தோசை, மசால் தோசை!

இந்த உலகம், பிரபஞ்சம், இவைகளோடு நமக்கிருக்கும் தொடர்பு என்று தொடர்ந்து தத்துவ விசாரம் செய்து கொண்டிருப்பது ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவம்.ஆனால், வலைப்பதிவுகளில் விவாதிக்கப் படும் தத்துவத் தேடல் என்பதெல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டவையே! ஒரு முழுமையான தேடலோ, கருத்துப் பரிமாற்றமோ இங்கே சாத்தியமில்லை.

இருந்தாலும் கூட, ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய The God Delusion புத்தகமும், அதைக் கொஞ்சம் தமிழில் வலைப்பதிவாக இட்ட தருமி ஐயாவுக்குச் சொன்ன பதில்களும் என்று கடந்த சில பதிவுகளில் பார்த்துக் கொண்டு வருகிறோம்.

பகுத்தறிவு என்ற பெயரில் எடுத்து வைக்கப் படும் இத்தகைய வாதங்கள், உண்மையில் ஒரு ஆழ்ந்த வெறுப்பிலிருந்தே வருவதையும், பகுத்து அறியும் நோக்கம் இவற்றில் இல்லாதிருப்பதையும் தொட்டுப் பேசியிருக்கிறோம். இன்னமும், பேச வேண்டியிருக்கிறது!விக்கிபீடியாவில் தேடிப் பார்த்தீர்களேயானால், டாகின்ஸ் தன்னுடைய புத்தகத்தில் நான்கு விழிப்பூட்டும் செய்திகளைச் சொல்லியிருப்பதாக, இப்படிச் சொல்கிறது.

Dawkins writes that The God Delusion contains four "consciousness-raising" messages:

1. Atheists can be happy, balanced, moral, and intellectually fulfilled.

2. Natural selection and similar scientific theories are superior to a "God hypothesis"—the illusion of intelligent design—in explaining the living world and the cosmos.

3. Children should not be labelled by their parents' religion. Terms like "Catholic child" or "Muslim child" should make people cringe.

4. Atheists should be proud, not apologetic, because atheism is evidence of a healthy, independent mind

முந்தைய பதிவிலேயே, டாகின்ஸ் நாத்திகம் பேசுகிறவர்களுக்குத் தெம்பூட்டுவதற்காக மட்டுமே வாதம் செய்திருப்பதாக, அவருடைய வார்த்தைகளை மேற்கோள் காட்டியே சொல்லியிருந்தது, நினைவிருக்கிறதா?

கொஞ்சம் அலுப்பூட்டுகிற இந்த வாதப் பிரதிவாதங்களில் இருந்து ஒரு மாற்றத்திற்காக, வெளியே வந்து கொஞ்சம் சுத்தமான காற்று.......!

இந்தியத் தத்துவ மரபில் வேதாந்தம் என்பது என்ன, வேதாந்தத்தின் வழியாக அடையக் கூடிய இலக்கு என்ன என்பதை, சுவாமி விவேகானந்தர் தன்னுடைய அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியை
இங்கே படிக்கலாம், சிறிது சிந்தித்தும் பார்க்கலாமே!

திரு மாதவ் பண்டிட் எழுதிய SIDELIGHTS ON THE MOTHER [ Published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry] என்ற புத்தகத்தை, மறுபடி இன்று எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். சின்னச் சின்ன விஷயங்கள் தான், ஸ்ரீ அரவிந்த அன்னையோடு, ஆசிரம அன்பர்களுக்குக் கிடைத்த சில மறக்க முடியாத அனுபவங்களை சொல்கிற புத்தகம் இது. இந்தப் புத்தகத்தில் இருந்து, ஓரிரு பக்கங்கள்!

தோசை, மசால் தோசை!


ஒரு ஆசிரமவாசிக்கு, அரவிந்தாச்ரமத்தில், சாதகர்கள் [பழகுபவர்கள்] என்றே குறிப்பிடுவார்கள், தோசை என்றால் கொள்ளைப் பிரியம், ஆசை. ஆசிரம வேலையாக வெளியே செல்லும் போதெல்லாம், தன்னுடைய உறவினர் வீட்டில் தோசையை விரும்பிக் கேட்டுச் சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர். ஒருநாள், தோசையை பற்றி நினைத்துக் கொண்டே இருந்தவரிடம், ஸ்ரீ அரவிந்த அன்னை கேட்டார்: "தோசை என்றால் என்ன?" அந்த சாதகர்,வெட்கம் பிடுங்கித் தின்ன, தோசை என்றால் என்ன, எப்படிச் செய்வது என்பதை ஸ்ரீ அன்னையிடம் விளக்கிச் சொன்னபிறகு, ஸ்ரீ அன்னை சொன்னாராம்: "தெருவில் நடந்து கொண்டு வரும் போதே தோசை, தோசை என்று உன் மனதில் நினைத்துக் கொண்டே வந்தது பெருங்குரலாக எனக்குக் கேட்டது, அதனால் தான் கேட்டேன்!"


"All Prayers are granted. Every call is answered"

Prosperity Room என்றழைக்கப்படும் அறையில் ஸ்ரீ அரவிந்த அன்னை, சில அன்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஸ்ரீ அன்னை தனக்குள் உறைந்து போன மாதிரி சிறிது நேரம் இருந்து விட்டு, பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பினார். என்னவென்று அன்பர்கள் வினவியபோது, பலர் கூடியிருந்து வழிபட்டுக் கொண்டிருந்த ஓரிடத்தை விவரித்து அங்கே தன்னை எழுந்தருளுமாறு வேண்டிக் கொண்டிருந்ததை அறிந்து, அங்கே அவர்களுடைய வேண்டுதலுக்கு இணங்கச் சென்றதாகவும் சொன்னார்.

