புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஒரு பிரார்த்தனையுடன்..!

Bonne Année 2011






புது வருடம் பிறக்கப் போவதற்கு முன்னாலேயே, வேண்டுதல்களும், அபிலாஷைகளும்  இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்து விடுகின்றன! கடவுளிடம், இந்தப் புத்தாண்டில் என்னென்ன வேண்டலாம், கேட்கலாம் என்ற பட்டியல் தயாராக ஆரம்பித்து விடுகிறது.





எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியே  ! எங்கும் நிறைந்தருளும் கடவுளே!





இந்தப் புத்தாண்டில் எல்லாக் காரியங்களும் வெற்றி பெற  வேண்டும், எண்ணியபடி எல்லாம் நடந்தேற வேண்டும்! எல்லா வளங்களும் பெருக வேண்டும்! 





உடல் நலம் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும்!  சுவற்றை வைத்துச் சித்திரம் என்பது போல, உடல் நலம் நன்றாக இருந்தால் தானே, மற்ற வேலைகளைச் செய்ய முடியும்!





ஆர்வத்தோடு விழையும் அனைத்தும் மெய்ப்பட வேண்டும்! எங்களது இல்லத்திலும், வாழ்க்கையிலும், உலகத்திலும் அமைதி நிலவ வேண்டும்!



இதையே உன்னிடம் வேண்டுகிறோம்!





கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், பட்டியலில் இன்னும் எது எதையோ சேர்த்துக் கொள்ள மறந்து விட்டோமே என்று, இன்னும் கொஞ்சம் வேண்டுதல்கள் சேர்ந்து கொண்டே போகும்! பட்டியல்கள் அவ்வளவு சீக்கிரமாக முடிந்து விடுவதுமில்லை!





ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருக்கிறது. ஆறறிவு இல்லாத தாவரங்கள் கூட ஒளியை நோக்கி உயர்கிற தன்மையோடு இருக்கின்றனவே! ஆறறிவு படைத்த நாமும் அப்படி தெய்வீக ஒளியை வேண்டி உயர வேண்டாமா? 





ஒளியை நோக்கி உயரும் தன்மையைக் கொஞ்சம் மறந்துவிடுகிறபோது, இது வரை சாதித்தவை எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதே! இதற்கு நம்மைத் தவிர வேறு எவரைக் குற்றம் சொல்ல முடியும்?





மற்ற எல்லா வேண்டுதல்களையும்  விட, மிக முக்கியமான ஒன்று, ஒரு பிரார்த்தனையாக --
ஸ்ரீ அரவிந்த அன்னையே!உன்னைச் சரண் அடைகிறேன்.
அறியாமை, முயலாமை, இல்லாமை, இப்படி எல்லா ஆமைகளையும் என் தோள்களில் இருந்து இறக்கி வைக்க தயவு செய்வாய்.

இந்த ஆமைகளோடே இனியும் கூடியிராமல், ஒரு புதிய அனுபவத்திற்கு என்னைத் தயார் செய்வாய். தகுதியும், தைரியமும் அருள்வாய்! ஒவ்வொரு அசைவிலும் செயலிலும், உனது திருவுள்ளப் படியே நடந்துகொள்கிற பக்குவ நிலையை அருள்வாய்.

பிறக்கும் புத்தாண்டு, உணமையிலேயே புத்துணர்வை அளிக்கும் ஆண்டாக வரம் அருள்வாய். வீணாய்க் கழிந்த பொழுதையும் ஈடு கட்டும் முயற்சியை, மன வலிமையை, எல்லா நேரங்களிலும் நீ என்னோடு  கூடவே  இருக்கிறாய், துணை செய்கிறாய், என்னுள் நிறைந்து எல்லாவற்றையும் நீயே நடத்துகிறாய் என்கிற உறுதியான நம்பிக்கையை, அனுபவித்து உணர்கிற வரமாக அருள்வாய்.

பாரத  தேசம் புண்ணிய பூமி! உலகுக்கு, அமைதியையும், ஆன்மீக வெளிச்சத்தையும் தரவேண்டிய கடமை இருக்கிறது!  தன்னுடைய கடமையை சரிவரச் செய்வதற்குத் தடையாக இருக்கும், உட்பகை வெளிப்பகை அனைத்தையும் அகற்றி, நல்லதொரு தலைமையை  இந்த தேசத்திற்கு அருள வேண்டும்!

சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்ய மயி, பரமே!


ஜனவரி முதல் தேதி!  புத்தாண்டின் முதல் நாள் மட்டுமில்லை. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில், ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் அடியவர்களுக்கு தரிசனம் தரும் நாளாகவும் தொடர்கிறது. தரிசன நாள் செய்தியாக, புத்தாண்டுப் பிறப்பன்று ஆசிரமம் செல்லும் அன்பர்களுக்கு, தரிசன நாள் செய்தி கிடைக்கும். மேலே இருப்பது தான் அது! நேரில் செல்பவர்களுக்கு, கடிதம் எழுதி வேண்டிக் கொள்பவர்களுக்கு  சமாதி மேல் வைக்கப் பட்ட மலர்களும் அருளாசியோடு கிடைக்கும்.  புத்தாண்டு, ஸ்ரீ அன்னையின் அருளாசியோடுதுவங்கட்டும்!


சென்ற வருடம் டிசம்பர் 31 அன்று எழுதிய அதே பிரார்த்தனைதான்! கடந்துபோன வருடத்தை, இப்போது திரும்பிப்பார்க்கிறபோது, இந்தப் பிரார்த்தனையின் அவசியம் இப்போதும் இருப்பதை உணர முடிகிறது.

"வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்டுவ முழுதுந்தருவோய் நீ! " அருணகிரிநாதரின் இந்த வார்த்தைகள் எவ்வளவு சத்தியம் என்பதை அனுபவங்கள் தொடர்ந்து காண்பித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தப்பக்கங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்துவரும் வாசகர்களுக்கு, என்னுடைய மனப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவனது பெரும் கருணை, உங்களோடு என்றைக்கும் இருப்பதாக! எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறி வாழ்வில் உன்னதம் கைகூடத் திருவருள் கைகூட்டுக!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
 

அந்த நாளும் வந்திடாதோ....!


ஜான் பிட் ஜெரால்ட் கென்னெடி! ஒரு சகாப்தம் என்று சொல்லிக் கொள்ளலாம்! ஆனால் அந்த சகாப்தத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு என்ன பலன் இருந்தது என்பதை மட்டுமே அடிப் படையாக வைத்துப் பார்த்தால், இந்த மாதிரி சகாப்தங்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஒரு சாபமாகவே இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு சொல்லும். அமெரிக்க அரசியலில், ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த கென்னெடி குடும்பத்தில் இருந்து, வருகிற 2011 ஆம் ஆண்டில் எவருமே இருக்க மாட்டார்களாம்!இதை ஒரு சகாப்தத்தின் முடிவு என்று  வைத்துக் கொண்டாலும் சரி! ஒரு சாபத்தின் முடிவு என்று வைத்துக் கொண்டாலும் சரி!



இந்த யூட்யூப் வீடியோவைப் பார்த்த போது முதலில் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது! அப்புறமாக, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று
நன்னூல் சூத்திரம் மாற்றங்களைக் குறித்துச் சொல்வது எவ்வளவு பொருத்தமானது என்பதும் யோசித்துப் பார்க்கையில் தெளிவாகப் புரிந்தது!  


கடைசிப் பாராவைக் கொஞ்சம் கவனியுங்கள்! நேருவின் அமெரிக்க விஜயம் கென்னடியைப் பொறுத்தவரை மிகக் கசப்பானதாகவே இருந்ததாம்.. நேருவின் பார்வை, கரங்கள் தன் மனைவியின் மீது படுவதை சகித்துக் கொள்ள முடியாத எரிச்சல் கென்னடிக்கு இருந்ததையும்  இந்தப் பாரா சொல்கிறது. பெண்கள் என்றாலே நேருவுக்கு ஒரு "கிறக்கம்" இருந்ததையும் சொல்கிறது.



இங்கேயும், நேரு குடும்பத்து வாரிசுகள் எவருமே அரசியலில் இல்லாமல் போகிற ஒரு காலம், இந்த தேசத்தைப் பிடித்த சாபத்தில் இருந்து விடுதலை என்ற திருநாளும் வாராதோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா!

மாற்றங்கள் வரும்! புதிய மொந்தையில் பழைய கள்ளை மட்டுமே பரிமாறத் தெரிந்த, ஊழல் முடை நாற்றம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் பிடியில் இருந்து இந்த தேசம் விடுதலை பெறும் திருநாளும் வரும்!

நம்பிக்கையாகவும், பிரார்த்தனையாகவும்!


