன்றைக்குப் பொருத்தமான அனுபவமாக!
*******


Hidden in an earthly garment that survives,
I am the worldless being vast and free.
-Sri Aurobindo

March 1, 1914

 
“IT is in one’s own self that all the obstacles lie,

IT is in one’s own self that all the difficulties are found,

IT is in one’s own self that there is all the darkness and ignorance.


Were we to travel throughout the earth, were we to go and bury ourselves in some solitude, break with all our habits, lead the most ascetic life, yet if some bond of illusion held back our consciousness far from Thy absolute Consciousness, if some egoistic attachment cut us off from the integral communion with Thy divine Love, we would be no nearer Thee despite all outer circumstances.


Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.

O Lord, I implore Thee! Grant that I may be perfectly conscious and master of all that constitutes this personality, so that I may be delivered from myself and Thou alone mayst live and act through these multiple elements.



To live in Love, by Love, for Love, indissolubly united to Thy highest manifestation....



Always more light, more beauty, more truth!”

-The Mother

“Prayers and Meditations” 


 

உள்ளது உள்ளபடி.....இன்று ஒரு பிரார்த்தனை!

"When you have a problem to solve, instead of turning over in your head all the possibilities, all the consequences, all the possible things one should or should not do, if you remain quiet with an aspiration for goodwill, if possible a need for goodwill, the solution comes very quickly. And as you are silent you are able to hear it.

When you are caught in a difficulty, try this method: instead of becoming agitated, turning over all the ideas and actively seeking solutions, of worrying, fretting, running here and there inside your head - I don't mean externally, for externally you probably have enough common sense not to do that! but inside, in your head - remain quiet. And according to your nature, with ardour or peace, with intensity or widening or with all these together, implore the Light and wait for it to come.

In this way the path would be considerably shortened."

The Mother

Coll.Works Vol.9 pp423-424


சோர்வடைகிற ஒவ்வொரு தருணத்திலும் உன்னுடைய கருணையும் ஆதரவும் கூடவே இருந்து வழிநடத்துவதை அறிவித்திருக்கிறாய் அம்மா! எங்கிருந்து தொடங்குவது, எப்படி பிரச்சினையை எதிர்கொள்வது என்பதே தெரியாமல் ஆரம்பித்த தருணங்களை இப்போது நினைத்துப் பார்க்கும்போது, ஒவ்வொரு கட்டத்திலும் உன்னுடைய வழிநடத்துதல் கூடவே இருந்து செயல்படச் செய்திருப்பதை உணர்கிறேன். துணையாக நீ வரும்போது எனக்கென்ன மனக்கவலை இருக்க முடியும்?

என் செயலாவதொன்றுமில்லை என்பது தெய்வ சங்கல்பப்படியே நடந்தேறட்டும் என்பதை மனம், மொழி, மெய் மூன்றிலும் ஏற்றுக் கொண்ட நிலை! நான் சோம்பேறியாகத்தான் இருப்பேன், தெய்வம் வந்து எனக்கு வேண்டியதை செய்து கொடுக்கும் என்றிருப்பது அல்ல என்பதையும் உணரச் செய்திருக்கிறாய்.

தகுதியில்லாத நபர்களிடமிருந்து கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கேட்கிற அவலமும் நடந்தேறியது. அவர்கள் அப்படித் தான் இருப்பார்கள், நீதான் பணிந்து போக வேண்டும், சட்டை செய்யாமல் இருந்து பழக வேண்டும் என்று உபதேசங்களும் கிடைத்தன.

முள்ளால் எடுக்கவேண்டியதைக் கடப்பாரையால் எடுக்க முனைவதாக ஒரு கூற்றும் வந்தது.

ஒவ்வொரு நிகழ்வையும் சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் தாயே! நீ கூட இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்ற தெம்பில் என்னுடைய இந்தப் பிரார்த்தனை மலர் உனது திருவடிகளில் சமர்ப்பணமாகட்டும். கூடவே, எனக்கும் தெரியாமல்  எனக்குள் மறைந்திருக்கும் இருண்டபகுதியில் உனது ஒளி நிறைந்து பெருகட்டும்.

உனது ஒளியால் நிறைவு செய்யப்படுவதாக, உனது ஒளியால் வழிநடத்தப்படுவதாக, என்னையும் சுற்றத்தையும் ஏற்றுக் கொள்வாய் தாயே! உனது கருணையால் எங்களை ஆட்கொள்வாய், ஆதரிப்பாய் தாயே!

