கேடி பிரதர்ஸ்! ஊழ்வினை வந்து உறுத்தூட்டுகிற நேரம்!!

மிஸ்டர் கழுகு: ராஜினாமா! தயங்கிய தயாநிதி
பொண்ணையே காப்பாத்த முடியல! இதுல உங்களை வேற காப்பாத்தணுமா என்ன?

ழுகார் உள்ளே நுழைந்தபோது, ஆங்கில செய்தி சேனல்கள் தயாநிதி மாறன் ராஜினாமாவை அலறிக்கொண்டு இருந்தன. உள்ளே நுழைந்தவர், பார்ம் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தார். 


''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதி மாறன் ராஜினாமா செய்துவிட்டார். இன்னொரு பக்கம், சன் டைரக்ட் தலைமை நிர்வாகி சக்சேனாவை போலீஸ் கைது செய்துவிட்டது. அவரது நண்பர் ஐயப்பனும் இப்போது போலீஸ் வசம். அரசு கேபிள் டி.வி-யை ஆரம்பிக்கும் வேலைகள் மும்முரமாகத் தொடங்கி விட்டன. மொத்தத்தில் பார்த்தால், சன் குழுமத்தை டார்கெட்டாக வைத்து, சி.பி.ஐ-யும் தமிழக போலீஸும் வலை பின்ன ஆரம்பித்திருப்பது தெரிகிறது. இது எங்கே போய் நிற்குமோ?'' என்ற பீடிகையுடன் டெல்லி இறுதிக் கட்டக் காட்சிகளை விவரிக்க ஆரம்பித்தார்!


''பத்து நாட்களுக்கு முன் கோபாலபுரம் வீட்டுக்கு, தயாநிதி மாறன் கலக்கத்துடன் வந்தார். 'தாத்தா என்னைச் சிக்கவைக்கிறதுக்கு சி.பி.ஐ. முடிவு பண்ணிட்டாங்க தாத்தா...’ என்று கருணாநிதியின் கைகளைப் பற்றிக்கொண்டு, குலுங்கினார். 'என் மேல் வழக்குப் போட்டா... அது கட்சிக்குத்தானே அவமானம்? டி.வி. பிரசாரத்தின் மூலமா எவ்வளவு உழைச்சு  இருக்கோம். சி.பி.ஐ. வழக்குப் போட்டால், டி.வி-க்குக்கூட சிக்கல் வரலாம்னு சொல்றாங்க தாத்தா’ என்று தயாநிதி மாறன் சொல்ல... 'அது உங்க டி.வி-ப்பா! அதுக்கும் கட்சிக்கும் என்னப்பா சம்பந்தம்?’ என்று கருணாநிதி திருப்பிக் கேட்டாராம். 

'நீங்க சொன்னீங்கன்னா, இப்பவே ராஜினாமா பண்ணிடுறேன்’ என்று தயாநிதி சொல்ல... 'அது உன்னுடைய இஷ்டம்’ என்றாராம், ஒரே வரியில். அந்தக் கண்ணீர்க் காட்சி அப்போதைக்கு முடிந்தது...''

''ம்!''


''சி.பி.ஐ. தனக்கு வலை விரித்து இருப்பதை முழுமையாக உணர்ந்த தயாநிதி, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. 'முதல் அமைச்சராக இருந்துகொண்டே சி.பி.ஐ. விசாரணையில் நரேந்திர மோடி பங்கேற்றாரே?’ என்றுகூட தயாநிதி சார்பில் சமாதானம் சொல்லப்பட்டது. 

ஆனால், பிரதமர் அலுவலகம் இந்த கமென்ட்களை ரசிக்கவில்லை. தயா நிதியைக் குற்றம் சாட்டி சி.பி.ஐ. தரப்பு அறிக்கை கொடுத்ததுமே, தயாநிதியை ராஜினாமா செய்யச் சொல்லி​விட்டதாம் டெல்லி. வியாழக்​கிழமை மதியம் பிரத​மரைச் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். ஆனால், அதற்கு முன்னால் அதிகப்படியான குணச்சித்திரக் காட்சிகள் அரங்கேறியதாம்...''


''அதைச் சொல்லும்!''