*******
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?

பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாக, நரசிம்ம ராவ் காலத்தில் அறிமுகமான பொருளாதார சீர்திருத்தங்கள் சமயத்தில் இந்த வார்த்தைகளை விளக்குவது, விளங்கிக் கொள்வது கடினமாகவே இருந்தது.இணையத்தில் சில வருடங்களுக்கு முன்னால், பிரிட்டிஷ் இளவரசி டயானா தன்னுடைய காதலர் டோடி பேயட் உடன் கார் விபத்தில் பரிதாபமான முறையில் இறந்துபோன சம்பவத்தைத் தொட்டு, குரூரமாக இருந்தாலும் கூட அதிலும் கூட கொஞ்சம் நகைச்சுவை கலந்து ஒரு வியாக்கியானம் உலாவந்து கொண்டிருந்தது, இன்றைக்கு மறுபடி கண்ணில் பட்டது.

ஒருவர் கேட்கிறார்: தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?

அதற்குப் பதில் வருகிறது பாருங்கள்!! "இளவரசி டயானாதான்!"

எப்படி என்று மேலும் விளக்கம் கேட்பதற்கு முன்னாலேயே வருகிறது.

"ஒரு பழமைவாதப் பெருமை பேசும் ஆங்கிலேய அரச குடும்பத்துப் பெண், இளவரசி தன்னுடைய எகிப்துக் காதலனோடு, பிரெஞ்சு  சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொருத்திய ஜெர்மன் காரை
, பெல்ஜியத்தை சேர்ந்த டிரைவர் ஸ்காட்ச் விஸ்கியைக் குடித்துவிட்டு ஓட்ட, இத்தாலியப் பத்திரிகையாளர் துரத்த எங்கேயோ எப்படியோ இடிபட்டு விபத்தாகிக் காயப்பட்டு,  அமெரிக்க டாக்டர் பிரேசிலிய மருந்தைக் கொடுத்து சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இறந்து போனாரே அது தான்!"

தாராளமயம், உலகமயம் என்பதை இதை விட சுருக்கமாக, பொருத்தமாக சொல்லிவிட முடியாது என்று தான் தோன்றுகிறது.

உங்களுக்கு எப்படியோ...?!

 

சண்டேன்னா மூணு! அடக்க முடியாதா? காங்கிரஸ் காமெடி! நினைவுகள்!


ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் வசனம் நினைவுக்கு வந்தால், அதற்கு யாரும் பொறுப்பல்ல!
 
அடக்க முடியாதா!! தினமணியில் அடடே மதி கேலிச் சித்திரம்!
******* 

இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவரின் வாக்கு, காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தான் உறைத்திருக்கிறது போல! எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் பரவாயில்லை, காமெடி செய்தே தீருவது என்று முடிவுக்கு, அரசியல் வாழ்க்கையின் விளிம்புக்கே வந்து விட்ட மாதிரிப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.  


""ஊழல் நடைபெறுவதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். தில்லியில் அருகே உள்ள புராரி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு இன்று தொடங்கியது.இதில் சோனியா பேசியதாவது: ஊழல் நடை பெறுவதையும், ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் துணைபோகின்றவர்களையோ காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது (!!??). கட்சிக்கும், ஆட்சிக்கும் இது பொருந்தும். எளிமை, கட்டுப்பாடு, நேர்மை ஆகியவற்றை நமது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.(!!) எனவே நமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழும்பாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்"

அந்தோனியோ மைனோ என்ற இயற்பெயரையும், அரசியலில் சோனியா காண்டி என்ற பெயரையும் பயன்படுத்திவரும் ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் சேர் பெர்சன்இன்றைக்கு  காங்கிரஸ் ப்ளீநரி கூட்டத்தில் பேசிய, அல்ல அல்ல, அடித்த சீரியஸ் ஜோக் இது!
 

இந்த மாதிரி மட்டமான ஜோக்கை/ஜோக்கர்களை  சகித்துக் கொள்ளப் போகிறீர்களா அல்லது தூக்கி எறியப் போகிறீர்களா என்பது தான் பிரதானமான கேள்வி! 
******
நீண்ட காலம் ஆகிப் போனாலும் மறக்க முடியுமா? தோழருக்கு அஞ்சலி!


 

பாட்டுக்கொரு புலவன் பாரதி!