அந்தரங்க சுத்தியுடன் செய்யப் படுகிற எல்லாப் பிரார்த்தனைகளையும் இறையருள் நிறைவேற்றுகிறது. நம்முடைய ஒவ்வொரு அழைப்பையும் இறையருள் செவிமடுத்துக் கேட்கிறது, உரிய பதிலும் தருகிறது. நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதனுடைய வலிமை தெரியும்!

பிரச்சினைகள் சூழும்போது..!


1971 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்ஒரு நாள், ஸ்ரீ அரவிந்த அன்னை, உதார் பின்டோ என்கிற அடியவரிடம் சொல்கிறார்: "இந்தியாவைக் கருமேகங்கள் சூழ்வதைக் காண்கிறேன்" ஸ்ரீ உதார் பின்டோ அன்னையிடம், அவர் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்க, ஸ்ரீ அன்னை, அதற்கான காலம் கடந்து விட்டதாகக் கூறுகிறார். ஸ்ரீ உதார் பின்டோ: "அப்படியானால், நாங்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மந்திரத்தை அருளுங்கள்" அன்னை சிறிது நேரம் சமாதி நிலையில் இருந்த பிறகு அருளிய இந்தப் பிரார்த்தனை, இன்றைக்கும் நம்மை பிரச்சினைகள் சூழும்போது, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாக இருக்கிறது.

இந்த உரையாடல் நடந்த சில மாதங்களிலேயே, பங்களாதேஷ் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது, இந்திய-பாகிஸ்தான் யுத்தமாகவும் உருமாறியது.

என்ன செய்வது என்பதைத் தெளிவாக அறிய முடியாத சூழ்நிலையில், இந்தப் பிரார்த்தனை எவ்வளவு வலிமையைத் தந்திருக்கிறது என்பதை, பிரார்த்தனைகளை நம்புகிறவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.

“Supreme Lord, eternal Truth, let us obey Thee alone and live according to Truth.”

மெய்ப்பொருள் காண்பதறிவு!

இந்தப் படத்தை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்.
இப்போது மறுபடியும் பார்ப்பது, எதிலும் இருக்கிற
நேரெதிர் மறையான இயக்கங்களைப் புரிந்து கொள்வதற்காக!
கறுப்பாக இருக்கும் பகுதியில் காணும் இயல்பில் இருந்து
விடுபட்டு, எப்படி மாறவேண்டும் என்பதைச்சொல்வதற்காக!

சிறு வயதில், நிறைய விஷயங்களில் ஈடுபாடு கொள்ளத் தூண்டுகோலாக இருந்தது படிக்கும் பழக்கம். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலோடு ஒரு குழந்தை 'இது என்ன, இது என்ன' என்று கேட்டுக் கொண்டே இருக்குமே அதுபோல!

அந்த நாட்களில், எங்களுக்குப் படிக்கக் கிடைத்த பொக்கிஷங்களாக இன்றைக்கும் எனக்கு நினைவுக்கு வருவது "கண்ணன்" என்ற பெயரில் திரு.ஆர்வி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வந்து கொண்டிருந்த இதழ்! அப்புறம் கலைக்கதிர், விளையாட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக ஹிந்துவும், சுதேசமித்திரனும்!

கண்ணன் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்த Do It Yourself மாடலில் நீங்களே டிரான்சிஸ்டர் ரேடியோ செய்யலாம் என்ற தலைப்பில் வெளியாகிக் கொண்டிருந்த தொடர், அந்த நேரத்தில் எங்களுக்கு மிகப் பெரிய ஆதர்சம், கனவு, செயல்படத் தூண்டுகோலாக இருந்த எல்லாமே! கடவுள் மாதிரி என்று வைத்துக் கொள்வோமே!!

அதைப் படித்து, ஒரு சின்ன ரேடியோ செய்துபார்த்ததில், ஏதோ சந்திரமண்டலத்தில் காலடி எடுத்து வைத்து விட்டது போல ஒரு உவகை, பூரிப்பு இருக்கிறதே அதை வார்த்தைகளில் வடிக்க முடியாது!

அந்தத் தொடரில் குறிப்பிட்டிருந்த சர்க்யூட் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஹிக்கின்பாதம்ஸ் சென்னை புத்தகக் கடைக்கு மணி ஆர்டர் அனுப்பி, Electronics For You புத்தகத்தோடு இன்னம் இரண்டு புத்தகங்களையும் கேட்டிருந்ததில் அனுப்பியிருந்த தொகை ஒண்ணரை ரூபாய் கூட இருந்ததால், அதற்கீடாக இன்னொரு புத்தகத்தையும் சேர்த்து அனுப்பியிருந்தார்கள். கேட்காமலேயே வந்து சேர்ந்த அந்தப் புத்தகத்தை, இன்று வரை நான் படித்த புத்தகங்களிலேயே மிக அற்புதமானது என்று நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடியும்.

