சண்டேன்னா மூணு,! படம், படம், படங்கள்!

நல்லெண்ணங்களை விதைத்தல், சொன்ஃபில் என்று இந்தப் பதிவுகளில் அவ்வப்போது பார்த்திருக்கிறோம்!


இந்தப் படத்தைப் பாருங்கள்! இந்தக் கோப்பையில் பாதி மட்டுமே நீர் இருக்கிறது. அரை கிளாஸ் என்று தான் சொல்வோம் இல்லையா? உண்மையில் அப்படித்தானா?


இப்போது இந்தப் படத்தைப் பாருங்கள்! இதிலும், அதே பாதியளவு நீர் தான்! ஆனால், மீதியிடத்தில் காற்று இருக்கிறது! அதனால், கோப்பை எப்போதுமே வெறுமையாக, அல்லது வெற்றிடமாக இருப்பதில்லை! 

இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்பது ஒரு ஏற்றுக் கொள்ளப் பட்ட விஞ்ஞான விதி! விஞ்ஞானம் என்று மட்டுமில்லை, உளயலுக்கு, நடைமுறை வாழ்க்கைக்கும் அது பொருந்துவதாக இருப்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தோம் என்றால் நமக்கே புரியும்!

An  idle mind is the Devil's workshop என்று சொல்வார்களே அதைப் போல, நம்முடைய மனமும் வேறு வேலை வெட்டி அல்லது நல்ல பழக்கங்களுக்குத் தயார் செய்யவில்லை என்றால்,இப்போது தமிழ்ப் பதிவுலகில் நடந்து கொண்டிருக்கிற மாதிரி, ஒரு கல்யாணச் செய்தியைக் கூடக் கலவர பூமியாக மாற்றுகிற வேலைதான் நடக்கும்! இருட்டுச் சந்தில் மூக்கில் குத்துவது கூட எப்போதாவது தான் நடக்கும், ஆனால் வார்த்தைகளில் கொடூரமான, ஜாதியைத் தொட்டு இழிவுபடுத்துகிற, வீண் மனக் கசப்புக்களை வளர்க்கிற, தவிர்க்காமல் போனோமேயானால், நிரந்தரமான பகையை வளர்ப்பதாகவும் ஆகிவிடுகிற பரிதாபம் தான் எப்போதும் நடக்கும்!

நல்லெண்ணங்களை விதைப்போம்! ஊருக்கு நன்மை செய்வதற்காக என்று மட்டுமே இல்லை! நமக்கே நல்லதைத் தேடிக்
கொள்ள வேண்டும் என்பதற்காகவும்!

******

வாஜ்பாயி  பிரதமராக இருந்தபோது வெங்காய விலை ஏறிவிட்டது என்பதைக் காரணம் சொல்லி, காங்கிரஸ் கட்சி "சாமானிய" மக்களுக்காகக் குரல் கொடுத்தது! பிஜேபி என்றாலே இங்கே இருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு எட்டிக்காயாகத் தான் கசக்கும்! காங்கிரசோடு சேர்ந்து அவர்களும் நன்றாகவே வேகமாக ஊதினார்கள்! பிஜேபி தோற்றது!  

பிஜேபி மீது இருக்கும் வெறுப்பில், அப்புறம் காங்கிரசை அனுசரிப்பதால் கிடைக்கும் ஆதாயங்கள், அவர்களுக்கென்று இருக்கும் தனி அஜெண்டா என்று இப்படி எத்தனை காரணங்களைச் சொன்னாலும், இந்த ஊடகங்கள் செய்வதில் எது முக்கியமோ அது ஜனங்களுடைய கண்களுக்குத் தெரிய வராமலேயே மூடி மறைக்கப்பட்டு விடுகிறது. இந்தப்படத்தைப் பாருங்கள்!



ஊடகங்களால், அதிகமாக வெறுக்கப்படும் நபர் என்று பார்த்தால், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் முதலில் இருப்பார்! அவருடைய நிர்வாகத் திறமை, தொடர்ந்து சர்வ தேச அளவில் கவனிக்கப்படுவதும், பாராட்டுப் பெறுவதும் வாடிக்கையாக இருக்கிறது. நம்மூர் ஊடகங்கள் நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை! மோடி என்றால் வெறுக்கப் படவேண்டிய கொலைகாரன் தான்!

ஆனால் ஆம் ஆத்மிக்காகக் குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விலைவாசி எப்போதுமே இறக்கை கட்டித் தான் பறக்கும்.இப்போதும் அப்படியே!

ஊழல் செய்வதில் மட்டும் காங்கிரஸ் கட்சி, நம்மூர்க் கழகங்களுக்குக் கொஞ்சம் கூட சளைத்ததோ, இளைத்ததோ இல்லை என்பது மட்டும் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் நீண்ட கால சாதனையாக இருப்பதை ஏனோ ஊடகங்கள் கண்டு கொள்வதே இல்லை!

