ஒரு புதன்கிழமை! சசிகலா ஒதுங்குகிறார்! சுதீஷ் கிச்சுகிச்சு! கூட்டணி உதிரிகள்!

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி VK சசிகலா இந்தத் தேர்தலில் என்ன செய்யப்போகிறார் என்று ஆளுக்காள் எதையெதையோ  குழப்பிக் கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என்று ஒரு அறிக்கை விட்டு, திமுகவினரது எதிர்பார்ப்பில் மண்ணைப் போட்டிருக்கிறார். ஒதுங்குவது தற்காலிகமாகவா அல்லது நிரந்தரமாகவா? எதுவானாலும் எடப்பாடியார் எடுத்த கறாரான முடிவுக்கு பிஜேபியும் சரியென்று சொல்லிவிட்டது போல!  


டிடிவி தினகரன் நன்றாக சமாளிக்கிறார். எழுத்தாளர் மாலன் சாணக்யா சேனலில் சசிகலா ஒதுங்குவது தற்காலிகமானதுதான் என்று சொல்லிக்  கொண்டு இருக்கிறார். இன்றைய ஊடகவிவாதங்கள் வீணாகப் போனதுதான் மிச்சம்! ஊடகங்களுக்கு அறமும் இல்லை, வெட்கமும் இல்லை என்பது தெரிந்த விஷயம்.


தேமுதிகவின் துணை செயலாளர் / விஜயகாந்தின் மச்சான் எல் கே சுதீஷ், கொஞ்சம் அதிகப்படியாகவே உளறியிருக்கிறார். விஜயகாந்த் வளர்த்த கட்சியை பொருளாளர் பிரேமலதாவும் அவருடைய சகோதரர் சுதீஷும் சேர்ந்து முடிவுரை எழுதாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.


திமுக கூட்டணியில் இருக்கும் உதிரிக்கட்சிகளுக்கு அவர்களுடைய இடம் என்ன என்பதை திமுக தலைமை பூடகமாக உணர்த்திவிட்டதுபோல! காங்கிரஸ் உட்பட எல்லா உதிரிகளுக்கும் சீட் ஒதுக்குவதில் கறாராக இருக்கும் திமுக தலைமையை எதிர்த்துப் பேச முடியாமல், மாற்றுவழியை யோசிக்கமுடியாமல் தவிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

சுயமரியாதையோடு வெளியே வருகிற தைரியம் எந்த உதிரிக்கட்சிக்கும் இல்லை! ஒட்டுண்ணியாக இருந்தே காலம் தள்ளுவதற்காகவே கட்சிநடத்துகிறவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? பெரிதாகப் புரட்சி கிளர்ச்சி எதுவும் இருக்காது என்பது தெரியுமில்லையா?

2021 தேர்தல் களத்தில் சுவாரசியங்கள் கூடிக்கொண்டே வருகிறது! மீண்டும் சந்திப்போம்.    

6 comments:

 1. தேமுதிக காலி பெருங்காய டப்பா. கொடுத்ததை வாங்கிக்கொண்டு போவது அவர்களுக்கு நன்மை. விசிக / மதிமுக / சிபிஐ / சிபிஎம் எல்லோரும் நாங்கள் திமுக கூட்டணி என்று நான்கு வருடமாக சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போது வெளி வருவது நடக்காத காரியம். இந்த எல்லா கட்சிகளுமே கொடுத்ததை வாங்கிக்கொண்டு போக வேண்டியது தான் என்று அவர்களுக்கே தெரியும். அதை எப்படி கௌரவமாக செய்வது என்பதில்தான் யோசனை!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் பந்து!

   விஜயகாந்த் ஒற்றைமனிதராக தேமுதிகவை உருவாக்கினார். எந்தவொரு தேர்தலையும் புறக்கணிக்காமல் பங்கெடுத்தார். சீட் எண்ணிக்கை எதுவுமில்லாமல் போனாலும் வாக்குசதவீதம் 8% முதல் 10% வரை கிடைத்தது. இது காங்கிரசைத் தவிர வேறெந்தக்கட்சிக்கும் கடந்த 20 வருடங்களில் கிடைத்ததில்லை. ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்ததில் இருந்து தேமுதிகவுக்கு இறங்குமுகம் இன்றளவும் தொடர்கிறது. பெரிய மீன் சின்ன மீனை விழுங்குவது போல பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளை தலைதூக்கவிடாது என்பதைப் புரிந்துகொண்டால், அரசியல் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியதே!

