எப்போது பார்த்தாலும் அரசியல்தானா? எழுதுவதற்கு வேறு விஷயங்களே இல்லையா என்று சமயங்களில் எனக்கும் கூட சலிப்பு வரும்! நம்பமுடிந்தால் நம்புங்கள்! இன்றைக்கு அரசியல் கலக்காமல் ஒரு பதிவை எழுத வேண்டும் என்பதற்காக இத்தனை நேரம் பொறுமையாகக் கையைக் கட்டிக் கொண்டிருந்தேன்! பின்னணியில் இந்தப் பாடலை யூட்யூபில் கேட்டதும் ஏன் இதுமாதிரிப் பாடல்கள், படம் பற்றிப் பேசக்கூடாது என்கிற எண்ணம் வந்துவிட்டது! ஆறோடும் மண்ணில் என்று தொடங்குகிற இந்த அருமையான பாடலைக் கொஞ்சம் கேளுங்கள்!
சிவாஜி கணேசனுடைய பல படங்களில் அரசியலையும் சேர்த்தே நடித்திருக்கிறார்! கப்பலோட்டிய தமிழன் வ உ சி ஆக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, ஒரே தேசம் என்பதை வலியுறுத்தும் பாரதவிலாஸ் நாயகனாக, நடித்திருக்கிறார் என்பது தெரிந்த செய்தியாக இருக்கலாம்!ஆனால் சர்வோதய இயக்கம் நிறுவிய ஆசார்ய வினோபா பாவேவின் பூதான இயக்கத்தை வலியுறுத்துகிற ஒரு படத்திலும் கூட சிவாஜி நடித்திருக்கிறார் என்று சொன்னால் என்ன படம் என்று புருவத்தை நெறித்து யோசிக்கிற மாதிரி ஆகிவிடும் என்பதால் நானே அந்தப் படத்தின் பெயர் பழனி அதில் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக விவசாயம் செய்து வருவதில் மேலே பார்த்த பாடலும் இருக்கிறது என்று சொன்னால், எத்தனைபேர் யூட்யூப் லிங்க் தராமலேயே தேடிப்பிடித்து பார்க்க மனது வைப்பீர்கள்? பிகிலு திகிலு என்றில்லாமல் கொஞ்சம் நல்ல கதைக்களம், அருமையான பாடல்கள் அதுபோக சலிப்புத் தட்டாமல் பார்க்கக் கூடிய படம் என்றால், அது பழசாய் இருந்தால் தான் என்ன?
இந்தப்படத்தை சிறுவனாக 1964 இல் ராமநாதபுரம் சண்முகா தியேட்டரில் பார்த்தேன்! மெல்லிசை மன்னர்களுடைய இசையில் என்றும் ரசிக்கக் கூடிய பாட்டு! நாகேஷ் சச்சு இருவருடைய நடனமும் இன்றும் ரசிக்கிறமாதிரித்தான் இருக்கிறது!
சின்னப் பெண்ணான போதிலே! இந்தப்பாடலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்று ஒலிபரப்பிக் கொண்டிருந்த நாட்களில் பலரும் கேட்டிருக்கலாம்! ஆரவல்லி! இந்தப் படத்தை 1979 இல் திருச்சி கீழப்புலிவார் ரோட்டில் முருகன் தியேட்டரில் பார்த்தேன்!
Que Sera Sera, Whatever will be will be, The future's not ours to see, Que Sera Sera, What will be will be இதன் ட்யூனை மட்டுமல்ல இந்தப்பாடல் வரிகளையும் அந்த நாட்களிலேயே அப்பட்டமாகக் காப்பி அடித்திருக்கிறார்கள்! ஆனாலுமென்ன? கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது!
இந்தப் பாட்டும் கூட கே சரா சரா என்று தான் ஆரம்பிக்கிறது! மேலே பார்த்த பழைய பாடல் மாதிரி இல்லையென்றாலும் பிரபு தேவாவும் மாதுரி தீட்சித்தும் ஆடுவதாலேயே இது பிரபலமாகிவிட்டது போல!
கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாடன் சாமி!
மீண்டும் சந்திப்போம்.