Showing posts with label போபால் விஷவாயு. Show all posts
Showing posts with label போபால் விஷவாயு. Show all posts

1984 போபால் விஷவாயு சம்பவம்! குற்றவாளி யார்?

போபால் விஷவாயு துயரசம்பவம் நடந்ததன் 35 வது ஆண்டு நிறைகிற தருணம் இன்று டிசம்பர் 3. 1984 ஆம் ஆண்டு ராஜீவ் காண்டி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நடந்த முதல் விபரீதம் டில்லியில் காங்கிரஸ் காரர்கள் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறையில்  ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது என்றால் அடுத்து டிசம்பர் 3 அன்று யூனியன் கார்பைட் ஆலையிலிருந்ந்து வெளியேறிய சயனைட் விஷவாயு தாக்குதலில் 3900 பேர் மரணம் என்று முதல்நாளில் ஆரம்பித்தது வரிசையாக 25000 எண்ணிக்கைக்கு உயர்ந்ததும், பல லட்சம் பேர் இன்று வரை பெருத்த பாதிப்புக்கு உள்ளாகியிருந்தும் கூட சரியான சிகிச்சை கூடப் பெறமுடியாமல் தவித்து வருவதும் ராஜீவ் காண்டி ஆட்சி செய்ய ஆரம்பித்த நாட்களின் அடுத்த பெரிய விபரீதம்.



   NatGeo 2014 போபால் டாகுமெண்டரி வீடியோ 62 நிமிடம் 

யார் குற்றவாளி?

தினமணி தலையங்கத்தின் கேள்வி! சரியான விடை, கயவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தான்!
 

போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்க உளப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் மத்திய அரசால் எடுக்கப் படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

சுமார் 23,000 பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த சம்பவத்தில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் மெத்தனமாக இருந்தது என்பதும், குறைந்தபட்ச  இழப்பீட்டைத்தான் அரசு பெற்றுத்தந்தது என்பதும்தான் இதுவரையிலும் விவாதமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது, குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை. 

 
வாரன் ஆன்டர்சனை போபாலிலிருந்து தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குத் தப்பவிட்டனர் என்ற உண்மை இப்போது வெளியுலகுக்குத் தெரிந்த பிறகு, அதற்குக் காரணமே அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்தான் என்று கூசாமல் பழிகூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது காங்கிரஸ். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும் இந்தப் பதிலை கேட்டுக்கொண்டு சும்மா இருக்கின்றன.

அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு இதில் என்ன பங்கு என்று யாரும் கேள்வி எழுப்புவதற்கு முன்னதாகவே ""ராஜீவ் காந்தி குற்றமற்றவர், அவர் இதில் சம்பந்தப்படவே இல்லை'' என்று மறுக்கிறார் கட்சியின் செய்தித் தொடர்பாளர். ஏன் இந்த அவசரம், எதற்காக இத்தனை பதற்றம்? "எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்வதைப்போலத்தான் இதுவும்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் என்ற முறையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாமல் அர்ஜுன் சிங் இத்தகைய முடிவை எடுத்திருக்க மாட்டார். ஆனாலும், பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது தானே வழக்கம். 
பதில் ஏதும் அளிக்காமல். அர்ஜுன் சிங்கும் சும்மா இருக்கிறார்,  அர்ஜுன் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி "சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுமே என்று அஞ்சியே வாரன் ஆன்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டதாக'வும் அர்ஜுன் சிங் அந்த நோக்கிலேயே செயல் பட்டதாகவும் கூறி அவரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். இது  இந்திய அரசின் நிர்வாக லட்சணம் எப்படி இருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.
 

யூனியன் கார்பைடு நிறுவனப் பங்குகளை "டவ் ' நிறுவனத்துக்கு விற்பனை செய்தபோது, கார்பைடு நிறுவனத்தின் இழப்பீடுகளில் "டவ் ' நிறுவனத்தைத் தொடர்புபடுத்த மாட்டோம் என்று அப்போதைய காங்கிரஸ் அரசு உறுதி அளித்ததாக சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் எழுந்தது. இந்தப் புகாரும் நிரூபிக்கப்படுமேயானால், அதைவிட மோசமான விவகாரம் எதுவும் இருக்க முடியாது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கை நடத்தி, முதல் குற்றவாளியான வாரன் ஆன்டர்சன் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே தீர்ப்பு வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதன் காரணமாக, இது குறித்து 10 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி அமைச்சர் குழுவை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இதெல்லாம், கொதித்துப்போய்க் கிடக்கும் மக்கள் மனதை சற்று குளிர வைக்க மட்டுமே. இதனால் ஏதோ புதிதாக ஒரு குற்றப்பத்திரிகை தயாரித்து, தண்டனை பெற்றுவிடுவார்கள் என்று நம்புவதற்கில்லை.

