Showing posts with label எழுத்து. Show all posts
Showing posts with label எழுத்து. Show all posts

ஒரு நினைவூட்டலும்! ஒரு வேண்டுகோளும்!

2009 டிசம்பரில் எழுதிய ஒரு பதிவு அதற்கு வரிசையாக வந்த பின்னூட்டங்கள், பதில்கள் என்று காங்கிரசைத் தொட்டு எப்படி நிர்வகிக்கக் கூடாது என்று ஆரம்பித்துக் கடைசியில் நிர்வாகம், மேலாண்மை குறித்ததாய் மாறிப்போனதென்பதை யாரோ இன்று தேடிப்படித்து எனக்கே நினைவுபடுத்தி இருக்கிறார்.


அகில் முத்தாய்ப்பாக எழுதிய பதில் ஒன்று.

/ஜப்பானிய (KAIZEN ® Institute) ஸ்ட்ரேட்டஜி/

கைஜென் என்ற இந்த வார்த்தை முதலில் ஆங்கிலத்தில் தொடர்ந்த முன்னேற்றம் என்று சொல்லப்பட்டது. ஜப்பானிய மொழி சொல்வது இன்னும் நுட்பமான பொருளில்-நம்முடைய ஒவ்வொரு செயலையும் கவனமாகப் பரிசீலித்து, அதிலிருக்கும் குற்றம் களைதல், சரியாகவும் நிறைவாகவும் செய்யப் பழகுதல் என்று. strategy என்று பெரிதாக யுத்த தந்திரம் எல்லாம் ஒன்றுமில்லை! காமன் சென்ஸ்! அதை முறையாகப் பயன்படுத்தி, எங்கே தவறு ஆரம்பித்தது என்பதைக் கண்டு நீக்குவது, அதன் விளைவுகளைச் சரி செய்வது என்று மிக எளிமையானடிப்படைதான்.

டோயோடா கார் கம்பனி தான் முதலில் இதை முறையான நடவடிக்கையாக ஆரம்பித்தது. கார் உற்பத்தி செய்யப்படும் அசெம்ப்ளி லைன் என்ற இடத்தில்,ஏதோ ஒரு இடத்தில் குறை தென்பட்டால், உற்பத்தியை நிறுத்திவிட்டு, உடனே கை ஜென் ஆரம்பித்துவிடும்! அதாவது பணி புரிபவர்கள் அத்தனை பெரும் கூடி தவறை எப்படித் திருத்திக் கொள்வது (கை), இன்னும் மேம்பட்டதாக அதை எப்படி மாற்றுவது (ஜென்) என்பதாக! இந்த முறையை மனப்பூர்வமாகவும், வேலை செய்யும் விதத்தின் பண்பட்ட தன்மையாகவும் கையாளும்போது மட்டுமே, முழுமையான பலன் கிடைக்கும்.

டோயோடோ, அமெரிக்காவின் மிகப் பிரம்மாண்டமான ஜெனரல் மோட்டார்ஸ் கார் தயாரிப்பு நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளியது, வெறும் விளம்பர உத்தியினால் அல்ல! தரம்! தொடர்ந்து அபிவிருத்தியாகிக் கொண்டே வளர்ந்த தரம்!

http://www.kaizen.com/
இந்த தளத்தில் கைஜென் முறையைப் பற்றிக் கொஞ்சம் விவரமாகத் தெரிந்து கொள்ளலாம்!
இப்படி ஒரு ஆரோக்கியமான போக்கு இருப்பதைச் சுட்டிக் காட்டும் நேரத்தில், இதற்கு நேர் எதிரிடையான இன்னொரு போக்கையும் தெரிந்து கொள்வது நல்லது. நினைத்துப் பார்க்க முடியாத மலிவான விலை என்ற பெயரில், தொடர்ந்து தரம் குறைந்த பொருட்களை சீனா, பேட்டை வஸ்தாது மாதிரி உலகச் சந்தையில் குப்பை குப்பையாகக் கொண்டிருப்பது. சீனாவின் பொருளாதார, தொழில் துறை ஆக்கிரமிப்பு, அதன் ராணுவ ஆக்கிரமிப்பை விடக்கொடுமையானது!   