புத்தகத்தின் பெயர்: "அறிவியல் வரலாறு" திரு பெ.நா.அப்புசாமி அவர்கள் மொழிபெயர்ப்பில் இன்றைய விஞ்ஞானத்தின் வரலாற்றை விவரிக்கும் புத்தகம், ஆங்கில மூலத்தை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன், எனக்குத்தெரிந்த சிறுவர்களுக்குப் பரிசளிப்பதற்காக.

நூல் இப்படித் தொடங்குகிறது:

மிகப் பிரபலமானதும் பழமையானதுமான நூலகம் அது. பல நூற்றாண்டுகளாக அரும்பாடுபட்டு சேகரித்த நூல்கள், களிமண் பலகை அச்சு வடிவத்தில், ஆயிரம் ஆயிரம் இருந்த நூலகம். முஸ்லீம் படையெடுப்பிற்கு ஆளான நேரம், நூலகக் காப்பாளர், முஸ்லீம் தளபதியின் காலில் விழுந்து மன்றாடிக் கொண்டிருக்கிறார்.

"இங்கே இருப்பவை மனித சமுதாயத்தின் அறிவுக் களஞ்சியம், அரிஸ்டாட்டில் முதலான கிரேக்க தத்துவ ஞானிகள் முதலாக, நம்முடைய முன்னோர்கள் சொல்லிவைத்தவை அனைத்துமே இருக்கிறது..வைத்திய முறைகள், இன்னும் எத்தனையோ துறைகளைப் பற்றிய அரிய செய்திகள் எல்லாம் இங்கே அரும்பாடு பட்டு, பாதுகாத்து வைத்திருக்கிறோம். இவற்றைக் காப்பாற்றித் தர வேண்டும்."

வெறும் மத நம்பிக்கையிலான மூர்க்கத்தைத் தவிர வேறொன்றையும் அறிந்திராத, அந்தத் தளபதி உறுமினான்:

"மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் குர் ஆனிலேயே இருக்கிறது. குர் ஆனில் இருப்பது தான், இதிலேயும் இருக்கிறதென்றால், இவை தேவையில்லை. குர் ஆனில் இருப்பதற்கு மாறாக இவை இருக்குமேயானால், இவை அழிக்கப் படவேண்டியவை."

அப்புறம் என்ன, நூலகம் தரைமட்டமாக்கப் பட்டது.

ஒரு மூர்க்கனின் அறிவின்மையால், நம்முடைய முன்னோர்கள் தேடி வைத்திருந்த எத்தனையோ அறிவுச் சுரங்கங்கள் பயனில்லாமல் போனது என்று நூலாசிரியர் நொந்துகொண்டே, மேற்கே மதம் என்பது எப்படி அறிவியலை முடமாக்கி வைத்திருந்தது, கொடுமைகளுக்கு ஆளாக்கியது என்பதை விவரிக்க ஆரம்பிப்பார்.

பல நூற்றாண்டுகள் இப்படி மதத்திடம் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த அறிவியல், எப்படி கடந்த முன்னூற்றைம்பதே ஆண்டுகளில் அணையை உடைத்துக் கொண்டு வெளியேறிய நீரைப் போல பொங்கிப் பிரவகிக்க ஆரம்பித்தது என்பதை மிக சுவாரசியமாக, கலீலியோவை அவருடைய கண்டுபிடிப்புக்கள் தவறு என்று ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்தி நடந்த விசாரணை, ஆலிவர் கிராம்வெல் ஆங்கில அரசுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம், பாவ மன்னிப்புச் சீட்டை எதிர்த்து மார்ட்டின் லூதர் நடத்திய எதிர்ப்பு இயக்கத்தால் திருச்சபை இரண்டாகப் பிரிதல் இப்படி தேக்கிவைத்திருந்த மதச் சுவர் ஓட்டைவிழுந்து, உடைப்பெடுத்து, இரண்டாயிரம் வருடங்கள் தேங்கியிருந்த நிலையை மாற்றுகிற வேகத்துடன் அறிவியல், பல கிளைகளாகப் பிரிந்து, வளர்ச்சி அடைந்திருப்பதை, இந்தப் புத்தகம் மிக எளிமையான விதத்தில் சொன்னதைப் படித்து, அறிவியல் ஈடுபாட்டை வளர்த்துக் கொண்ட அனுபவம் இருக்கிறது.

இந்த அனுபவம், ஒரு விஞ்ஞானப் பார்வையை மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்கிற பண்பையும் வளர்த்து வந்திருக்கிறது.

சமீப காலங்களில், நாத்திகத்தை உரக்கக் கூவும் புத்தகங்கள், மேற்கே நிறைய வந்து கொண்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக, 2001 செப்டம்பர் 11 ஆம் தேதியன்று,நியூ யார்க் நகரத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது ஒசாமா பின் லேடன் நடத்திய தாக்குதலுக்குப் பின்னால், இந்த மாதிரி மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்துகிற கதையாக, தொடர் நிகழ்வுகளாகிக் கொண்டிருப்பது தான் பரிதாபத்திலும் பெரிய பரிதாபம்!
நான் அறிவியலுக்கு எதிரானவன் இல்லை. மத அடிப்படைவாதியும் இல்லை. மதத்தின் பெயரால், அல்லது மதத்தை எதிர்ப்பது என்ற பெயரால், எதையும் அழித்துப் போட வேண்டும் என்கிற தீவீரவாதியும் இல்லை. இந்தப் புரிதல்களோடு,ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதியிருக்கும் புத்தகத்தைக் கொஞ்சம் பார்ப்போமா?
புனித அக்வினா என்ற கத்தோலிக்கத் துறவியின் கடவுள் இருப்பதை உறுதி செய்யும் ஐந்து வழிகளை எடுத்துக் கொண்டு, அதை மறுக்கும் விதத்திலேயே புத்தகம் ஆரம்பிக்கிறது. அக்வினா தனது வாதத்தில், கடவுள் இருப்பதை, எதெல்லாம் அல்லது எதில் எல்லாம் கடவுள் இல்லை என்ற எதிர்மறைக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு, இப்படி ஒரு முறை அனேகமாக எல்லோருமே அறிந்தது தான், இப்படிச் சொல்கிறார்:

# God is simple, without composition of parts, such as body and soul, or matter and form.

# God is perfect, lacking nothing. That is, God is distinguished from other beings on account of God's complete actuality.

