ஒரு அழகிய கனவு கலைகிற நேரம்!


 
ஒரு அழகிய கனவு கலைகிற நேரம்!

சில நாட்களுக்கு முன்னால் யாகூ! 360 தளம் மூடப்பட்டபோது, அங்கே இணையத்தில் பழகக் கிடைத்த சில நண்பர்களைப் பிரிந்துவிடப் போகிறோம் என்ற வருத்தம், ஒரு பதிவாக வெளியானது. 2006 நவம்பருக்குப் பின்னால், அங்கே இருந்த என்னுடைய நட்புவட்டத்தைக் கலைத்துவிட்டு, ஒதுங்கியே இருந்தபோதிலுமே கூட, எல்லோரையும் சேர்த்து வைத்த தளமே காணாமல் போய்விடப்போகிறது என்ற ஆதங்கம், அந்தப் பதிவில் ஆற்ற மாட்டாமையோடு வெளிப்பட்டிருந்தது. இதேமாதிரி,. சிஃபி  தன்னுடைய தமிழ்த் தளத்தைக் கலைத்தபோது அதில் பணியாற்றின அண்ணா கண்ணன் 'காற்றில் கரைந்த தளம்' என்று தன்னுடைய உழைப்பு, முயற்சி எல்லாமே சேர்ந்தே காணாமல் போனதைக் குறித்து வருத்தப் பட்டிருந்தார்.
 
மின்னெழுத்துக்கள் கரைந்து போனது இருக்கட்டும்! நம்மோடு கலந்து, பழகி, உரையாடி, வாழ்க்கையின் சில அற்புதமான தருணங்களை ஏற்படுத்தித் தரும் மனிதர்களே, கனவாகக் களைந்து போவதென்றால்....?

வாழ்க்கையில் ஜனன மரணங்கள் இயல்புதான்! தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதுதான்! ஆனாலும், நாம் நிரந்தரமானவர்கள், அல்லது நிரந்தரமாக இருக்கவே படைக்கப் பட்டவர்கள் என்கிற உணர்வு இல்லாத உயிரே இல்லை! அப்படி ஒரு உணர்வு, உயிரின் மிக  அடிப்படையான மூலக் கூறாகவே இருக்கிறது.

நவம்பர் 23, 2009. திங்கள் கிழமை முன்னிரவு 7 மணி

கிண்டி ரயில்வே  ஸ்டேஷனில் எப்போதும் போல ஜனங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், சடகோபன் என்ற கண்ணன். ஸ்டேட் வங்கியில் ஸ்கேல் 3 அதிகாரியாகப் பணி புரிந்து  ஒய்வு பெற்றவர். அனுபவமுள்ள அதிகாரிகளை, கிட்டத்தட்ட கடைசியாக வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் தருகிறோம், வருகிறீர்களா என்று வந்த அழைப்பை நிராகரித்து விட்டு, வேதம் படிக்க வேண்டும் என்ற ஆசையோடு, காலையில் நடக்கும் இரண்டு வகுப்புக்களுக்கும் தவறாமல் போய்க் கலந்து கொண்டு, வேதம் அத்யயனம் செய்வதில் கொஞ்சம் தேர்ச்சியுமே பெற்றிருந்தவர்!.

அறுபத்திரண்டு வயது நிறைவாகி,அறுபத்துமூன்றில் அடியெடுத்து வைத்து சில நாட்களே ஆகியிருந்த நேரம். ஒரு கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்புகிற நேரம், என்ன நடந்தது என்பதை எவருமே ஊகிக்க முடியாத ஒரு தருணம், மின்சார ரயில் சீறிப் பாய்ந்த வேகமோ என்னவோ, கால் இடறி விழுந்தவர், தலையில் அடிபட்டு........

இரவு ஒன்பது மணியாகியும் வீடு திரும்பவில்லையே என்று அவரது மனைவி கவலைப் பட்டு உறவினர்களிடம் விசாரிக்கச் சொல்ல, அங்கே இங்கே என்று அலைக்கழிக்கப்பட்டுக் கடைசியில் அரசு மருத்துவ மனை மார்ச்சுவரியில்... எத்தனையோ அடையாளம் தெரியாத குவியலோடு ஒன்றாக. மறுநாள் செய்தித் தாட்களில் ஒரு ஓரத்தில் வெறும் செய்தியாக! அவ்வளவுதானா?