ஏனென்றால் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு போபால் விஷ வாயு விபத்து வழக்கில் சட்ட ஆலோசனை அளித்த அபிஷேக் மனு சிங்வி, அதில் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டே காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளராக இருக்கும்போது நாம்தான் மத்திய அரசைப் புரிந்து நடக்க வேண்டும்.  இனியும் இந்த தேசத்தை இவர்கள்தான் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்தால் அது அவர்களின் தவறு அல்ல.
 

நிலம், நீர், காற்று என்று அனைத்தையும் பாழாக்கும் தோல் பதனிடும் ஆலைகளும் சாயப்பட்டறைகளும் ரசாயன உர ஆலைகளும் நிறுவப்பட உகந்த இடம் இந்தியாதான் என்று மேற்கத்திய நாடுகள் எப்போதோ தீர்மானித்துவிட்டன. அன்னியச் செலாவணி கிடைக்கிறது, வேலைவாய்ப்பு பெருகுகிறது என்று புளகாங்கிதம் அடைந்து நம்முடைய அரசியல் தலைவர்கள் அவற்றுக்கு நடைபாவாடை விரிக்கின்றனர் என்று நம்மை நம்ப வைக்கிறார்கள் என்றாலும், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இதில் லாபம், கமிஷன் எல்லாமும் என்பது நாம் சொல்லாமலேயே விளங்கும்.
 

மேற்கத்திய நாடுகள் இந்தியாவைத் தங்களுடைய குப்பைத் தொட்டியாகவே நினைப்பதை அவ்வப்போது அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் நகரக் கழிவுகளையும் சுத்திகரிக்கப்படாத மருத்துவமனைக் கழிவுகளையும் கன்டெய்னர்களில் ஏற்றிவரும் வெளிநாட்டுக் கப்பல்கள் உறுதிப்படுத்தி வருகின்றன.

அமெரிக்காவில் ஒரு சாதாரணமான சத்துமாவை, ஊட்டச்சத்து மாவு என்று விற்பனை செய்ய வேண்டும் என்றால் அந்த நாட்டின் உணவுத் துறையின் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டாக வேண்டும். அமெரிக்காவுக்கு ஒரு உணவுப் பொருள் அல்லது மருந்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள அந்த ஏற்றுமதி நிறுவனம், சீரிய தயாரிப்பு முறைகளை (குட் மானுபேக்சரிங் புராஸஸ்) அமெரிக்கா நிபந்தனைகளுக்கு ஏற்ப கொண்டிருக்க வேண்டும்.  


ஆனால் அமெரிக்கர்கள் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டும் என்றால் இந்தியச் சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது. இதுதான் யதார்த்த நிலைமை.

விஷவாயு கசிவு நேர்ந்தபோது, ஆன்டர்சன் போபாலில் இருந்திருந்தால், விஷவாயு இந்தியர்களை மட்டுமே கொன்றிருக்குமா, இல்லை, அவரைக் கட்டுப்படுத்தவோ, அவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தவோ தனக்கு அதிகாரம் இல்லை என்று சும்மா கடந்துபோயிருக்குமா?


oooOooo 

தங்களால் ஒன்றும் செய்ய முடியாது , எதையும் கட்டுப் படுத்தவோ, சரியான முறையில் நிர்வகிக்கவோ முடியாது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே இன்னொரு பேரழிவுக்கு இந்த நாட்டை அணு உலை விபத்து நட்ட ஈடு  வரையறை செய்யும் சட்ட முன்வரைவு என்று தைரியமாக, அடிப்படை நாணயமோ, நேர்மையோ, குறைந்தபட்சம் முதுகெலும்போ இல்லாத காங்கிரஸ் கட்சி அரசு, ஐ மு கூட்டணிக் குழப்பமாக முயல்கிறது என்றால்............

அதற்கு முதல் காரணம், இந்தக் கையாலாகாதவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தான் முதல் குற்றவாளி!

தவறைத் திருத்திக் கொள்ளக் கொஞ்சமாவது முயற்சிக்கப் போகிறோமா?

நீங்கள் தான் சொல்ல வேண்டும்! உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேரிடமும்! அழுத்தமாக!

