திருத்தாளச் சதி! இது கவிதை நேரம்!




ராபர்ட் ஃபிராஸ்டின் ஒரு கவிதையை இங்கே அனுபவித்தது நினைவுக்கு வருகிறதா?
Something there is that doesn't love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

என்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டை வீட்டுக் காரனை உருவாக்கும்!

மேற்கத்தியக் கவிஞன் இந்தக் கவிதையில் எழுப்புகிற கேள்விக்குத் தெளிவான பதில் கவிதையிலும் இல்லை, அதை விமரிசனம் செய்தவர்களுடைய  விமரிசனங்களிலும் கிடைப்பதில்லை என்பதை ஏற்கெனெவே இந்தப்பதிவில் பார்த்திருக்கிறோம். ஆனால், கீழைய மரபுகளில் ஊறியவர்களுக்கு இந்தக் கேள்விக்கு  பதில் காண்பதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. கேள்வியைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டு, அதற்கு மிகவும் தெளிவான விடையைக் காட்டுகிற லாவகத்தை, ஸ்ரீரங்கம் வி மோகன ரங்கனுடைய கவிதை ஒன்றை தமிழ் வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் மீள்வாசிப்பு செய்து கொண்டிருந்த தருணத்தில் சுகமாக அனுபவித்தேன் என்று தான் சொல்லவேண்டும்!  

இங்கே அந்தக் கவிதை ஜாலம்....!


ஒரு காலும் தாண்டிவிட முடியாத
சுவர்களின் பின்னே நின்றபடிதான்
ஒருவரை ஒருவர் சந்திக்கின்றோம்
கண்ணுக்குத் தெரியாத தடுப்புச் சுவர்கள்
அல்லது கண்களைத் தடை செய்யாது
வெட்ட வெளியாய் மறைந்து நிற்கும் தடைச்சுவர்.

மிகமிக நேரிடையான சுருக்கு வழியும்
சுற்றிவளைத்த சுழல்வழி என
சார்புநிலைப் பொது விஞ்ஞானம் பகரினும்
இடித்துத் தள்ள மூர்க்கம் எழுந்தாலும்
இணையும் கைகளுக்கு நடுவிலும்
அந்த மறைந்து வெளியான தடுப்புச் சுவர்.
சுவர் சமயத்தில் பல உடுப்புகளும்
வேஷங்களும் போட்டு ஏமாற்றுவதும் உண்டு.
 
ஆண் பெண் கிழவர் குழந்தை
அந்நியள், நம்மவள், எவனோ, இவளோ
இவரோ, அதுவோ,
அவர்களோ, இவர்களோ, உவர்களோ
எனப்பல எனப்பல எனப்பல
நினைப்பினில், நடப்பினில்,
நனவினில் நடைமுறை நிஜத்தினில்
கனவுகள் ஓய்ந்த நிதர்சனப் பொழுதினில்
தடைச்சுவர் கண் மறைக்காமல்
எண் மறைக்காமல்
எங்கோ எப்படியோ எவ்விதமோ
தட்டுப்படும் தடைச்சுவர்
தோன்றாமல் தோன்றி.
நீயும் நானும் வேறிலாது நிற்க
 
நயந்தாலும் நளினமான விலகல்
பயமற்ற நெருக்கமாய்ப் பயின்ற தொலைவு
அயலாகிப் போகும் அணுக்க ப்ரதேசம்
கடக்க முனைந்த கால்
தூரப்பட்டுப் பின்னடையும் மாயம்
இத்தனைக்கும் நீயும் நானும்
பக்கத்தில் பக்கத்திலேயே அமர்ந்துள்ளோம்.
 
