கவலைகள் தீரக் கடைக்கணருள் செய்வாய்! வடதிருமுல்லைவாயில் வைஷ்ணவியே!

கடந்து வந்த காலத்தை நினைத்துப் பார்க்க ஆயிரம் நல்ல விஷயங்கள் இருப்பதை,இந்தத் தருணத்தில் என்னையும் ஒரு பொருட்டாக ஆட்கொண்ட மகான்களை நன்றியோடு நினைத்து வணங்குகிறேன். அந்த வகையில் என்னுடைய வாழ்க்கையில் லட்சம் தீபங்களை ஏற்றிவைத்தது போல அருளொளி வழங்கிய சத்குரு அருட்கவி ஸ்ரீ சாதுராம் ஸ்வாமிகளுடைய கடைக்கணருளுக்குப் பாத்திரமான நாள் இன்று! நவம்பர் 30.


1970 களில் ஆனந்தவிகடனில் பரணீதரன் எழுதிக் கொண்டிருந்த அருணாசல மஹிமை தொடரைப் படித்துக் கொண்டிருந்ததில் ஸ்ரீ ரமணருடைய, சேஷாத்ரி ஸ்வாமிகளுடைய சரித்திரங்களோடு, சென்னையில் வடதிருமுல்லைவாயிலில் கோவில் கொண்டுள்ள வைஷ்ணவி தேவியைப் பற்றியும், சாது பார்த்தசாரதி என்றும் துறவு பூண்டபின் ஸ்வாமி அண்வானந்தா என்றும் அறியப்பட்ட மகானையும், அவருக்கு மிகவும் அணுக்கமாக இருந்த சேதுராமனாக இருந்து அருட்கவி சாதுராம் ஸ்வாமிகளான மகானைப் பற்றியும் அறிந்ததுண்டு.


சாதுராம் ஸ்வாமிகளுக்கு அருகில் இடதுபக்கம் நீலச்சட்டை அணிந்திருப்பவர் அவருடைய பூர்வாசிரமத் தமையனார் திரு எஸ் வி சுப்ரமண்யம் அவர்கள். காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதியால் திருப்புகழ் சகோதரர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டு, சிறப்பிக்கப் பட்டவர்கள். அருட்கவி சாதுராம் ஸ்வாமி, திருப்புகழைப் பாடிப் பரப்புவதிலேயே நாட்டம் கொண்டிருந்ததால்  திருப்புகழ் ஸ்வாமிகள் என்றே அழைக்கப்பட்ட     வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகளால் ஆட்கொள்ளப் பட்டு ஆசுகவியாக ஆனவர். சாது பார்த்தசாரதியால் சந்யாசதீட்சை பெற்று வைஷ்ணவி தேவியின் அணுக்கத்தொண்டராகவும் ஆனவர்.


பொறுப்பற்ற விடலையாய்க் கிடைத்த அரசு வேலை வேண்டாமெனத்  தூக்கி எறிந்துவிட்டு வீடு திரும்பியவனுக்கு என்ன மரியாதை கிடைத்திருக்கும்?  எதிர்காலத்தைப் பற்றி ஒரு தெளிவுமில்லாமல் குழப்பத்தோடு இருந்த என்னை மதுரைக்கு வருகை தந்திருந்த சாது ராம் சவாமிகளைப் போய்ப்பார்க்கத் தூண்டியது எது? வைஷ்ணவியைத் துதிக்க ஒரு வெண்பாவை அருளிச்செய்ய வேண்டுமென அவரிடம் வேண்டிக்கொள்ளச் செய்ததெது? இன்று வரை அது என்னுடைய முயற்சியால் கிடைத்ததல்ல என்பது மட்டும் உறுதியாகச்சொல்ல முடியும்! வங்கி வேலை கிடைத்தது , தந்தையின் மறைவுக்குப் பின்னால் வேதாளம் முருங்கை மரமேறிய கதையாக நாத்திகனானது,கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து ஊரைத் திருத்தப்போனது எல்லாம் பின்னால் நடந்தது. இந்தக்கதைகளை 2009, 2010 ஆண்டுப் பதிவுகளில் இந்தப்பக்கங்களிலேயே எழுதி இருக்கிறேன்.