இது காமெடி டைம்! காங்கிரஸ் சானலில்! 

தெலங்கானா பிரச்சினையில் காங்கிரஸ் செய்துவந்த தொடர்சொதப்பல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தது எப்படி நிர்வாகம், மேலாண்மை குறித்த பேச்சாகவும் மாறியது என்பதில் என்னுடைய பங்கை விட , என்னுடன் உரையாட வந்த நண்பர்களுடைய பங்கே அதிகம்! ஒரு அர்த்தமுள்ள உரையாடல் நிகழ்ந்த அற்புதமான தருணம் அது என்றே சொல்லுவேன்!

இந்தப்பக்கங்களில் ஒரு அர்த்தமுள்ள உரையாடல் தொடர்ந்து நிகழவேண்டும் என்பதில் இங்கே வரும் நண்பர்களுடைய பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே இருக்கிறது என்பதை ஒரு நினைவூட்டலாக! ஒரு அன்பான வேண்டுகோளாகவும்!  

மீண்டும் சந்திப்போம்.

       

  

என்னத்த எழுதி, என்னத்தப் படிச்சி...என்னமோ போங்க!




இரண்டு நாட்களாக ஒரு சலிப்பு!
எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்னு சொல்வோமில்லையா? அந்த மாதிரி, நாமெல்லாம் என்ன எழுதுகிறோம், எதுக்கு எழுதுகிறோம்னு கொஞ்சம் அலுப்பு, கூடவே சலிப்பு!

என்னவோ பதிமூணுலட்சத்துக்கும் அதிகமா ஹிட்ஸ் கொடுத்த ஒரு தனிநபர் வலைத்தளத்தை மேய்ந்து கொண்டு இருக்காப்போல எதுக்கு இந்த புல்டப்பு, யாரோ உன்னைய எழுதச் சொல்லி கெஞ்சுற மாதிரியும், என்ன பாட்டுப் பாட, அட என்ன தாளம் போடன்னு நீ தடுமார்ற மாதிரியும் என்னாத்துக்கு இந்த தேவையில்லாத வேலைஎல்லாம்னு கூட இருந்து குடைய நமக்கு ஒரு முரளி மனோகர் அட்லீஸ்ட் ஒரு ஜஸ்வந்த் சிங் கூட இல்லையேன்னு முன்னாலேயே ஏங்கினத்தையும் ஒளிவு மறைவில்லாமச் சொல்லி இருக்கிறேனா இல்லையா?