கார்டூன்கள், தலையங்கத்திற்கு தினமணி நாளிதழுக்கு நன்றியுடன்! இப்படி எழுதியது ஜூன் 2010 இல். ஒரு மீள் நினைவாக. கொலைகாரக் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தலையெடுக்க விடக்கூடாதென்ற வெறியை விதைத்த பல்வேறு காரணங்களில் போபால் விஷவாயு சம்பவத்தைக் காங்கிரஸ் அலட்சியமாகக் கையாண்ட விதமும் ஒன்று.

   

இதைச் சொல்ல இத்தனை நாளா, அர்ஜுன் சிங்....?




""  உலகையே உலுக்கிய, 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவில் போபால் நகரில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நடந்த விஷவாயுக் கசிவும், அதனால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் இனியும் சர்ச்சைக்குரிய பொருளாகத் தொடர்கிறது என்பதே உலகில் மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதற்கான எடுத்துக் காட்டு என்றுதான் கூற வேண்டும். 

அரசு 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலப்படி, ஏறத்தாழ பத்து லட்சம் பேருக்கும் அதிகமானோர் போபால் யூனியன் கார்பைடு நிறுவன விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் அளித்திருக்கிறது. கால் நூற்றாண்டு காலம் கடந்தபின்னும், அன்றைய விஷவாயுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் குணமானபாடில்லை. அவர்களது வாரிசுகள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மூளைவளர்ச்சி இல்லாமலும், கண்பார்வை அற்றவர்களாகவும், நுரையீரல் கோளாறு உடையவர்களாகவும் தலைமுறைகள் கடந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

போபால் நகரில் இவ்வளவு பாதிப்பையும் ஏற்படுத்திய யூனியன் கார்பைடு என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனை உடனடியாக அன்றைய மத்தியப் பிரதேச அரசு கைது செய்தது. ஆனால், கைது செய்யப்பட்ட வாரன் ஆண்டர்சன் 1984-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளியேறவும் அனுமதிக்கப்பட்டார். அப்போது மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தவர் மூத்த காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் சிங். 

கடந்த ஜூன் மாதம், கால் நூற்றாண்டுக்குப் பிறகு, போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் ஒரு தீர்ப்பு வந்தது. அதன்படி, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட ஏழு பேருக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனையும், தலா 2,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இதுதான் இந்த வழக்கில் வழங்கப்பட முடிந்த அதிகபட்ச தண்டனையாம். ஏனென்றால், இதற்கு முன்பே வழக்கு நீர்த்துப் போகும்படியான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதுதான் காரணம். 

ஜூன் மாதம் இந்தத் தீர்ப்பு வெளியானதுமுதல் போபால் விஷவாயு விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வாரன் ஆண்டர்சனைத் தப்பிப் போகவிட்டது யார் என்கிற கேள்வி இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் எழுப்பப்பட்டு, உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை நாளும் பதில் பேசாமல் மௌனம் காத்த முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் இப்போது திடீரென்று ஒரு தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். 

வாரன் ஆண்டர்சனைத் துணிந்து தான் கைது செய்ததாகப் பீற்றிக் கொள்ளும் அர்ஜுன் சிங், உடனடியாக அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகக் கூறுகிறார். நான் தகவல் தெரிவித்தவுடன், ""ராஜீவ் எதுவுமே பேசவில்லை. அடுத்த இரண்டு நாள்கள் பிரதமர் ராஜீவிடமிருந்து ஆண்டர்சனுக்கு ஆதரவாகவோ, ஆறுதலாகவோ எதுவுமே கூறப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் குற்றப்படுத்துவது அடாத செயல்'' என்று கூறும் அர்ஜுன் சிங், தன்னை அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பலமுறை தொடர்பு கொண்டு வாரன் ஆண்டர்சனை விடுவிக்க வற்புறுத்தியதாகவும் அதனால்தான், யூனியன் கார்பைடு தலைவரை ஜாமீனில் விடுவித்துத் தப்பிப்போக உதவ நேர்ந்தது என்றும் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார் அர்ஜுன் சிங். 