இளைய சகோதரனும், அவரது மகனும் இரவு முழுவதும், அழுகையை அடக்கிக் கொண்டு மருத்துவ மனை வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்த நேரத்திலும், உறவினர்கள், நண்பர்களுக்கு, தகவல் சொல்லிக் கொண்டிருந்ததும்.........

இரவு பதினொன்று-பதினொன்றரை மணிவாக்கில் இவனுக்கும் தகவல் வந்தது. தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு, எது கனவு எது நிஜம் என்று பிரித்துப்பார்க்கக் கூடத் தோன்றாமல்....அதற்கு முந்தின வெள்ளிக் கிழமை இரவும், சனிக்கிழமை காலையில் கூடஅலைபேசியில்  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தது....அதற்கும் பதினைந்து  இருபது நாட்களுக்கு முன்னால் தான் மதுரையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது........

எல்லாமே கனவு தானா? கலைந்துபோவதற்குத்தானா இத்தனை கனவுகளும்?

குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்"இறை"ப் போதும் வையாரே

இப்படி ஒரு வலைக் குழும விவாதத்தில் ஆமாச்சு என்ற ம.ராமதாஸ் தருமை ஆதீன திருமந்திர வரிகளைச் சொல்லி, இறை என்ற வார்த்தை நொடி என்கிற பொருளையும் தருவதாக எழுதியிருந்ததைப் படித்த நினைவும் வந்து முட்ட, அழக் கூடாது, அழுவது அந்த உன்னதமான மனிதனுக்குச் செய்யும் மரியாதை இல்லை என்ற பிடிவாதத்தோடு, இந்தப் பத்து நாட்களில் வேறு வேறு விஷயங்களைத் தொட்டு இவன் வெளியே உலாவிக் கொண்டிருந்த தருணங்களில், மனம் மட்டும் சடகோபன், கண்ணன், கண்ண மாமா   என்றும், ஒவ்வொருவருக்கும் இன்னம் வேறு உறவு முறைகளிலும் அறியப்பட்ட  தன்னைச் சுற்றி இருக்கிற எல்லோரிடத்திலும், ஒரு நல்லெண்ணத்தையும், கலகலப்பையும் உண்டாக்கத் தெரிந்த  அந்த உன்னதமான உயிர்! பழகிய காலம், பழகிப் பேசிய காலமும் வெகு குறைவு தான்  என்றாலுமே, பூவின் வாசம் நீடித்திருப்பதைப் போல, பழகிய அந்த இனிமையான தருணங்கள், நினைத்துப் பார்க்கும் போதே மலர்ச்சியையும், புன்னகையையும் வரவழைப்பதாக........கனவும் நினைவும் சுற்றிச் சுற்றி.......

இன்றைக்குப் பத்தாம் நாள் கரும காரியங்கள் இந்நேரம் நடந்து முடிந்திருக்கும்!

எல்லாம் கனவுதான்! கலைய மறுக்கிற கனவாக, இப்போதும் முன்னால் நிஜமாகவே வந்து நிற்கிறது!

"ஃபர்ஸ்ட் கிளாஸ்!"

காபியைக் குடித்து முடித்ததும் மனதில் கொஞ்சம் கூடப் பொய்யில்லாமல் வருகிற முதல் வார்த்தை!

"போங்கோ மாமா! செகண்ட் டிகாக்ஷன் தான் இருந்தது, அதைப்போய்..." அவருடைய தமக்கை மகள் வெட்கப்பட்டுச் சொல்லும் போது  "ஃபர்ஸ்டா செகண்டான்னெல்லாம் தெரியாது, ஆனா காபி "ஃபர்ஸ்ட்கிளாஸ்!" மனதின் அடித்தளத்தில் இருந்து, குறை எதையுமே பார்க்கத் தெரியாத வார்த்தைகள். தமக்கை வீட்டுக்கு வருகிற சந்தர்ப்பங்களில், அரிவாள்மணையை    எடுத்துக் கொண்டு, காய்கறிகளை லாவகமாக நறுக்கிக் கொடுத்துக் கொண்டே ஊர் சமாசாரம், உறவு சமாசாரம் என்று பேசிக் கொண்டே......அந்த பாந்தம்!

குழந்தைகள் இல்லையென்ற குறையே இல்லாத மனிதன்! அத்தனை குழந்தைகளையும் வேற்றுமையில்லாமல் நேசிக்கத் தெரிந்தவருக்கு, தனியாக எதற்கு என்று ஆண்டவன் நினைத்தானோ தெரியாது. ஐந்து வருடங்களுக்கு முன்னால், உறவினர் ஒருவரது ஷஷ்டி அப்த பூர்த்திக்குப் போய் இருந்த தருணம், இன்னொரு தமக்கையின்  பேரக் குழந்தைகளுடன் கலகலப்பாக....அப்புவும், வர்ஷுக் குட்டியும் என்னமாகக் கதை அளந்து கொண்டிருந்தார்கள்! கொஞ்சம் தள்ளியிருந்தே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனை அருகே அழைத்து, "என்ன சொல்றா கேளும்"
என்று எடுத்துக் கொடுத்தவுடனேயே, அந்தக் குழந்தைளும் மறுபடி தங்கள் அளப்பை அரங்கேற்றம் செய்த அந்தத் தருணம்........!

தாய்க்குத் தலைமகன்! தாய் சொல்லைத் தட்டாத தனயனும் கூட! கொஞ்ச நேரம் பார்த்துப் பேசியவர்கள் கூட, தங்களுடைய நெருங்கிய உறவாக உணரமுடிந்த ஒரு மனிதனைப் பார்க்கிற, பக்கத்தில் இருந்து பேசிப் பழகுகிற வாய்ப்பு இவனுக்குக் கிடைத்திருக்கிறது என்பதே ஒரு பெரும் புண்ணியம்! நினைத்துப் பார்க்கும் போது, இப்படி எத்தனை எத்தனை நல்ல மனிதர்களோடு பழகும் வாய்ப்பை, இறைவன் எனக்குத் தந்திருக்கிறான் என்று அவனை வணங்கத்தோன்றுகிறது!

"ஃபர்ஸ்ட்கிளாஸ்!"

எல்லாமே முதல் தரம் தான்! எதையுமே கடைத்தரமாகவோ, கீழ்த்தரமாகவோ பார்க்கத் தெரியாத ஒரு உயர்ந்த மனிதனை, கொஞ்சம் பக்கத்தில் இருந்து பார்ப்பதற்கு, நல்ல எண்ணங்களையே  விதைத்துக் கொண்டுபோன ஒரு ஜீவனை நன்றியோடு நினைப்பதற்கு, வார்த்தைகளில் வடிக்க நான் செய்யும் இந்த முயற்சி........இது என்ன தரத்தில் இருந்தாலுமே, "ஃபர்ஸ்ட்கிளாஸ்!

இது தான் சடகோபன் என்றும் கண்ணன் என்றும், கண்ண மாமா என்றும் அறியப்பட்ட புண்ணிய ஜீவன் ஏற்றுக் கொள்ளும் விதம்!

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
  


 

குறை ஒன்றும் இல்லை! மறைமூர்த்தி கண்ணா!
குறை ஒன்றும் இல்லை! குறை ஒன்றும் இல்லை!

உஷார் ஐயா உஷாரு! பதிவர்களே உஷாரு!



தமிழில் எழுதவேண்டும், அரட்டை அடிக்கவேண்டும் என்ற ஆவலில் தான் பதிவுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் கணிப்பொறி வல்லுனர்களோ, நிரல் எழுதத் தெரிந்தவர்களோ அல்ல. பிறர் கொடுக்கும் விட்ஜெட்டுக்கள், இன்னும் வேறு விதமான நிரலிகளை, நம்பிக்கையுடன் அப்படியே நம்முடைய பதிவுகளில் சேர்த்துக் கொண்டு விடுகிறோம்!

நம்பிக்கை வைத்துச் சேர்த்துக் கொண்ட எல்லாமே நல்லவை தானா? தான் கெட்டதோடு ஊரையும் சேர்த்துக் கெடுப்பதாக இருக்காது என்பது என்ன நிச்சயம்?

இலவசங்கள் எல்லாமே ஒரு உள்நோக்கத்தோடு தரப்படுபவை தான் என்பதை நடப்பு அரசியலில் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு, பதிவுகளில் பயன்படுத்தத் தரப்படும் நிரல்களிலுமே சில திரிசமன் வேலை செய்வதாகவும்  இருக்கக் கூடும் என்பது ஏனோ மறந்து விடுகிறது.