# God is infinite. That is, God is not finite in the ways that created beings are physically, intellectually, and emotionally limited. This infinity is to be distinguished from infinity of size and infinity of number.

# God is immutable, incapable of change on the levels of God's essence and character.

# God is one, without diversification within God's self. The unity of God is such that God's essence is the same as God's existence.

டாகின்ஸ்கொஞ்சம் பொறுமை இழந்த நிலையிலேயே அக்வினாவின் இந்த வாதங்களை நிராகரிக்க ஆரம்பிக்கிறார்.அதே வேகத்தில், நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த பிரமாணங்களை முற்றிலும் நிராகரிக்கிறார்.
அடுத்து, பிரார்த்தனைகள் பலிப்பதில்லை, என்று ஒரு சோதனை முடிவை எடுத்து வைக்கிறார். 
 
தனிப்பட்ட அனுபவங்களை முட்டாள்தனமானவை, வெற்று ஆவேசம் என்று தீர்ப்பெழுதி விடுகிறார்.
 
புனிதர் ஆன்ஸ்லெம் என்ற கத்தோலிக்கத் துறவியின் இருப்பைப்பற்றியதான சிந்தனைகளின் [ontological arguments, from St.Anslem, contained in Meditations and Prayers] மீது தன்னுடைய வாதங்களைத்தொடர்கிறார்.
கடைசியாக, சாத்தியமே இல்லை[Improbability] என்ற தர்க்க அடிப்படையில் விவாதத்தை முன்வைக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது, என்ன விஷயத்தைத் தான் அப்படிப் புதிய கண்டுபிடிப்பாகச் சொல்லி விட்டார் என்று பார்த்தால், ஒரே வார்த்தையில், ஒன்றுமே புதிது இல்லை. வேண்டுமானால், இங்கே தெருமுனையில் கூட்டம் போட்டு, "ஏ பாவிகளே, மனம் திரும்புங்கள்!" என்று பிரசாரம் செய்வதைப் போல, "கடவுள் என்று ஒன்று இல்லை, அதனால் நீங்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம்!" என்று ஆறுதல் சொல்வது வேண்டுமானால், கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம்!

யாருக்கு?

நிச்சயமாக நம்பிக்கையுள்ளவர்களுக்குச் சொன்ன மாதிரி இல்லை.
இவரைப் போல நம்பாதவர்களுக்குச் சொல்லப் பட்டதேறுதல் வார்த்தைகள் மாதிரித் தான் இருக்கிறது!
 
மாதிரி என்று கூட இல்லை, இந்த வரிகளில் அப்பட்டமாகவே அதையும் பார்க்கலாம்:"As I said in the Preface, American atheists far outnumber religious Jews, yet the Jewish lobby is notoriously one of the most formidably influential in Washington. What might American atheists achieve if they organized themselves properly?"

1927 ஆம் ஆண்டு பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் என்ற அறிஞர், 1927 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி லண்டனில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவு. நான் ஏன் ஒரு கிறித்தவன் அல்ல என்ற தலைப்பில், அதே வருடம் துண்டுப் பிரசுரங்களாகவும் வெளியிடப்பட்டது, பின்னால் அதே தலைப்பில் வேறு சில கட்டுரைகளையும், சொற்பொழிவுகளையும் சேர்த்து ஒரே தொகுப்பாக 1957 ஆம் ஆண்டு பால் எட்வர்ட்ஸ் என்பவர் வெளிஇட்ட பதிப்பு "Why I am not a Christian and other essays" பிரபலமானது. முதலில் சொன்ன சொற்பொழிவு, துண்டுப் பிரசுர வடிவில் வெறும் பதின்மூன்றே பக்கங்களில், இணையத்தில் வெகு எளிதாகத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும், இதில் சொல்லியிருக்கும் அதே விஷயங்களைத் தான் டாகின்சும், ஏறத்தாழ நானூறு பக்கங்களில் சொல்லியிருக்கிறார்.

அதனால் என்ன, ஒரே விஷயத்தை எத்தனை தடவை சொன்னால் என்ன என்கிறீர்களா?

அங்கே தான் விஷயமே இருக்கிறது.

ஏற்கெனெவே திரு ஜெயமோகனின் 'வெறுப்புடன் உரையாடுதல்' என்ற கட்டுரையை முந்தைய பதிவொன்றில் தொட்டுச் சொன்னதைத் தான் இதற்குப் பதிலாகச் சொல்ல முடியும். ஏற்கெனெவே முடிவெடுத்துக் கொண்டு, அதன் பேரில் வாதங்களை அடுக்குகிற ஒரு அணுகுமுறை, எப்படி உண்மையைக் காண முடியும்?

