கனிமொழி அப்டேட்ஸ்! சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நாளை.......?


தாத்தா மகளைப் பார்ப்பதற்காக முதலில் நேற்றே டில்லி செல்ல ருப்பதாக முதலில் செய்திகள் வெளியாகின. திருச்சி தாதா நேருவுக்குக் காலைக் கட்டி ஓட விட்டது மாதிரியே, தாத்தாவின் பயணமும் ஒருநாள் தள்ளி, இன்றைக்கு மாலை இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. முன்னால் போன போது, சோனியாவை சந்திக்காமலேயே தாத்தா திரும்பினார். சோனியாவை தர்மசங்கடப்படுத்த விரும்பவில்லை என்று அன்றைக்கு சாக்கு சொல்லப் பட்டது. ஆனால், நாளை சோனியாவை சந்திக்க டி ஆர் பாலு மூலமாக அப்பாயின்ட்மென்ட் கேட்கப் பட்டிருக்கிறதாம்! கிடைத்ததாமா?
பயணம் ஒத்தி வைப்பு எதற்கு என்பதற்கும் காரணமிருக்கிறது. நாளைதான் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சிபிஐ இதுவரை ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பதினேழு பேர் மீதும் நம்பிக்கை மோசடி என்ற புதுக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பதன் மீது முடிவெடுக்கப்போகிறது. சிபிஐ வாதத்தை ஏற்றுக் கொண்டு புதுக் குற்றச்சாட்டிலும் குற்றம் பதிவு செய்யப்படுமானால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அத்தனை பேரும் ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்படும்.

அமைச்சர் என்ற வகையில் ஆ.ராசா இந்தக் குற்றச்சாட்டில் வலுவாகவே சிக்குகிறார். கூட்டுச் சதியாளர்  என்ற வகையில் ராஜ்யசபா உறுப்பினரான கனிமொழியும் கூட இந்தப்பிரிவின் கீழ் வர முடியும்! அதுவும், கூட்டுச்சதி நிரூபிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே! ஆனால் மற்றவர்கள்?

எல்லோரையும் சகட்டுமேனிக்கு இந்தக் குற்றச்சாட்டில் சேர்த்திருப்பது ஒன்றே சிபிஐ இதை தன்னுடைய எஜமானர்கள் சார்பில் விடுக்கும் மறைமுக மிரட்டலாகவும், சும்மா உளுளாக்காட்டிக்குத்தான் என்பதையும் பப்பரப்பா என்று காட்டிக் கொண்டிருக்கிறது. ராசா, சிதம்பரத்தையும் மன்மோகன் சிங்கையும் சாட்சிகளாகக் கூப்பிட்டு மிரட்டுகிறாரா, பிடி,என்பங்குக்கு நானும் ஒரு பதில் மிரட்டல் விடுகிறேன் என்ற மாதிரி இருக்கிறதே தவிர, குற்றச்சாட்டில் சரக்கு எதுவும் இருப்பதாகக் காணோம்!

செப்டம்பர் இரண்டாம் வாரத்திலேயே மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யவிருப்பதாக சிபிஐ சொல்லிக் கொண்டிருந்தது. தயாநிதி மாறன், தயாளு அம்மாள் இருவரில் ஒருவரோ அல்லது இவருடைய பெயர்களுமே சேர்க்கப்படலாம் என்று ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இப்போது, சுப்பிரமணியன் சுவாமி வேறு, விரைவில் தமிழகத்தை சேர்ந்த ஒரு முக்கியப் புள்ளியும் இதில் சிக்குவார் என்று சொல்ல  ஆரம்பித்திருக்கிறார்.
மூன்றில் ஒன்றா அல்லது இரண்டா?அல்லது மூன்றுமேவா?

தாத்தாவின் பயணத்துக்கு, ஆக ஒரு அர்த்தமிருக்கிறது! ஆ.ராசாவைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம் என்று முதலில் எடுத்த நிலைபாடு போதாதென்று, கனிமொழி வெளியே வரவேண்டுமானால் வேறொருவர் உள்ளே போக வேண்டியிருக்குமோ என்பதற்கும் ஒரு முடிவை சொல்லி விட்டு வர வேண்டி இருக்கும். என்ன சொன்னாலும், எடுபடுமா என்பதுமே கூட ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரியான கேள்விதான்!
 

