Sunday, July 18, 2010

சண்டேன்னா மூணு! படித்ததும் பிடித்ததுமாக!


பொள்ளாச்சி நசன் தம்முடைய வலைப்பக்கங்களில் நாளும் ஒரு நூல் என்று பழைய அரிய  புத்தகங்களை ஸ்கேன் செய்து பிடிஎப் வடிவில் வலையில் ஏற்றி  இருக்கிறார். நா.பார்த்த சாரதி அவர்களின் தீபம் இதழ்கள் பலவற்றை அங்கே இருந்து தரவிறக்கம் செய்து படித்துக் கொண்டிருந்ததில், படித்ததில் பிடித்ததாக முதலில் ஒரு கவிதை!


நினைப்பும் நடப்பும் -- ஜெயகாந்தன்

மூட நினைத்துத் திறந்து விட்டேன் --நிர்
மூடர் உலகம் அதை மறந்து விட்டேன்

தேட நினைத்து இழந்து விட்டேன் -- எதைத்
தேடுகின்றேன் என்றும் மறந்து விட்டேன்

கூட நினைத்துக் குறைந்து விட்டேன் --பெருங்
கூட்ட நெரிசலில் கரைந்து விட்டேன்

பாட நினைத்து உளறி விட்டேன் --மனப்
பாழின் துயர்களைக் கிளறி விட்டேன்

ஓட நினைத்து விழுந்து விட்டேன்--மனம்
ஒன்றி இருக்க எழுந்து விட்டேன்

ஆட நினைத்து அமர்ந்து விட்டேன்--எனை
ஆட்டிய கயிற்றை அறுத்து விட்டேன்.


கவிதை, அல்லது கவிதை மாதிரி எழுதப்பட்ட இந்த  நினைப்பும் நடப்பும் நெஞ்சுக்குள் என்னென்னமோ செய்கிற மாதிரி நான் அனுபவித்ததை உங்களுக்கும்......!

oooOooo

தேவன்


கொஞ்சம் சீரியசான  விஷயங்களையே படித்துக் கொண்டிருந்தால் மண்டை காய்ந்துபோய் விடும் என்பதற்காக, அவ்வப்போது லைட் ரீடிங்காகத் தேர்ந்தெடுத்துப் படிப்பது உண்டு. அப்படி நேற்றைக்குக் கிடைத்த லைட் ரீடிங், தேவன் படைத்த துப்பறியும் சாம்பு!  எழுபத்தைந்து கதைகளாக, அதில் குழந்தை விளையாட்டு என்பதும் ஒன்று.


சாம்புவின் சகலை பிள்ளை பிச்சை சாம்புவின் வீட்டில் வந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான். சாம்புவைக் கோபப்படுத்தி, அவன் முகம் போகிற போக்கைப் பார்ப்பதில் பொடியனுக்கு அலாதியான ஆனந்தம். ஒரு கல்யாண வீட்டில், மணப்பெண்ணுக்கு இரவலாக வாங்கி அணிவித்திருந்த நகை ஒன்று காணாமல் போய்விடுகிறது. சாம்புவை இன்ஸ்பெக்டர் கோபாலன் வந்து அழைத்துப் போகிறார். கூடவே இந்தப் பொடியனும் தொற்றிக் கொள்கிறான். வழக்கம் போலவே, சாம்புவுக்கு இருந்த அசட்டுத் தனமான அதிர்ஷ்டத்தில் நகை கிடைத்து விடுகிறது! குற்றவாளியும் அகப்பட்டுக் கொள்கிறான். பொடியனோடு வீடு திரும்புகிறான் சாம்பு.

"சித்தி! இந்த சித்தப்பாவை நீ நன்னா அடி, சித்தி! என் கவைக் குச்சியை இது ஓடிச்சு எறிஞ்சுடுத்து, சித்தி! மூஞ்சியைப் பாரு, சித்தப்பா, சொத்தப்பா, வெவ் வெவ் வே !" என்று அழகு காட்டினான் பிச்சை.

