பிரிவினை...! அறுபத்துமூன்றாண்டுகளுக்குப் பின்னாலும் ஆறாத ரணம்....!


Yousaf Raza Gilani calls on population to rise to flooding challenge as anger grows among 20 million people left homeless.

பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இரண்டு கோடிப் பேர்களுக்கும் மேல் வீடிழந்து, உடைமைகளை இழந்து உதவி, நிவாரணத்திற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கையில், பாகிஸ்தானியப் பிரதமரின் இந்த ஒப்பீடு, பாகிஸ்தான் என்ற தேசமே எப்படி இந்திய வெறுப்பு என்ற ஒரே ஒரு அடிப்படையின் மீது கட்டப்பட்டிருக்கும் ரவுடி அரசு என்பதைச் சொல்லும்!

எதற்கெடுத்தாலும் இந்தியர்களோடு ஒப்பிட்டு, நான் உன்னை விடப் பெரிய பிஸ்தா, பருப்பு என்று ரவுசு கட்டுவதைத் தவிர பாகிஸ்தானிய அரசியல்வாதிகளுக்கு வேறு ஒன்றுமே தெரியாது! தங்களுடைய மக்களின் நல்வாழ்வைப்பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை! 

இந்திய வெறுப்பை விசிறிக் கொண்டிருந்தால் போதும், எல்லாப் பிரச்சினைகளுக்கும் அது தான் காரணம் என்று மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கலாம்!

இந்திய வெறுப்பு துவேஷத்தைக் கழித்து விட்டுப் பார்த்தால், பாகிஸ்தான் என்ற தனி நாட்டுக்கான அடிப்படை நோக்கம் வேறு எதுவும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த அறுபத்துமூன்று ஆண்டுகளில், வெறுப்பு, துவேஷம் என்பது கொடும் நஞ்சாக இறுகிப் போயிருக்கிறது என்பதையும், இரண்டு பக்கத்திலும் உள்ள அரசியல் வாதிகள் சிக்கலை இன்னமும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.


இந்திரா காண்டி  நாட்களில் கேலியாக ஒரு கற்பனை உரையாடலைச் சொல்லுவார்கள். உள்ளூர் அரசியலில் எதிர்ப்பு மிகவும் கூடிப் போனால், ஒரு யுத்தத்தை ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொள்கிற மாதிரி! 

பாகிஸ்தானிய ராணுவத்தைப் பொறுத்தவரை, இந்தியப் பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே, பாகிஸ்தானிய மக்களை மூளைச் சலவை செய்து வருகிறது.என்பதும், இந்திய துவேஷத்தை வளர்ப்பதில் காட்டுகிற அக்கறையை பாகிஸ்தானிய மக்களுடைய நலன்களில் காட்டுவதில்லை என்பதுமே கூடத் தெரிந்த விஷயம் தான்!

இந்திய அரசியலின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம், எத்தனை தரம் சூடு பட்டாலும், சுரணை, ஞானம் வருவதில்லை  என்பது தான்!

ஆகஸ்ட் 14! 1947

இந்தியாவில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட, பாகிஸ்தான் என்ற தனி நாடாக வெட்டுப் பட்டுப் பிரிந்து போன  தினம்! 


பிரிடிஷ்காரர்கள் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து கொண்டார்கள். 

பிரித்தாளும் கலையில் வல்லவர்களான பிரிட்டிஷ் குள்ள நரிகள் செய்த வேலை, அதுவரை தோளோடு தோள் கொடுத்து தேச விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த  முஸ்லிம்களையும், இந்துக்களையும் ஒருவரை ஒருவர் நம்பாத அளவுக்கு விரோதிகளாக மாற்றி விட்டு ஓய்ந்தது தான்.

தேச விடுதலைக்கு முன்னால், இரண்டாகப் பிரிவதற்கு முன்னால், இடைக்கால அரசு என்று ஒன்று இருந்தபோதிலும், இணக்கமான சூழலை அதனால் ஏற்படுத்த முடியவில்லை என்பதை விட, இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான முன்னுரிமைகள் இருந்தன என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அங்கே அதற்கு சிறிது காலம் வரை சகோதரர்களாகப் பழகி வந்தவர்கள், வெட்டு குத்து தீவைப்பு என்று வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். 

பிரிடிஷ்காரர்களுக்குத் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இங்கே கலவரம் நடந்ததில் பெரும் திருப்தி என்று தான் சொல்ல வேண்டும்!      

பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னால், இந்த தேசத்தின் மீது தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கள், தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.இந்தத் தொடர் தாக்குதல்களைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தவறியதும், நமக்குள்ளிருந்த பிரச்சினைகளுக்குள் அந்நியனை உள்ளே புக விட்டு மத்தியஸ்தம் செய்யச் சொன்ன முட்டாள்தனத்துக்கும் விலையாக வெறும் முப்பதாயிரம்  அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த வெள்ளையர்கள் இந்த தேசத்தை வெற்றிலையை மடித்து வாய்க்குள் போட்டு விழுங்குவதைப் போல, விழுங்க முடிந்தது.

பிரிடிஷ்காரர்கள் அவ்வளவு வலிமையானவர்களா? 

புத்திசாலிகளா? ஆயுத வலிமையில் தன்னிகரற்றவர்களா? 

இப்படியெல்லாம் சொல்லி சமாதானப் படுத்திக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுமே இல்லை! அப்புறமும் எப்படி, இந்தக் குள்ள நரிகள், இந்த தேசத்தை அடிமை கொண்டார்கள்? இந்தக் கேள்விக்கு உண்மையான விடையைத்  தேடுவாருமில்லை, கண்டு சொல்வாருமில்லை!

தாரகநாத் தாஸ் என்ற ஒருத்தருக்கு மட்டும் இந்தக் கேள்வி உறுத்திக் கொண்டே இருந்தது. லியோ தோல்ஸ்தோய் என்ற ருஷ்ய எழுத்தாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். தோல்ஸ்தோயிடமிருந்து  மிகத் துல்லியமான காரணத்தை எடுத்துச் சொல்லி ஒரு பதிலும் வந்தது.

"What does it mean that 30,000 people, not athletes, but rather weak and ill-looking, have enslaved 200 millions of vigourous, clever, strong, freedom loving people? Do not the figures alone make it clear that not the English, but the Hindus themselves are the cause of their slavery?’ For the Hindus to complain that the English had enslaved them was like villagers addicted to drink complaining that that the winesellers who had settled in their midst were the cause of their drinking habit. ‘Is that not the case with all the people, the millions of people, who submit to thousands or even hundreds of individuals of their own nation or those of foreign nations?’ If the Hindus had been enslaved by violence, it was ‘because they themselves have lived, and continue to live by violence, and fail to recognize the eternal law of love inherent in humanity."


மஹாத்மா காந்தி  தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, இந்தப் பதிலைப் பார்த்து விட்டு,தோல்ஸ்தோய்இடமிருந்து அனுமதி பெற்று இருபதாயிரம் பிரதிகள் அச்சிட்டு, தென் ஆப்பிரிக்காவில் இருந்த இந்திய சமூகத்தினரிடம் சேர்ப்பித்தார் என்பது இன்னொரு சுவாரசியமான தகவல்.

வெறும் ஆயிரங்கள், கோடிக் கணக்கான ஜனங்களை அடிமை கொண்டதெப்படி?

பாகிஸ்தான் மாதிரி சுண்டெலிகள் தொடர்ந்து இந்த தேசத்தைப் பல வழிகளிலும் சீண்டிக் கொண்டிருப்பதெப்படி?

கையாலாகாத கோழைகளைத் தலைவர்களாக கொண்டிருக்கும் வரை சுதந்திரத்திற்குப் பங்கம் எதுவும் வராது என்று நம்பி இருக்க முடியுமா? 

காங்கிரஸ்காரர்களால், இந்த தேசத்தின் இறையாண்மையை, கௌரவத்தைப் பாதுகாக்க முடியுமா?

சுதந்திரம் என்று வெறும் பேச்சுப்  பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது! பெற்ற சுதந்திரத்தை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதும் தெரிந்திருக்க வேண்டும்!

முதலில்,உள்ளிருந்தே கொல்லும் வியாதியாக இருக்கும் கோழைத் தனமான தலைவர்களிடமிருந்து!

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!


The Development of the British Empire

 By Howard Robinson
நேற்று முதல்  படித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த புத்தகம் இது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உருவான விதம்! கூகிள் புக்ஸில் இதை இணையத்திலேயே வாசிக்க ஆசிரியர் பெயரில் இருக்கும் லிங்கை க்ளிக் செய்யுங்கள்.









9 comments:

  1. ஆட்சில் இருபவர்களுக்கும், அதிகார வர்க்கங்களுக்கும் ஏனைய பிற பணக்கார வியாபாரிகளுக்கும், எதிகட்சிகளுக்கும், மத சார்பு கூட்டங்களுக்கும் இன்னும் பிற குழு அமைப்புகளுக்கும் இப்போதுள்ள இந்த நடப்பு நிலைப்பாடே உகந்தது .எனவே இதில் மாற்றம் என்று ஒன்றும் பெரிதாய் வந்துவிட போவதில்லை. நாடு "இப்படி 'இருப்பதே மேல் கண்ட குழவினருக்கு நல்லது, சாதகமும் கூட. இதையே வேறு பாடு (உள்ளுக்குள்) இன்றி அணைவரும் விரும்புகின்றனர்.
    இப்படித்தான் இனியும் இருக்கும்.