ஸ்ரீ அரவிந்த அன்னையே! மீண்டும் மீண்டும் உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன். முழுமையடைகிற வரை மீண்டும் மீண்டும் இந்த முயற்சி அவசியமாகிறது இல்லையா!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய
யி,  சத்யமயி பரமே!





என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! எப்படிப் பட்ட தவறாக இருந்தாலும் துணிந்து செய்யலாம்!


நாளென் செயும் வினைதான் என் செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் பாடல் 38

கடவுள் வந்து நம்மைக் காப்பாற்றுவார், நம்முடைய பிரச்சினைகள் தீர்வதற்குத் துணை நிற்பார் என்று நம்புகிற ஒரு சராசரி மனிதனை விட, கையில் கொஞ்சம் காசு இருக்கும் நபர்களுக்குப் பெரிய நம்பிக்கை, பக்க பலம் ஒன்று இருக்கிறது!

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! எப்படிப் பட்ட தவறாக இருந்தாலும் துணிந்து செய்யலாம்!

கவனிக்க வேண்டிய விதத்தில் "கவனிக்கத் தெரிந்தால்" போதும்! 

அற்பக் காசுக்காக, தவறுகளுக்குத் துணை நிற்பதற்கு அரசு ஊழியர்களும், காவல்துறையின் துணியை நாடி புகார் கொடுக்கச் சென்றால் இவனிடம் காசு பெயராது என்று தெரிந்தால், புகாரை ஊற்றி மூடி விடுகிற தன்மையும், உடனடி நிவாரணம் தேடி நீதிமன்றத்துக்குப் போனால், இதற்கெல்லாம் கீழேயே பார்த்துக் கொள்கிற வசதி இருக்கிறதே என்று "தள்ளுபடி" செய்து விடுகிற தன்மையும் ஒன்று சேர்ந்தால், தவறு செய்கிறவனுக்குக் கொண்டாட்டம் தானே!

அப்புறம் என்ன!!

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! எப்படிப் பட்ட தவறாக இருந்தாலும் துணிந்து செய்யலாம்! அப்படித்தானே!

கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சாம்பிள் இங்கே!


கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு இன்னொரு சாம்பிள் இங்கே!



கேள்வி கேட்பதற்கு நாதி இருந்தால் தானே! கேட்க முனைபவனை சரிக் கட்டி விட்டால்....!

இங்கே ஈரல் மட்டுமல்ல, மொத்தமுமே அழுகிச் சீரழிந்து போன ஒரு அமைப்பைச் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதாவது புரிகிறதா? 



என்ன செய்யப்போகிறோம், என்ன செய்ய வேண்டும் என்ற
மாதிரிக் கேள்விகளுக்கு சரியான விடை, முதலில் நடப்பை சரியாகப் புரிந்து கொள்வதில் இருந்து ஆரம்பிக்கிறது! 


நடப்பைப் பார்ப்பதில் எழும் கோபம், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவான எண்ணமாக உருவாக ஆரம்பிக்கிறது! எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.

உருப்படியாக ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கு அதுவே சரியான ஆரம்பமாகவும் மாறுகிறது! 



இங்கே கொஞ்சம் அதிக விவரங்களுடன்..........

 




எங்கே போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்?


தமிழ்வாசல் என்ற கூகிள் வலைக் குழுமத்தில் "இன்று ஒரு விளம்பரம்" என்ற தலைப்பில் ஒரு விவாதத்துக்கான கருவை திரு இன்னம்புரான் என்கிற திரு சௌந்தரராஜன் அவர்கள் ஆரம்பித்தார்.  தணிக்கைத் துறையில் உயர்பொறுப்பில் இருந்தவர் அவர்! 

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சி ஏ ஜி பொதுக் கணக்குக் குழுவின் முன் ஆஜராகி, ஊழலைப் பற்றிய தன்னுடைய அறிக்கையைப் பற்றி விளக்கமளிக்க இருப்பதை ஒட்டி ஆரம்பித்த இழை இது. வெறும் தணிக்கைக் குழு, அறிக்கை என்று மட்டுமே பார்க்காமல், அரசு ஊழியர்கள், அமைப்புக்களின் லட்சணத்தைப் பற்றியும் விவாதிக்கும் களமாக இந்த இழை ஆகிப் போனது.

இங்கே இழை மொத்தத்தையும் படிக்கலாம்!

அதில் இருந்து ஒரு பகுதி!

