செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! ஊர்வம்பு, அக்கப்போர், நேரு பிரதாபம்!

ஊர்வம்பு, அக்கப்போர், கவர்ச்சிப்படம்  சதக்சதக் என்று வெட்டுகிற மாதிரிச் செய்திகள்  கிடைக்காத நேரத்தில் மொழிப்பெருமை பேசியே சலூன் டீக்கடைகள் தயவில் வளர்ந்த நாளிதழ் அது. கொஞ்சம் பிரபலமான ஒருத்தர், அவர் உயிரோடிருக்கும்போதே இறந்து விட்டதாகச் செய்தி வெளியிட்டு விட்டது. ந்தப்பிரபலம் அலறியடித்துக் கொண்டு செய்திகளை முந்தித் தருகிற  நாளிதழ் ஆசிரியரைச் சந்தித்து என்ன இந்தமாதிரிச் செய்தி வெளியிட்டு விட்டீர்களே என்று புலம்பினார். நாளிதழ் ஆசிரியர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் இதற்கேன் பதறுகிறீர்கள், இன்னார் இன்னும் சாகவில்லை என்று செய்தி போட்டு விட்டால் போகிறது என்றாராம்.  


செய்திகளை முந்தித்தருகிறேனென்று இப்படித்தான் உண்மையில் இறந்துபோன ஒரு ஹிந்தித்திரைப்பட நடிகை மனோரமாவை  நம்மூர் மனோரமாவுடன் குழப்பிக் கொண்டு நேற்று ஒரே களேபரம். ஆச்சியே வீடியோவில்  நேரில் வந்து ஐயா, நான் நல்லாத்தான் இருக்கிறேன் ஐயா என்று சொல்ல வைத்து  விட்டார்கள். அவரே சொல்கிற மாதிரி ஏதோ கண்ணேறு பட்டுக் கழிந்து போனதாகத்தான் நினைக்க வேண்டும் போல. 


.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். . அண்ணாதுரை,மு கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா  மற்றும் எம்ஜியார் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும்என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார். 1000 திரைப் படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற கின்னஸ் சாதனை வேறு.

****** 

வேறெந்தப் பதிவரும் துக்ளக் இதழின் ஆசிரியரும், அரசியல் விமரிசகருமான சோ எஸ்  ராமசாமியைக் குறித்து இந்த அளவுக்குப் பதிவுகள் அதுவும் இத்தனை விரிவாக எழுதியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். மொத்தம் 145 பதிவுகள் என்று அவருடைய வலைப்பக்கம் காட்டுகிறது. இந்த வீடியோவைப் பார்த்தபோது துக்ளக் ஆண்டுவிழாவைக் குறித்து உடல் நலம் சரியில்லாத நிலையிலும் 2013 ஜனவரியில் பதிவர் டோண்டு ராகவன்  எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சென்னைப்பதிவர்கள் நடத்திய Good Touch Bad  Touch பற்றிய விரிவான நிகழ்ச்சித் தொகுப்பை வீட்டுக்குத் திரும்பியவுடனேயே எழுதி வலையேற்றம் செய்த சுறுசுறுப்பு இன்னமும் மனதில் நிற்கிறது. இத்தனைக்கும் அவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. எழுத்தின் வழியாகவே அறிமுகமான ஒரு நல்ல வலைப்பதிவர். அவர் பதிவுகளை வாசித்திருக்கிறீர்களா?

******   
'காவியத்தலைவன்' படப்பிடிப்பில் இயக்குநர் வசந்தபாலன் மற்றும் நடிகர் சித்தார்த்

ஒரு சினிமா இயக்குநராக தான் செய்த அபத்தங்கள் என்னவென்று இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'காவியத்தலைவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. தற்போது தனது அடுத்த படங்கள் குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு சினிமா இயக்குநராக தான் செய்த அபத்தங்கள் என்னவெல்லாம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பது ஒரு 20 + காரணங்கள் என்று தி இந்து தமிழ் நாளிதழ் எடுத்துப் போட்டிருக்கிறது  

சொன்னதெல்லாம் இருக்கட்டும்! சொல்லாமல் விட்ட முக்கியமான ஒன்று இருக்கிறதே! இவர் இயக்குனர் ஆனதே முதல் பெரிய அபத்தம் என்று யார் அவருக்கு எடுத்துச் சொல்லப்போவதாம்?

nehru_cover 

அபத்தம் என்று சொல்லும்போது இந்திய அரசியலில் அபத்தங்களின் உச்சமாக இருந்த நேருவை மறந்து விட முடியுமோ?

எஜமானருக்கு விசுவாசமான நாய் படம் போட்டு அந்த நாட்களில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்  HMV என்று கிராமபோன் ரிக்கார்டுகள் இருந்தது நினைவிருக்கிறதா? எஜமானவிசுவாசம் மிகுந்த ஐசிஎஸ் அதிகாரிகளால் நேருவின் பெண்பித்து, அரசியல் பலவீனங்கள் குறித்த செய்திகள் மிகுந்த கவனத்துடன் மூடி மறைக்கப்பட்டாலும் வெளியே கசிவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

மேலே நேருவின் அந்தரங்க உதவியாளராக இருந்தவர் எழுதிய நினைவுகள் முதலில் 1977 இல் வெளியானது பின்பு வெளிப்படையாகத் தடை செய்யப்படாவிட்டாலும், கிடைக்காமல் செய்யப்பட்டது, ஸ்க்ரிப்ட் தளத்தில் இரண்டு பகுதிகளாகவும் அல்லது இங்கே பிடிஎப் ஆகவும் கிடைக்கிறது 

******   

2 comments:

 1. உங்கள் கலெக்சன் அருமை...இன்னும் தொடருங்கள்....

  மலர்

  ReplyDelete
 2. நானும் அன்பர் டோண்டு ராகவன் அவர்களை அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். அதுவும் பொங்கல் சமயத்தில் ஆண்டாண்டு வரும் துக்ளக் ஆண்டுவிழாவின் போது தவறாது அவர் நினைவுக்கு வந்து விடுவார். அவருடைய கலெக்ஷ்ங்கள் எல்லாம் அற்புதம். நாடோடி, தேவன் ஆகியோரின் எழுத்துக்கள் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.
  என்னுடைய 'ஆத்மாவைத் தேடி..' தொடரை விரும்பிப் படித்துக் கொண்டு வந்தார். ஓர் இரவு முழுவதும் அதைத் தொடர்ச்சியாகப் படித்து அந்த இரவு முழுதும் விரும்பிய அத்தியாயங்களிலெல்லாம் கமெண்ட் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார். 'நான் படிக்கற விஷயங்களில் இந்தத் தொடருக்குத் தான் என் முதல் மரியாதை' என்று ஒரு தடவை பதிவொன்று போட்டிருந்தார். இன்றும் என் reading list-ல் அவர் இருந்து கொண்டு தான் இருக்கிறார். மனசுக்குப் பிடித்ததை எந்த எதிர்ப்பு வந்தாலும் விட்டுக் கொடுத்து விடாத துணிச்சலான மனிதர்.

  இந்த இடத்தில் நீங்கள் அவரை நினைவு கொண்டது சாலப் பொருந்தும்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!