Showing posts with label உணர்வுகள். Show all posts
Showing posts with label உணர்வுகள். Show all posts

ஒரு அழகிய கனவு கலைகிற நேரம்!


 
ஒரு அழகிய கனவு கலைகிற நேரம்!

சில நாட்களுக்கு முன்னால் யாகூ! 360 தளம் மூடப்பட்டபோது, அங்கே இணையத்தில் பழகக் கிடைத்த சில நண்பர்களைப் பிரிந்துவிடப் போகிறோம் என்ற வருத்தம், ஒரு பதிவாக வெளியானது. 2006 நவம்பருக்குப் பின்னால், அங்கே இருந்த என்னுடைய நட்புவட்டத்தைக் கலைத்துவிட்டு, ஒதுங்கியே இருந்தபோதிலுமே கூட, எல்லோரையும் சேர்த்து வைத்த தளமே காணாமல் போய்விடப்போகிறது என்ற ஆதங்கம், அந்தப் பதிவில் ஆற்ற மாட்டாமையோடு வெளிப்பட்டிருந்தது. இதேமாதிரி,. சிஃபி  தன்னுடைய தமிழ்த் தளத்தைக் கலைத்தபோது அதில் பணியாற்றின அண்ணா கண்ணன் 'காற்றில் கரைந்த தளம்' என்று தன்னுடைய உழைப்பு, முயற்சி எல்லாமே சேர்ந்தே காணாமல் போனதைக் குறித்து வருத்தப் பட்டிருந்தார்.
 
மின்னெழுத்துக்கள் கரைந்து போனது இருக்கட்டும்! நம்மோடு கலந்து, பழகி, உரையாடி, வாழ்க்கையின் சில அற்புதமான தருணங்களை ஏற்படுத்தித் தரும் மனிதர்களே, கனவாகக் களைந்து போவதென்றால்....?

வாழ்க்கையில் ஜனன மரணங்கள் இயல்புதான்! தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதுதான்! ஆனாலும், நாம் நிரந்தரமானவர்கள், அல்லது நிரந்தரமாக இருக்கவே படைக்கப் பட்டவர்கள் என்கிற உணர்வு இல்லாத உயிரே இல்லை! அப்படி ஒரு உணர்வு, உயிரின் மிக  அடிப்படையான மூலக் கூறாகவே இருக்கிறது.

நவம்பர் 23, 2009. திங்கள் கிழமை முன்னிரவு 7 மணி

கிண்டி ரயில்வே  ஸ்டேஷனில் எப்போதும் போல ஜனங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், சடகோபன் என்ற கண்ணன். ஸ்டேட் வங்கியில் ஸ்கேல் 3 அதிகாரியாகப் பணி புரிந்து  ஒய்வு பெற்றவர். அனுபவமுள்ள அதிகாரிகளை, கிட்டத்தட்ட கடைசியாக வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் தருகிறோம், வருகிறீர்களா என்று வந்த அழைப்பை நிராகரித்து விட்டு, வேதம் படிக்க வேண்டும் என்ற ஆசையோடு, காலையில் நடக்கும் இரண்டு வகுப்புக்களுக்கும் தவறாமல் போய்க் கலந்து கொண்டு, வேதம் அத்யயனம் செய்வதில் கொஞ்சம் தேர்ச்சியுமே பெற்றிருந்தவர்!.

அறுபத்திரண்டு வயது நிறைவாகி,அறுபத்துமூன்றில் அடியெடுத்து வைத்து சில நாட்களே ஆகியிருந்த நேரம். ஒரு கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்புகிற நேரம், என்ன நடந்தது என்பதை எவருமே ஊகிக்க முடியாத ஒரு தருணம், மின்சார ரயில் சீறிப் பாய்ந்த வேகமோ என்னவோ, கால் இடறி விழுந்தவர், தலையில் அடிபட்டு........

இரவு ஒன்பது மணியாகியும் வீடு திரும்பவில்லையே என்று அவரது மனைவி கவலைப் பட்டு உறவினர்களிடம் விசாரிக்கச் சொல்ல, அங்கே இங்கே என்று அலைக்கழிக்கப்பட்டுக் கடைசியில் அரசு மருத்துவ மனை மார்ச்சுவரியில்... எத்தனையோ அடையாளம் தெரியாத குவியலோடு ஒன்றாக. மறுநாள் செய்தித் தாட்களில் ஒரு ஓரத்தில் வெறும் செய்தியாக! அவ்வளவுதானா?