இன்று முன்னிரவு நேரத்தில், உண்மைத் தமிழன் எழுதிய இட்லி வடை சட்னி பொங்கல் சாம்பார் பதிவை ரீடரில் படித்து விட்டு, வேறு சில பதிவுகளையும் படித்துக் கொண்டிருந்தேன். மின்தடை இரண்டு முறை வந்து போன பிறகு, மறுபடி இணையத்தில் மீண்டும் உலவ வந்தபோது, நம்ம வால்ஸ் இரண்டு பின்னூட்டங்களை அனுப்பியிருந்தார். நீளத்தைச் சுருக்குங்கள் என்று அடிக்கடி சொன்னேனே! கேட்கமாட்டேன் என்கிறீர்களே! உண்மைத் தமிழன் பதிவுக்குப் போய்ப் பாருங்கள் என்று  சொல்லியிருந்தார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் போய்ப் பார்த்த போது கூட ஒன்றும் இல்லையே, இவர் இப்படிச் சொல்கிறாரே என்று உண்மைத்தமிழனுடைய வலைத்தளத்துக்குப் போய்ப் பார்த்தால் கூகிள் எச்சரிக்கை செய்தி- இந்தத் தளம் உங்கள் கணினிக்குத் தீங்கிழைக்கலாம் என்று!  அதிலேயே என்ன விவரம் என்று தேடித் பார்த்தபோது,  மூன்று தளங்கள் ஆபத்தான நிரலிகளை, உள்ளே திணிக்கிற மாதிரிக் குறிப்பிடப் பட்டிருந்தது.உண்மைத்தமிழன் தனது தளம் ஓபன் ஆகவே மாட்டேன் என்கிறது, விவரம் தெரிந்தவர்கள் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

riosvdotcom மற்றும் feedjitdotcom இந்த  இரண்டு  தளங்களும் தீங்கிழைக்கக் கூடிய மால்வேர் மற்றும் ஸ்க்ரிப்டுகளைத் திணிப்பதாகத் தகவல் இருந்தது.

தவிர தமிலிஷ்டாட்காம் தளமும், இது மாதிரி மால்வேர் மற்றும் தீங்கிழைக்கும் ஸ்க்ரிப்டுகளைத் தள்ளிவிடும் தளங்களுக்கு இணைப்புத் தருவதாக எச்சரிக்கைச் செய்தியில் இருந்தது.

தமிலிஷ் தளத்திற்குச் சென்றபோதும் கூகிள் எச்சரிக்கைச் செய்தி இருந்தது. சந்தகப் படும் படியான பட்டியலில் தற்போது தமிலிஷ் இல்லை என்று சொன்னதோடு, மேலும் சில விவரங்களைத் தந்திருக்கிறது. உண்மைத் தமிழன் மாதிரி இன்னும் இருபதுபேர் வலைத் தளங்கள் பாதிக்கப் பட்டிருப்பதான தகவல் தான் அது.

கூகிள் தமிலிஷ் தளத்திற்குத் தந்த எச்சரிக்கைச் செய்தி இதோ: தீங்கிழைக்கக் கூடியது என்று கருதப்படும் எந்த வலைத்தளத்துக்கும் லிங்க் இல்லாமல் தகவல் தரப்பட்டிருக்கிறது. இந்திய நேரம்  இரவு  பத்து மணி நிலவரப்படி.

What is the current listing status for tamilish.com?


    This site is not currently listed as suspicious.


What happened when Google visited this site?

    Of the 777 pages we tested on the site over the past 90 days, 0 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2009-11-30, and suspicious content was never found on this site within the past 90 days.

    Malicious software includes 36 scripting exploit(s).

    Malicious software is hosted on 1 domain(s), including riosvdotcom/.

    This site was hosted on 1 network(s) including AS8560 (SCHLUND).

Has this site acted as an intermediary resulting in further distribution of malware?

    Over the past 90 days, tamilishdotcom appeared to function as an intermediary for the infection of 20 site(s) including nilaraseeganonlinedotcom/, vettipayaldotcom/, saravanakumarandotcom/.

Has this site hosted malware?

    No, this site has not hosted malicious software over the past 90 days.

உங்கள் பதிவுகள் பாதிக்கப் படும் நிலைமையை எதிர்கொள்ள, பதிவுகளை பாக் அப் செய்து கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமான, தேவையே இல்லாத  விட்ஜெட்டுக்களை பயன்படுத்தாதீர்கள். முக்கியமாகப் பதறாதீர்கள்! 

பதிவுகள் என்று மட்டும் இல்லை, வாழ்க்கையிலுமே கூட எந்த விதமான சோதனைகள் வந்தாலுமே கூட, விஷயம் தெரிந்தவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி  மோசமான விளைவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஜெயிக்கலாம் வாங்க!