குழந்தையை வேம்பு
அணைத்துக் கொண்டு, "ஏன்னா குழந்தையின் சாமானெல்லாம் உடைக்கிறேள்? ஆனாலும் நீங்கள் முசுடு! ஒரு குழந்தையைக் கண்டு இப்படியும் கரிக்கப் படாது! அதுதான் பகவான் ஒரு குழந்தையைக் கொடுக்கல்லை!" என்றால் சாம்புவைப் பார்த்து.

"இவன் சொல்றான்னு நீயும் பேசரிய, வேம்பு! இவன் கவைக் குச்சியை நான் ஒடித்து இவனையும் கீழே விரட்டா விட்டால், இவன் சாக்கடையில் மிதந்த வேறே ஒரு குச்சியைப் பொறுக்கப் போவானா? அதை இவன் பொறுக்காவிட்டா, அந்த நகைதான் அப்படி அகப் பட்டிருக்குமா?" என்றான் சாம்பு.

"அதெச் சொல்ல வந்துட்
யளே பெரிசா!   அந்தக் குழந்தைய அவ்வளவு கட்டாயப்படுத்தி உங்களோடே நான் மட்டும் அனுப்பாட்டா என்ன ஆகியிருக்கப் போறது! அது கிடக்கட்டும்! அந்த ராமனை என்ன பண்ணுவா சொல்லுங்கோ!"

"ராமனைக் காட்டுக்கு அனுப்புவா. பேசாம நீ உன் வேலையைப் பாத்துண்டு போ!" என்றான் சாம்பு.


ராமன் பாடு கஷ்டம் தான்! 

கைகேயி வரம் வாங்கி பதினாலு வருஷம் தான் ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள். ராமனுக்குக் கோவில் கட்டுகிறேன் என்று கிளம்பிய பேர்வழிகளைத் தொடர்ந்து ஜனங்கள் தேர்தலில் தோற்கடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அத்தனை பட்டுமே கூட, இந்த ஆசாமிகள் ராமனையும் நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்கிறார்களே என்ற நினைப்பும் இதைப் படித்தபோது எட்டிப் பார்த்தது.
oooOooo

(சு)வாசிக்கப் போறேங்க தளத்தில் கொத்தமங்கலம் சுப்பு படைத்த தில்லானா மோகனாம்பாளையும், நா.பார்த்தசாரதி படைத்த ஆத்மாவின் ராகங்கள் கதையையும் ஒரு சிறு விமரிசனக் குறிப்பாக எழுதிய பிறகு, படித்த வேறு சில விஷயங்களைப் பற்றி யோசனை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது.


யாருடைய மனங்கள் நிதிவழி நேயம் நீட்டும் பொதுமனம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாடி வைத்துப் பழி சுமத்தப் பட்டிருக்கிறதோ அவர்களிடம் மனமே ஒரு பெரிய அன்பு நிதியாக இருப்பதை அவன் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தான். நா.பார்த்தசாரதி எழுதிய இந்த வரிகள் தான் சிந்தனையோட்டத்தைத் தூண்டிவிட்டிருக்க வேண்டும். பதியிலார் என்றும் தேவரடியார்கள் என்றும் ராஜ ராஜ சோழன் காலத்தில் இருந்து இறைவனுக்கே தங்கள் ஆடல், பாடல் கலைகளை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு கூட்டத்தைக் கொத்தமங்கலம் சுப்பு, தில்லானா மோகனாம்பாள் என்ற கதாபாத்திரத்தின் வழியாக ஒருவிதமாகச் சொல்லிவைத்தார் என்றால், நா.பார்த்தசாரதி இதே தாசி குலத்தில் பிறந்த பெண்களைக் கதையின் நாயகியாக வைத்து ஒன்றல்ல, இரண்டு கதைகள் எழுதியிருக்கிறார்.