கார்கில் போரில், தேசமே இந்திய ராணுவத்தின் பின்னால் நின்றதையும், அது வாஜ்பாயிக்கு பெருமை சேர்த்ததையும் காங்கிரஸ் கட்சியினால் சகித்துக் கொள்ள முடியாமல், அவதூறுகளை விதைத்துக் கொண்டிருந்தது பழைய கதை! அதே கார்கில் போர் வீரர்களுக்காக என்று சொல்லி வீட்டு வசதி செய்து தர ஆதர்ஷ் சொசைடி என்று ஒன்றை ஏற்படுத்தி, காங்கிரஸ்காரர்களே ஆட்டையைப் போட்ட கதை இப்போது செய்திகளில் நாறிக் கொண்டிருக்கிறது! இந்த வீடியோவைப் பாருங்கள்! கார்கில் வீரர்கள் மூவருக்கு மட்டுமே இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் இடம் அளிக்கப் பட்டிருக்கிறது. மற்ற எல்லாவற்றையும், காங்கிரஸ், அதன் கூட்டாளிகள், அரசு அதிகாரிகள் லபக்கிக் கொண்டதை, இந்தக் குடியிருப்பு கார்கில் வீரர்களுக்கானதே இல்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் சொல்வதும், சொல்லும்போதே புளுகு மூட்டை அவிழ்ந்து அசிங்கமான நிலையில், ராஜினாமா செய்ய முன் வந்திருப்பதும் நீங்கள் இதைப் படிக்கும்போது பழைய செய்தியாக ஆகியிருக்கலாம்!
 


பொன்னியின் செல்வன் கதையில், கல்கி தன் எழுத்து வன்மையால் அருள்மொழிவர்மனை ஐந்தாவது பாகத்தில் தியாக சிகரமாக்கி வைத்ததைப் போல, இங்கே உள்ள ஊடகங்களும் ஊழல் சிகரமான காங்கிரசையும், சோனியாவையும் தியாக தீபமாக்கி விட்டன! 

இப்படிக் காசுக்காகக் கூவுவது மட்டும் நிரந்தரமான செய்தியாக இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வெட்கக் கேடான விஷயங்களில் முக்கியமானது! 

நிர்வாகம் செய்வதிலோ, தெளிவான அரசியல் கொள்கை, செயல் திட்டங்கள் இப்படி எந்தவிதத்திலும் தேறாத காங்கிரஸ் கட்சி அரசுகளின் நிர்வாக லட்சணம், இந்த ஊடகங்கள் எவ்வளவுதான் மூடி மறைக்கப் பார்த்தாலும், அதையும் மீறி வெளியே வந்து விடுகிறது. 

சமீபத்தில் சுரேஷ் கல்மாடிக்கும், ஷீலா தீட்சித்துக்கும் நடந்த வார்த்தைப் போர் காங்கிரசின் கையாலாகாத் தனத்தைப் பறை சாற்றியது. இது மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத் தனம், ஊழல் என்று எவ்வளவுதான் வெளிப் பட்டாலும் மீடியாக்கள், தங்கள் சொந்த சௌகரியங்களுக்காக அவற்றைப் பெரிது படுத்துவதில்லை.

ஒன்றுக்கும் உதவாத காங்கிரசைத் தூக்கி எறியுங்கள்! இந்தியா பிழைத்திருக்க அது ஒன்றே சரியான வழி!


******

பதிவர் மயில் ராவணனுக்கு, The Guns of Navarone கதையைப் படிக்கும்படி நீண்ட நாட்களுக்கு முன்னால் சிபாரிசு செய்திருந்தேன். திரைப் படமாக வந்ததில் இருந்து ஒரு பகுதியையும் யூட்யூப் சுட்டி கொடுத்து, அந்தத் திரைக்கதை முழுக் கற்பனை என்றாலும், நிஜத்தை விட பார்த்தவர் மனதில் ஆழமாகப் பாதித்ததை, பிரிட்டிஷாரை மிகச் சிறந்த வீரர்களாகச் சித்தரித்திருந்ததை, அதன் க்ளைமாக்ஸ் காட்சியை மையமாக வைத்தே, மொத்தத் திரைக் கதையும் நகர்வதான கதை சொல்லும் உத்தியை, அவருடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அலிஸ்டர் மக்லீன் எழுதிய Where Eagles dare கதையை வைத்து அதே பெயரில் வெளியான திரைப்படம்! ரிச்சர்ட் பர்டன் கதாநாயகனாக நடித்து வெளியான, மிகப் பெரிய வெற்றிப் படமாக அந்த நாட்களில் இருந்தது. கதையில், இரட்டை உளவாளியாகப் பணியாற்றிய ஒருவரை மீட்கக் கதாநாயகன் தலைமையில் ஒரு குழு கழுகுக் கோட்டை என்று அழைக்கப்படும் ஜெர்மானியக் கோட்டைக்கு அனுப்பப் படுகிறது. கிளான்ட் ஈஸ்ட்வுட், அதில் அமெரிக்க ரேஞ்சர்ஸ் படைப் பிரிவில் இருந்து இந்த மீட்புப் பணியில் பங்கு கொள்ள அனுப்ப பட்டிருப்பார்.

கதாநாயகனிடம், கிளின்ட் ஈஸ்ட்வுட் கேட்கும் ஒரு கேள்வி, " இது முழுக்க முழுக்க பிரிடிஷார் சம்பந்தப்பட்ட மீட்புப் பணி. இதில் அமெரிக்கனான என்னை எதற்கு ஈடுபடுத்த வேண்டும்?" ரிச்சர்ட் பர்டன் அதற்குச் சொல்லும் பதில், "காரணம் நீ ஒரு அமெரிக்கன் என்பதனால் தான்!" அமெரிக்கர்களைக் குறித்த ஒரு மெல்லிய நையாண்டி அந்த வசனத்தில் வெளிப்படும் என்று நினைவு. 



 
தேடிப்பார்த்ததில் இந்த வீடியோத் துண்டு கிடைத்தது. நீங்களும் பாருங்களேன்!