இளைய சகோதரனும், அவரது மகனும் இரவு முழுவதும், அழுகையை அடக்கிக் கொண்டு மருத்துவ மனை வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்த நேரத்திலும், உறவினர்கள், நண்பர்களுக்கு, தகவல் சொல்லிக் கொண்டிருந்ததும்.........

இரவு பதினொன்று-பதினொன்றரை மணிவாக்கில் இவனுக்கும் தகவல் வந்தது. தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு, எது கனவு எது நிஜம் என்று பிரித்துப்பார்க்கக் கூடத் தோன்றாமல்....அதற்கு முந்தின வெள்ளிக் கிழமை இரவும், சனிக்கிழமை காலையில் கூடஅலைபேசியில்  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தது....அதற்கும் பதினைந்து  இருபது நாட்களுக்கு முன்னால் தான் மதுரையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது........

எல்லாமே கனவு தானா? கலைந்துபோவதற்குத்தானா இத்தனை கனவுகளும்?

குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்"இறை"ப் போதும் வையாரே

இப்படி ஒரு வலைக் குழும விவாதத்தில் ஆமாச்சு என்ற ம.ராமதாஸ் தருமை ஆதீன திருமந்திர வரிகளைச் சொல்லி, இறை என்ற வார்த்தை நொடி என்கிற பொருளையும் தருவதாக எழுதியிருந்ததைப் படித்த நினைவும் வந்து முட்ட, அழக் கூடாது, அழுவது அந்த உன்னதமான மனிதனுக்குச் செய்யும் மரியாதை இல்லை என்ற பிடிவாதத்தோடு, இந்தப் பத்து நாட்களில் வேறு வேறு விஷயங்களைத் தொட்டு இவன் வெளியே உலாவிக் கொண்டிருந்த தருணங்களில், மனம் மட்டும் சடகோபன், கண்ணன், கண்ண மாமா   என்றும், ஒவ்வொருவருக்கும் இன்னம் வேறு உறவு முறைகளிலும் அறியப்பட்ட  தன்னைச் சுற்றி இருக்கிற எல்லோரிடத்திலும், ஒரு நல்லெண்ணத்தையும், கலகலப்பையும் உண்டாக்கத் தெரிந்த  அந்த உன்னதமான உயிர்! பழகிய காலம், பழகிப் பேசிய காலமும் வெகு குறைவு தான்  என்றாலுமே, பூவின் வாசம் நீடித்திருப்பதைப் போல, பழகிய அந்த இனிமையான தருணங்கள், நினைத்துப் பார்க்கும் போதே மலர்ச்சியையும், புன்னகையையும் வரவழைப்பதாக........கனவும் நினைவும் சுற்றிச் சுற்றி.......

இன்றைக்குப் பத்தாம் நாள் கரும காரியங்கள் இந்நேரம் நடந்து முடிந்திருக்கும்!

எல்லாம் கனவுதான்! கலைய மறுக்கிற கனவாக, இப்போதும் முன்னால் நிஜமாகவே வந்து நிற்கிறது!

"ஃபர்ஸ்ட் கிளாஸ்!"

காபியைக் குடித்து முடித்ததும் மனதில் கொஞ்சம் கூடப் பொய்யில்லாமல் வருகிற முதல் வார்த்தை!

"போங்கோ மாமா! செகண்ட் டிகாக்ஷன் தான் இருந்தது, அதைப்போய்..." அவருடைய தமக்கை மகள் வெட்கப்பட்டுச் சொல்லும் போது  "ஃபர்ஸ்டா செகண்டான்னெல்லாம் தெரியாது, ஆனா காபி "ஃபர்ஸ்ட்கிளாஸ்!" மனதின் அடித்தளத்தில் இருந்து, குறை எதையுமே பார்க்கத் தெரியாத வார்த்தைகள். தமக்கை வீட்டுக்கு வருகிற சந்தர்ப்பங்களில், அரிவாள்மணையை    எடுத்துக் கொண்டு, காய்கறிகளை லாவகமாக நறுக்கிக் கொடுத்துக் கொண்டே ஊர் சமாசாரம், உறவு சமாசாரம் என்று பேசிக் கொண்டே......அந்த பாந்தம்!