என்செயலால் ஆனதொன்றுமில்லை என்பதையறிந்தே இறையருள் குருவருளாக இறங்கி என்னைத் தேடிவந்தது என்பதை இப்போது உணர்ந்து மெய்சிலிர்க்கிறேன்.

அருட்கவி சாதுராம் சுவாமிக்குடைய தொடர்பு, எனக்கு ஸ்ரீ ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள், சாது பார்த்தசாரதி, என்று ஒரு கிளையாகவும், நாயனா என்று ரமணராலேயே அழைக்கப்பட்ட காவ்யகண்ட கணபதி முனி, சின்ன நாயனா கபாலி சாஸ்திரிகள் எனவிரிந்து இன்னொரு கிளை பரந்து  ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் வரை எனக்களித்து இருப்பது  தற்செயலானதுதானா? 

சித்தர் மரபில் ஸ்ரீ சித்தராஜ ஸ்வாமிகள், அவதூத சன்யாசியான சேந்தமங்கலம் தத்தாஸ்ரமம் ஸ்ரீ க்ருஷ்ணானந்தர் என்று வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் பலப்பல மகான்கள் தோன்றும் துணையாக எனக்கு அருள்பாலித்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் முன்னோடியாக சதகுரு சாதுராம் ஸ்வாமிகள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில், விளக்கேற்றி வைத்திருக்கிறார்.

கார்த்திகை தீபத்திருநாளான இன்று சாதுராம் ஸ்வாமிகளை தீப மங்கள ஜ்யோதி நமோ நம:  என்கிற அருணகிரி நாதருடைய திருப்புகழ் வரியொன்றைச் சொல்லியே வாழ்த்தி, வணங்கிச் சரணடைகிறேன்.     

குருவருள் பரிபூர்ணமாக நம் எல்லோருடைய மனம், ஜீவன், கரணங்களிலும் நிறைந்து வழிநடத்தட்டும்.          

6 comments:

  1. எல்லாம் பூர்வ ஜென்மப் புண்ணியம்தான்.

    ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி. பாரதி இல்லைனு நினைக்கிறேன். பாரதி என்பது சிருங்கேரி மட பீடாதிபதிகளுக்கான பட்டம்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெ.த. சார்!

      நீங்கள் சொல்லியிருப்பது சரி. பிழையைத் திருத்தம் செய்துவிட்டேன். நன்றி.

      Delete
  2. அன்பு நெல்லைத் தமிழன் சொல்லி இருப்பது உண்மை.
    தங்களுக்கு இத்தனை ஆன்மீக ஆதரவு கிடைத்திருப்பது ஆசிகளினால் தான்.
    வள்ளிமலையில் தற்போது இருக்கும் ஸ்வாமிகள்
    பூர்வாஸ்ரமத்தில் கணவருக்குத் தெரிந்தவர். அவரும்
    படத்தில் சீல ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் பின்னால்
    அமர்ந்திருக்கிறார்.
    தங்கள் பதிவுக்கு வந்தனங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      நான் வள்ளிமலைக்குச் சென்றதில்லை என்பதால் அங்கே தற்போதைய நிலை, ஆசிரமம் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது! அளியன்! இவனைத் தேடி அருளாளர்கள் வந்தார்களே தவிர இவனாய்த்தேடி எவரையும் கண்டதில்லை என்பது அவர்களுடைய சிறப்பு..

      படத்தில் முன்வரிசையில் இருப்பது சத்குரு ஸ்ரீ சாதுராம் சுவாமிகள். அருகே அமர்ந்திருப்பது அவருடைய பூர்வாசிரமத் தமையனார் திரு எஸ் வி சுப்ரமணியம் அவர்கள். கடந்த மார்ச் மாதம்தான் இறைவனுடைய திருவடியை அடைந்தார்கள்.

      Delete
  3. இந்த மாதிரி அருட்பார்வை கிடைப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பூர்வ புண்ணியம் இருந்ததா என்பது எனக்குத் தெரியாது ஸ்ரீராம்! ஆனால் அருலாளர்கள் கடைக்கண் பார்வையில் படுகிற பாக்கியம் மட்டும் இருந்திருக்கிறது. நிறைய விஷயங்களை என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!