நம்மூர் விஜய் பன்ச் டயலாக் பேசிக் கெட்ட மாதிரி, இந்த மாதிரி நையாண்டிஎல்லாம், பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போனது தெரியுமோ! 

ஆம்! இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்ற பன்ச் டயலாக் பங்க்சராகி, பிரிட்டன் திவாலாகி ஓட்டாண்டியானது தான் மிச்சம்!



 

முதுகில் இருக்கு ஆயிரம் அழுக்கு! அதனைக் கழுவுங்கள்!

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறது, உதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோ, ஏதோ ஒன்று தவறாகவோ, அல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம், அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால், அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்! அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோ, வியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!

அதே கேலிக்குரிய பழக்கம், தவறு, அல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போது, மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம். நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல், அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்ன! இவர் இப்படிப் பட்டவரா?" என்கிறோம்!

ஆக, நம்மிடம் இருக்கும் அழுக்குடன், அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கை, பேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போது, கேலி செய்யத் தோன்றும்போது, "என்ன! அவர் அப்படி இருக்கிறாரா? அப்படி நடந்து கொண்டாரா? அப்படிச் சொன்னாரா? அப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போது, உங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்!

" நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயே, அப்படித் தான் செய்கிறேனோ என்னவோ? அவரை விமரிசிப்பதற்கு முன்னால், என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு "அதிர்ச்சியடையும் " ஒவ்வொரு தடவையும், இதே மாதிரி நல்ல விதமாகவும், புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்! நமக்குள் இருக்கும் அழுக்கு, பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான், என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்! 

நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக
, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!


இந்தமாதிரி நினைத்துப்பழகிப்பாருங்கள்! உங்களை மாற்றிக் கொள்ளப் பெரிதும் உதவியாக இருப்பதைக் காண்பீர்கள். அதே நேரம், இளங்காலைக் கதிரவன் மாதிரி, அடுத்தவர்களுடனான உறவில் ஒரு சகிப்புத் தன்மையும், புரிந்துகொள்வதில் விளையும் நல்ல எண்ணமும் ஏற்படும்போது, முழுக்க முழுக்க ஒரு உபயோகமுமில்லாத சண்டை, சச்சரவுகளுமே முடிவுக்கு வந்து விடும்!.

சண்டை சச்சரவுகளில்லாமலேயே வாழ முடியும்! ஜனங்களுடைய பிரதானமான வேலையே, நேரடியாகவோ மறை முகமாகவோ சண்டை போடுவது தான், அது தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படிச் சொல்வதே கூட வியப்பாக இருக்கும்!

தடித்த வார்த்தைகளோ, அடிதடிகளோ கூட வேண்டாம்! நமக்குள் நாம் விரும்புகிற மாற்றம், அது எவ்வளவு கடினமானது என்பது நமக்கே தெரிய வருகிறபோது ஏற்படுகிற எரிச்சல்,ஆனால் அடுத்தவர்களிடம் மட்டும் அப்படிப்பட்ட மாற்றம், முழுமை இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பது எளிதாகத் தான் இருக்கும், இல்லையா?

"அவர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள்?" என்று நினைக்கத் தொடங்கும் போதே, நாமும் அப்படித்தானே இருக்கிறோம் என்பதே மறந்துவிடுகிறது,


' அப்படி இல்லாமல்' இருப்பதற்கு எவ்வளவு பிரயாசைப் பட வேண்டியிருக்கிறது என்பதைக் கூட மறந்து விடுகிறோம்.

முயற்சித்துப் பார்த்தால் தானே, புரிய வரும்!"

1958
ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி
, ஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்"  என்ற
ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்து
, ஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி.

அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21 
 




இது ஏற்கெனெவே இரண்டு தரம் மீள்பதிவாக இந்தப்பக்கங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட விஷயம் தான்! சொன்ஃபில் - நல்ல எண்ணங்களை விதைத்தல்
என்ற தென் கோரிய இயக்கத்தைப் பற்றி இந்தப்பக்கங்களில் சொல்ல முனைந்தபோது, தமிழ் வலைப் பதிவுகளில் தேவையற்ற சச்சரவுகள், தடித்த வார்த்தைகள், சாதி முதலானவற்றை வைத்து இழிவுபடுத்திப் பேசுதல் என்று ஒரு தொடர் சங்கிலியாகவே போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து மனம் வருந்தி, எழுதிய வார்த்தைகள் தான்! இன்னும் எத்தனை முறை இதை மீள்பதிவாக, மறுபடியும் எனக்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் வருமோ தெரியவில்லை!

ஆல் இன் ஆல் வலைப்பதிவர் ராஜனுடைய திருமணச் செய்தியைத் தொடர்ந்து வந்த பதிவுகளில்  பதிவர்கள், பின்னூட்டக் கும்முகிற அனானிகள் என்று கொஞ்சம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு, அனுபவம் உள்ள பதிவர்களும் சரி, தனிப்பட்ட முறையில் பேசும்போது பொறுப்பாகவும் நேர்மையாகவும் பேசுகிற இளம் பதிவர்களானாலும் சரி, பிரச்சினையை முடித்துக் கொள்ளத் தெரியாமல்  வளர்த்துக் கொண்டே போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு ஸ்ரீ அன்னையின் இந்த  வார்த்தைகளை மறுபடி படித்துப் பார்க்கத் தோன்றியது. நம்முடைய முதுகைப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்களாக, முதுகில் இருக்கும் ஆயிரம்பொதி அழுக்கைக் களையத் தெரியாதவர்களாக, அடுத்தவர்களுடைய அழுக்கைக் குற்றம் சொல்லிப் பேசிக் கொண்டே இருக்கிறோமே  என்ற விசனமும் எழுந்தது.