குழந்தைகள் இல்லையென்ற குறையே இல்லாத மனிதன்! அத்தனை குழந்தைகளையும் வேற்றுமையில்லாமல் நேசிக்கத் தெரிந்தவருக்கு, தனியாக எதற்கு என்று ஆண்டவன் நினைத்தானோ தெரியாது. ஐந்து வருடங்களுக்கு முன்னால், உறவினர் ஒருவரது ஷஷ்டி அப்த பூர்த்திக்குப் போய் இருந்த தருணம், இன்னொரு தமக்கையின்  பேரக் குழந்தைகளுடன் கலகலப்பாக....அப்புவும், வர்ஷுக் குட்டியும் என்னமாகக் கதை அளந்து கொண்டிருந்தார்கள்! கொஞ்சம் தள்ளியிருந்தே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனை அருகே அழைத்து, "என்ன சொல்றா கேளும்"
என்று எடுத்துக் கொடுத்தவுடனேயே, அந்தக் குழந்தைளும் மறுபடி தங்கள் அளப்பை அரங்கேற்றம் செய்த அந்தத் தருணம்........!

தாய்க்குத் தலைமகன்! தாய் சொல்லைத் தட்டாத தனயனும் கூட! கொஞ்ச நேரம் பார்த்துப் பேசியவர்கள் கூட, தங்களுடைய நெருங்கிய உறவாக உணரமுடிந்த ஒரு மனிதனைப் பார்க்கிற, பக்கத்தில் இருந்து பேசிப் பழகுகிற வாய்ப்பு இவனுக்குக் கிடைத்திருக்கிறது என்பதே ஒரு பெரும் புண்ணியம்! நினைத்துப் பார்க்கும் போது, இப்படி எத்தனை எத்தனை நல்ல மனிதர்களோடு பழகும் வாய்ப்பை, இறைவன் எனக்குத் தந்திருக்கிறான் என்று அவனை வணங்கத்தோன்றுகிறது!

"ஃபர்ஸ்ட்கிளாஸ்!"

எல்லாமே முதல் தரம் தான்! எதையுமே கடைத்தரமாகவோ, கீழ்த்தரமாகவோ பார்க்கத் தெரியாத ஒரு உயர்ந்த மனிதனை, கொஞ்சம் பக்கத்தில் இருந்து பார்ப்பதற்கு, நல்ல எண்ணங்களையே  விதைத்துக் கொண்டுபோன ஒரு ஜீவனை நன்றியோடு நினைப்பதற்கு, வார்த்தைகளில் வடிக்க நான் செய்யும் இந்த முயற்சி........இது என்ன தரத்தில் இருந்தாலுமே, "ஃபர்ஸ்ட்கிளாஸ்!

இது தான் சடகோபன் என்றும் கண்ணன் என்றும், கண்ண மாமா என்றும் அறியப்பட்ட புண்ணிய ஜீவன் ஏற்றுக் கொள்ளும் விதம்!

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
  


 

குறை ஒன்றும் இல்லை! மறைமூர்த்தி கண்ணா!
குறை ஒன்றும் இல்லை! குறை ஒன்றும் இல்லை!

நிழலும் நிஜமும்! புவனேஸ்வரி புராணம்!



புவனேஸ்வரி விவகாரம் தமிழ்நாட்டில் "தீ"யாக இருக்கிறது!

தீ என்றால் என்னவோ எரிக்கும் நெருப்பு என்று எண்ணிவிடாதீர்கள்! மருதை,  வட்டார வழக்கில் 'மாப்ளே...தீயா இருக்குடா என்றால் சூப்பராக, பரபரப்பாக, முன்னணியில் இருக்கிறது என்று மட்டுமே அர்த்தம்.

காவல் துறைப் புண்ணியவான்கள் எந்த நேரத்தில் புவனேஸ்வரியைக் கைது செய்தார்களோ, அந்த நிமிடத்திலிருந்து   எகிறிய பரபரப்பு, இன்னும் சில நாள் இதே ரேஞ்சில் போனால்,  கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை, பெயர், நபர், படம் எல்லாமே புவனேஸ்வரி என்று ஆக்கி விடும் போல இருக்கிறது! போன வருடம் மூன்று கோடி எண்ணிக்கையில் தேடப்பட்ட நமீதாவை, எல்லா வகையிலுமே பூனைக் கண் புவனேஸ்வரி ஓரங்கட்டி விடுவார் என்றே தோன்றுகிறது.


இன்னொரு தடவை இதே மாதிரி அதிர்வெடியை வெடித்தாரேயானால், நமீதா தன் 'உழைப்புக்கு' வாங்குகிற ஊதியத்தையுமே கூட மிஞ்சிவிடுவார்!

தினமலர் வெளியிட்ட செய்தி இங்கே! எதிரொலிகள் எங்கெங்கேயோ!

நேற்று ஏழாம் தேதி நடிகர் சங்கம் நடத்திய கண்டனக் கூட்டத்தில் அரங்கேறிய காட்சிகளின் செய்தித் தொகுப்பைப் பார்த்தால், க்ளைமாக்ஸ் [உச்சம்] ஆண்டிக்ளைமாக்ஸ்[அபத்தத்தின் உச்சமாகி] ஆகிப்போன பரிதாபம் நன்றாகவே தெரிகிறது.