நாம எழுதலேன்னு இங்கே யாரும்  தவிக்கலேன்னு தெரியும். எழுதறதையும் தொடர்ந்து படிக்க வர்றது ஒண்ணோ, ரெண்டோ பேர் தான்னும் தெரியும். அவங்களும் கூட, அடையாளம் காட்டிக்காம ரீடர்ல வாசிச்சுட்டுப் போயிடறாங்கன்னும் தெரியும். பின்னூட்டப் புயல்கள் எதுவும் இங்க வர்றதில்ல. வந்தா வேலைக்கு ஆகறதில்லேன்னும் அவங்களுக்குத் தெரியும்!
இப்படி எல்லாம் தெரிஞ்சதுக்கப்புறமும் எதுக்கு இந்த அலட்டல், எதுக்கு இந்த நீட்டி முழங்கிப் புலம்பறதுன்னு நீங்க கேக்காட்டி கூட, சொல்றதுக்குத்தான், இந்த ஆரம்பம்!
அடிப்படையில், நான் ஒரு வாசகன். வாசகனாக இருக்க மட்டுமே விருப்பம்.எழுத்தாளர் மாலன் சொல்லிக்கிற மாதிரி அறியப்பட்ட வாசகன்லாம் கெடையாது. கையில என்ன புத்தகம், எவர் எழுதினதா இருந்தாலும், எதைப் பத்தினதா இருந்தாலும், உடனே வாசிச்சுடணும்னு ஒரு வெறியோடு கூடின தவம் சின்ன வயசில இருந்து ஆரம்பிச்சது.
வெறியோடு வாசிக்க வாசிக்க, ஒரு நிதானம் வந்தது, எது நல்ல எழுத்து, எது நம்மை ஆளுகிற எழுத்து, எது நமக்கு நல்லது சொல்கிற எழுத்து, இப்படியெல்லாம் பகுத்துப் பார்த்துப் படிக்கிற பழக்கம் வந்தது. அப்போது கூட, எதிரெதிர் தரப்பு விஷயங்களைக் கூர்ந்து கவனித்துப் படிக்க ஆரம்பித்தபோது, மறைந்திருந்த அல்லது மறைத்து வைக்கப்பட்ட விஷயங்கள் தானாகவே புரிய ஆரம்பித்த அதிசயமும் நிகழ்ந்தது.  

இந்த வாசிப்பு அனுபவம் இருக்கிறதே, ஒரு தனி சுகம், எத்தனை விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது!
அப்படித் தேடித் தேடித் படித்த நிறைய விஷயங்களில், சிலவற்றை பகிர்ந்து கொள்ளவும் ஆசை. வெறும் வாதங்கள், பட்டி மன்றங்கள், அல்லது தூய தமிழில் 'மொக்கை'யாக நின்றுவிடுவதில் எனக்குப் பழக்கம் இல்லை.


இனி நேரடியாகப் படித்த சில விஷயங்களில் இருந்து...!
நாளை ஞாயிறு மதியம் சென்னை மயிலை கற்பகாம்பாள் நகரில், தமிழ் மரபு அறக் கட்டளையின் எட்டாவது ஆண்டு நிறைவு விழா நடக்கும் செய்தியை முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் அங்கமாக, கூகிள் வலைக் குழுமத்தில் மின்தமிழ் என்ற பெயரில் நடத்தி வருவதையும் சொல்லியிருந்தேன்.

ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் அங்கத்தவர் அத்தனை பேருக்கும் வணக்கத்தையும், வாழ்த்தையும் சொல்லுகிற விதமாக......

எழுத்து என்றால் இதுவல்லவா எழுத்து! நாமும் என்னமோ எழுதிக் கொண்டிருக்கிறோமே என்று என்னையே கேள்வி கேட்டுக் கொள்ளவும்....ஒரு வாசகனாய் என்னுள் நிகழ்ந்த அற்புதமான அனுபவத்தையும் தந்த ஒரு சிறு பகுதியை மின்தமிழ் வலைக்குழுவில் வெளியான எழுத்து என்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும் என்ற ஏக்கத்தை என்னுள் விதைத்த பகுதியை, அப்படியே தருகிறேன்.
 
நான் பதில் சொல்லப் போவதில்லை!
எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு சுருக்கு வழி மட்டும் தெரியும். நீங்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து என் மனம் கோணாமல் நடந்து கொண்டால் ஒரு வேளை நான் சொல்லக்கூடும், ரகசியமாக உங்களுக்கு மட்டும்!

சரி போகிறது! மின்தமிழ் அனபர்களுக்கு விதிவிலக்கு.

பக்தி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேறு எங்கும் அலையாதீர்கள்.

ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானங்களைப் பரிச்சயப் படுத்திக்கொண்டு, கொஞ்சம் இதனால் என்ன லாபம் அதனால் என்ன லாபம் என்ற உங்கள் வியாபார புத்தியையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போகும் நாட்களுக்கு நெஞ்சம் மிக நாணி, 'நான் பண்ணாத ஆகாத்தியமெல்லாம் பண்ணி பார்த்துவிட்டேனடா சாமி! இனி என் கையில் எதுவும் இல்லை. எதுவானாலும் உனக்கே பாரம்' என்று இருகையும் விட்டு திண்ணையில் ஒரு ஓரமாக அமர்ந்து ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானம் ஒன்றைத் திறந்து படித்துப் பார்த்திருக்கிறீர்களா?
அங்கே கடவுள் பிரத்யக்ஷமாகப் பேசும். கடவுள் தனக்கு மிகவும்
பிடித்த இடமாக அதைக் கொண்டதால்தான் அந்த நூல்களுக்கே 'பகவத்
விஷயம்' என்று பெயர் வந்தது. பகவானை விஷயமாகக் கொண்டதால் பகவத்
விஷயம், பகவான் தனக்கு இஷ்டமான ராஜ்யமாக, விஷயமாகக் கொண்டதால் பகவத் விஷயம் என்றபடி. பக்திக்கு ஸ்ரீவைஷ்ணவம், பயபக்திக்கு வேறு எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.

சரி பக்தி என்றால் என்ன என்று ஒரு குறிப்பு வேண்டுமா?

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் போவோம் வாருங்கள். 'ஞானம் பிரம்மத்தின் வாசல் திண்ணை வரை போகும். ஆனால் பக்தி பிரம்மத்தின் அந்தப்புரத்திற்குள் போய் வளையவரும்' எப்படி இருக்கிறது கதை?
சரி அப்படியே ஒரு நடை ஆண்டாளிடம் போனால் 'எற்றைக்கும் ஏழ் ஏழ்
பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள்
செய்வோம்.--- மற்றை நம் காமங்கள் மாற்று' 'உன்தன்னோடு உறவேல்
நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது' அது என்ன மற்றை நம் காமங்கள்?
காசு பணமா? உலக ஆசைகளா? ச்சே ச்சே .... அந்த பிசுநாரியெல்லாம்
கழண்டுபோய் மாமாங்கமாயிடுத்து. இப்ப அது இல்லை பிரச்சனை. பின் என்ன
காமங்கள்? ஒன்றுமில்லை. இந்த முக்தின்னு சொல்றாளே, அதுவும் அங்க
போயி வைச்ச கண்ணு மாத்தாம முழிச்சுப் பார்த்துண்ட்ருப்பான்னு
சொல்றாளே, அதுக்காக அப்படியே யோகத்துல உட்கார்ந்து
அந்தர்யாமி தர்சனம்னு சொல்றாளே, அந்தமில் இன்பத்து நாட்டத்துல
அவன்கிட்ட மோக்ஷம் தா மோக்ஷம் தான்னு தவம் கிடக்கிறாளே, அவன்
முக விலாசம் என்னன்னு பாக்காம கேட்டது கிடைச்சா போதும்னு தனக்காக முக்தி, தனக்காக ப்ரம்ம பிராப்தின்னு முனிவரர் யோகிகள் தவசிகள் கணக்கா விடுவிடுன்னு இருக்காளே இந்தக் காமம் எல்லாம் வேண்டாம்பா. 'உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று' 'பெறினும் வேண்டேன்' என்று சொன்னவர் வழிவந்தவா நாங்க இல்லையா?
ஒரு வைஷ்ணவர் சொன்னாராம், 'நான் பண்ணின பாபத்துக்கு'

'இரும் நீர் என்ன பாபம் பண்ணினீர்?'

'அவனோட சொத்து இந்த ஆத்மா. இதை என்னுடையதுன்னு ஆத்ம அபஹாரம் பண்ணேனே, ஆத்ம திருட்டு பண்ணினேனே, இப்பேர்பட்ட எனக்கு இருக்கற நரகம் பத்தாது. இனிமே புதுசா சிருஷ்டி பண்ணனும்.

ஓஹோ!