"திரு இன்னம்புரான் ஐயா, ஒரு பெரிய பட்டியலையே அளித்து, (ஒரே வார்த்தையில் சொல்வதானால், ஒட்டு மொத்தத்தையுமே) இவர்கள் அத்தனை பேரும் தான் ஜனங்களின் அசமந்தத் தனத்துக்குக் காரணம் என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்!

அப்பீல் கிடையாதா? அப்பீல் செய்து தான் பார்ப்போமே!


அவர் ஒட்டு மொத்தமாக சொல்வது முதலில் சரிதானா? கொஞ்சம் பார்ப்போம்!

//மேல் தட்டு பிரமுகர்கள், நடுத்தர சம்பளதாரர்கள், மெத்த படித்தவர்கள், அறிந்தும் மெளனிகள், நல்லதையெல்லாம் ஒதுக்குபவர்கள், அரசு ஊழியர்களின் கண்ணியத்தை பாழடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட அரசியலர்களை எதிர்க்க திராணி இல்லாதவர்கள்......//

இந்தப் பட்டியலில் அரசு ஊழியர்களின் கண்ணியத்தைப் பாழடிக்க வேண்டும் என்று...............!!


தங்களுடைய கண்ணியத்தை எவரோ வந்து பாழடிக்கும் வரை அரசு ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? முதலில் தங்களைப் பொதுமக்களின் சேவகர்களாகக் கருதிக் கொள்கிறார்களா, அல்லது பிரிட்டிஷ் மேட்டிமைத்தனத்தின் எச்சமாக இன்னமும் இருந்து வரும் அதிகாரச் செருக்குடன், அகம்பாவத்துடன் நடந்து கொள்கிறார்களா?

எல்லா அரசு ஊழியர்களுமே மோசம் என்று முத்திரை குத்த முயலவில்லை! ஆனால், தங்களுக்குள் இருக்கும் அழுகிப் புரையோடிக் கிடக்கும் கோளாறுகளை சரி செய்வதற்குப் பெரும்பாலான "அதிகார வர்கத்துக்கே" தைரியம் இருப்பதில்லை. அப்படி சரி செய்ய வேண்டும் என்ற நினைப்பே வருவதுமில்லை!

ஒரு உதாரணத்துக்கு, ஏற்கெனெவே முந்தைய பின்னூட்டத்தில் ஒரு சிறு வழக்கை எடுத்துச் சொல்லியிருந்தேன் அல்லவா? அதில் நாம் பார்த்ததென்ன?

ஒருவருடைய இடத்தை, அடுத்த மனைக்காரர் ஆக்கிரமிப்புச் செய்தார். தான் ஆக்கிரமித்த இடத்தையும் சேர்த்துக் கட்டடம் எழுப்ப முயன்றார்.

ஆக்கிரமிப்புக்கு உள்ளானவர், ஒவ்வொரு துறையாக மனுக் கொடுத்து, முறையிட்டுக் கொண்டே வந்தார்.  சர்வே மற்றும் மாநகராட்சிக்கு எதிராக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைப் பெற முயன்றார். மாநகராட்சி அசைந்து கொடுக்கவில்லை. பதில் ஏனோதானோ என்று இருந்தது.நடவடிக்கைக்கான நோடீஸ் அனுப்பபட்டிருப்பதாக ஒரு பதில், அது சம்பந்தப்பட்ட நபருக்கு சார்வு செய்யப்படவே இல்லை. 

அதைத் தவிர மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதன்மை நகரமைப்பு அலுவலர், மாநகராட்சி ஆணையாளர் இருவருக்கும் முறையீட்டு மனு அனுப்பப் பட்டது. இன்று வரை அதன் மீது நடவடிக்கையோ, பதிலோ இல்லை.

ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்  ரிட்மனு தாக்கல் செய்தார். நடவடிக்கை எடுக்கிறோம் என்று மாநகராட்சி சார்பில் வாய் மொழியாகச் சொன்னதை மட்டும் ஏற்றுக் கொண்ட நீதிபதி  கீழே (சிவில் கோர்ட்டில்)  நிவாரணம் தேட வசதி இருக்கும் போது இங்கே சரியான முறையில் ரிட் மனுவை ஏற்றுக் கொள்ளக் காரணங்களை நிரூபிக்கவில்லை என்று மனுவைத்  தள்ளுபடி செய்தார். சட்டப் பேராசிரியராக இருந்தவர் அவர்!, அரசியல் சாசனத்தின் 226 வது பிரிவைப் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறீர்களே என்றும் சொல்லுவார்.