"தினமலர் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் தரப்பிலிருந்து யாராவது சமரசம் பேச வந்தால் சமாதானமாய் போவது குறித்து முடிவெடுப்போம் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

நடிகைகள் குறித்து தவறாக எழுதி ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய நடிகர், நடிகைகள், இப்போது அவர்களே ஆபாசமாக பேசி புதிய சிக்கலை தாங்களாகவே இழுத்துக் கொண்டுள்ளனர்.

விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் குறித்து தினமலர் செய்தி வெளியிட்ட பிறகு நடிகர் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கண்டனக் கூட்டத்தில் முக்கிய நடிகர்- நடிகைகள் ஆபாசமாகப் பேசியது போன்றவை இப்போது அவர்களுக்கே எதிராய் திரும்ப ஆரம்பித்துள்ளது.

விவேக், ஸ்ரீபிரியா, சேரன், சத்யராஜ், செல்வமணி போன்றோர் தரக்குறைவாக, படு ஆபாசமான வார்த்தைகளால் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைக்  கேவலமாகப் பேசினர்."

இது தட்ஸ்தமிழ் செய்தி. முழுவதும் படிக்க இங்கே.

தட்ஸ்தமிழ் தளச் செய்தியையே அப்படியே கொஞ்சம் படங்களுடன் போட்டுக் கொண்ட இன்னொரு செய்தி படிக்க இங்கே.

"இந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தினமலர் செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை கண்டித்துப் பேசினர்.

ஒரு பத்திரிகை தவறான செய்தி வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்த நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால் மானநஷ்ட வழக்கு, அவதூறு வழக்கு போன்றவற்றை தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அதற்கு மாறாக காவல் துறையினர், செய்தி ஆசிரியரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்றதல்ல என்றும், இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் கூட்டத்தில் பேசிய பத்திரிகையாளர்கள் கூறினார்கள்.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்யப்பட்ட செய்தி ஆசிரியரை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தினார்கள்.

கூட்டத்தில், நடிகர் சங்கக் கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்ட, ஸ்ரீபிரியா, விவேக், விஜயக்குமார் ஆகியோரது பேச்சுக்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

அதில், பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்து அவர்கள் ஆபாசமாக பேசியதைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் கடும் கொந்தளிப்படைந்தனர்.

இந்த நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என அவர்கள் ஆவேசமாக கூறினர்.

நடிகர் சங்கத்தின் நடவடிக்கை மற்றும் செய்தி ஆசிரியர் கைது ஆகியவற்றைக் கண்டித்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது".

இந்தக் கூத்துக்களைஎல்லாம் மனம் வெதும்பி, வேறு வழியில்லாமல்படித்துக் கொண்டிருந்த போது தான், வழக்கறிஞர் பிரபு ராஜதுரையின் வலைப்பதிவையும் சற்று முன்னர் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.இது அவர் எப்போதோ எழுதிய ஒரு பதிவு, டோண்டு ராகவனின் இந்தப் பதிவில்  இருந்த ஒரு கேள்விக்குப் பொருத்தமாக இருக்கவே, மீள்பதிவாக, அதில் இருந்து ஒரு பகுதி

"அமெரிக்காவில் 1950ம் வருடம் ஒரு பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. அந்த மநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் இந்தியாவில் 1956ம் ஆண்டு இவ்வாறு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சுரண்டுவதை (trafficking) தடுக்கும் எண்ணத்துடன் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் The Suppression of Immoral Traffic Act'1956.
 

எஸ் ஐ டி   சட்டம் என்று நீதிமன்றங்களில் அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில் விபச்சாரம் என்பது குற்றமல்ல. ஆனால் விபச்சார விடுதி நடத்துவது, அதற்கு உதவி செய்வது குற்றம்.
....................

அதாவது ஒரு பெண் வேறு யாருடைய துணையுமின்றி தனியாக தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது விபச்சார விடுதியாகாது. அப்படி செய்வதில் குற்றமுமில்லை. ஆனால் இரு பெண்கள் தங்கியிருந்து தங்களுடைய வருமானத்தைப் பகிர்ந்து கொண்டால் அது குற்றமாகிறது. மேலும் ஒரு விபச்சாரியை அண்டி அவர் விபச்சாரம் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் வாழும் நபர், பதினெட்டு வயது நிரம்பியர் என்றால் அதுவே ஒரு குற்றமாகிறது. இதில் மகன், மகள் கூட அடக்கம்.