''டெல்லித் தகவல் கிடைத்ததுமே, தயாநிதியைத் தொடர்புகொண்டு ராஜினாமா செய்யச் சொன்​னாராம் கருணாநிதி. ஆனால், தயாநிதியிடம் இருந்து பாசிட்டிவாக பதில் வரவில்லையாம். 'ஒரு மாதம் போகட்டும். நிலைமை மாறும். அப்போது பார்க்கலாம்’ என்ற தொனியில் பதில் சொன்னாராம். ஆனால், கருணாநிதி அதை ஏற்காமல் உடனே போனை கட் பண்ணி விட்டதாகச் சொல்கிறார்கள். 

இது டி.ஆர்.பாலுவுக்குச் சொல்லப்பட்டது. அவர் தயாநிதியின் வீட்டுக்குச் சென்று, இதே விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்.


பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் முன்பும் தயாநிதியை அவருடைய வீட்டில் போய்ச் சந்தித்து, கருணாநிதியின் முடிவை வலியுறுத்தினார் பாலு. அப்போதும் தயாநிதி சம்மதிக்கவில்லையாம். அதன் பிறகு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் வீட்டுக்குக் கிளம்பிப் போனார். அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது 10.30 மணி. உள்ளே போன அரை மணி நேரத்திலேயே, தயாநிதி வெளியே வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ள அங்கே இருந்த அதிகாரிகள் அனுமதிக்கவில்லையாம். அந்த அளவுக்கு யார் பிரஷர் கொடுத்திருப்பார்கள் என்று யோசித்தபடியே வெளியே வந்த தயாநிதி மாறன், நேரே வீடு திரும்பினார். அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடியும் வரை காத்திருந்தவர், மதியம் 1.30 மணிக்கு பிரதமர் வீட்டுக்குச் சென்று, தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதாவது, தன் வீட்டுக்குப் போய் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்துதான் கடிதத்தோடு மீண்டும் வந்திருக்கிறார். 

பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தபோதும்கூட 'ஒரு மாதம் டைம் கொடுங்கள்’ என்று கேட்டாராம். ஆனால், பிரதமர் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை.''  


''அப்படியா?''


''தன்னை நெருக்கும் நிர்ப்பந்தங்களை உணர்ந்ததால், சில நாட்களுக்கு முன்பே தன்னுடைய உதவியாளர்கள் இருவரைத் திருப்பி அனுப்பிவிட்டார் தயாநிதி என்கிறார்கள். இந்த விவகாரத்தின் பின்னணியில் காங்கிரஸின் ரோல் இருக்கிறது. ஆனால், தாங்களாக நிர்ப்பந்தம் கொடுத்து வெளியேற்றியதாக இருக்கக் கூடாது என்று காங்கிரஸ் நினைத்தது. ஆ.ராசா ராஜினாமாவும் இப்படித்தான் அரங்கேறியது. சுப்ரீம் கோர்ட் முடிவில் தலையிட முடியாது என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கி, தயாநிதி மாறனை வெளியேற்றி இருக்கிறார்களாம்.''


''தயாநிதிக்குப் பதிலாக அமைச்சரவையில் யாராவது தி.மு.க. சார்பில் சேர்க்கப்படுவார்களா?''


''டி.ஆர்.பாலு ரொம்ப நப்பாசையுடன் இருக்கிறார். ஆனால், பதவி கிடைக்க ஸ்டாலின் விட மாட்டார் என்கிறது தி.மு.க. வட்டாரம். மேலும், ராசாவின் கோபம் எல்லாம் தயாநிதி மீது என்றால்... தயாநிதியின் கோபம் எல்லாம், பாலுவின் மீதுதான். ஒருவேளை, 'அவர்தான் அமைச்சர்’ என்று அறிவிப்பு வந்தால், அடுத்த இரண்டொரு நாட்களில் பாலுவைப்பற்றிய பழைய பஞ்சாங்கங்களை டெல்லி மீடியாக்களில் பந்திவைக்கவும் சிலர் தயாராகிவருகிறார்கள். 'பாலுவா? வேண்டாம்!’ என்று ஏற்கெனவே பிரதமரே அலறியதை நினைவூட்டுகிறார்கள். பழனி மாணிக்கத்தின் சிக்கலையும் சொல்கிறேன்...''


''அது என்ன?''