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று ஜோதிடத்தில் சொல்வார்கள். நான் ஜோதிடத்தை நம்புகிறவன் அல்ல!

ஆனாலும் கெட்டவர்கள், கெட்டவர்களோடு கூட்டணி அமைத்தாலும் அப்படித்தானா? .மு.கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்று, இரண்டின் கதையைப் பார்த்தால் ராஜ யோகம் கிடைத்து விட்டதாகப் புகுந்து விளையாடியது என்னவோ உண்மை! ஆனால்,வெர்ஷன் இரண்டில், கதை கந்தலாகிக் கொண்டு இருக்கிறது என்பதை சென்ற ஆண்டு ஒவ்வொன்றாக வெடித்துக் கிளம்பிய ஊழல்கள் நிரூபித்தன.
கூட்டணி தர்மம் என்பதற்கு பல விசித்திரமான வியாக்கியானங்களை மாற்றி மாற்றி எழுத வேண்டிய நிர்பந்தம் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான (??) கூட்டணி அரசுக்கு ஒவ்வொரு நாள் விடியும் போதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு ஓட்டையை அடைக்கப்படாதுபாடுபட்டுக் கொண்டிருக்கும் போதே இன்னும் ஒன்பது இடங்களில் ஓட்டை விழுந்து பெரிதானால் எப்படி இருக்கும்? அந்தோனியோ மைனோ (எ) சோனி(யா)வைக் கேட்டுப்பாருங்கள்! அவஸ்தை என்னவென்று தெரிய வரும்!
அதனால்தானோ என்னவோ, 2010 ஐ ஊழல்களின் ஆண்டு என்று சில ஊடகங்கள் வர்ணித்தன!பிரச்சினையின் ஒரு முனை மட்டும் தான், அதுவும் கூட ஒரு சிறிய கோணத்தில் மட்டும் தான் வெளியே தெரிகிற மாதிரி இதுவரை இந்த விவகாரங்கள், குதிரைக்குக் கண்ணைக் கட்டிய மாதிரியே போய்க் கொண்டிருக்கின்றன.முதல்தடவையாக, இனிமேலும் சும்மா இருக்க முடியாது, சும்மா இருந்தால் பிஜேபி கட்சித்தலைவர் அத்வானி சொல்வதுபோல ஒட்டு மொத்த அமைச்சரவையே திஹார் சிறைக்குள் போக வேண்டி இருக்கும் என்ற நிலையில் செலக்டிவாக சிலரை மட்டும் கைது செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

அரசியல்வாதிகளில் சிலர் மாட்டிக் கொண்டார்கள் சரி! ஆனால், இவர்களால் ஆதாயம் அடைந்த கார்பரேட் முதலாளிகள் இன்னமும் சுதந்திரமாகத் தான்   இருக்கிறார்கள்? சில நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் சிறைக்குள் இருக்கிறார்கள். அதேநேரம் அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் கூட, சில நிறுவனங்கள் குறிப்பாக டாட்டா இன்னமும் விசாரணை வளையத்துக்குள் வரவே இல்லை! மாறாக, நீதித்துறை, நாடாளுமன்றம், நிர்வாகம், ஏன் நாலாவது தூணாக வர்ணிக்கப் படுகிற ஊடகங்களுமே கூட  டாட்டாவுக்கு குற்றமே செய்யாதவர், உத்தமர் ரேஞ்சுக்கு சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் விவகாரமே டாட்டா-தயாநிதி மாறன் மோதலுக்குப் பின்னால் தான் பூதாகாரமாக உருவானது என்பதை நிரா ராடியாவின் டேப் செய்யப்பட்ட உரையாடல்களில் வெளிப்பட்டதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த ஊழல் விசாரணை போய்க் கொண்டிருக்கும் திசையைக் கவனியுங்கள்.

கனிமொழி மீதான புதிய குற்றச்சாட்டு ஏற்கப் படுமா?

தினமணி செய்தி இது!: 21 Oct 2011 01:41:01 AM IST


புது தில்லி, அக். 20: 2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட 17 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கிறது. இந்த உத்தரவின் அடிப்படையிலேயே கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும்.

புதிய குற்றச்சாட்டு: 2ஜி அலைக்கற்றை வழக்கில் கடந்த மாதம் 26-ம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் 409-ம் பிரிவின் கீழ் நம்பிக்கை மோசடி எனும் புதிய குற்றச்சாட்டை சி.பி.ஐ. பதிவு செய்தது. இதில் ராசா மட்டும் இன்றி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் சேர்க்கப்பட்டனர்.