இதிலிருந்தே இந்தச் சட்டத்தின் நோக்கம் விபச்சாரத்தை தடுப்பதல்ல மறாக விபச்சாரம் செய்பவரைத் தவிர வேறு நபர்கள் பலனடைவதை தடுப்பதே என்பதை அறியலாம். எனவே நமது பத்திரிக்கைகள் 'விபச்சாரத் தடை சட்டம்' என்று குறிப்பிடுவதே தவறான பதமாகும். ஆங்கில பெயர் அப்படி அர்த்தம் கொள்ளவே கொள்ளாது."

நடிகர் சங்கத்தின் நடிப்புக் கண்டனத்தைப் பற்றி, திரு கோவி.கண்ணன் தனது பதிவில் இப்படி எழுதி இருந்தார்.

"ஒரே முறை தற்கொலை செய்து கொள்ளும் நடிகைகள் பற்றி அலோசனை நடத்தியதாக செய்திகள் வந்தன, அதுவும் நடிகைகள் மன அழுத்தத்திலிருந்து காத்துக் கொள்ள கவுன்சிலிங்க் கொடுக்கலாம் என்பது போன்ற ஆலோசனைதான், ஆனால் அதே கூட்டத்தில் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றி எந்த ஒரு முடிவையும் எடுக்கவோ, எட்டவோ இல்லை. இது போன்று கண்டனக் குரல்கள் யாருக்கான நாடகம் ?"

நடிகைகளுக்குக் கோவில், நடிகர்கள் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம், சதா சினிமா நடிகைகள், நடிகர்களைப் பற்றியே புராணம் எழுதிக் கொண்டிருந்த பத்திரிகைகள், சினிமா க்ளிப்பிங்க்ஸ், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வைத்து மட்டுமே கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் தொலைக் காட்சிகள்.......

இவை எதுவுமே ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடையாளங்கள் இல்லை.

அழுகிப்போன சீரழிவுகளாகவே தெரிகின்றன. பகுத்தறிவு பேசும் நண்பர்களாக இருக்கட்டும், என்றைக்கோ மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று ஆன்மிகம் பேசிக் கொண்டிருக்கும் நண்பர்களாகட்டும், உடனடியாகச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது!

எதை எங்கு வைக்க வேண்டுமோ, அதை அங்கே வைக்கப் பழகிக் கொள்ளுங்கள்!

மலமும் மூத்திரமும் நம் ஒவ்வொருவர் உடலுக்குள்ளேயும் தான் இருக்கிறது, சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காக, தனியாக எடுத்து வைத்து, சாப்பிடும் தட்டிலும் வைத்துக் கொள்வோமா என்ன?




இரண்டு படம் நடித்து வெளிவந்தது விட்டாலே, இங்கே நடிகனுக்கு நாடாளும் ஆசையும் வந்து விடுகிறது! நடிகைகளுக்கோ கோவில்கள் கட்டப்படுகின்றன!

இன்றைக்குத் தகப்பன் பேர் தெரியாத பையா என்று எந்தப் பத்திரிகைக்காரனைத் திட்டினார்களோ, அதே பத்திரிகைக்காரனைத் தேடிப்போய்த் தனது கவர்ச்சி ஆல்பத்தை வெளியிடக் கவரில் தனியாக அன்பளிப்பும் வைத்து அலைந்தவர்கள்இதே நடிகைகளும், நடிகர்களும் தானே!

அதே மாதிரி, இவர்களிடம்போட்டோ , பேட்டி என்றே பக்கங்களை நிரப்பி வயிறு வளர்த்தவர்கள் பத்திரிகையாளர்களும் தான்! இன்றைக்கு ஈயம், பித்தளையைப் பார்த்து இளிப்பது என்ன வேடிக்கை?!

சினிமா பிடித்திருந்தால் ஒருமுறைக்கு இருமுறை வேண்டுமானால் பாருங்கள், தவறில்லை! அதற்காக, அவர்கள் என்னவோ நம்மை மீட்க வந்த ரட்சகர்கள் என்ற கற்பனையை உடைத்துத் தள்ளுங்கள். ஜனங்கள் இப்படி இளிச்சவாயர்களாக இருப்பதனால் மட்டுமே, மார்க்கெட் போன நடிகன், நடிகை எல்லாம் கலைச் சேவை செய்ய முடியாதபோது, அரசியலிலும் நுழைந்து ஆட்சிக் கனவில் மிதக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
 

யோசித்து, விடுபட வேண்டிய நேரம் இது!