டோண்டு ராகவனின் சில பழைய பதிவுகள்


சில வலைப் பதிவுகள் மேலோட்டமாகப் பார்க்கையில் சாதாரணமாகத் தோன்றினாலும், படிப்பவர் மனதில் ஒரு புதிய சிந்தனையோட்டத்தை ஏற்படுத்திவிடும். மாற்றத்திற்கான முதல் படியாக இந்த சிந்தனையோட்டமே இருக்கும். அந்த வகையில் திரு.டோண்டு ராகவனின் வலைப்பதிவில் சில பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது, யோம் கிப்பூர் என்ற தலைப்பில், தவிர்க்க வேண்டிய நபர்களைப் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு, அவருடைய சொந்த அனுபவம், யோம் கிப்பூர் என்ற தலைப்புக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல், அவருக்கும் ஒரு போலிப் பதிவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், ஒழிந்து போ என்கிற ரீதியில் 'பெருந்தன்மையாக' இவர் விட்டு விடுவதை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தாலும், என்றாலும் கூட இந்தப் பதிவின் தாக்கத்தில் எனக்குச் சில வெளிச்சக் கீற்றுக்கள் புலப்பட்டன.

இங்கே படிக்கலாம்

பழக்கங்களின் அடிமையாகவே இருக்கும் போது, மாற்றம் என்கிற சொல் காதில் விழுந்தாலே நமக்கு அடிவயிற்றைப் பிசைய ஆரம்பித்து விடுகிறது.

ஆனால் பிரபஞ்ச சக்தி நம்மைச் சும்மா விடுவதில்லை. கன்றுக்குட்டி வரமாட்டேனென்று நான்கு கால்களையும் விறைத்துக் கொண்டு முரண்டு பிடிக்கும் போது, உடையவன் ஒரு குச்சியினால் கொஞ்சம் அடி, கொஞ்சம் கொஞ்சல் இப்படி தாஜாபண்ணுகிறார் போலேயும், செம அடி கிடைக்கும் என்று பயம் காட்டுகிறார் போலேயும், கூட்டிச் செல்வது போல, நம்முடைய பகுத்தறிவு, விதண்டாவாதங்கள். கோழைத்தனங்கள், வீர தீர சாகசங்கள் இப்படி எல்லாவற்றையும் தாண்டி, மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒரு செல் என்கிற நிலையிலிருந்து, இன்றைக்கு ஆறறிவு படைத்த, பகுத்தறியும் தன்மை உடையதாய் மனிதனுடைய பரிணாம வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ,

மாற்றம் என்பது ஏன் பல பேருக்குக் கசக்கிறது என்று யோசிக்கையில் தான், நிறைய விஷயங்கள் புலனாகின்றன.

முதலில் பயம்- ஏற்படப்போகும் மாற்றம் எப்படியிருக்குமோ, நம்மை என்ன செய்யுமோ என்கிற பயம்.

அடுத்து பழக்கங்களின் பிடியில் சிக்கி ஒரு மாதிரி அடிமைத்தனத்திற்குப் பழக்கப் பட்டு விட்ட நிலையில், நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்கிற மாதிரி சோம்பேறித்தனம்- நான் ஏன் மாற வேண்டும் நான் மாறவே மாட்டேன் என்கிற பிடிவாதமாக மாறுகிற நிலை.

அதற்கும் அடுத்து, மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல், அதை எதிர்த்தே தீருவேன் என்கிற பிடிவாதத்தின் உச்சகட்டம்.இடையில் எத்தனை எத்தனையோ படி நிலைகள்.அத்தனைக்குள்ளிருந்தும், பிரபஞ்ச சக்தி நம்மை ஒரு உறுதியான திருவுரு மாற்றத்திற்குத் தயார் செய்து கொண்டே இருக்கிறது.

முப்பது வருடங்கள் ஒரு பொதுத்துறை வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஏகப்பட்ட முரண்பாடுகளை, மாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாத மன நிலைகளை, நிர்வாகத்தின் தலை முதல் கால் வரையில் பார்த்து சலித்து, ஒரு கட்டத்தில் இங்கே வேலை செய்வதை விட மாடு மேய்க்கிற வேலை கிடைத்தாலும் அதுவே சொர்க்கம் என்று முடிவெடுத்து வெளியே வந்தாயிற்று.

வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கையில் தான், மாற்றம் என்பது இருமுனையிலும் கூர்மையான கத்தி, எவரெவரோ,எது எதுவோ மாறவில்லை என்று போராடிக் கொண்டிருந்த போது,தன்னையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞையை இழந்து நிராயுதபாணியாய் நின்றது புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது போல, வெற்றிகளை விட தோல்விகளே மாற்றத்திற்கான குறுக்கு வழியாக மாறும்.

அன்னையைத் தேடி என்கிற தலைப்பில் [In Search of the Mother] யாஹூ மடலாடற்குழு மிக அருமையான ஆன்மீகப் பணி ஆற்றி வருகிறது.
வேலை என்று ஏதோ இன்னதென்று தெரியாமலே நாம் செய்து வருவது எப்படிப் பட்டதாக இருந்தால் நலம் பயக்கும் என்பதற்கான வழிமுறையை ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவரது உரையாடல்களிலி இருந்து மேற்கோள் காட்டி இன்று வந்திருந்த மடல்களில் இருந்து இன்றைய சிந்தனைக்கு:

WORK AS A TEST

Yes, obviously, that is one great utility of work that it tests the nature and puts the sadhak in front of the defects of his outer being which might otherwise escape him

- Sri Aurobindo

"There is no bad work - there are only bad workers. All work is good when you know how to do it in the right way. Everything. And it is a kind of communion. If you are fortunate enough to be conscious of an inner light, you will see that in your manual work, it is as if you called the Divine down into things; then the communion becomes very concrete, there is a whole world to be discovered, it is marvellous."

- The Mother

மாற்றத்திற்கான விதை நமக்குள்ளேயே இருக்கிறது.
நானே நானோ? மெல்ல மெல்ல மாறினேனோ?
எத்தகைய சூழ்நிலை, வேலை என்பதல்ல-அதை எப்படிப் பட்ட மனோபாவத்துடன் நாம் செய்கிறோம் என்பதே வேலையின் உண்மையான பயனை தீர்மானிக்கிறது. குப்பை அள்ளுவதானாலும், அரசாட்சி செய்வதானாலும் மாற்றத்தின் அடிப்படை விதி இது தான்.
இந்த ஞானம் வந்த பிறகு வேறென்ன வேண்டும்?

1 comment:

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!