எப்போது முடித்துக் கொள்வது என்பதை முடிவு செய்யாமல், யுத்தத்தில் இறங்கக் கூடாது என்பது ஒரு யுத்த விதி! அதைத் தெரிந்து கொள்ளாமல் தொடர்ந்து நடத்தப் படும் யுத்தம், தோல்வியையும் அவமானத்தையும் தருவதாக மட்டுமே இருக்கும்.

இது ராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக நடத்தப் படும் போர்களுக்கு மட்டுமல்ல, வலைப்பதிவுகளில் அவ்வப்போது நடக்கும் அக்கப் போர்களுக்குமே கூட மிகவுமே பொருத்தமானது தான்!

காரணம், அதற்கும் முந்தைய காரணம், காரியம் என்று எல்லாவற்றையும் பார்த்த பிறகு ஒரே ஒரு வரி தான் சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் துப்புவது வெறும் எச்சில் மட்டும் அல்ல! கொடும் விஷம்! இந்த விஷம் எங்கே கொண்டுபோய்விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இங்கே.


முழுச் செய்தியையும் படிக்க, இங்கே.


இன்னொரு செய்தி இங்கே





பத்து இல்லைன்னா பத்தாது! சரி எவ்வளவு இருந்தால் பத்தும்?

ஒரு பிராண்ட் என்றால் என்ன?


ஒரு பிராண்ட் என்பது எப்படி உருவாகிறது?


பிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஒரே மாதிரியான தயாரிப்புக்களில் தன்னைத் தனித்துக் காட்ட உதவுகிற விதமாக என்று ஆரம்பித்த பிராண்ட், இப்போது அந்த வரையறைகளைஎல்லாம் தாண்டி, தயாரிப்பாளர் கொடுக்கும் தர உத்தரவாதம், வாக்குறுதி என்ற அளவுக்கு வந்திருக்கிறது. ஒரு நகல் எடுக்க வேண்டும், கடைக்குப் போய் ஒரு ஜெராக்ஸ் எடுத்து வா என்று சொல்கிறோம். ஜெராக்ஸ் என்பது போடோகாபியர்களைத் தயாரிக்கும் ஒரு முன்னோடி நிறுவனம். ஜெராக்ஸ் எடுப்பது என்றாலே, நகலெடுப்பது தான் என்ற அளவுக்கு இந்தப் பெயர் வழக்குச் சொல்லாக மாறிப்போனதை, அந்த நிறுவனம் தன்னுடைய ட்ரேட் மார்க் உரிமைகளை மீறுவது போல எண்ணி எவ்வளவோ விளம்பரம் செய்தும் கூட அப்படிப் பயன் படுத்துவது குறையவில்லை!

"உங்களுடைய டாகுமெண்டை ஜெராக்ஸ் செய்ய முடியாது; ஆனால் ஜெராக்ஸ் பிராண்ட் காபியிங் மெஷினில் அதை நகல் எடுக்க முடியும்!" இப்படி ஜெராக்ஸ் நிறுவனம் செய்த விளம்பரம், எடுபடவில்லை என்பது, ஒரு பிராண்ட் தன்னைப் பற்றிய தாக்கத்தை பயன்படுத்துகிறவர்களிடையில் எப்படி நிலை நிறுத்திக் கொள்கிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்!


ஆரம்பத்தில், ராஜா சோப், அல்லது ஆண்டி சோப் என்று ஒரு பிராண்டை உருவாக்கச் செய்யப்படும் ஆரம்பிக்கும் விளம்பரம், மெல்ல மெல்ல, இது ரொம்ப ரொம்ப நல்ல சோப் என்று ஆரம்பித்து, உங்கள் காசைக் கரைக்காமல், அழுக்கைக் கரைக்கும் சோப் என்றெல்லாம் வர்ணித்து வளர்ந்து, கடைசியில் தயாரிப்பைப் பற்றிய  ஒரு குறைந்தபட்ச உத்தரவாதமாக,தரத்தைக் குறித்த வாக்குறுதியாக இன்றைக்கு ஆகியிருக்கிறது. ஆக ஒரு சோப்பாக இருக்கட்டும் அல்லது வேறெந்தப் பொருளாக, சேவையாக இருக்கட்டும், ஒரு பிராண்ட் என்பது, அது அளிக்கும் வசதிகள், தரம் குறித்த உத்தரவாதமாக இன்றைக்கு இருக்கிறது. 

" A brand is the set of expectations, memories, stories and relationships that, taken together, account for a consumer’s decision to choose one product or service over another."

பிராண்ட் என்றால் என்னவென்று  இப்படித் தன்னுடைய  கருத்தாக சேத் கோடின் சொல்கிறார்!


இந்த அம்சத்தை முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். சேத் கோடினுடைய இந்தப்பதிவு, பிராண்ட், பிராண்ட் இமேஜ், அப்புறம் சந்தைப் படுத்தும் உத்திகள் குறித்து கொஞ்சம் யோசனைகளைக் கிளப்பி விட்டது.