'Alice in the Wonderland' புத்தகத்தைப் படித்தவர்களுக்கு அநேகமாகத் தெரிந்திருக்கும். கதாநாயகி ஒரு பூனையைத் தொடர்ந்து ஒரு விசித்திர உலகிற்குள் பிரவேசிக்கும் போது சந்திக்கும் அனுவவங்களைச் சொல்லும் போது செடியைத் தலைகீழாக நட்டு ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளைக் கிண்டல் செய்கிற மாதிரி ஒரு பகுதி வரும்.

அன்றைய மதவாதிகளுக்கு, அறிவியலைக் கண்டால் அவ்வளவு இளப்பமும், கேலியும் இருந்தது உண்மை. அதே மாதிரித் தான், இந்த நவீன விஞ்ஞானிகளும், மத நம்பிக்கைகளை, மூடத்தனத்தைச் சாடுகிறேன் என்ற பெயரில், புத்தகங்களை எழுதிக் குவித்து வருகிறார்கள்.

"எனக்கு தெரிந்த அறிவியலில், மதம், ஆன்மீகவாதிகள், கடவுள் இப்படி ஏதாவது தெரிந்தால், அப்பொழுதும் இவை தேவை இல்லை. எனக்குத் தெரிந்த அறிவியலில், இதெல்லாம் காண முடியாவிட்டால் அப்போது கூட இவை எனக்குத் தேவை இல்லை" என்கிற மாதிரி வரும் இந்தப் போக்கை ஏற்கெனெவே எங்கேயோ பார்த்த மாதிரி இல்லை?!

முதலில் பார்த்தோமே, மூர்க்கத்தனமாக, நூலகத்தைத் தரைமட்டமாக்கிய ஒரு முட்டாளின் கதை, அதே போலத் தான், இவர்களும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கூச்சல் அனைத்துமே உண்மையாக இருப்பது இல்லை.

மதங்களை நியாயப் படுத்தவோ, அவைகளில் குறையே இல்லை என்றோ சொல்லவில்லை. முந்தைய பதிவொன்றில், மதங்களின் தேவை முடிந்து விட்டது என்ற ஸ்ரீ அரவிந்த அன்னையின் கருத்தை ஒட்டியே சொல்வதாகவும் குறிப்பிட்டிருந்தேன். ஸ்ரீ அன்னை சொல்கிறார்:

“Why do men cling to a religion?


Religions are based on creeds which are spiritual experiences brought down to a level where they become more easy to grasp, but at the cost of their integral purity and truth.

The time of religions is over.


We have entered the age of universal spirituality, of spiritual experience in its initial purity.”
 

-quoted from Words of The Mother, Part II First Edition 1989 pp.88

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

-குறள்423: அறிவுடமை.


"This truth is hidden from the rationalist because he is supported by two constant articles of faith, first that his own reason is right and the reason of others who differ from him is wrong, and secondly that whatever may be the present deficiencies of the human intellect, the collective human reason will eventually arrive at purity and be able to found human thoughts and life securely on a clear rational basis entirely satisfying to the intelligence." 

ஏற்கெனெவே இட்ட பதிவுதான் -இங்கே இதை விரிவாகப் படிக்கலாம், இங்கே மெய்ப்பொருளைத் தேடும் முயற்சியில் எப்படி உதவுகிறது என்பதையும் பார்க்கலாம்!

மெய்ப்பொருள் எது, மெய்ப்பொருளைக் காணும் அறிவு எது என்பதைத் தொடர்ந்து பேசுவோம்.



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்!


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

- கண்ணதாசன்

வாழ்க்கையை அனுபவித்தே உயர்ந்த எங்கள் சிறுகூடற்பட்டியில் விளைந்த நன்முத்து கண்ணதாசன் பிறந்த தினம்இன்று! கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் என்று கொண்டாடிய மாதிரியே கண்ணனுக்கு தாசனாக, கவியரசராக, தமிழைப் பாமரனும் ரசிக்கும் வண்ணம் இலக்கியமாக்கத் தெரிந்தவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கலை அறியாதவர், கவிஞரின் பிறந்த நாளை மகிழ்வோடு இந்தப் பதிவில் கொண்டாடுவோம்!

நான் நிரந்தரமானவன்-என்றும் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கொரு மரணமில்லை


24/06/1927
ஆம் ஆண்டு பிறந்து, எட்டாம் வகுப்பு வரையே பள்ளிப் படிப்பு இருந்தாலும், மெத்தப் படித்தவர் கூட எட்டாத உயரத்திற்குத் தன் தகுதியை உயர்த்திக் கொண்டவர், வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் படித்து விட்டு, சுய சிந்தனையைத் தொலைத்தவரல்ல.

சட்டி சுடும் போது கை தானாகவே விட்டுவிடும் என்பதைத் தன் சொந்த அனுபவத்திலேயே கண்டு கொண்டவர். எங்கெங்கோ சுற்றித் திரிந்தாலும் கவியரசரின் ஒவ்வொரு கவிதையும், ஒவ்வொரு எழுத்தும், அனுபவம் பழுத்து ஞானமாக முதிர்ந்ததைச் சொல்லும்.

நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலாபுறமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!


எங்கெங்கோ அலைந்து திரிந்தாலும், இருக்குமிடத்தைக் கண்டுகொண்டு, மெயப்பொருள் காண்பதறிவு என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த எங்கள் கவியரசர் என்றென்றும் வாழ்க! வாழ்க!!