ஆனா! அவனுடைய பரம கருணை ஸ்வபாவத்தை ஆழ்ந்து நாம் புரிந்து
கொள்ள புரிந்து கொள்ள, அவனிடம் ஏற்கனவே இருக்கற நித்ய விபூதி
பத்தாது எனக்குத் தருவதற்கு. புதிதாக ஒரு நித்ய விபூதி அவன் ஏற்படுத்தணும். என்னை நோக்கினால் இருக்கும் நரகம் பத்தாது. அவனை நோக்கினால் இருக்கும் நித்ய விபூதி பத்தாது. என்ன பக்தின்னா புரியறதா? இன்னும் புரியாது. ஏன் என்றால் நமக்கு அந்த வலி தெரியாது. பிள்ளை பெற்றவளுக்குத்தான் பேற்று வலி தெரியும்.

ஒரு சம்பவம் சொல்கிறேன் அப்பொழுது புரியும்.
.
சொல்கிறேன் என்றவுடனேயே என் கண்கள் அழுகின்றன. ச்சே ச்சே நான் அழுவேன்னு நினைக்கிறீங்களா? அதெல்லாம் கல்லுளி மங்கன். இந்தக் கண்கள் ஒரு விவஸ்தை கெட்டது. திடமா இருக்கத் தெரியவில்லை.

பிள்ளைத் திருநறையூர் அரையரும் அவருடைய சிறு பிள்ளையும் துருக்கப் படையெடுப்பின் போது கர்ப்பகிரகத்தில் பெருமாள் திருமேனிக்குக் சூழும் தீயின் வெப்பம் உறைக்காமல் இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கிறார்கள். இவர்களை சூறையாடுகிறது நெருப்பு. வேகிறது உடல்.
 அரையருக்கு அந்தச் சிந்தனை எல்லாம் இல்லை. பெருமாளின் திருமேனிக்கு நோகுமே! சிறுவன் என்ன செய்வான் பாவம்!
'நாயன்! உடல் நோகிறதே! தாங்கமுடியவில்லையே' என்றானாம்.  
அரையர், 'குழந்தாய்,சற்றுப் பொறுத்துக் கொள்ளடா! இதோ விரஜா நதிக்கு
சமீபத்தில் வந்துவிட்டோம். ஆற்றைத் தாண்டினால் வைகுந்தம்'

.......அடப்போய்யா..... இதல்லாம் எழுத முடியாது........
இருந்தா பக்தி இருக்கணும் ...... சும்மா
வெத்துக்கு எழுதிண்டு.......
ஹரி ஹரி ஹரி
( ' தேவர்' கட்டளை கடத்தற் கரிதே )

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய "எது பக்தி" என்ற விவாத இழையைப் படித்த பிறகு, அப்படியே உறைந்துபோய், அகம் கரைந்துபோய் அனுபவித்த அந்தத் தருணம்!
நானும் எழுதுகிறேனே! எழுத்து என்றால் இதுவல்லவா எழுத்து!
ஏதோ அத்தி பூத்தது மாதிரி அல்ல, எப்போதுமே மிக அரிய விஷயங்களைக் கொண்டு மின்தமிழ் தமிழன்னைக்கு மின்னெழுத்துக்களால், புதுப்புது மாலைகளாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. கூடவே, தமிழ் மரபை, பேணிக் காப்பதற்கு, ஆவணப் படுத்தும் முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறது.
தமிழ் வாழ்கவென்று கோஷமிடுவது மட்டுமே தமிழை வளர்க்கிற வழியாக நினைக்காமல், வாய்ச் சொல் வீரர்களாக மட்டுமே குறுகி விடாமல், தன்னார்வலர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒன்பதாவது பிறந்த தினத்தைப் பெருமிதத்தோடு வாழ்த்துகிறேன்! மரபுச் செல்வர்களாக மகுடம் சூடும் மூவரை வணங்குகிறேன்!