சேத் கோடின் இந்தப் பதிவில் சுருக்கமாக சொல்வது இது தான்! மார்கெடிங் உத்தியில், நம்மிடம் ஏற்கெனெவே இருப்பதைப் பற்றி, அல்லது உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளைப் பற்றிய அதிருப்தியை எழுப்புவதன் மூலம் தங்களுடைய பொருட்களைத் தள்ளி விடுகிறார்கள்! நாம் உபயோகித்துக் கொண்டிருப்பதில், நாம் சந்தோஷப் படக் கூடியது அனேகமாக இல்லை என்று சொல்லும் போது, மறைமுகமாகத் தங்களுடைய தயாரிப்பு அப்படி சந்தோஷத்தைத் தரும் என்று சொல்கிறார்கள். இப்படிப் பட்ட விளம்பரங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? 


வாடிக்கையாளருடைய திருப்தி என்பது இங்கே, பெயருக்கு மட்டுமே என்பது தான் உண்மை!

சந்தை
ப் படுத்தும் போது மார்கெடிங் உத்திகள் ஒரு பிராண்டை உருவாக்குவது மட்டும் இல்லை, ஏற்கெனெவே இருப்பதைக் கேள்விக்குள்ளாக்குவது, அதன் மீது ஒரு சந்தேகம், அதிருப்தியைத் தோற்றுவித்துத் தன்னுடைய தயாரிப்பை விற்பனை செய்வது என்பதாகவும் இருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு டூத் பேஸ்டையே எடுத்துக் கொள்வோம்! அது எந்த பிராண்டாக இருந்தாலும், அடிப்படை அம்சங்கள் பொதுவாகத் தான் இருக்கும். 

தனித்துக் காட்டுவதற்காக, இது ஸ்பெஷல் பார்முலா, கிராம்பு, புதினா போன்ற மூலப் பொருட்களைக் கொண்டது என்று கொஞ்சம் வித்தியாசப் படுத்திக் காட்டுகிற முயற்சி ஒருவிதம்! அப்புறம் இது அதைச் செய்யும், அது இதைச் செய்யும் என்றமாதிரியான எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் இன்னொரு விதம்!

இது போக,ஏற்கெனெவே மார்க்கெட்டில் வலுவாகக் காலூன்றிக் கொண்டிருக்கிற ஒரு பிராண்
டைக் கொஞ்சம் அதிருப்தி சந்தேகம் ஏற்படுகிற மாதிரி செய்யப்படும்  விளம்பர உத்திகள்......!
 


கொஞ்ச காலத்துக்கு முன்னால், தொலைகாட்சி விளம்பரங்களில் பெப்சோடென்ட்  பற்பசைக்காக, இரண்டு சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட கமெர்ஷியல்  "பத்து இல்லைன்னா பத்தாது!" நினைவு வருகிறதா? அதில் பெப்சொடென்ட் உபயோகிக்கும் ஒரு சிறுவன், மற்றவனைப் பார்த்து "என்னோடது பத்து வேலைகளை செய்யும், உன்னோடது..?" என்று கேட்க, அவன் தயங்கித் தயங்கி ஒன்று இரண்டு என்று என்ன ஆரம்பித்து ஆறு வரை எண்ண, முதல் பையன் பத்து இல்லைன்னா பத்தாது என்று ஒரு பன்ச் லைன் வைத்துச் சொல்லி முடிக்கும் அந்த விளம்பரம் நினைவுக்கு வருகிறதா?

கோல்கேட் தயாரிப்பைக் குறிவைத்துச் செய்யப்பட்ட அந்த விளம்பரம், நன்றாகவே வேலை செய்தது! தனக்குப் போட்டியே இல்லை என்று இருந்த கோல்கேட் நிறுவனம், இந்த மாதிரி விளம்பர உத்திகளால், பற்பசை செக்மெண்டில் தன்னுடைய பங்கில் கணிசமான பகுதியை இழக்க வேண்டி வந்தது. 


இந்த பத்து இல்லைன்னா பத்தாது விளம்பரத்தை எப்படி சமாளித்தார்கள்? என்ன செய்தார்கள்?

பத்து இல்லைன்னா பத்தாது என்பதற்குப் பதிலாக, கோல்கேட் டோடல் 12 என்ற பற்பசையை அறிமுகம் செய்தது! பத்தை விடப் பன்னிரண்டு பெரிது என்று சொன்ன மாதிரியும் ஆயிற்று, போட்டியாளரை விட இன்னும் அதிகமாக இரண்டு கூடுதல் அம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறோம் என்ற மாதிரியும் ஆயிற்று.  

இப்படிச் செய்ததனால், சரிந்துபோன அல்லது இழந்த மார்க்கெட்டை மறுபடியும் முள்ளுமுனை நொறுங்காமல் பிடித்துவிட்டார்கள் என்று அர்த்தமில்லை! அது சாத்தியமும் இல்லை! 

என்ன, இப்போது பத்து இல்லைன்னா பத்தாது என்ற பன்ச் லைன் காலாவதியாகிப் போய்விட்டது, அவ்வளவு தான்! அவர்கள் பன்னிரண்டு என்று வந்துவிட்டதனால் இவர்கள் பதினாலு, பதினாறு என்று கூட்டிக் கொண்டே போவது மார்கெடிங் அபத்தமாக இருக்கும்.