இங்கேயிருந்து கண்ணதாசனை நினைவு கூர்ந்த பகுதி:

நான் யார்?

நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?

நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.அது எனக்குப் புரியவில்லை. தவிர,ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்துக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே!

தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?

- கவியரசு கண்ணதாசன்

 blogs

படித்ததும் பிடித்ததும் - பகுதி 3



தருமியின் வலைப்பக்கங்களில் கண்ட கடவுள் என்றொரு மாயை என்ற பதிவுக்குப் பதில் சொல்வதற்காக மட்டும் அல்ல, ஒரு விஷயத்தை ஆழ்ந்து சிந்திப்பதற்கு முரண்பாடுகள் இருந்தாலுமே கூட, இப்படிப் பட்ட பதிவுகள் எப்படி உதவுகின்றன என்பதையும் சேர்த்துச் சொல்வதற்காகவும் தான்!

படித்ததும் பிடித்ததும், இந்த வரிசையில் முதலாவது பதிவு.
படித்ததும் பிடித்ததும் - பகுதி 2

அதில் இருந்து,
"அதென்னவோ அறிவியல் பதிவுகள் என்றாலே, இறைமறுப்பு என்பது அதன் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்க வேண்டும் என்கிற மாதிரி ஒரு கட்டாயம் இருக்கிறது போல."

"
மின்னிசோட்டா பல்கலைக் கழகத்தில் , தாவர இயல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் திரு P Z மெயெர்ஸ் எழுதியிருக்கும் இந்தப் பதிவு கண்ணில் பட்டது.நமக்குத் தெரிந்த கதையில், நான்கு குருடர்கள், யானையைத் தடவிப் பார்த்து, யானை இப்படித்தான் இருக்கும், இல்லை இல்லை இப்படித்தான் என்று தங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொண்டிருப்பார்கள் இல்லையா?

இங்கே,மெயெர்ஸ் கதையில், நான்கு ஆராய்ச்சியாளர்கள், யானைக்குச் சிறகுகள் இருக்கிறது என்று ஒருத்தர் சொல்ல, கதையை தன்னுடைய கருத்தோட்டத்திற்கு இசையச் சொல்லியிருக்கும் அழகுக்காகவே இதை ஒருதரம் படிக்கலாம்."

இந்தியத் தத்துவ மரபில் கதை சொல்லி ஒரு விஷயத்தை விளக்குவது ஒரு முறை. இந்தக் கதை கூட, நமக்கு ஏற்கெனெவே தெரிந்தது தான், இல்லையா? இந்தக் கதையைச் சொல்லி விளக்கும், உண்மை கூட நினைவுக்கு வருகிறது இல்லையா!

பரிணாம உயிரியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் மெயெர்ஸ், தன்னுடைய நாத்திக மேதாவித் தனத்தை, இறைநம்பிக்கை உடையவர்கள் இவரது பதிவில் ஏதாவது கேட்டால், "idiots," "morons," "loony" or "imbecilic" என்ற மிகக் கண்ணியமான வார்த்தைகளில், பதிவு தவறாமல் அர்ச்சித்துக் கொண்டிருந்த செய்தியும், The Great Desecration என்ற பதிவில் மிகக் கீழ்த்தரமாக மத நம்பிக்கைகளைச் சாட, பல்கலைக் கழகம் இவரது பதிவுடன் கொடுத்திருந்த லிங்கை சென்ற ஜூலையிலிருந்து துண்டித்துக் கொண்டது என்ற செய்தியையும் பிறகு தான் அறிந்தேன்.

இங்கே இவர் மட்டுமல்ல, உலகமெங்குமே நாத்திகம் பேசுகிறவர்கள் மெயெர்ஸ் மாதிரிப் பொறுமை இழந்தவர்களாகத் தான் உண்மையில் இருக்கிறார்கள். மதநம்பிக்கைகளில் உள்ள சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ஊதி ஊதிப் பெரிது படுத்துவதைத் தவிர, உருப்படியான ஒரு மாற்று அம்சத்தை முன்வைக்க இவர்களால் முடிவதில்லை.

இந்த வரிகளை எழுதிப பதிவிட்ட பிறகு, எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் படித்த "வெறுப்புடன் உரையாடுதல்" என்ற பதிவு இதை எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறது என்பதையும் நினைத்துப் பார்த்தேன். ஜெயமோகன் சொல்கிறார்:

"வெறுப்பு எரியும் மனங்களைப்பொறுத்தவரை உண்மையில் அவர்களுக்கென கோட்பாடோ, கொள்கையோ, ஏன் இலட்சியமோ கூட ஏதுமில்லை. அவற்றின் தன்னியல்பால் அவை வெறுப்பைக் கக்குகின்றன. அவ்வெறுப்பைக் கக்குவதற்கான ஒரு காரணமாக ஏதேனும் அரசியலை சமூகநோக்கத்தைக் கண்டுகொள்கின்றன. அந்த நோக்கத்தை உச்சகட்ட அறம் சார்ந்ததாக,சமூகக் கோபம் சார்ந்ததாக முன்வைக்கின்றன.அந்தநோக்கத்தைக் கொண்டு தங்கள் அதிகார வெறியை, மானுடவெறுப்பை நியாயப்படுத்துகின்றன. ஆனால் உள்ளூர உள்ள சக்தி என்பது அப்பட்டமான வெறுப்பு மட்டுமே

