ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி VK சசிகலா இந்தத் தேர்தலில் என்ன செய்யப்போகிறார் என்று ஆளுக்காள் எதையெதையோ குழப்பிக் கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என்று ஒரு அறிக்கை விட்டு, திமுகவினரது எதிர்பார்ப்பில் மண்ணைப் போட்டிருக்கிறார். ஒதுங்குவது தற்காலிகமாகவா அல்லது நிரந்தரமாகவா? எதுவானாலும் எடப்பாடியார் எடுத்த கறாரான முடிவுக்கு பிஜேபியும் சரியென்று சொல்லிவிட்டது போல!
டிடிவி தினகரன் நன்றாக சமாளிக்கிறார். எழுத்தாளர் மாலன் சாணக்யா சேனலில் சசிகலா ஒதுங்குவது தற்காலிகமானதுதான் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். இன்றைய ஊடகவிவாதங்கள் வீணாகப் போனதுதான் மிச்சம்! ஊடகங்களுக்கு அறமும் இல்லை, வெட்கமும் இல்லை என்பது தெரிந்த விஷயம்.
தேமுதிகவின் துணை செயலாளர் / விஜயகாந்தின் மச்சான் எல் கே சுதீஷ், கொஞ்சம் அதிகப்படியாகவே உளறியிருக்கிறார். விஜயகாந்த் வளர்த்த கட்சியை பொருளாளர் பிரேமலதாவும் அவருடைய சகோதரர் சுதீஷும் சேர்ந்து முடிவுரை எழுதாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் உதிரிக்கட்சிகளுக்கு அவர்களுடைய இடம் என்ன என்பதை திமுக தலைமை பூடகமாக உணர்த்திவிட்டதுபோல! காங்கிரஸ் உட்பட எல்லா உதிரிகளுக்கும் சீட் ஒதுக்குவதில் கறாராக இருக்கும் திமுக தலைமையை எதிர்த்துப் பேச முடியாமல், மாற்றுவழியை யோசிக்கமுடியாமல் தவிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
சுயமரியாதையோடு வெளியே வருகிற தைரியம் எந்த உதிரிக்கட்சிக்கும் இல்லை! ஒட்டுண்ணியாக இருந்தே காலம் தள்ளுவதற்காகவே கட்சிநடத்துகிறவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? பெரிதாகப் புரட்சி கிளர்ச்சி எதுவும் இருக்காது என்பது தெரியுமில்லையா?
2021 தேர்தல் களத்தில் சுவாரசியங்கள் கூடிக்கொண்டே வருகிறது! மீண்டும் சந்திப்போம்.