இப்போதைக்கு ஓய்ந்து விட்ட மாதிரித் தோன்றுகிற இந்த விளம்பர யுத்தம், அதாவது தங்கள் பொருளை விற்பனை செய்வதற்குப் போட்டியாளரின் தயாரிப்பில் அதிருப்தி அல்லது சந்தேகத்தை எழுப்புகிற உத்தி, வேறு ஒரு வடிவத்தில் இன்னும் கொஞ்ச காலம் கழித்து நிச்சயம் வரும்!

இதைச் சொல்லும்போது,இதற்கு முன்னால் 1980களில்
கோக கோலாவுக்கும் பெப்சி கோலாவுக்கும் நடந்த சந்தையைப் பிடிக்க நடந்த விளம்பர யுத்தம், அதில் புதுமையைச் செய்கிறேன் என்ற பெயரில் கோக கோலா செய்த ஒரு சிறு சறுக்கலை பெப்சி நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட விதம், அப்போது சறுக்கிக் கீழே விழுந்ததில் இருந்து எழுந்து நிற்பதற்குள், பெப்சி சந்தையின் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டதோடு, வலுவாகக் காலை ஊன்றிக் கொள்ளவும் வழி செய்தது. இந்த கோலா யுத்தத்தில் இருந்து  பாடங்களைக் கற்றுக் கொள்ள முடிந்த பல நிறுவனங்கள் அதே தவறைத் தாங்களும் செய்யாமல் இருக்க ரொம்பவே பிரயாசைப் பட வேண்டி வந்தது. சந்தைப் படுத்துதல், மார்கெடிங், விளம்பர உத்திகள் என்று பார்க்கும் போது கோலா யுத்தம் அவசிய தெரிந்து கொள்ள வேண்டிய அதே நேரம் சுவாரசியமானதுமான ஒன்று.

இப்போது பெப்சி விளம்பரங்களைக் கவனித்துப் பார்த்தால், தங்களை இளமையாகப் பிரகடனடப் படுத்திக்  கொள்வதில், இளைஞர்களைக் குறிவைத்து மட்டுமே விளம்பரம் செய்வதில் குறியாக இருப்பது தெரிய வரும்!


பிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி வாசகர்களுடைய கருத்தை முந்தைய பதிவுகளில் வேண்டியிருந்தேன்! இங்கே வந்து வாசிப்பவர்கள் கவனமாக அதைத் தவிர்க்கிற மாதிரி தெரிகிறதே!! 

நண்பர் மாணிக்கம், பின்னூட்டத்தில்  மார்கெடிங் துறையையும், பிராண்ட் இமேஜ் கான்செப்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொண்ட மாதிரித் தோன்றுகிறது.சந்தைப் படுத்துகிற உத்தி, மார்கெடிங் என்பது, உங்களுக்குத் தேவையே இல்லாத ஒன்றைக் கூட உங்களுக்கு மிக மிக அவசியமானது  என்று நம்பவைத்து, ஒரு பொருளை அல்லது சேவையை உங்கள் தலையில் கட்டிவிடுவது! 



உதாரணத்துக்கு, எச் சி எல் கம்பனியைச் சேர்ந்த நிர்வாகி  வினீத் நாயர் என்பவர், employees first, customers second என்ற அடிப்படையில் அடிக்கடி எழுதிக் கொண்டிருப்பார். ஆனால் நடைமுறையில் எப்படி இருக்கிறது, என்பது எச் சி எல் கம்ப்யூட்டரை வாங்கிவிட்டு , அதன் தரக் குறைவு, சேவைக் குறைவுக்காக  நான் போராடிக் கொண்டிருப்பதில் நேரடியாகவே பார்த்து விட்டேன். அஞ்சு பில்லியன் டாலர் கம்பனி என்று அவர்கள் பீற்றிக் கொள்வதில், வாடிக்கையாளருக்கு என்ன பலன்? தங்களுடைய டீலர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதையுமே, ஸ்டாப் அண்ட் கோ தாமோதரனுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்! கம்பனி சரியாக இருந்தால் டீலர்கள் மோசடி செய்ய முடியாது. வினீத் நாயருடைய கூற்றுப்படி எச் சி எல்லில் வாடிக்கையாளர்கள் இரண்டாம் மூன்றாம், அல்லது கடைசிப் பட்சம் தான்!

மார்கெடிங் உத்தி வேறு, பிராண்ட், பிராண்ட் இமேஜ் என்பது வேறு!

ஒரு பொருள் அல்லது சேவையைத் தரம், உத்தரவாதம் என்ற அடிப்படையில் தனித்துத் தெரிகிற மாதிரி உறுதிப்படுத்தும் விதத்தில் தான் பிராண்ட், பிராண்ட் இமேஜ் உருவாகிறது. எதற்கும் ஹார்வர்ட் பிசினெஸ் ரெவ்யூ தளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான இந்தக் கட்டுரையை ஒரு தரம் வாசித்துப் பார்த்து விடுங்கள்! மார்கெடிங் துறையில் செய்யப்படும் கோளாறுகள் எப்படி ஒரு பிராண்ட் அல்லது அதன் இமேஜைப் பல சமயங்களில் பதம்பார்த்து விடுகின்றன என்பதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்!







வரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம்!



2001 மார்ச்  மாதம்! ஆப்கானிஸ்தானில் பாமியன் பள்ளத்தாக்கில் இருந்த மிகப் பழமையான புத்தர் சிலைகளை தாலிபான் தீவீரவாதிகள் வெடிவைத்துத் தகர்த்தபோது, உலகமே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தது. தாலிபான் தலைமை, சர்வதேசக் கண்டனங்கள், வருத்தங்களை கொஞ்சம் கூட சட்டை செய்யவே இல்லை! 