இதற்கான ஆதாரம் ஒன்றே ஒன்றுதான். எந்த இலட்சியத்துக்காக இவர்கள் அவ்வெறுப்பைக் கக்குவதாகச் சொல்கிறார்களோ அந்த லட்சியங்களையே தங்கள் வெறுப்பின் பொருட்டு காலில்போட்டு மிதிப்பார்கள். மக்களுக்காக ஆயுதமேந்துபவர்கள் மக்களையே கொன்றுகுவிப்பார்கள். உதாரணமாக, முன்பு மாவோ அதை சீனத்தில் செய்தார் என்பது நாற்பது வருடம் மறுக்கப்பட்டு இன்று அவர்களாலேயே ஒத்துக்கொள்ளப்பட்ட வரலாறு. நேற்று ஆந்திராவிலும் இன்று வடஇந்தியக் கிராமங்களிலும் மாவோயிஸ்டுகள் அதையே இப்போது செய்கிறார்கள்."
The Emotional Matrix பட உதவி விபின் மேத்தாவின் வலைத்தளம்

இப்படி வெறுப்புடன் உரையாடுவதை, நாத்திகர்கள் மட்டுமல்ல, மதங்களின் குறுகிய எல்லைக்குள் நின்று பேசுகிற மத அடிப்படைவாதிகளும் கூட, வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தில் இந்த இரு தரப்பினருமே ஒத்துப் போகிற விசித்திரம் உண்டு. உன்வழி என்வழி இல்லையானால், நீ எனக்கு எதிரி! So simple!

ஒரு மதம் என்பது திடீரென முளைத்து விடுவதில்லை.
யாரோ ஒருவர், நல்ல எண்ணத்துடன் சில தேடல்களுக்கு விடை காண்கிறார் அல்லது
விடை கண்டுவிட்டதாக நம்புகிறார். அதனால் மட்டுமே ஒரு மதம் உருவாகி விடுவதில்லை. அவரைப் பல பேர் நம்ப ஆரம்பிக்கிறார்கள். ஒரு குழுவாக ஆரம்பித்துப் பெரிய மந்தையாக வளரும் போது அவர்களிடம் இருக்கும் பொது நம்பிக்கை, அதைப் பற்றிய சிந்தனை இவைகளே மதத்திற்குத் தோற்றுவாயாக இருக்கின்றன.

இங்கே தமிழ்ச்செல்வன் மிக அருமையாக இந்த விஷயங்களைப் பற்றிய அடிப்படையான கேள்விகளுக்குப் பதில் சொல்கிற மாதிரிப் பதிவிட்டிருக்கிறார். புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையிலேயே நினைப்பவர்களுக்கு இவை உதவும் என்றே நினைக்கிறேன்.

மனிதனும் மதமும் - பகுதி ஒன்று
மனிதனும் மதமும் - பகுதி இரண்டு
மனிதனும் மதமும் - பகுதி மூன்று



இதே மாதிரி ஜடாயு என்ற புனைபெயரில் பதிவிடும் இந்த நண்பர் வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள் என்ற தலைப்பில் ஒரு நல்ல பதிவை எழுதியிருக்கிறார். வேதங்களும், உபநிஷதங்களும் என்னவோ சாதாரண ஜனங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருப்பதாகவும், எட்டாக் கனியாக இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவே புனைந்துரைக்கப் பட்டதாகவும், இங்கே உள்ள நாத்திகர்கள், அறிவுஜீவிகள் தொடர்ந்து ஊதிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜடாயுவின் இந்தக் கட்டுரையைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள், ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்முடைய முன்னோர் தேடிவைத்த ஞானக் கடலை இவர்களால் எப்படி இவ்வளவு கொச்சைப் படுத்த முடிகிறது?!

காலத்திற்குத் தகுந்த மாற்றங்களைச் சேர்த்துக் கொண்டு, நம்முடைய முன்னோர்களுடைய அறிவுக் களஞ்சியத்தைப் பயன்படுத்த என்ன தடை?

ஒரு கதையைப் பார்ப்போமா? கதையிலேயே, கொஞ்சம் காரணத்தையும் தேட முடிகிறதா என்று பார்ப்போம்.

இரண்டு பேர் சந்தித்துக் கொண்டார்கள். நாட்டு நடப்பு, அது இது என்று பேசிக்கடைசியில், அவரவர் வீட்டுக் கிணற்றைப் பற்றிப் பேச்சு வந்தது.

ஒருத்தன் சொன்னான்,
"எனக்கு என் அப்பனைப் பிடிக்காது, அவன் வெட்டிய கிணறு, தண்ணீர் என்னவோ நன்றாகத் தான் இருக்கிறது, ஆனாலும் என் அப்பனைப் பிடிக்காததால், அவன் வெட்டிய கிணற்றுத் தண்ணீரை நான் ஒரு நாளும் குடிக்க மாட்டேன்."