பொன் விலங்கு புதினத்தில் வரும் அந்த மோகினி கதாபாத்திரத்தை வாசித்த யார் தான் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியும்? ஆத்மாவின் ராகங்களில் வருகிற நாயகி மதுரம், தேச விடுதலைப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ராஜாராமனிடம் தன்னையே கொடுக்கிறாள். இந்த இரண்டு கதைகளிலும் வருகிற பாத்திரங்கள், உடல் சார்ந்த அன்பை வெளிப்படுத்துகிறவர்கள் அல்லர். மனம், மனதையும் தாண்டி ஆன்மாவின் ராகங்களாகவே உருவாகும் விதத்தை, நா.பாவின் கைவண்ணத்தில் கண்டு மெய் சிலிர்த்து நின்றேன்.

கதையில் வரும் பாத்திரங்களை எழுத்தாளன் தன் இலட்சியங்கள், ஆவேசம், கற்பனைக்குத் தகுந்த மாதிரிப் படைத்து விடலாம்! யதார்த்த நிலையில் அது அவ்வளவு எளிதாக இருந்ததில்லை என்பதை இசைப் பேரரசியாக வாழ்ந்து மறைந்த எம் எஸ் சுப்புலட்சுமி, கொடுமுடி கான கோகிலாமாக வாழ்ந்து மறைந்த கே பி  சுந்தராம்பாள் இருவருடைய வாழ்க்கையும் நினைவுக்கு வந்து சொல்லிப் போயின.

எங்கே பிராமணன் என்ற சோவின் தொலைக்காட்சித் தொடரைப் பற்றி டோண்டு ராகவன் பதிவுகளில் தொடர்ந்து எழுதிய தருணங்களில் காட்டத்தோடு பின்னூட்டங்கள், எதிர்ப்பதிவுகள், வசைப் பதிவுகள் என்று தொடர்ந்ததையும் பார்த்திருக்கிறேன். வர்ண ரீதியாக பிராமணன் இருக்க முடியுமோ, முடியாதோ எனக்குத் தெரியாது! 


ஆனால், தன்னுடைய விடா முயற்சியால், சூழ்நிலைகளை எதிர் கொண்ட விதத்தில், எம் எஸ் சுப்புலட்சுமி  பாப்பாத்தியாகப்  பார்ப்பனர்களால், அன்றைக்கு இந்த மாதிரி ஐஎஸ்ஐ முத்திரை குத்துகிற உரிமை அதிகாரத்தை வைத்திருந்த காஞ்சி சங்கர மடத்தாலேயே கூட ஏற்றுக் கொள்ளப் பட்ட கதை கண் முன்னால் வந்து போனது.

ஜெய மோகன் வலைத்தளத்தில் இதைப் பற்றி விரிவாகப் பேசிய ஒரு கட்டுரையை வாசிக்க இங்கே 2 comments:

 1. பொள்ளாச்சி நசன் வலைப் பதிவில் நாளும் ஒரு நூல் பகுதியில் உள்ள எந்த ஒரு நூலை தேர்ந்தெடுத்து தரவிறக்கம் செய்தாலும், முதல் இரண்டு பக்கங்கள்தான் பார்க்க முடிகிறது. மீதி உள்ள பக்கங்கள் அனைத்துமே வெற்றுப் பக்கங்களாக உள்ளன, எரர் மெசேஜ் வருகின்றது.

  ReplyDelete
 2. கௌதமன் சார்,

  தமிழம் டாட் நெட் தளத்தின் இந்த உதவிப்பக்கம் உங்களுக்கு உதவக்கூடும்.

  http://thamizham.net/naalorunool.htm

  இந்தப் பக்கத்தில் நாளும் ஒரு நூல் என்றிருக்கும் பகுதியை அடுத்து வரிசை எண் 1551 -1600 இப்படி ஐம்பது ஐம்பது எண்ணிக்கையாக இருக்கும் பகுதியின் மீது க்ளிக் செய்தால், அந்த ஐம்பதில் என்னென்ன இருக்கின்றன என்பது தெரியும். அதில் வரிசை எண்ணுக்கு அடுத்து இரண்டாவதாக நூலின் பெயர் அல்லது இமேஜ் இருப்பதன் மீது கிளிக்கினால் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இப்போது கூட சோதித்து விட்டுத் தான் சொல்கிறேன்.

  தளத்தில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails