Showing posts with label அலட்சியம் வேண்டாம். Show all posts
Showing posts with label அலட்சியம் வேண்டாம். Show all posts

ஜெயிக்கலாம் வாங்க!!

 
 
ஜெயிக்கலாம் வாங்க என்ற தலைப்பில் கொஞ்சம் பதிவுகளை எழுதிக் கொண்டிருந்தது உண்டு ஜெயிப்பது அவ்வளவு கடினமானது ஒன்றும் அல்ல.என்ன, நம்மிடம் இருக்கும் பலம் எது, பலவீனம் எது என்பதில் நிறையத் தெளிவு வேண்டும்!பலவீனங்களைக் களைவது மிக முக்கியமான அடிப்படை என்றால், நம்முடைய பலம் வீணாகாமல் பயன் படுத்தப் படுவதும் மிக மிக முக்கியம். 


சில  மாதங்களாக சில பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வளிப்பதாக, எதிர் மறையாகப் போய்க் கொண்டிருப்பதையும் கவனித்துக் கொண்டிருக்கும் நேரம் இது.
 
ஒவ்வொரு அனுபவமும் ஒரு காரணத்துடனேயே நம்மைப் பக்குவப் படுத்துவதற்காகவே நமக்களிக்கப்படுவது என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்னதை முந்தைய பதிவில் மறு நினைவூட்டிக் கொண்டிருந்தேனில்லையா? அதன் தொடர்ச்சியாக, என்னிடம் இருந்த குறை என்ன என்பதையும் கொஞ்சம் திரும்பிப்பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.அப்படி ஒரு சுயபரிசோதனை செய்து கொண்டதில் ஒரு விஷயம் தெளிவானது அதை, மூன்று வருடங்களுக்கு முன்னரே ஒரு பதிவில் சொல்லியிருந்ததும் நினைவுக்கு வந்தது என்னைப்போலவே இந்த அனுபவமும் தெளிவும் தேவைப்படுகிற எவருக்கோ ஒரு நாள் உதவுமே என்பதற்காக, மறுபடியும் மீள்பதிவாக....
 
 
 
நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும்,
ஊத்திக்கிறேன் கொஞ்சம்!

சாராயக் கடையில், குடிக்க வேண்டாமென்று கணவனிடம் கெஞ்சுவாள் ஒரு பெண். அவளுடைய கணவன், அவள் தலைமேல் கைவைத்து சத்தியம் செய்து "நாளையிலிருந்து குடிக்கவே மாட்டேன், ஆனால் இப்போதைக்கு மட்டும் கொஞ்சம்.........." என்று பேசுவதாக ஒருகாட்சி.
 

நீதி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சாராய போதையில் இன்னொரு குடிகாரனைப் பார்த்துப் பாடும் இந்தப் பாடல் அந்த நாட்களில் மிகவும் பிரபலம்!  அந்த நாட்களில் ஒரு பாடல் பிரபலமாகவேண்டுமேன்றால், பாடல் வரிகளில் சொல்லியிருப்பது தெளிவாகப் புரியும்படி இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்தது.

கவிஞர் கண்ணதாசனுடைய இந்தப் பாடல் வரிகள் பிடித்துப் போனதற்குக் காரணம், நாம் எல்லோருமே சாராய போதை தேவைப் படாமலேயே, எதையும் நாளைக்கு, நாளைக்கு என்று தள்ளிப் போடுகிறவர்களாக இருப்பது தானோ என்று அவ்வப்போது தோன்றும்! 



குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்ற மாதிரி, இப்படித் தள்ளிப் போடுவதான சோம்பேறித்தனம் காரியத்தையே கெடுத்துவிடுவதாக, நம்முடைய வாழ்க்கையிலேயே பல தருணங்களில் பார்க்கமுடியும். 


