நிந்தை பிறரைப் பேசாமல் நினைவிலும் கெடுதல் செய்யாமல்..!


பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

தைத் திங்கள் முதல் நாள்.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் மிக உற்சாகமாகக் கொண்டாடப் படும் திருநாள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாள்.

"இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்"
என்று பாவை நோன்பிருந்து கண்ணனையே பெரும் பேறாகக் கொள்ளும் வைணவம் தான் வளர்த்த தமிழில் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலையின் முப்பதாவதும் முடிவானதுமான பாசுரம் ஓதும் நாள்.
இன்றைய சிந்தனையாக, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை இயற்றிய "சூரியன் வருவது யாராலே" என்ற தலைப்பிலான கவிதையோடு தொடங்குவோமா?


சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
தரையில் முளைத்திடும் புல்ஏது ?
மண்ணில் போட்டது விதையன்று
மரஞ்செடி யாவது யாராலே ?
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்
கருவில் வளர்ப்பது யார்வேலை ?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ ?

எத்தனை மிருகம்! எத்தனைமீன்!
எத்தனை ஊர்வன பறப்பனபார் !
எத்தனை பூச்சிகள் புழுவகைகள் !
எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள் !
எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும் தர ஒரு கர்த்தன்
யாரோ எங்கோ இருப்பதுமெய்.


அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ' நிர்வாணம்'
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம் நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!