இன்னும் சொல்லப் போனால்
என்னுள் நீயும் உன்னுள் நானும்
உயிர்த்த கணங்களும் உண்டுதானே!
ஆயினும் தொலைவு இடையிட்ட
பாடுடைப் போலிகளோ நாம்?
போயினும் வருவோம்
என்ற நம்பிக்கையில்
விலகிச் சேயிடைப்படா நிற்கும்
ஓருயிரின் பல பிம்பங்களாய்
ஒரு பிம்பத்தின் பல்லுயிர்களாய்த்
தனித்தனி உயிர்களின்
பிம்பங்களே மெய்மைகளாய்
அம்புவியில் வளைய வரும்
நெருக்க விழைவின் முறிவுகளாய்
உருவு சுமந்த அந்நியங்களாய்
உருக்கரந்த அந்நியோந்நியமாய்
வெருவரத் திரிதரும்
உயிர்க்குலக் கரவறப்
பயிலொளி அன்பென நின்றதும்
எதுவென அறியா முனைப்பினில்
கதுவிடும் மோனம் முகிழ்த்திடும்
சதுரது சத்தியம் என்றிடும்
குதுகுலம் உளத்தினில் குமிழ்வதும்
யதுகுல முரளியின் பண்களோ?

ஆயினும் ……….

உன்னில் உள்ள ஏதோ ஒன்று என்னுடன்
என்னில் உள்ள ஏதோ ஒன்று உன்னுடன்
நம்முள் உள்ள ஏதோ ஒன்று நம்முடன்
நாமாய் நின்ற ஏதோ ஒன்று அவர்தம்முடன்
நம்மிலும் அவர்தம்மிலும் உள்ளதாம் ஒன்று
மற்றவர்தம்முளும் நின்ற ஏதோ ஒன்றுடன்
சுற்றமாய்க் கலந்து கலக்க
உற்றதும் உறுவதுமாய்
நிலவிடும் ஒரு பெரும் விழைவு
அகண்ட சத்சங்கமாய் விழைந்திடும் ஏகம்
அதுதானோ நீ நான் நாம் அவர் அனைத்துலகும்?


அத்வைத நிலையிலும் தீருமோ
இந்த அணுகலால் விலகும் மாயமும்
விலகிட அணுகிடும் விழைவும்?

******

கவிதையின் வீச்சு அங்கேயே நின்றுவிடுவதில்லை! ஒரு கவிஞனுக்கு எல்லைகளே இல்லை என்பதை மெய்ப்பித்துக் கொண்டு அது இது என்று எங்கெங்கோ தொட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது!

திருஞான சம்பந்தர் திருத்தாளச்  சதி என்ற சந்தத்தில் ஒரு பதிகம் பாடியிருக்கிறார், அவருக்குப் பின் வேறெவரும் அந்த சந்தத்தில் பாடியதில்லை என்ற தகவலைக் கேட்டதும் தானே திருவரங்கர் திருத்தாளச்சதி என்று ஒரு பதிகம் பாடியிருப்பதை இங்கே  பகிர்ந்து கொண்டிருக்கிறார்

பெருகி வரும் மோகனத்தமிழுக்கு வந்தனம் செய்வோம்!

அரங்கன் இந்த வலைப்பக்கங்களில் எழுதிவரும் "ஹிந்துமதம்: ஒரு அறிமுகத்தெளிவு" தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் தானே! 








>
பதிவு பிடித்திருந்தால் பக்கத்தில் தெரியும் ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்திப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

2 comments:

  1. நல்லா இருக்கு :)

    ReplyDelete
  2. நிரூபன்! பதிவுலகத்திற்குப் புதிதோ? வரவேற்கிறேன்!

    ஒற்றைச்சொல்,ஒற்றைவரிப் பின்னூட்டங்கள் போதுமானவை அல்ல!பெரும்பாலான தருணங்களில், பதிவை முழுதாகப்படிக்காததையே அத்தகைய பின்னூட்டங்கள் அம்பலப்படுத்தி விடுவதாக அமைந்துவிடும். அதனால்,ஒரு பதிவை, முழுதாகப்படித்துவிட்டு, அதில் உங்களுக்கு என்ன புதிதாக, பிடித்ததாக அல்லது பிடிக்காததாக இருந்தது என்பதை சொல்ல முயற்சி செய்யுங்கள். இதை ஒரு ஆலோசனையாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!