   //அதை எப்படி கௌரவமாக செய்வது?// அரசியலில் வைட்டமின் ப என்னென்ன சித்து விளையாட்டுகளை நடத்திக் காட்டுகிறது என்பது இன்னமும் புதிராக இருக்கிறதா என்ன?

   Delete
 2. காங்கிரசுக்கு வேறு வழி கிடையாது. 25 வாங்கிக்கொண்டு செல்ல வேண்டியதுதான். கன்னியாகுமரி எம்பி தேர்தல் வேறு இருக்கிறது. கம்யூ, விசி, மதிமுக போன்றவற்றிர்க்குப் போக்கிடம் இல்லை.

  விஜயகாந்த் உண்மையானவர் என்றால் அவரின் சொந்தங்கள் காமெடி பீஸ்கள் மற்றும் பணம் பார்ப்பவர்கள். 2011ல் தேதிமுகவோடு கூட்டுச் சேராமலேயே வெற்றி பெற்றிருக்க முடியும், அது அரசியல் தவறு என பின்பு ஜெ சொன்னதாக நினைவு.

  ReplyDelete
  Replies
  1. காங்கிரசுக்கு வேறு வழி கிடையாது என்பது அத்தனை சரியானது இல்லை நெல்லைத் தமிழன் சார்! ஒரு தெளிவான அரசியல் செயல்பாட்டை இந்திரா காலத்திலிருந்தே அந்தக்கட்சி மேற்கொண்டதில்லை. குறுகியகால அரசியல் ஆதாயங்களுக்காகவே முடிவுகளை எடுக்கிற கட்சி அது. தவிர காங்கிரஸ்காரனுக்கு இருக்கிற நாற்காலிப் பைத்தியம் வேறெந்த அரசியல்வாதிக்கும் இருந்ததில்லை . பணம் இருக்கிறது என்ற ஒரே தெம்பில் அடுத்தவன் தோள்மீதேறி சவாரிசேயதே பழக்கப்பட்ட முடவர்கள் கட்சி அது.

   ஒரு மாற்று அரசியலைத் தருகிறோம் என்றுதான் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லோருமே ஆரம்பகாலத்தில் நுழைகிறார்கள். உண்டியல் வசூல், கட்சி உறுப்பினர்களிடமிருந்து மாதாந்திர levy என்றே நிதியாதாரத்துடன் அரசியலைத் தொடங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்போது திமுக மாதிரி ஸ்பான்சர்களிடம் இருந்து 15 கோடி, 10 கோடி என lumpsum ஆகக் கொடை பெறுகிற கட்சிகளாகக் குறுகிப்போன பிறகு மற்றவர்களை என்ன சொல்ல?

   ஜெயலலிதா செய்த மிகப்பெரிய அரசியல்தவறு, விபரீதமாகப்போய்க் கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கை வந்தபிறகும்கூட மன்னார்குடி வகையறாவை மீண்டும் சேர்த்துக்கொண்டது தான்! அத்தனை ஆணவமா அசட்டுத்தனமா என்பதை ஒரு பட்டிமன்றம் நடத்தித்தான் முடிவுக்கு வரவேண்டியிருக்கும்!

   Delete
 3. முதல் செய்தி இங்கேதான் முதலில் பார்க்கிறேன்.  உண்மை என்று நம்பி சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்!  சிறு சந்தோஷம்!  பாவம் விஜயகாந்த்.

  ReplyDelete
  Replies
  1. செய்திகளை முடிந்தவரை நிகழ்நேரப்பதிவுகளாகத்தான் இங்கே எழுதிக்கொண்டு வருகிறேன் ஸ்ரீராம்! சசிகலாவால் இந்தத்தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கமுடியும் என்பது கேள்விக்குறியாகவே இருந்த சமயத்தில் எதற்கு risk என்ற கோணத்தில் சசிகலா தற்காலிகமாகத் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

   கொங்குமண்டலத்தில் சென்ற தேர்தலைப்போல அதிமுக மட்டுமே அதிக இடங்களை வென்றால் மட்டுமே இதே நிலை தொடரலாம். ஆனால் முக்குலத்தோர் அரசியல் அப்படி இருக்க விடுமா?

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!