அதுசரி, உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் வற்புறுத்தினார் என்பதால், பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நேரிடையான தொடர்பு வைத்திருந்த முதல்வர் அர்ஜுன் சிங் அவரைக் கலந்தாலோசிக்காமல், ஆண்டர்சன் தப்பிப் போக உதவினாரா? உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக முதல்வர் அர்ஜுன் சிங்கைத் தொந்தரவு செய்து ஆண்டர்சனைத் தப்பிப்போக உதவினார் என்றே வைத்துக் கொள்வோம். ஆண்டர்சன் தப்பிப்போன விவரம்கூடத் தெரியாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி? விவரம் தெரிந்தும் பேசாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி? இவ்வளவு பெரிய தவறுக்குக் காரணம் தனது உள்துறை அமைச்சர் என்று தெரிந்தும், நரசிம்ம ராவைப் பதவியில் தொடரவிட்டாரா பிரதமர் ராஜீவ் காந்தி? அவ்வளவு மக்கா? திறமையோ, விவரமோ எதுவுமே இல்லாதவரா ராஜீவ் காந்தி? 

ஆண்டர்சனைத் தப்பிப்போக, உள்துறை அமைச்சகத்தின் வலியுறுத்தலால் அனுமதித்தபோதும், அவரது கைதை ஆவணப்படுத்தி, தகுந்த நேரத்தில் மீண்டும் ஆண்டர்சனை விசாரணைக்கு உள்படுத்த வழிகோலியது தான்தான் என்று பெருமை தட்டிக் கொள்ளும் அர்ஜுன் சிங், ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மறுக்கிறார். அது என்ன கேள்வி தெரியுமா? மத்தியப் பிரதேச அரசின் தனி விமானத்தைக் கொடுத்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்க வைத்தது ஏன்? என்பதுதான் அது. 

நரசிம்ம ராவ்மீது அர்ஜுன் சிங்குக்கு இருந்த அரசியல் விரோதம் உலகம் அறிந்த உண்மை. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, என்.டி. திவாரியுடன் கைகோத்து, கட்சியில் பிளவு ஏற்படுத்த அர்ஜுன் சிங் முயன்றதும் ஊரறிந்த ரகசியம்.  


பதில் சொல்ல வர முடியாத இறந்துபோன நரசிம்ம ராவின் மீது பழி சுமத்தி, ராஜீவ் காந்திக்கு, ஆண்டர்சன் விவகாரத்தில் தொடர்பில்லை என்று சப்பைக்கட்டுக் கட்ட முற்பட்டிருக்கும் அர்ஜுன் சிங்கிடம் மேலும் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.  

இதைச் சொல்ல இத்தனை நாளா? 
25 ஆண்டுகள் இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் மறைத்த குற்றத்துக்காகவே இவரைக் கழுவில் ஏற்றினாலும் தகும். இத்தனை ஆயிரம் உயிர்களின் உயிரைக் குடித்த, வாழ்க்கையுடனும், வருங்காலச் சந்ததிகளுடனும் விளையாடிய சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் இப்போது என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஏனென்றால், இறந்துபோன ராஜீவ் காந்தியும், நரசிம்ம ராவும் சாட்சி சொல்ல வரப்போவதில்லையே! "


இந்த மாதம் பதின்மூன்றாம் தேதி தினமணி நாளிதழ்  தலையங்கம் எழுப்பியிருக்கும் கேள்வி இது! 



இன்னொரு போபால் வேண்டவே வேண்டாம்! இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மக்கள் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் போபாலை விடக் கொடூரமான அணு உலை விபத்து நஷ்ட ஈட்டை வரையறை செய்யும் மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறதே!

அடுத்தவர் தலையில் பழியைத் தூக்கிப் போடுவதும், தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைத்து பரம்பரை வீரம் பேசி வீணாய்ப் போவதும் காங்கிரசுக்குப் பரம்பரை வியாதி! நேரு காலத்தில் வி கே கிருஷ்ணமேனன், அப்புறம் வரிசையாக நேரு பரம்பரைக்காகத் தியாகம் செயப் பலி கொடுக்கப்பட்டவர்கள் பட்டியல் இப்போது, நரசிம்ம ராவ் வரை வந்து நிற்கிறது, பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!வியாதி காங்கிரசோடு போனால் யாரும் இங்கே கவலைப்படப்போவதில்லை, ஒழிந்துவிட்டுப் போகட்டும் என்று இருந்துவிடலாம்! இந்த தேசத்து ஜனங்களையும் அல்லவா இந்த வியாதி பிடித்துக் கொண்டு வாட்டிக் கொண்டிருக்கிறது!

என்ன செய்யப் போகிறோம்? உங்கள் கருத்தையும் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்! 


 



நெஞ்சு பொறுக்குதிலையே! தொடரும் ஏமாற்றங்கள்!







இருபத்தைந்தரை ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பு வந்திருக்கிறது! 
நியாயம் தான் கிடைக்கவில்லை!