அடுத்தவன், பெருமூச்சு விட்டுக் கொண்டே சொன்னானாம்,
"எனக்கு என் அப்பனை ரொம்பப் பிடிக்கும், வீட்டில் அவன் வெட்டிய கிணறு, தூர் வாராமலும், ஊற்று இல்லாததாலும் உப்பாக இருக்கிறது, கலங்கலாகத் தான் கிடைக்கிறது. ஆனாலும், எனக்கு என் அப்பனை ரொம்பப் பிடிக்கும் என்பதால், அந்த கலங்கின உப்புத் தண்ணீரைத் தான் குடிக்கிறேன்"


முதலில் பார்த்த ரொம்ப புத்திசாலி, அப்பனைப் பிடிக்காது அதனால் அவன் வெட்டின கிணற்றுத் தண்ணீர் நல்ல தண்ணீராக இருந்தாலும் குடிக்க மாட்டேன் என்று சொல்லி, இருக்கும் நல்ல விஷயங்களைக்கூட தோற்று நிற்கிற, பிரேக் இல்லாத வண்டி, தான் சேதப் பட்டோ, அடுத்தவரையும் சேர்த்து சேதப் படுத்தி விட்டோ தான் ஓயும்!

அடுத்துப் பார்த்தோமே, அதி புத்திசாலி. மதத்தில், சடங்குகளில் நிறைய நம்பிக்கை, பிரியம்,அப்பனைப் பிடிக்கும், அதனால் அவன் வெட்டின கிணற்றுத் தண்ணீர் கலங்கிப்போன, உப்புத் தண்ணீராக இருந்தாலும், அதை மட்டும் தான் குடிப்பேன் என்று பிடிவாதமாக இருப்பவர்கள், என்ன செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்கிற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாத, சக்கரம் கழன்று போன வண்டி.


ஊர்போய்ச் சேர முடியாது!


இப்படி நாத்திகம பேசுகிறவர்களும், அரையும் குறையுமாக ஆத்திகம் பேசுகிறவர்களும் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்களிடம் இருக்கிற ஓட்டைகளை அடைத்துக் கொள்ள முயற்சிசெய்தால் மட்டுமே, உருப்படியாக ஏதாவது நடக்கும்!

படித்ததும் பிடித்ததும் தலைப்பிற்குப் பொருத்தமான இந்தப் பதிவில் இருந்து:

"அறிவியலின் அடிப்படையாக இருப்பது தேடல். தேடல் மானுடத்தின் முக்கிய வேட்கைகளில் ஒன்று. உணவை, பொன்னை, பொருளை, இணையைத் தேடி ஓடும் மானுடம் தன்னையும் தேடுகிறது. தன் தோற்றத்தை, தன்னைக் கொண்டிருக்கும் பூமியின் தோற்றத்தை, பூமியின் மேல் கவியும் ஆகாயத்தின் தன்மையை அது தேடுகிறது. அத்தேடல் புறத்தும் அகத்தும் நடக்கிறது. அகக்கருவிகளால் புற உலகினை புரிந்து கொள்ள முயல்கிறது மானுடம். பின் தன் அகத்துள்ளும் தேடுகிறது. அற்புத உணர்ச்சியையும் இயலாமையையும் கலவையாய்க் கொண்ட ஓர் உணர்வினால் உந்தப்பட்டு அதன் அகம் விம்முகிறது. அந்த அகப்புலத்திலிருந்து பீறிட்டெழும் ஆவேசக் கவிதைகளில் இறைவர்களும், இறைவிகளும் பிரபஞ்சத்தின் ஆழ்ந்த இரகசியங்களுக்குள் சஞ்சரிக்கின்றனர். அவர்களின் போரும், புணர்ச்சியும், ஆனந்தமும், ஆத்திரங்களும் இயற்கையின் நிகழ்வுகளாக மாறுகின்றன. ஆனால் இந்த தெய்வ வடிவங்களுக்குப் பின்னும் ஒரு பிரபஞ்ச ஒழுங்கியக்கம் உள்ளது. கட்டுமரப் படகுகளைத் தூக்கியடிக்கும் இராட்சத அலை மானுடக் கற்பனையின் வார்ப்புக்களைத் தூக்கியடிக்கும் பிரம்மாண்ட ஒழுங்கியக்கம் அது. மானுட தெய்வங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவற்றைக் கிஞ்சித்து சட்டை செய்யாத அந்த ஒழுங்கியக்கத்தின் முன்னால் மானுடத்தால் மண்டியிட மட்டுமே இயலும். அதனை அறிய முயற்சிப்பதே, அதன் இருப்பை மிக நுண்ணிய பின்னமாகவேனும் உணர்வதே அந்த பிரபஞ்ச ஒழுங்கியக்கத்துக்கு மானுடத்தால் செய்ய முடியும் ஒரே வணக்கம். அதனை ரிக் வேத ரிஷிகள் உணர்ந்தனர். பெயரிடமுடியாத அப்பேரியக்கத்தின் தொடக்கத்தை இருமைகளுக்கு அப்பால் சென்று உணர்ந்திட தலைப்பட்டனர். அவ்வுணர்தலின் அற்புதப் பேருணர்ச்சியை கவிதாவேசத்துடன் வடித்தனர். அந்தப் பெயரிடமுடியாத ஏதோ ஒன்று தம்முள் எழுப்பிய அதே அதிர்வுகளை தன்னுளும் மிகப்பிரம்மாண்டமாகக் கொண்டிருக்க வேண்டுமென உணர்ந்தனர்."

நன்றி, திரு. அரவிந்தன் நீலகண்டன்,

படித்ததும் பிடித்ததுமாக இங்கே இணைப்பில் காணும் பதிவுகளை எழுதிய அனைவருக்குமே எனது நன்றி! வாசிப்பு அனுபவம் என்பது வெறும் அரட்டை என்ற அளவோடு நின்று விடாமல், அதையும் தாண்டி ஒரு சிந்தனை இழையைத் தொடர்ந்து தருவதற்காகவும்!