Procrastination! எதையும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றே தள்ளிக் கொண்டே போய், கடைசியில் எதையும் பார்க்க முடியாமலேயே போன அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு! சொல்லப் போனால், என்னை என்னுடைய எதிராளிகள் எப்போதுமே தோற்கடித்ததில்லை! தோற்கடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் என்னுடைய இந்த பலவீனமே பல தருணங்களில் காலை வாரிவிட்டுக் கொண்டிருந்தது என்பது தான் உண்மை!

அப்புறம் பார்த்துக்
கொள்ளலாம் என்றோ, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றோ இப்போது செய்ய வேண்டிய காரியத்தைத் தள்ளிப் போடுவது, எவ்வளவு மோசமானது என்று தெரிந்துமே கூட நம்மால் அதிலிருந்து விடுபட முடியவில்லையே?!



என்ன செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைப் பார்க்கலாமா? 


நர்சரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப் படும் பாடல்களில் ஒன்றான, "Work while you work, Play while you play" என்பது கூட வேலைசெய்யும்போது வேளையில் கவனம், விளையாடும்போது விளையாட்டில் கவனம் என்று நேரத்தின் அருமையைஉணர்த்துவதாகவே சொல்லிக் கொடுக்கப் படுவதுதான்!

நம்முடைய கல்விமுறையில் உள்ள கோளாறும், ஒருபகுதி ஆசிரியர்களின் திறமையின்மையும் சேர்ந்து நல்ல விஷயங்கள் எதுவுமே மனதில் தங்கிவிடாமல் செய்துகொண்டிருப்பதையும், விசனத்தோடு இங்கே பதிவு செய்தாகவேண்டியிருக்கிறது.
பழக்கம், வழக்கம் என்று சொல்வோமில்லையா! எந்த ஒரு செய்கையும் முதலில், அனுபவங்களாகவோ, பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதாகவோ ஒரு தனிநபரிடம் இருந்து ஆரம்பிக்கும்! அப்படிப்  பயிற்சியின் முதிர்ச்சி என்றே பழக்கத்தைச் சொல்லலாம். 

வழக்கம் என்பது ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வது. இந்த அடிப்படையை நினைவில் வைத்துக் கொண்டு, தள்ளிப் போடுவது என்பதான வழக்கம், சோம்பேறித்தனம் என்ற பழக்கமாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதில் இருந்து, விடுவித்துக் கொள்வது தொடங்குகிறது.


உதாரணமாக, மாலை நேரமாகிவிட்டால், தொலைக் காட்சி முன்னால் அமர்ந்து, அதில் வரும் மெகா சீரியல்களில் கதாபாத்திரங்கள் மூசுமூசென்று அழுது வடிவதை, பார்த்துக் கொண்டிருப்பது நேரத்துக்குப் பிடித்த கேடு என்பது நன்றாகத் தெரிகிறது. ஒரே மாதிரியான செண்டிமெண்டை வைத்துப் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், ஒரே சினிமாவைப் படங்களாகவும், க்ளிப்பிங்க்சாகவும், பாடல் காட்சிகளாகவும் தொடர்ந்து கீறல் விழுந்த ரெகார்ட் போல ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. 

எந்த சானலை மாற்றினாலும், சற்று முன்னே பின்னே, ஏற்கெனெவே பார்த்த அதே காட்சிகள் தான் வரும் என்பதும், தலைப்பு மட்டுமே மாறியிருக்கும் என்பதும் தெரிகிறது. தெரிந்த பிறகும், அதற்குப் பின்னாலும் அதையே பார்த்துக் கொண்டிருந்தோமானால், அது முதலில் வழக்கமாக ஆகிறது. 

கவனிக்காமல் அப்படியே தொடர்ந்துகொண்டே இருந்தால் பழக்கமாகவும் ஆகி, நம்மை அடிமைப் படுத்தி விடுகிறது பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதில் தான் மனிதனுடைய தேக்கம் தொடங்குகிறது.


ஆக, நாம் வழக்கப் படுத்திக் கொண்டிருப்பதில் எது தேவையற்றது என்பதைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அவசரம், அவசியத்தை ஒட்டி எதை முதலில் செய்ய வேண்டும், அடுத்ததாக என்ன  என்பதை வரிசைப் படுத்தித் தீர்மானிப்பதுதான் அடுத்துச் செயல் படுவதற்கான முதல்படி. 

எந்த ஒரு காரியத்தையும் அப்புறம், அல்லது நாளைக்கு என்று தள்ளிப் போடாமல், அதனதன் முக்கியத்துவத்தை ஒட்டி உடனேயோ, அடுத்தோ செய்து முடித்து விட்டு, அதற்கு அப்புறம் மிஞ்சுகிற நேரத்தைப் பொழுது போக்குவதற்காக செலவிடுவோமேயானால் நம்முடைய வாழ்க்கையில் குறிப்பிட்டு உணரக்கூடிய நல்லதொரு மாற்றத்தைக் காண முடியும்.  


இது தான் நேர மேலாண்மை! கிடைத்திருக்கும் ஒவ்வொரு வினாடியையும்   பொன்னாக்குகிற வித்தையும் இது தான்! உண்மையான ரசவாதம்!

Time Management என்று இன்றைக்கு நிர்வாக இயலில் சொல்லப்படும் கோட்பாடு, மிக மிக எளிமையானது. எல்லோராலும் செலவே இல்லாமல் உடனடியாகக் கடைப் பிடிக்க முடிவதும்,வீணாகப் போய்க் கொண்டிருக்கிற நேரத்தைப் பயனுள்ளதாகவும், நிறைவானதாகவும் மாற்றக் கூடிய வல்லமை உடையது. 

இந்த ஒத்திப் போடுகிற அல்லது தள்ளிப் போடுகிற வழக்கம்எப்படி என்னென்ன விதங்களில் ஆரம்பிக்கிறது என்று பார்க்கும் போது சில காரணங்கள் இப்படித் தெரிகின்றன,

முதலில் நமக்கு நல்ல மூடு இருக்கும்போது, அப்புறம் சரியான நேரத்தில் செய்வது என்று காத்திருப்பதுபோல ஒரு பாவனையில் ஆரம்பிக்கிறது. உண்மையில், மூடு இல்லை என்பது நமக்கு இருக்கிற தயக்கம் அல்லது நாம் தயாராக இல்லை என்பது  மட்டுமே!


முடிவெடுப்பதில்  தயக்கம், எப்படி ஒரு சரியான தீர்மானம் அல்லது முடிவுக்கு வருவது என்பதில் தெளிவின்மை, போதிய அளவு திறமையை வளர்த்துக் கொள்ளாதது இப்படி.

அமைப்பு ரீதியிலான, தெளிவான திறமை, பார்வை, பயிற்சி இல்லாதது.

எதையும்  முழுமையாக, குறையே இல்லாமல் செய்யவேண்டும்-அது முடியாவிட்டால் செய்யாமலேயே இருந்துவிட வேண்டும் என்று தத்துவம் பேசிக் கொண்டு, என்னிடம் சரியான  பயிற்சியோ சாதனங்களோ எதுவுமில்லை, அதனால் இப்போதைக்கு நான் இதைச் செய்வதாக இல்லை என்கிற மனோபாவம்..தத்துவம் என்றால் முழுமையாகத் தெரிந்துகொள்வது. என்ன காரணமோ, தத்துவம் என்பது இங்கே  தூங்கி வழிகிற தன்மையைக் குறிப்பிடுவதாகவே ஆகிப்போனது!

இப்படி எதோ ஒன்று அல்லது அதற்கு  மேற்பட்ட வடிவங்களில், அப்புறம் பார்த்துக் கொள்ளலாமே என்பது வழக்கமாகி, முற்றிப் பின்பு பழக்கமாகவும் மாறிவிடுகிறது.

இந்த விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டால், மூன்றே படிகளில், சோம்பேறித்தனத்துக்கு  இடம் கொடுக்கும் வழக்கங்கள் எவை எவை என்று பார்த்துக் களைவதில் ஆரம்பித்து, ஒத்திப்போடுகிற அல்லது அப்புறம் பார்த்துக் கொள்ளலாமே என்பது அறவே இல்லாமல் பண்ணிவிட முடியும்!

என்னவென்று பார்க்கலாமா?


முதலாவதாக, சோம்பேறித்தனம் தொற்றிக் கொள்ளாமல் இருக்கிறோமா என்பதை அவ்வப்போது, நம்முடைய நேரம் என்னென்ன விதத்தில் செலவாகிறது, என்ன வரிசையில் செலவாகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான், தள்ளிப் போடுவது என்ற வியாதி நம்மிடத்தில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கிறதா என்பதையே புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக, ஆராய்ந்து சோதித்துப் பார்த்ததில், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப்போடுகிற நினைப்பு எதனால் எழுகிறது என்பதைக் கவனமாகப் பார்க்கப் பழக வேண்டும்.

மூன்றாவதாக, முதலிரண்டு கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டால், நோய் நாடி நோய்முதல் நாடி என்று, நோய்க்கான அறி குறிகளும், எதனால் நோய் வந்தது என்பதும் தெரிந்துவிடுகிறது! அப்புறம் என்ன, நோயைக் களைவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வதற்கு ஆரம்பித்து விடவேண்டியதுதான்!

ஆக மூன்றே படிகளில், ஒத்திப் போடும் கெட்ட பழக்கத்தைக் களைந்து விடலாம்! என்ன சொல்கிறீர்கள்!

சுற்றி வரும் ஆபத்தும் ஆளுகிறவர்கள் அலட்சியமும்!

தலையங்கம்: பேரபாயம் காத்திருக்கிறது...!

First Published : 09 Mar 2010 12:48:00 AM IST

Last Updated : 09 Mar 2010 02:48:57 PM IST
டிஸ்கி-- தினமணி தலையங்கத்தின் செய்தியை வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தினமணி தலையங்கத்தின் வாசகர் பின்னூட்டங்களில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது.

இட ஒதுக்கீட்டுக்கு தினமணி எதிர்ப்பு என்ற அளவிலேயே, வாசகர்களுடைய விமரிசனம் குறுகிப் போய் விட்டது. தினமணி உண்மையில் எச்சரிக்க வந்தது, இட ஒதுக்கீட்டு ரகளைகளைப் பற்றியே அல்ல!

அமெரிக்க நிர்பந்தத்தின் கீழ் புஷ் பதிவிக் காலம் முடிவதற்கு முன்னால் மன்மோகன் சிங் கையெழுத்துப் போட்டு ஒப்புக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை, அதில் உள்ள விவரங்களை நாட்டு மக்களுக்கு விவரம் சொல்லியோ பாராளு மன்றத்தில் முறையான விவாதம் நடத்தவோ செய்யாமல், பத்தோடு பதினொன்றாக நிறைவேற்றப் போகிற கபடத்தைப் பற்றி, அதன் பின் மறைந்திருக்கும் பொருளாதாரச் சுமை, இந்திய அரசின் இறையாண்மையே கேள்விக்குள்ளாகி இருக்கும் சூழலைக் குறித்துத் தனது அச்சத்தை வெளிப்படுத்தும் தலையங்கம் இது.


அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது.

அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.
 
இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

 
இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்? 


நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. 

இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு  உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா? 

இது இன்றைய தினமணி இதழில் வெளியாகியிருக்கும் தலையங்கம்! ஒவ்வொரு இந்தியனும் நாட்டு நடப்பைக் குறித்து வெட்கித் தலை குனிய வேண்டிய தருணமாக மட்டும் அல்ல, பொங்கியெழ வேண்டிய தருணமாகவும் இருக்கிறது.

சுதந்திரம், உரிமைகள் என்பது எவரோ நமக்குக் கொடுத்து வருவது அல்ல. காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் எங்கோ கடையில் போய் காசுக்கு எடு என்ற கணக்கில் வாங்கி வந்தது இல்லை சுதந்திரம்! சுதந்திரம் என்பதே கொஞ்சம் பொறுப்புக்களோடு, விழிப்பாக இருப்பதோடு கூடியது, வெறும் வார்த்தை அல்ல. ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள், ஜனங்களுடைய அறிவை மழுங்க அடிப்பதில் வல்லவர்கள்!

விழிப்போடு தன்னுடைய கடமைகளைச் செய்து, தன்னுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்கு, இடைத்தேர்தல்கள் வரும் நேரத்தில் மட்டும் கொஞ்சம் பணமும் க்வார்டர், பிரியாணி கிடைக்கும். சுதந்திரம் எப்போதுமே கிடைக்காது. எல்லாவற்றையும் தொலைத்தபின், நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து என்ன பயன்?

நித்யானந்தா ரஞ்சிதாவோடு சல்லாபம் செய்கிற காட்சியைக் கொஞ்சம் பொறாமையோடு  பார்க்க விரும்புகிறவனுக்கு சுதந்திரத்தின் அருமை எப்படிப் புரியும்? இவன் இங்கே பர்மா பஜாரில் ஐநூறு ரூபாய் கொடுத்தாவது வாங்க அலைந்தோ அல்லது இணையத்தில் யாராவது அந்தக் கிளுகிளுப்பான காட்சிகளா வலையேற்றம் செய்திருக்க மாட்டார்களா என்று தேடிக் கொண்டிருக்கும்போதே  காலடியில் உள்ள பூமி இவனிடமிருந்து களவாடப் படுவதை அறிவதே இல்லை. படித்தவர்கள் கூட்டம் இப்படி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிற அதே நேரம், பாமர மக்களுக்கு நாட்டு நடப்பு என்ன என்றே தெரிவதில்லை. அவர்களுக்கு அதைத் தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதாக ஒரு சித்திரம் இங்கே நாட்டைச் சூறையாடும் சக்திகளுக்குப் பெருந்துணையாக இருக்கிறது.

1971 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்ஒரு நாள், ஸ்ரீ அரவிந்த அன்னை, உதார் பின்டோ என்கிற அடியவரிடம் சொல்கிறார்: "இந்தியாவைக் கருமேகங்கள் சூழ்வதைக் காண்கிறேன்" 

ஸ்ரீ உதார் பின்டோ அன்னையிடம், அவர் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்க, ஸ்ரீ அன்னை, அதற்கான காலம் கடந்து விட்டதாகக் கூறுகிறார். ஸ்ரீ உதார் பின்டோ: "அப்படியானால், நாங்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மந்திரத்தை அருளுங்கள்!"

அன்னை சிறிது நேரம் சமாதி நிலையில் இருந்த பிறகு அருளிய இந்தப் பிரார்த்தனை, இன்றைக்கும் நம்மை பிரச்சினைகள் சூழும்போது, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாக இருக்கிறது.


இந்த உரையாடல் நடந்த சில மாதங்களிலேயே, பங்களாதேஷ் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது, இந்திய-பாகிஸ்தான் யுத்தமாகவும் உருமாறியது.

பங்களாதேஷ் உருவானதை சகித்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான், தீவீரவாதிகளைத்  இந்தியாவுக்குள் அனுப்பி, தொடர்ந்து நாச வேலைகள், சேதத்தை விளைவித்து வருவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

என்ன செய்வது என்பதைத் தெளிவாக அறிய முடியாத சூழ்நிலையில், இந்தப் பிரார்த்தனை எவ்வளவு வலிமையைத் தந்திருக்கிறது என்பதை, பிரார்த்தனைகளை நம்புகிறவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.

“Supreme Lord, eternal Truth, let us obey Thee alone and live according to Truth.”

 
தேடியுனைச் சரணடைந்தேன்-தேச முத்துமாரி!
  கேடதனை நீக்கிடுவாய்! கேட்ட வரம் தருவாய்!
-மஹாகவி பாரதி