''அவரை மத்திய அமைச்சராக வைத்திருக்க, கருணாநிதியும் ஸ்டாலினும் விரும்பவில்லையாம். ஸ்டாலின் குடும்பத்துப் பிரமுகர் ஒருவருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி, சமீபத்தில் ஒரு சிக்கல் ஆனது. அது தொடர்பாக கோபாலபுரத்துக்கே வந்து விளக்கம் சொல்லிச் சென்றார் பழனி மாணிக்கம். 'இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்படுவதே எனக்குத் தெரியாது’ என்றார் அவர். 'இப்படிப்பட்டவரை அமைச்சராக வைத்திருக்க வேண்டுமா?’ என்று ஸ்டாலின் சீறியதாக ஒரு தகவல் உண்டு. எனவே, 'அமைச்சரவை மாற்றம் வந்தால், பழனி மாணிக்கத்தை டிராப் பண்ணுங்கள்’ என்று தி.மு.க. மேலிடம் டெல்லிக்குச் சொன்னதாகச் சொல்கிறார்கள்.''


''அமைச்சரவையில் மாறுதல் இருப்பதுபோலத் தெரியவில்லையே?''


''மாற்றம் செய்யவே பிரதமர் நினைத்தார். இரண்டு நாட்களுக்கு முன்னால் சோனியாவுடன் செய்யப்பட்ட ஆலோசனைப்படி, மாற்றம் என்ற முடிவை ஒத்தி வைத்துள்ளார்!'' என்ற கழுகார்...


''கட்சிக்கு ஸ்டாலின்தான் தலைமை ஏற்கவேண்டும் என்று இளைஞர் அணி அமைப்பாளர் கூட்டத்தில் ஒருவர் சொன்னதாகவும்... 'இதைப் பொதுக் குழுவில் பேசுங்கள்’ என்று ஸ்டாலின் பதில் தந்ததாகவும் கருணாநிதிக்குத் தகவல். ஸ்டாலினை அழைத்துக் கோபப்பட்டாராம் கருணாநிதி!


வீரபாண்டி ஆறுமுகத்தின் கோபத்தை கடந்த முறை உமக்குச் சொன்னேன். பெங்களூரு சென்று கருணாநிதியின் மகள் செல்வியிடம் தனது எண்ணங்களைக் கொட்டச் சென்றுள்ளாராம் ஆறுமுகம். கட்சியில் கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!


நன்றி:ஜூனியர் விகடன் 13-07-2011 இதழ்

நேற்றைக்கு அமலாக்கத்துறை அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ் எடிலசாட் -டீபீ  டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு ஏழாயிரம் கோடி ரூபாய் அபராதமாக ஏன் விதிக்கக் கூடாது என்று நோடீஸ் அனுப்பி இருக்கிறது. கரீம் மொரானியின்  உடல் நிலவரத்தைப் பற்றி உண்மை என்ன என்பதை ஒரு மருத்துவக் குழு விசாரித்து அறிக்கை தர வேண்டும் என்று டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

2G ஸ்பெக்ட்ரம் ஊழல்விவகாரம் சூறாவளியாய்ச் சுற்றுவதில் இருந்து  கண்டனூர் பானாசீனாவைக் காப்பாற்ற,பிரணாப் குமார் முகர்ஜியும் கபில் சிபலும் நிதியமைச்சராக பானா சீனா எந்த விதத்திலும் ஊழலில் சம்பந்தப்படவில்லை என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.
ஆக ஜூனியர் விகடன் செய்தியில் புதிதாக ஒன்றுமில்லை. டில்லி நிலவரங்களை செய்தித்தாட்களில் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் யோக்கியதையை அறிந்து வைத்திருப்பவர்களுக்கும் இதெல்லாம் தெரிந்த விஷயங்கள் தான்!  ஆனால், செய்திகளில் புரியாதது போல இருக்கும் சில முரண்பாடுகளை நீக்கிவிட்டுப் பார்க்கத் தெரியவேண்டும். 