ரிட் அப்பீல் கதியும் கூட கிட்டத் தட்ட அதே மாதிரித் தான்! 

மாநகராட்சிக்குத் தெளிவான உத்தரவு கொடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த டிவிஷன் பெஞ்ச், நாங்கள் அப்செர்வேஷன் வேண்டுமானால் தருகிறோம், அதைப் பார்த்து விட்டு அப்புறம் சொல்லுங்கள் என்று அப்பீலை டிஸ்போஸ் செய்தது. 

அப்செர்வேஷனாவது தெளிவாக இருந்ததா? ஒரு அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவருக்கும் மேலே உள்ளவரிடம் புகார் செய்ய மனுதாரருக்கு உரிமை இருக்கிறது. ரிட் மனுவை முதலில் விசாரித்த கற்றறிந்த நீதிபதி சொன்னதை நாங்கள் ஆமோதிக்கிறோம்! அவ்வளவுதான்! 

மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாய்மொழியாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொன்னதை மட்டும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தங்களுக்கு மாநகராட்சியில் இருந்து விதிமுறைகளை மீறியதற்காகத் தரப்படும் நோடீஸ் எதுவும் வரவே இல்லை என்று பிரதிவாதியின் வழக்கறிஞர் சொன்னதையும், மாநகராட்சி எடுத்த நடவடிக்கை என்று ஒன்றுமே இல்லை என்று மனுதாரர் சொன்னதையும்  கூடக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

"கீழே வேறு இடத்தில் பரிகாரம் தேட வசதி இருக்கும் போது நாங்கள் எதற்காக இந்த ரிட் மனுவைக் காதில் போட்டுக் கொள்ள வேண்டும்? அரசியல் சாசனம் 226 ஆம் பிரிவில் உயர்நீதி மன்றத்தில் நேரடியாகப் பரிகாரம் தேடலாம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்வது என்பது  எங்களுடைய உசிதம், உங்களுடைய உரிமை அல்ல!" 

இது நீதிமன்றங்களின் நிலை! 

பொறுப்பற்ற முறையில் செயல்படும் அரசுத் துறை, உள்ளாட்சி அமைப்புக்களை, தட்டிக் கேட்பதற்காகத் தான், நீதிமன்றங்களின் உதவியை இங்கே நாடவேண்டிய அவல நிலை இருக்கிறது. நீதிமன்றங்களின்  பாராமுகம், அல்லது நாங்கள் ஏன் இதில் தலையிடவேண்டும் என்ற கேள்வியில், தங்களுடைய அவ
லட்சணமான முகத்தை, பொறுப்பற்ற செய்கைகளை, அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புக்கள் காப்பாற்றிக் கொண்டு வருவதே நடைமுறையாகி விட்டது.

மாநகராட்சி இருக்கிறதே, இவர்களை என்ன சொல்வது? 

எவரோ வீடு கட்டத் தெருவில் மணல் கொட்ட ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே, அந்த வார்டு கவுன்சிலருக்குப் போய்ச் சேர வேண்டிய கப்பம் போய்விட வேண்டும். நீ ஆக்கிரமித்துக் கட்டுவாயோ,, அடுக்கு மாடி கட்டுவாயோ, எதைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை, டவுன் பிளானிங் அமைப்பில் இருக்கும் எவரையோ கொஞ்சம் கவனித்து விட்டால் போதுமானது. கண்ணை இருக்க மூடிக் கொள்வோம்! 

இங்கேயும் அது தான் நடந்தது!

நில அளவுத் துறையில் அத்துமாலை அளந்து குறித்துத் தரச் சொன்னால், தாலுகா சர்வேயர் அலுவலகத்தில் வந்து அளந்து , உங்கள் பத்திரப்படி இது சரியாக இருக்கிறது, அவர் பத்திரப்படி அது சரியாக இருக்கிறது என்று மையமாகப் பேசி இரண்டு தரப்பிலும் சில்லறையைத் தேற்றிக் கொண்டு போனதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை. காரணம்  எதிர் பார்டி கொஞ்சம் அதிகமாகவே "கவனித்தது" தான்! 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அத்துமால் அளந்து குறித்துத் தரச் சொன்னதை எழுத்து மூலம் தரச் சொல்லி வேண்டி, கிட்டத் தட்ட ஐம்பத்தேழு நாட்கள் கழித்த தேதியிட்டு, அறுபத்தொன்றாவது நாளில் இரண்டும் கெட்டானாக பதில்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6 (1) இன் கீழ் செய்யப் படும் விண்ணப்பத்துக்கு முப்பது நாட்களுக்குள் பதில் சொல்ல வேண்டும். மீறித் தாமதம் செய்வது, தாமதம் செய்து பதில் அனுப்புவது,  தகவல் தர மறுப்பதற்குச் சமம் என்று அந்தச் சட்டமே தெளிவாகச் சொல்கிறது. 