இந்தக் குற்றச்சாட்டு தாக்கலாகும் முன்னர் கனிமொழிக்கு அதிக பட்சமாக 5 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது, புதிய குற்றச்சாட்டால் கனிமொழி உள்பட அனைவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

நாளை உத்தரவு: இந்த வழக்கில் ராசா, கனிமொழி உள்பட 17 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகளை இறுதி செய்து நீதிபதி ஓ.பி.சைனி சனிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கிறார்.

சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்று நீதிபதி கருதினால் அந்தக் குற்றச்சாட்டை பதிவு செய்யலாம். குற்றச் சாட்டுகளில் முகாந்திரம் இல்லை என்றால் குறிப்பிட்ட குற்றச் சாட்டைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிடலாம்.

புதிய குற்றச்சாட்டுக்கான 409 பிரிவு (நம்பிக்கை மோசடி) உத்தரவையும் அன்றைய தினம் நீதிபதி பிறப்பிக்கிறார். புதிய குற்றச் சாட்டை உறுதி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தால், சாட்சி விசாரணை தொடங்கும்.

வழக்குரைஞர் விளக்கம்

"கனிமொழி மீது 409- வது பிரிவின் கீழ் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து உள்ளது. இந்தக் குற்றச்சாட்டை அவர் மீது பதிவு செய்ய எவ்வித முகாந்திரமும் கிடையாது. இதற்கு ஏதுவாக பல முன் உதாரணங்களை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளோம். கனிமொழி மீது நீதிபதி சனிக்கிழமை பிறப்பிக்கும் உத்தரவு இறுதியானது அல்ல. அதை எதிர்த்து சாட்சி விசாரணையின்போது எங்கள் வாதங்களை எடுத்து வைப்போம்'' என்று கனிமொழி சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.


2 comments:

  1. அந்தோனியோ மைனோ (எ) சோனி(யா) வின் மருமகன் பிரியாங்காவின் கணவன் ராபர்ட் வாட்ரா மீது சுப்ரமணிய சாமியின் குற்றச்சாட்டுக்கள் என்ன வாயின? 2-G ஊழலில் வாட்ராவுக்கு கிடைத்த பங்களிப்பினை ஏன் எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை?? ராபர்ட் வாட்ரா இந்தியாவின் வருங்கால பிரதமாராக வரும் வாய்ப்புக்கள் இருப்பதாக சிலர் எழுதுகிறார்களே இதெல்லாம் நியாயமா? இது பற்றி தாங்கள் ஒரு பதிவு இட வேண்டும் என்று அன்புடன் வினவுகின்றேன்.நன்றி.

    ReplyDelete
  2. வாருங்கள் மாணிக்கம்!

    சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டுக்களை இதுவரை ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை வெறும் கோமாளியின் உளறல்கள் என்று மட்டுமே சித்தரித்து ஒதுக்கி வைத்திருந்த நிலை மாறி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே சீரியஸாக எடுத்துக் கொண்டு கேட்க ஆரம்பித்திருக்கிறது.

    ஜூலை மாதம் டி என் ஏ யில் வெளிவந்த அவரது பேட்டியை வைத்துக் கொண்டு ஆகஸ்ட் மாதமே குற்றப்பத்திரிகையைத் தேதியிட்டு இரண்டு மாதம் கழித்தே பதிவு செய்த டில்லிப் போலீஸ், அந்தோனியோ மைனோவின் கண்ணாடி மாளிகை எந்த அளவுக்குக் கலகலத்துப் போயிருக்கிறது என்பதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியது.சுவாமி அமெரிக்காவில் இருந்த தருணத்தில் காங்கிரஸ் குண்டர்கள் அவரது வீட்டைத்தாக்கினார்கள். அப்போதே சுவாமி, தன்னுடைய வீட்டைத்தாக்கியது மைனோவின் மருமகன் வாத்ராவின் குண்டர்கள் தான் என்று டிவிட்டரில் பகிரங்கமாகச் சொன்னார். வாத்ராவுக்கு விரைவிலேயே கச்சேரி ஆரம்பம் என்றும் கோடி காட்டி இருக்கிறார்.

    விவகாரங்கள் முற்றட்டும்! தானே சந்திக்கு வரும்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!