உதாரணமாக, சன் டிவி பங்கு விலைகள் சரிய ஆரம்பித்தது சென்ற ஜூன் முதல் வாரத்தில் இருந்து! தயாநிதி ராஜினாமா செய்தவுடன் இன்னும் கொஞ்சம் சரிவை சந்தித்தது. இதைப் பூசி  மெழுகிப் பங்குத்தரகர்கள் சிலரை வைத்து, சன் குழுமத்துக்கு அஸ்திவாரம் மிகவும் பலமாக இருக்கிறது, சரிவை மிக ஈசியாக சமாளித்து விடுவார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இந்த செய்திகள் பங்கு விலையில் ஏற்பட்ட சரிவை எந்தவிதத்திலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அதேபோலத்தான் இந்த ராஜினாமா விவகாரத்தால் காங்கிரஸ்-திமுக உறவில் எந்த மாற்றமும் இல்லை! அது பலமாகவே இருக்கிறது என்று மனீஷ் திவாரி போன்ற அவ்வளவாக முக்கியமில்லாத காங்கிரஸ் பேச்சாளர்களை வைத்து செய்தி வெளியிட்டதும்!

காங்கிரஸ் பேசும் கூட்டணி தர்மம் எந்த அளவுக்கு திமுகவுடனான லட்சிய உறவை அப்பட்டமாக ஒருபுறம் காட்டிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் அழுகிப்போன புண்ணுக்குப் புனுகு தடவுகிற வேலையையும் காங்கிரஸ் செய்துகொண்டிருப்பதுதான் சரியான ஆன்டி க்ளைமாக்ஸ்! நகைமுரண் என்று தூய தமிழிலும் சொல்லலாம்!

தாத்தாவை சமாதானப்படுத்த வேறு வேலை வெட்டி எதுவுமில்லாத நிதி அமைச்சர் பிரணாப் குமார் முகர்ஜி இன்றைக்கு சென்னை வருகிறார்!கூட இருந்தே குழியையும் பறித்து விட்டு, சாரி கேட்கிற மாதிரி,திமுக மந்திரிகள் ஒவ்வொருவராக வெளியேறித் தாங்களாகவே திஹார் சிறைக்குப் போய் உட்கார்ந்துகொள்கிற மாதிரி நிலைமையை உருவாக்கிவிட்டு, உச்சநீதி மன்ற நடவடிக்கைகளில் தாங்கள் குறுக்கிட முடியாத சூழ்நிலையைத் தாத்தாவுக்கு இன்னொருமுறை விலாவாரியாகச் சொல்லப்போகிறாராம்! என்ன இந்தத் தடவை, கூடுதலாக இன்னொன்றும் இருக்கிறது. அமைச்சரவை மாற்றத்தில், காலியான திமுக அமைச்சர்களுக்கு மாற்றாக திமுகவில் இருந்து எவரையும் நியமிக்க முடியாததற்கும், இன்னொரு சாரி சொல்லிவிட்டால் போகிறது!

நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைந்த டி ஆர் பாலுவுக்குத்  தான் இதில் உண்மையான வலி, வருத்தமெல்லாம் இருக்கும்.
பள்ளிப் பருவத்தில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு, பின்னால் இருந்து மற்றவன் தலையைத் தட்டி விட்டு, அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பது! சிறிதுநேரம் கழித்து, மறுபடியும் தலையைத் தட்டுவது! காங்கிரசும் இப்போது கூட்டணிதர்மத்தில் இந்தச் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டைத் தான் ஆடிக் கொண்டிருக்கிறது. 

தெரிந்துமே கூட, இந்த அவமானங்களை, வலியைப் பொறுத்துக் கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது.

அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா என்கிறீர்களா! அதுவும் சரிதான்!!









 
பதிவு பிடித்திருக்கிறதா? அருகில் இருக்கும் ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்திப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

2 comments:

  1. I like to see some other people behind the bar. samy

    ReplyDelete
  2. ஆசைகள் எல்லாம் குதிரைகளானால் ஆண்டி கூட அரசன் தான்!இப்படி ஒரு ஆங்கில சொலவடை உண்டு சாமி!

    தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடத் தயங்குகிறவர்களால் ஆசைப்பட மட்டும்தான் முடியும் என்பதாவது புரிகிறதோ?

    தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு கருத்தை வெளிப்படையாக சொல்லத் தயங்குகிறவர்கள் ஆசை, ஊமை கண்ட கனவுதான்! எவருக்கும் புரியாது, பிரயோசனமும் இல்லை!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!