    ReplyDelete
  2. அவநம்பிக்கை வேண்டாமே மாணிக்கம்!

    ReplyDelete
  3. பாகிஸ்தான திருத்த முடியாது...அங்கே இருக்கிற பழமைவாத தாலிபான்கள் மற்ற நாடுகள் செய்யும் பண உதவிகளைக்கூட அரசு பெறக்கூடாதுன்னு பத்வா போட்டுக்கிட்டு இருக்காங்கெ...எங்கிட்டு வெளங்க... அல்லாவா பார்த்து காப்பாத்துனா தான் அவிங்கள...மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
  4. மயில்ராவணன்! மாணிக்கம்!

    நம்மிடம் இருக்கும் ஒரு பெரிய குறை, ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றித் தீர யோசிக்காமலேயே, ஒரு தீர்மானமான முடிவுக்குப் போய்விடுவது!பாகிஸ்தான் அரசியல் பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலையும் காட்டுவது, அப்படிக் காட்டியே இரண்டையும் ஏமாற்றுவது என்பது தான்! இதனால் தான் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு மிக நெருக்கமான நண்பனாக, பழமைவாதத் தாலிபான்களை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் நம்பகமான கூட்டாளியாக இருக்க முடிகிறது! அதே நேரம், மதத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது போலவும், கொரான் வசனப்படியே ஆட்சி நடத்துவதுபோல, மத நம்பிக்கையுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடிகிறது.

    இந்தியப் பிரிவினை மனிதர்களுடைய அவசரப்போக்கால் ஏற்பட்டது, இது விதியோ தெய்வ சாபமோ இல்லை என்று மறுகினார் ஸ்ரீ அரவிந்தர்! பிரிவினையைத் திணித்ததில், முஸ்லிம் லீகுக்கு எந்த அளவுக்குப் பங்குண்டோ, அதே அளவுக்கு மகுடம் சூட்டிக் கொள்ள அவசரப்பட்ட இந்தியத் தலைவர்களுக்கும் பங்குண்டு.

    சரி, நடந்தது நடந்து விட்டது! அதற்கப்புறம் என்ன செய்தார்கள்? உறவுகளை மேம்படுத்த என்ன செய்தார்கள்?

    பாகிஸ்தானுடன் நட்புறவு கொள்ள நேருவுக்கு 1948 வாக்கில், ராணுவம் ஆட்சியைக் காப்பாற்ற முனைந்த நேரம், ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நேரு தவறவிட்டது ஒரு தனிநபர் முட்டாள்தனத்தின் உச்சம்! நேரு மட்டும் கொஞ்சம் சரியாகக் கையாண்டிருந்தால், சீனப் பூச்சாண்டி என்ற ஒன்று இருந்திருக்கவே முடியாது!

    இன்றைக்கும் இந்த தேசம் நேரு, நேரு பரம்பரையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது!அதைச் சரி செய்ய முயற்சிக்காமல், பழமைவாதம், தாலிபான், பாத்வா என்று பேசிக் கொண்டிருப்பதில் என்ன பயன்?

    ReplyDelete
  5. // இன்றைக்கும் இந்த தேசம் நேரு, நேரு பரம்பரையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது!அதைச் சரி செய்ய முயற்சிக்காமல்.......//

    இதைத்தான் முதலில் சொல்லவந்தேன்.
    // அப்பன் வெட்டிய கிணறு இது அதானால் தண்ணீர் உப்பாக இருந்தாலும் அதையே தான் நான் குடிப்பேன் //
    டாடர் எம் .எஸ். உதயமூர்த்தி ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுவார். இதை புத்தி நாட்டை ஆல்பவர்களிடமும்
    அவர்களுக்கு துணை நிற்பவர்களிடமும் மிதமிஞ்சி நிறைந்து இருபதாலேயே நேருவை தவிர வேறு எவரின் ஆளுமைத்திறனும் இங்கு பேசப்படுவதில்லை. 'நேருவின் பரம்பரை சொத்துகள் இந்திய விடுதலைக்காக அழிக்கப்பட்டன அதனால் அவரின் வழிவந்தவர்கள் இந்தியாவில் என்ன வேணாலும் செய்யலாம்' என்ற எண்ணம் வளர்துவிடப்பட்டுள்ளது. தொட்டதெற்கெல்லாம் சோனியாவிடம் ஓடும் இந்திய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் கட்சிகள் மற்றும் பல்லக்கு தூக்க சந்தர்பம் பார்க்கும் கட்சிகள் இவைகளே இந்தியாவெங்கும் நிறைந்துள்ள நிலையில் நாம் ஏன் பாகிஸ்தானையும் தாலிபானையும் நினைத்து கவலைகொள்ளவேண்டும்? இன்குள்ளவர்களே போதுமே! இதில் சுதந்திர தின விழா - என்ன ஒரு பம்மாத்து நம்மிடம்!

    ReplyDelete
  6. திரு. மாணிக்கம்,

    இங்கே தேர்தல் முறைகளில் உள்ள குளறுபடிகளில் இந்த மாதிரிக் கழிசடைகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வாய்ப்புக் கிடைக்கும். தேர்தல் முறையை மாற்றாமல் இங்கே நல்ல மாற்றங்களை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!

    //தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் அவர்கள், எமெர்ஜென்சி காலத்தை ஒட்டி, கணக்கன் என்ற‌ புனைபெயரில் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி, ஜனநாயக முறையில் வெவ்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப் படும் தேர்தல் முறைகள், அதில் உள்ள‌ சாதக,பாதக‌ங்களைப் பற்றி, தொடர் கட்டுரைகளாக எழுதிவந்தது, பின்னால் தினமணி கதிர்வெளீயீடாகப் புத்தக வடிவிலும் வந்தது, இன்றைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாகவும், அவசியமாகவும் இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

    வெஸ்ட்மின்ஸ்டெர் மெதட் எனப்படும் பிரிடிஷ் பாராளுமன்ற தேர்தல்அமைப்பில் இருக்கும் மிகப் பெரிய குறையே, ஜெயித்தவன் தோற்றவனுடையதையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறான் என்பதுதான்.

    இந்த முறையை மாற்றி, கட்சிகள் தனித் தனியாக வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் எண்ணிக்கையை முடிவு செய்வது என்று வந்தாலொழிய, தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு வயது உச்சவரம்பு, அறுபது அல்லது அறுபத்தைந்து தான் அதிகபட்சம் என்று வைத்துக் கொள்ளலாமே, ஒரே நபர் இரண்டு தடவைக்குமேல், மந்திரியாகவோ, அதற்கு உயர்ந்த பதவியிலோ இருக்க முடியாது என்று மாற்றிப் பார்த்தாலே, அரசியல் வியாதிகளை முழுவதுமாகத் தடுக்க முடியாது தான், தொற்றுநோயாகப் பெருகுவதையாவது தவிர்க்க முடியும்!

    கல்லறைக்குள் போவது வரை இந்திய அரசியல்வாதிகள் ஒய்வு பெறுவதில்லைதான்!

    அவர்களாக ஒதுங்கவில்லைஎன்றால்,கட்டாய ஒய்வு கொடுத்துப் பார்க்கிற ஒரு முயற்சியைச் செய்து தான் பார்ப்போமே!

    என்ன சொல்கிறீர்கள்! //

    இது இங்கே நீண்ட நாட்களுக்கு முன்னால் எழுதியது!
    http://consenttobenothing.blogspot.com/2009/08/blog-post_22.htm

    ReplyDelete
  7. ஒன்று நீங்களும் கவனித்திருப்பீர்கள், கருத்துக்களை வெளியிடும் போது அதன் சொதக்காரரின் ஜாதி, குலம் பார்த்து அதன் படி அக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவோ அல்லது எதிர்க்கவோ தேவையான மன நிலையினை உண்டாகி விட்டனர். சமீப காலங்களில் இது மிக அதிகமாக பழக்கத்தில் வந்து விட்டுள்ளது. இதனை இங்கே பிளாகில் கூட அதிகம்
    காணலாம். தேவையற்ற அல்லது சமூக எதிர் கருத்துகள் கூட சொல்லபடுபவரின் பின்புலதினால் மட்டுமே தூக்கி பிடிக்கப்படுவதும், உகந்த கருத்தக்களாக இருந்தாலும் கூட அவரின் பின் புலம் பார்த்து நிராகரிக்கும் அறிவற்ற போக்குகளும் பெருகியுள்ளது.எனவே ஏ.என்.சிவராமன் போன்றவர்களின் கருத்துக்கள் எல்லாம் அவர் சார்ந்த பின் புலம் பார்த்து நிராகரிக்கப்படவையே. நானும் அதனை தினமணி கதிரில் புத்தகமாக வந்த போது படித்ததுண்டு. என் அண்ணன் மார்கள் சிலாகித்து சொல்வார்கள்.

    ஒன்று மட்டும் உறுதி. இது விரக்தியில் வந்ததல்ல. முன்னமே இது போல் இங்கு சொல்லியுள்ளேன். ஒரு பிடாரி போனால் பின்னால் வருவது ஒரு காட்டேரி. அதுவும் போனால் பின் வருவது ஏதோ ஒரு நாதாரி. இப்படித்தான் இந்த சுழல் வரும். இதில மாற்றம் செய்ய இந்த கூட்டம் எதுவும் சிந்திக்காது, செயல் படாது. ஒரு வேலை சுப்ரீம் கோர்ட் இது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம். அங்கேயும் இவர்கள் 'கை ' வைக்கவும் இடம் உள்ளது 'ரப்பர் ஸ்டாம்பின் ' உதவியால்.

    --

    ReplyDelete
  8. திரு.மாணிக்கம்,

    எதிர்மறையான விஷயங்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. மாற்றங்களுக்கு அஞ்சும், நான் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேனே என்று கெஞ்சுகிற பழக்கங்களின் அடிமையாகவே இருந்துவிட்டுப் போகிற சுபாவம், மனிதனை அவன் கீழ்நிலை உணர்வுகளின் பிடியில் இருந்து விடுபடைல்லை என்பதைக் காட்டுகிற ஒன்று தான்! Creature of habits, பழக்கங்களின் அடிமை என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து இந்தப் பதிவில் தேடிப்பாருங்கள், அதிக விவரம் இந்த இயல்பைக் குறித்துக் கிடைக்கும்.

    திரு ஏ.என்.சிவராமன் தினமணியில் எழுதிய அந்தக் கால கட்டம் மிகவும் முக்கியமானது. ஒரு கோழை, சர்வாதிகாரியான அபாயத்தில் இருந்து நாடு அப்போது தான் மீண்டு வந்திருந்த நேரம்.(எமெர்ஜென்சி கால கட்டம்). மறுபடி அதே தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்பதை யோசித்த மிகச் சிலருள், திரு ஏ.என்.சிவராமனும் ஒருவர். பயனீர் அல்லது முன்னோடி என்று சொல்வோமில்லையா, அப்படிப்பட்ட சிந்தனைப் போக்கின் முன்னோடி அவர்!

    ஜாதி, குலம் கோத்திரம் பார்த்து அவரை நிராகரித்ததோ, ஏற்றுக் கொள்வதோ கூடப் பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்துவிட்டுப் போய்விடுகிற கீழ்நிலை மிருகவுணர்வுகளின் பிடியில் இருந்து விடுபடாத நிலை தான்! இந்த கீழே இழுக்கும் விசை, கால காலமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை மீறி ஜெயிப்பவன் தான் மனிதன்!

    ReplyDelete
  9. திரு மாணிக்கம்!

    மந்தைத் தனம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று! மற்ற உயிர்களுக்கு, அது உயிர்பிழைத்தலின் பொருட்டு உள்ளுணர்வாக இருக்கிறது.மனிதனுக்கு மட்டும், அதையும் தாண்டிப் போய்த் தன்னுடைய இருப்பை ஸ்தாபித்துக் கொள்கிற தன்மை பகுத்தறிவாக வழங்கப்பட்டிருக்கிறது. கேள்வியே, அப்படி ஒன்று இருப்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? அறிந்தவர்களிலும், எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்? என்பது தான்!

    மாற்றம் எப்படி இருக்குமோ அந்த ரிஸ்க் எனக்கெதற்கு, நான் மாற மாட்டேன், எதற்காக மாறவேண்டும், நன் இப்படியே இருந்துவிட்டுப்போய் விடுகிறேனே என்றிருக்கும் மக்களை இலவசங்களில், மானாட மயிலாட மார்பாடக் காட்டியே வளைத்துப் போட்டு விட முடியும் என்பதை சமீபத்திய அரசியல் களம் காட்டிக் கொண்டிருக்கிறது. நல்ல "மேய்ப்பன்" கெட்ட "மேய்ப்பன்" என்தேறேல்லாம் பேசிக் கொண்டிருக்காமல், தங்களைத் தாங்களே வழிநடத்திக் கொள்ளத் தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள முடியும், மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு!

    கேள்வி மற்றவர்களை வைத்து மட்டுமல்ல! முக்கியமாக நம்மை நாமே, நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா என்று கேட்டுக் கொள்வதற்காகத் தான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!