போபால் விஷ வாயு வக்கில் குற்றம் சாட்டப் பட்ட எட்டுப் பேருமே குற்றவாளிகளாம்!  வெறும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை! ....ச்சும்மா ஒரு லட்சம் தலா அபராதம்! 

இந்த எட்டுப் பேரில் ஒருத்தர் மட்டுமே, கொஞ்சம் தம்மாத்தூண்டு பெரிய மீன்! கேஷுப்  மஹிந்த்ரா! அப்படிச் சொன்னால் தெரியாது! மஹிந்த்ரா ஜீப் ட்ராக்டர் இத்யாதிகளைத் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்! மற்ற ஏழு பேருமே குட்டி மீன்கள்!   

ஜாமீன் கிடைத்து, தண்டனையை அனுபவிப்பது கொஞ்சம் தள்ளிப் போடப் பட்டிருப்பதாக முப்பது நிமிடத்திற்கு முந்தைய செய்தி சொல்கிறது.



தப்பி விட்ட அல்லது சட்டத்தில் சிக்காத கொலைகாரச் சுறா மீன்களை இந்திய நீதித்துறையோ, இந்திய அரசோ கைகாட்டக் கூட இல்லை என்பது தான் இந்தத் தீர்ப்பின் மிகப் பெரிய பரிதாபம்!  

அவர்கள் தப்பிப்பதற்கு இந்திய அரசின் கையாலாகாத் தனமே காரணம் என்பது தொடரும் இன்னொரு ஏமாற்றம்! ஜனங்கள் இப்படி ஏமாற்றப் படுகிற விதங்களின் பட்டியல் இன்னும் பெரிது!


போபால் விஷ வாயு விபத்து! விபத்து என்று தற்செயலாகச் சொல்ல முடியாத படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பொறுப்பற்ற நிர்வாகம் விளைவித்த கோரம், பதினைந்தாயிரம் மக்கள் மாண்டனர் ஐந்து லட்சம் பேர்களுக்கு மேல் பாதிக்கப் பட்டனர்.

வாரன் ஆண்டர்சன், யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர், கைது செய்யப் படுகிறார்! வெறும் இரண்டாயிரம் டாலர் பிணைத் தொகையைக் கட்டிவிட்டு விடுவிக்கப் படுகிறார்.விசாரணைக்குத் திரும்புவதாக ஒரு வெற்று வாக்குறுதி! பத்தாவது குற்றவாளியாக யூனியன் கார்பைட் நிறுவனம்! தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப் பட்ட ஆண்டர்சனை, நீதி மன்றத்தின் முன் கொண்டு வர இந்திய அரசு  எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதோடு மட்டுமில்லை, தன்னுடைய சொந்த ஜனங்களைப் பாதுகாக்க எந்த நிவாரண நடவடிக்கையையும் இந்திய அரசு முயற்சிக்கவே இல்லை.

ஆனால் மக்களுடைய கோபத்தைத் தணிக்க, தாங்கள் சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக  ஒரு நாடகத்தை இந்திய அரசு திட்டமிட்டே அரங்கேற்றிய மாதிரித் தான் பின்னால் நடந்த சம்பவங்கள் அத்தனையும் சுட்டிக் காட்டுகின்றன. 

1986 இல் அமெரிக்க நீதி மன்றத்தில் இருந்த இந்த வழக்கு இந்தியாவுக்கு மாற்றப்பட்டதே, பாதிக்கப் பட்ட ஜனங்களுக்கு இழைக்கப் பட்ட மிகப் பெரிய துரோகம். அதைவிட, 3300 கோடி டாலர்கள் நஷ்ட ஈட்டைக் கோரி வழக்குத் தொடர்ந்தது  இந்திய அரசு., மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் 1989 இல் வெறும் நானூற்று எழுபது  கோடி டாலர்களை நட்ட ஈடாகப்பெற்றுக்  கொள்வதற்கு சம்மதிப்பதாக, நீதி மன்றத்திற்கு வெளியே செய்து கொள்ளப் பட்ட சமரசத் தீர்வாக இந்திய அரசு ஏற்றுக் கொண்டதற்குப் பின்னால் என்ன நடந்திருக்கும்? இதை ஊகிக்க ஷெர்லக் ஜோம்ஸ், ஜேம்ஸ் பான்ட் எவருமே உதவிக்கு வர வேண்டாம்! சின்னக் குழந்தை கூட சொல்லி விடும்!