அதனால் என்ன? நாங்கள் அப்படித் தான் இருப்போம்  எவன் வந்து எங்கள் தலையைச் சீவப் போகிறான் என்று தாலுகா அலுவலகம் அலட்சியமாக இருந்தது.

சிவில் கோர்டில் வழக்கு ஆரம்பமாகி, அட்வகேட் கமிஷனர் வந்து அளந்துபோய், ஆக்கிரமிப்பு இருப்பது உறுதி செய்யப்பட நிலையிலும் கூட, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் என்ன தெனாவெட்டாக இருக்கிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள் என்பதை இந்த லிங்கில் கேளுங்கள்!


ஆடியோவைகவனித்துக் கேளுங்கள்! கணவன் மனைவி இருவரும் ஜாதியைத் தொட்டு, மதநம்பிக்கையைத் தொட்டு இழிவாகப் பேச ஆரம்பித்து, நீங்களும் பொய்ப் புகார் கொடுங்கள், அய்யன் சுவர் ஏறிக் குதித்து இந்தப்பக்கம் வந்தான் என்று, நீங்களும் மொட்டைப் பெட்டிஷன் போடுங்கள் என்று பெண்மணி என்ன தெனாவெட்டாகப் பேசுகிறார் என்பதைக் கேளுங்கள். புகாரை விசாரிக்க வந்த அசிஸ்டன்ட் கமிஷனரையும் விடவில்லை...வாய்க்குள் விட்டு ஆட்டிருவேன்னு  சொல்றான் ஒரு ஆளு.. என்று ஆரம்பித்து ஆண் பிள்ளை அப்படியே முழுங்குவதையும் கேட்கலாம்!

இவர்கள் உருட்டல், மிரட்டல்  எல்லாம் காவல்துறையில் புகாராகவும் கொடுக்கப் பட்டிருக்கிறது. அங்கேயாவது ஏதாவது நடந்ததா என்று கேட்கிறீர்களா? 

மிரட்டினவன், மிரட்டப்பட்டவன் இருவரிடமும், நாங்கள் சிவில் கோர்டில்  வரும் தீர்ப்புக்குக் கட்டுப் படுகிறோம், மீறி நடக்கும் பட்சத்தில் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு உள்ளாக சம்மதிக்கிறோம் என்ற மாதிரி எழுதி வாங்கி, புகாரை மூடி வைத்து  விட்டார்கள்.இதில் இன்னும் பெரிய கொடுமை, ஆக்கிரமிப்பு செய்த  இடத்துக்காரன் இதில் வெறும் சாட்சி மட்டும் தான்! யாரோ ஒரு அனாமதேயம், அவனுக்காக மிரட்ட வந்து, அப்படி எழுதிக் கொடுத்த நபராக இருப்பது தான்.

இத்தனைக்கும், இந்த நபர்கள் மிகப் பெரிய அரசியல் செல்வாக்கோ, ஆள் அம்பு சேனை உள்ளவர்களோ இல்லை! காசு இருக்கிறது! 

யாருக்கு எவ்வளவு காசு கொடுக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்திருக்கிறது அவ்வளவு தான்! பிச்சைக்காசுக்காகக் கையேந்தி, சட்டவிரோதமாக செயல் படுவதற்கு துணை நிற்க  இங்கே அரசுத் துறை ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள். என்ன செய்து விடுவீர்கள்!!

அரசு ஊழியர்கள் கண்ணியத்தை, இந்த உளுத்துப்போன பிரிட்டிஷ் சிவில் நிர்வாக முறையை வைத்துக் கொண்டு, வெளியே இருந்து எவரோ வந்து கெடுக்க வேண்டியதே இல்லை! அவர்களே அந்தத் திருப்பணியை, செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை!

ஆம் ஆத்மி என்று சொல்கிறார்களே அந்தப் பாமரனுக்கு, இந்த நீதி மன்றங்களால், அரசு இயந்திரத்தால், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் எந்த உத்தரவாதம் தர முடிந்திருக்கிறது?

ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம்!

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்?