பொய்யான பேர்வழிகளுக்குத் தான் மின்மினிப் பூச்சிகளின் சாட்சியம் வேண்டும்!
பொய் மொழியாய்  நீதான் எங்கள் உதய சூரியன் என்று பாட்டுப் பாடவேண்டும்!
பொய் மொழியைத் தானே நம்புதற்குத் தினந்தோறும் விழா நடத்த வேண்டும்!
சூரியனென்று தன்னைச் சொல்லும் மின்மினி சூரியனாய் எப்போதும் ஆவதில்லை!

சூரியனாய் என்றும் ஒளிவீசும் பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!




வெள்ளிக்கிழமைக் காமெடி! நோபல் பரிசும் இரட்டை வேடமும்!


'விக்கிலீக்ஸ்' அசாங்கே விஷயத்தில் அமெரிக்கா நடந்து கொள்ளும் விதம் கொஞ்ச நஞ்சமல்ல, நிறையவே வினோதம்! அதே நேரம் சீனாவில் மனித உரிமைகளுக்காக திடீர்ப் பாசத்தோடு அதிருப்தியாளருக்கு நோபல் பரிசை வழங்குவதும், தலையில் தூக்கிக் கொண்டாடுவதும் இன்னொரு கேவலமான வினோதம்!!


 The Nobel Peace Prize medal and diploma are seen on an empty chair representing Nobel Peace Prize laureate Liu Xiaobo during a ceremony honouring Liu at city hall in Oslo, Norway, Friday, Dec. 10, 2010. photo courtesy (AP / John McConnico)


அமெரிக்க ஒபாமாவும் பிரான்ஸ் சார்கோசியும் இந்தியாவுக்கு  வருவார்கள்! ஐ நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஆதரவு என்று வாயளவில் அறிவிப்பார்கள்! தங்களுடைய தொழில்களுக்கு சாதகமாக இந்திய அரசிடம் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்குவார்கள்! பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலையில் இருந்து கொஞ்சமும் மாற மாட்டார்கள்.  பிள்ளையைக் கிள்ளிவிடுகிற வேலை நிறையவே நடக்கும்.

எது எப்படிப் போனால் என்ன, இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் எப்போதும் காமெடிப் பீசாக மட்டுமே இருக்கும்!

எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?



தேசம் உருப்பட ஒரே வழி......!

பொது நலன் கருதியும், ஒரு குறிப்பிட்ட விஷயம் வாசகர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டே ஆக வேண்டும் என்ற அடிப்படையிலும் பொறுப்புடன் எழுதப்படும் தினமணி நாளிதழின் தலையங்கங்களை இந்தப் பக்கங்களில் பலமுறை மீள் பிரசுரம் செய்திருக்கிறேன். இப்போதும் கூட அதே அடிப்படையில் தினமணி நாளிதழில் வெளியான ஒரு தலையங்கத்தை வாசகர்கள் சிந்தனைக்குக் கொண்டு வருகிறேன். 




"சாத்தான் வேதம் ஓதுகிறது" என்று பழமொழி கேட்டிருக்கிறோம். 

"திருடன் கையில் சாவி கொடுத்த கதை" என்றும் பழமொழி கேட்டிருக்கிறோம். இந்தப் பழமொழிகளை எல்லாம் நிஜமாகவே நடத்திக் காட்டி சாதனை புரியப் போகிறோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் இவர்களது வித்தகத்தின் விவேகம் இப்போதல்லவா புரிகிறது.

ஏற்கெனவே, கேரள மாநிலத்தின் உணவுத்துறைச் செயலராக இப்போதைய தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் இருந்தபோது நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் இவர் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டபோதே புருவங்கள் உயர்ந்தன.

தாமஸ் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் செயலராக இருக்கும்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட எல்லா முறைகேடுகளும், அமைச்சர் ஆ. ராசாவின் ஒப்புதலுடன் இவரால்தான் அரங்கேற்றப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. 


அதையும் மீறி, இவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, "தினமணி' உள்ளிட்ட பல நாளிதழ்கள் தலையங்கத்தில் அதை வன்மையாகக் கண்டித்தன. இந்திய சரித்திரத்திலேயே நடந்தேறியிருக்கும் மிகப்பெரிய முறைகேடுக்குத் துணைநின்றவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக, விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சட்டை செய்யாமல் மத்திய அரசு நியமித்ததே இந்த "மெகா' ஊழலை மறைக்கத்தானோ என்று அப்போதே கேள்விகள் எழுப்பப்பட்டன.

இப்படி அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் தலைமையில், திருடனே தீர்ப்பெழுதுவதுபோல 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விசாரணையை எப்படி நடத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அந்த அதிகாரியின் தரப்பில் கூறப்பட்டிருக்கும் பதில் அதைவிட விசித்திரம். "இந்திய அரசுப் பணியின் உயர்ந்த பண்புகளைக் காப்பாற்றும் விதத்தில், 2ஜி அலைக்கற்றை சம்பந்தப்பட்ட விசாரணையில் இருந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று பெரிய மனது பண்ணி பி.ஜே. தாமஸ் பதில் அளித்திருக்கிறார். 


அதாவது தான் பதவி விலகுவதாக இல்லை என்பதுதான் பதில்.

தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக இருக்கும் ஒருவரை, அவருக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் அந்த விசாரணை முறையாக இருக்குமா? என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் ஏனோ எழுப்பாமல் விட்டுவிட்டிருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்டால், தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற அரசியல் சட்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை விசாரிக்கும் உரிமை அந்தக் குழுவுக்கு இருக்குமா என்பதும் நீதிமன்றம் தீர்த்து வைக்கவேண்டிய சட்டச் சிக்கல். தாமûஸ இந்தப் பதவியில் அமர்த்திவிட்டால், இதுபோன்ற பல அரசியல் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி 2ஜி அலைக்கற்றை முறைகேடுகளைப் பற்றிய விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எண்ணமாக இருந்ததோ என்னவோ!

தான் எந்தக் காரணத்துக்காகவும் பதவி விலகத் தேவையில்லை என்று பி.ஜே.தாமஸ் கூறியிருப்பதன் பொருள், யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப்போல, தலைமை ஊழல் தடுப்பு ஆணையரையும் பதவியிலிருந்து விலக்க வேண்டுமானால், நாடாளுமன்றம் கூடி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் (இம்பீச்மெண்ட்) நிறைவேற்றப் பட்டாக வேண்டும். இது அவருக்கும் தெரியும், அவரைப் பதவியில் நியமித்தவர்களுக்கும் தெரியும்.

இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், பொறுப்பான பதவிகளை வகித்த இந்திய அரசுப் பணியைச் சேர்ந்த ஓர் அதிகாரி கொஞ்சமாவது மானம், ரோஷம் இருந்தால் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பாரா? பதவிக்காக இந்திய அரசுத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து விட்டிருக்கிறார்கள் என்பதற்கு பி.ஜே.தாமஸ் ஓர் உதாரணம்.

தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் இதைவிட ஒருபடி மேலே போய், சட்ட அமைச்சகத்தையும், பிரதமர் அலுவலகத்தையுமே கேலிக்குரியவையாக மாற்றியிருப்பது உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிகிறது. முறையாக ஒதுக்கீடு நடத்தப்படாததால் இத்தனை கோடிகள் நாட்டுக்கு நஷ்டம் என்று உத்தேசக் கணக்கு கூறுகிறார்களே தவிர, நான் லஞ்சம் வாங்கினேன் என்றோ, அந்தப் பணம் எனக்குக் கிடைத்ததென்றோ யாரும் கூறவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ராசா தரப்பு வாதம். 45 நிமிட அவகாசத்தில் ரூ. 1,600 கோடிக்கான வங்கி உத்தரவாதத்துடன் எப்படி சில நிறுவனங்கள் ஒதுக்கீடு அனுமதிக்கு விண்ணப்பித்தன என்கிற கேள்விக்கும், பிரதமரின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது ஏன் என்கிற கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிரச்னையைத் திசை திருப்பத்தான் இப்போதும் முனைகிறார் அவர்.

இதெல்லாம் போகட்டும். இந்தியப் பிரதமர் என்கிற பதவி இருக்கிறதே, உலகிலேயே மிக அதிகமான அதிகாரத்தை உடைய பதவி அதுவாகத்தான் இருக்கும். இந்த அளவு அதிகாரம் அமெரிக்க அதிபருக்குக்கூடக் கிடையாது. அதிகாரம் மட்டுமா, மரியாதையும், கௌரவமும் உள்ள பதவியல்லவா அது? பண்டித ஜவாஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும், இந்திரா காந்தியும் அமர்ந்த நாற்காலி அது. அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இருக்க வேண்டும்?

தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தனது அறிவுரையைக் கேட்கவில்லை என்ற உடனேயே அவரைப் பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டாமா? "பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது' என்று சொன்னவுடன் ஒன்று மறுத்திருக்க வேண்டும், இல்லை தனது அமைச்சரவையிலிருந்து அவரை அகற்றியிருக்க வேண்டும். அரசியல் நிர்பந்தம் என்றால், தனது சுயமரியாதையைகூடக் காரணம் காட்டி, சந்திரசேகர் செய்ததுபோலத் துணிந்து பதவி விலகி இருக்க வேண்டும்.

என்ன சொல்லி என்ன பயன்? இவர்கள் எல்லாம்......!?

இவர்கள் தானாகத்திருந்த மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்! சுதந்திரம் அடைந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆரம்ப நாட்களில் இருந்தே காங்கிரஸ் கட்சி, உயர்ந்த நெறிகளைக் காற்றில் பறக்க விட்டிருக்கிறது. பதவிக்காக எதையும் செய்யத் துணிந்தவர்களால் மட்டுமே நிரம்பப்பெற்ற கட்சியாகவும் மாறிப் போன அவலத்தைக் காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தலிலும் அரங்கேற்றிய கூத்துக்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்ததாலேயே புரிந்து கொள்ள முடிகிற விஷயம் தான்!

இவர்களால் பொறுப்புடன், நேர்மையாக இந்த நாட்டை ஆள முடியாது,  வெளியில் இருந்தும் உள்ளேயிருந்தும் வரும் அச்சுறுத்தல்களைத் துணிவுடன் எதிர்த்துப் போராடும் வலிமையோ, முதுகெலும்போ கூடக்  கிடையாது என்பதும் கூடத் தெரிந்த விஷயம் தான்!

காங்கிரசை தூக்கி எறிந்து விட்டு, ஒரு மாற்றை உருவாக்குவது தான் இந்த தேசம் உருப்பட இருக்கும் ஒரே வழி!

என்ன செய்யப் போகிறோம்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? கொஞ்சம் சொல்லுங்களேன்!





இது கடவுள் வரும் தருணம்...! ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!


Sri Aurobindo left His body on 5th December 1950






Remember and Offer! எப்படிப் பட்ட பிரச்சினையானாலும், உள்ளது உள்ளபடி ஸ்ரீ அன்னையிடம், ஸ்ரீ அரவிந்தரிடம் ஆத்ம சமர்ப்பணமாகச் செய்ய முற்படும்போது, எனக்குள் ஏதோ ஒன்று பழக்கத்தின் அடிமையாகவோ அல்லது, சமர்ப்பணம் முழுமையடைய விடாமலோ தடுத்துக் கொண்டிருப்பதை கடந்த சில வாரங்களாகவே கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எழும் குழப்பங்களையும், சோர்வையும் ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னிடம் சமர்ப்பிப்பதைத் தவிர வேறென்ன  செய்ய முடியும்? இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது ஸ்ரீ அரவிந்தரின் இந்த அமுத மொழி, நம்பிக்கையளிப்பதாக இருப்பதையும், திருவருள் துணையிருப்பதையும் மீண்டும் மீண்டும் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பாக இருப்பதையும் பார்த்தேன். 

"Imperfect capacity and effect in the work that is meant for thee is better than an artificial competency and a borrowed perfection."

Sri Aurobindo 
 
Thoughts and Aphorisms

அருட்பெரும் ஜோதியாக இறைவனது கருணை இந்த மண்ணில் இறங்கி  வரும் தருணத்தை விரைவுபடுத்தும் பொருட்டு, ஸ்ரீ அரவிந்தர் தனது உடலையே தியாகம் செய்த நாள் டிசம்பர் 5. தொடர்ந்து ஐந்து நாட்கள் அந்தப் பொன்னொளி ஸ்ரீ அரவிந்தரின் உடலில் தங்கி இருந்ததைக் கண்டுகொள்ளும் அற்புத வரம் பலருக்கும் அறுபது ஆண்டுகளுக்குமுன்னால் கிடைத்தது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய

என்று இருகரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதைத் தவிர வேறென்ன செய்து  விட முடியும்?


ஸ்ரீ அரவிந்தர் திருவடிகளைச் சரண் அடைகிறேன்!
ஸ்ரீ அரவிந்த அன்னையின் திருவடிகளைச்  சரண் அடைகிறேன்!