நாட்டு நலனைப் பற்றிக் கவலைப்படாத அரசியல்வாதிகள், முதுகெலும்பில்லாத அரசு, அமெரிக்க நிர்பந்தத்தை எதிர்த்து நிற்க முடியாத கோழைத் தனம், அப்புறம் இருக்கவே இருக்கிறது, கண்ணசைவுக்கு ஆடினால் கிடைக்கும் சன்மானங்கள்!

உச்ச நீதிமன்றமே 1996 இல் இந்தக் குற்றச்சாட்டை நீர்த்துப் போகச் செய்கிற மாதிரியான ஒரு முடிவை எடுக்கிறது. வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு வரவழைக்க இந்திய அரசு அமெரிக்க நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது. வழக்கம் போலவே குளறுபடிகளுடன்! இருபது வருடங்களுக்குப் பின்னால் அமெரிக்க அரசு, அந்தக் கோரிக்கையில் ஏதேதோ ஓட்டை இருப்பதாக, மறுத்து விடுகிறது.

இந்தக் கண்ணராவிகள் எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்! சம்மதம் சொல்லி வாங்கினார்களே நட்ட ஈடு, அதையாவது பாதிக்கப் பட்டச மக்களுக்கு நிவாரணமாக வழங்கினார்களாமா? 


அதுவும் இல்லை! இன்றைக்கு வரைக்கும் இல்லை! பெயரளவுக்கு ஒரு மருத்துவ மனை, சிகிச்சை என்று ஆரம்பித்ததோடு சரி! நட்ட ஈட்டை இன்னும் காலதாமதம் செய்யாமல் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று இருபத்து நான்கு வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு சொல்லி இருக்கிறது!

நச்சுவாயுவின் கோரம் இறந்த பதினைந்தாயிரம் மக்களோடு முடிந்து விட்டதா? இல்லை! இன்னமும் பூட்டிக் கிடக்கும் யூனியன் கார்பைட் ஆலையின்  உள்புறத்தில் பாதரச நஞ்சுக் கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமலேயே அப்படியே தான் இருக்கின்றன! கிரீன் பீஸ் இயக்கத்தினர் காட்டும் அக்கரையில் ஒரு கோடியில் ஒரு பங்கைக் கூட, இந்திய அரசு தன்னுடைய சொந்த ஜனங்களுடைய நலனில் காட்டவில்லை!

இன்னொன்றையும் சேர்த்துப் பாருங்கள்! ருசிகா மானபங்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், குற்றவாளியான போலீஸ் அதிகாரி ராதோருக்கு நீதி மன்றம் முதலில் விதித்தது வெறும் ஆறு மாத சிறைத் தண்டனை மட்டுமே! அதை அப்பீல் செய்து போராடிய பிறகே, பதினெட்டு மாத தண்டனையாக அதிகரிக்கப் பட்டது.

அதுவும் எவ்வளவு காலம் கழித்து? 


அரசியல் வாதிகளை நம்ப முடியவில்லை! அரசு இயந்திரம், ஊழியர்களை நம்பிப் பயனில்லை! நீதித் துறையாவது கொஞ்சம் நீதி கிடைக்கச் செய்யுமா என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கு, நீதித் துறையும் பலவீனப் பட்டுப் போயிருப்பதையே சமீப காலத் தீர்ப்புக்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இதை இங்கே மீண்டும் மன்மோகன் சிங் நிறைவேற்றத் துடிக்கிற அணு உலை விபத்துக்கான நட்ட ஈட்டு
மசோதாவோடு சேர்த்துப் பாருங்கள்!

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் சிக்கிக்கொண்டது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சறுக்கல். இவர்கள் செய்துவிட்டுப் போய் விடுகிற கிறுக்குத்தனங்களை, ஜனங்கள் அல்லவா சுமந்தாக வேண்டி இருக்கிறது?

பிரச்சினை வந்தால் சமாளிக்கும் திறமை, உறுதி, நேர்மை,
அப்புறம் கொஞ்சமாவது முதுகெலும்பு இருக்கிறதா என்பதை அவர்கள் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கே அது தெரியாது!




 
யூனியன் கார்பைடின் இன்றைய உரிமையாளர்களான டவ் கெமிக்கல்ஸ் மட்டுமல்ல,  துப்புக் கெட்ட காங்கிரஸ் கட்சியும், பொறுப்பில்லாத  இந்திய அரசும் பதில் சொல்லியே ஆக வேண்டும்!

பதில் சொல்ல வைக்கிற வலிமை மக்களிடமே இருக்கிறது!