தாலிபான் தலைமை ரொம்பவும் கூலாகச் சொன்னதாம்: 
" நாங்கள் தகர்த்தது வெறும் பாறைகளைத் தான்!"
 

பழமைவாதத்தில் ஊறிய தாலிபான்களை விட மோசமானவர்களாக நாம் இந்தியாவில்,குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்று சொன்னால் என்ன செய்வீர்கள், என்ன நினைப்பீர்கள்?
 

ஆம்! அது தான் உண்மை! 

கடப்பாரை, ஜெலட்டின், டைனமைட் வைத்துக் கரசேவை செய்வது மட்டும் தான் தீவீரவாதம், நாச வேலை என்று நினைக்க வேண்டாம்! நம்மைச் சுற்றி நடக்கும் அக்கிரமங்களை, அத்துமீறலுக்கெதிராகக்  குரல் எழுப்பாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற அசமந்தத் தனமும் கூட இந்த மாதிரி அவலங்களை வளர்க்கிற தாய் மாதிரித் தான்!

விழிப்பாக இருக்கவேண்டிய நேரத்தில், எங்கேயோ மழை பெய்கிறது என்று அலட்சியமாக இருந்து விட்டு, கடைசியில் அது நம்மையும் கடிக்க வரும்போது குய்யோமுய்யோவெனக் கூக்குரலிடுவதால் ஏதாவது பலன் கிடைத்து விடுமா?

நம்மைச் சுற்றி இருக்கும் புராதான சின்னங்களை, சரித்திரம் சொல்லும் இடங்களை, சிற்பங்களைப் பாதுகாப்பதில் அக்கறை எதுவுமே இல்லாமல் இருந்தால் குவாரி நடத்துபவர்கள் தாலிபான்களைப் போலக் கூலாக, "நாங்கள் தகர்த்தது வெறும் பாறைகளைத் தான்!" என்று ஏன் சொல்ல மாட்டார்கள்? 

தாலிபான்களுக்காவது, பழமைவாதம், மதத் தீவீரவாதம், கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்றெல்லாம் "தத்துவார்த்த நியாயங்கள்" "கற்பிதங்கள்" இருந்திருக்கலாம்!

இங்கே புராதானச் சின்னங்கள், வரலாற்றுத் தடையங்களை, வெறும் காசுக்காக வெடிவைத்துத் தகர்த்துக் கொண்டிருக்கும் குவாரி உரிமையாளர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? 

புதுக்கோட்டை புராதனங்கள் அபாய நிலையில்!!!

Posted by fourthpress on October 13, 2010  

சிதறாமல் அமர்வாரா ஜைனர்?
ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை

"புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். 

அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள்
தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே

படங்கள்: எஸ்.ஜெயக்குமார்.

இப்போது வெளியாகியுள்ள ஜூனியர் விகடன், மதுரை அருகேயுள்ள கீழவளவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இதே போல் கல் குவாரிகள் புராதனச் சின்னங்களை அழித்துவிட்டதை சுட்டிக் காட்டி வெளியிட்டுள்ள செய்தி படம் காண்க, கீழே:
நன்றி; ஜூனியர் விகடன் இதழ் தேதி: 17.10.10

இப்படியே ஒவ்வொரு மலையையும் தகர்த்து, புராதனங்களையும் அழித்து, நவீன ரோடு போட்டு, எங்கே போக? மயானத்துக்கா?

இன்னுமொரு புராதனச் சின்னம் அழிப்பு

இன்றைய தினமலரில் (14.10.10) வந்த செய்தி

உடனடியாக செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்."

அப்டேட்! இன்றைக்கு டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருக்கும் செய்தி இங்கே  
 

மின்தமிழ் கூகிள் வலைக்குழுமத்தில் திரு ஆரூரன் விஸ்வநாதனும், தண்டோரா மணிஜி தன வலைப்பதிவிழும் இந்தப் பதிவை வெளியிட்டு, பரவலாக செய்தியைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற வேண்டுகோளை நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்போது கூட, தங்களுடைய செய்தி வலைப்பதிவர்களால் முன்னெடுத்துச் செல்லப் பட்டதை விட, போர்த் பில்லர் அமைப்புக்கு நன்றி சொல்லி விட்டு அல்லவா இதை எடுத்தாண்டிருக்கவேண்டும் என்று ரீச் சந்திரா தண்டோரா மணிஜியின் வலைப்பதிவில் ஒரு 'ஆதங்கத்தை' வெளிப் படுத்தி ருக்கிறார். ஊர் கூடித் தேரை இழுக்க வேண்டும் என்பதில் இந்த மாதிரி சர்ச்சைகளை, மனக்குறைகளைத் தவிர்த்து, அதையும் தாண்டிப் போகும் பக்குவம் வேண்டும் என்பதற்காக இதையும் சேர்த்துப் பதிவு செய்கிறேன்.


இந்த இரண்டு மின்னஞ்சல் முகவரிகளும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவருடையது, இந்த மின்னஞ்சலுக்கு வாசகர்கள் தமது கண்டனங்களைத் தெரிவிக்கவேண்டும் என்றும் கோரி ருக்கிறார்கள். 

மின்னஞ்சல், தபால், மகஜர், கையெழுத்து இயக்கம், இவை எல்லாம் பயனளிக்கக் கூடியவைதானா என்ற சந்தேகமும் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் இந்த இழையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


மாவட்ட ஆட்சித்தலைவருக்குத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் இருக்கலாம்! ஆனால், செய்ய வேண்டுமே!

