மாரிதாஸ் அவர்பாட்டுக்கு என்னமோ எழுதிக்கொண்டு வீடியோக்களைப் பகிர்ந்துகொண்டு அரசியலைக் கொஞ்சம் விமரிசனம் செய்துகொண்டிருந்தார். அதை இங்கே எத்தனை பேர் வவனித்தார்களோ, தெரியாது! ஆனால் 200 ரூபாய் இணைய உபிக்கள் உபயத்தில், அவதூறுகளும் புகார்களுமாக எல்லாமாகச் சேர்ந்து மாரிதாஸ் பெயரும், சொன்ன விஷயங்களும் அவரே எதிர்பார்க்காத அளவுக்குப் பிரபலமாக ஆக்கப் பட்டிருப்பது ஒரு விசித்திரம்!
சிலமாதங்களுக்கு முன்னால் அரக்கோணம் திமுக எம்பியும் மதுபான ஆலைகள் உரிமையாளருமான ஜெகத்ரட்சகன், ஒரு சிங்கப்பூர் நிறுவனம் வழியாக இலங்கையில் 3.85 பில்லியன் டாலர் முதலீட்டைச் செய்த தகவல்கள் கசிந்தன. அன்றைய தின பரபரப்புச் செய்தியானதைத் தாண்டி, அதைப்பற்றி யாருமே அலட்டிக் கொள்ளவில்லை என்பதில் இங்கே ஊழல் என்பது ஒரு டீக்கடை அரட்டை அல்லது மேடைக்கூச்சல், ஊடகங்களில் ஏதோ ஒரு ஓரத்தில் செய்தியாக மிகச்சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக ஆனதால் தானோ? வீடியோ 21 நிமிடம்.
Zero Dark Thirty! செப்டெம்பர் 11, 2001 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் தேடுதல் வேட்டைக்கு ஆளான சவூதி அரேபிய கோடீஸ்வரர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட தருணங்களை வைத்து எடுக்கப்பட்ட படம். வேறு சில படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம், அமெரிக்கா மீதான தாக்குதல்களின் பின்னணியில் இருந்த ஒசாமா பின் லேடன் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த போதே அமெரிக்கப்படையினரால் கொல்லப்பட்டதை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டபடம் என்பதால் இங்கே குறிப்பிடுகிறேன்! ஒசாமா பின் லேடனுடைய அல் கொய்தா இயக்கத்தின் தலைமையைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வந்தாலும் நேற்று சனிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப், ஒசாமாவின் மகனும் அல்கொய்தா இயக்கத்தின் முக்கியத்தலைவருமான ஹம்சா பின் லேடன் அமெரிக்க பயங்கரவாத எதிரப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்திருப்பது இன்றைய முக்கியச் செய்தியாகி இருக்கிறது. ஒசாமா போலவே அவரது மகன் ஹம்சாவும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் (AFPAK) ஏரியாவில் வைத்தே கொல்லப்பட்டிருப்பதாக சொல்லியிருப்பது முக்கியமானது.
சவூதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய ஆராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் டிரோன்களை வைத்து நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் இன்னொரு முக்கியமான செய்தி. கிட்டத்தட்ட எழுபதுலட்சம் பாரல்கள் தீயில் நாசமாகி இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
அமெரிக்கா வழக்கம்போல ஈரான் மீது பழியைப் போட்டு அறிக்கை விட்டிருக்கிறது. ஏமனில் சவூதி அரேபியா நடத்தி வரும் போர், ஹௌதிகள், ஈரான் இதில் எப்படிக் கைவரிசை காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் அரபுநாடுகளின் அரசியலை முதலில் தெரிந்து கொண்டாக வேண்டும். சவூதிகளுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்கிற அமீரகத்துக்கும் இடையிலான அரசியலும் இதில் சேர்ந்து கொள்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் எண்ணெய்க்கொழுப்பு அரசியல், நீயாநானா ஆதிக்கப் போட்டி தான்! இந்த எண்ணெய்க்கொழுப்பு அரசியல், வஹாபியிசம், சன்னி ஷியா இஸ்லாமிய அரசியல் இவைகளை வருகிற நாட்களில் கொஞ்சம் தொடர்ந்து பார்க்கலாமா? என்ன சொல்கிறீர்கள்?
மீண்டும் சந்திப்போம்.