வாசகர்கள், இதைப்படிக்கும் சகபதிவர்கள் இந்த செய்தியை இன்னும் அதிக நண்பர்களுக்கு கொண்டு சொல்ல வேண்டியது மிகவும் அவசியம்  என்று கருதி இதை என்னுடைய பக்கங்களிலும் பகிர்ந்துகொள்கிறேன்.




வினோதமான செய்தி தான்! உண்மையான அக்கறையோடு உள்ளதும் கூட!


ஏகப்பட்ட பணத்தை செலவழித்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போட்டியில் வென்றதை விடக் கூடுதலாக ஒன்றிரண்டு தங்கப்பதக்கங்களை வென்றதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிற இந்த நேரத்தில் சத்தமே இல்லாமல் நடந்திருக்கிற இன்னொரு சாதனையைப் பார்க்கலாம்! 

சத்தியமாக, இதற்கு ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு எந்தவிதத்திலும் பொறுப்பு இல்லை!

இயற்கை வளங்களை அளவுக்கு மீறிச் சுரண்டுகிற நாடுகளின் பட்டியலை World Wildlife Fund என்ற அமைப்பு வெளியிட்டிருப்பதில்,
அதிகம் சுரண்டுகிற முதல் பத்தில் இந்தியா இல்லை! 

இதற்காக சந்தோஷப்படுவதற்கு முன்னால், இது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விட்டு, அப்புறமாக சந்தோஷப்படுவதா, இல்லை, இப்போதிருக்கிற நிலைமையை விட மோசமான நிலை இனி எப்போதுமே வராது என்ற நிலையில் இந்த ஒப்பீடு,எல்லாம் சும்மா உடான்ஸ் என்று வருத்தப்படுவதா என்று பார்க்கலாம்!

சுற்றுச் சூழல் அளவீடுகளின் படி, உலகில் இயற்கை வளங்களை ஒவ்வொரு தனிமனிதனும் எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்ற சராசரியை விட அனேகமாக எல்லா நாடுகளிலுமே ஒரு ஐம்பது சதவீதம் அதிகமாகத் தான் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு, அப்படி அதிக விரயம் செய்கிற டாப் டென் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது அந்த அமைப்பு. அதன்படி,

இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக விரையம் செய்கிற நாடுகளில்

முதலிடத்தில், ஐக்கிய அரேபிய எமிரேட் நாடுகள்........சராசரியை விட ஆறு மடங்கு!

இரண்டாவது இடத்தில், கத்தார்.............................................சராசரியை விட, 5.9 மடங்கு!

மூன்றாவது இடத்தில், டென்மார்க்.......................................சராசரியை விட 4.6 மடங்கு!

நான்காவது இடத்தில் பெல்ஜியம்........................................ சராசரியை விட 4.5  மடங்கு!

ஐந்தாவது இடத்தில், அமெரிக்கா.......................................... சராசரியை விட 4.5  மடங்கு!

ஆறாவது   இடத்தில் எஸ்தோனியா ....................................சராசரியை விட 4.4 மடங்கு!


ஏழாவது   இடத்தில் கனடா .......................................................சராசரியை விட 3.9 மடங்கு!

எட்டாவது    இடத்தில், ஆஸ்திரேலியா ..............................சராசரியை விட 3.8  மடங்கு!

ஒன்பதாவது   இடத்தில், குவைத் ...........................................சராசரியை விட 3.5 மடங்கு!

பத்தாவது  இடத்தில் அயர்லாந்து ...........................................சராசரியை விட 3.5 மடங்கு!

அதற்கடுத்த இடத்தில் வரும் பிரிட்டனில்  சராசரி அளவை விட இரண்டே முக்கால் பங்கு அதிகமாக இயற்கைவளங்களைவிரையம் செய்கிறார்கள் என்று சொல்கிற இந்த அமைப்பு, சென்ற ஆண்டை விட பிரிட்டன் இந்தப்பட்டியலில் முதல் வரிசைக்கு வராததற்குக் காரணம், ஏதோ ஆங்கிலேயர்கள் எல்லோரும் இயற்கைச் சூழல் மீது  அக்கறை கொண்டு விரையத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டதாக அர்த்தமில்லை, மற்றநாடுகள் இப்படி இயற்கைவளங்களை விரையம் செய்கிற அளவு அதிகரித்திருக்கிறது அவ்வளவு தான் என்பதையும் சொல்கிறது!  


செய்தியின் மூல வடிவம் இங்கே!




மற்றப்பகுதிகளில், இப்படி இயற்கை வளங்களை தனிநபர் சராசரிக்கும் மிக அதிகமாக விரையம் செய்து கொண்டிருக்கும் அதே நேரம், இயற்கை வளங்களை விரையம் செய்கிற அளவு சராசரிக்கும் மிகக் கீழே உள்ள ஒரே பகுதி ஆப்பிரிக்கா தான்!

எதைவைத்து இந்த விரையத்தை மதிப்பிடுகிறார்களாம்?

கரியமில வாயு வெளியீடு, தண்ணீர் உபயோகம், மற்றும் இதர இயற்கை வளங்களை உபயோகிப்பதில் தனிநபர் சராசரி என்ற அளவை வைத்துக் கொண்டு இந்தப் புள்ளி விவரங்களைத் தொகுத்திருக்கிறார்கள். நம்மூரில் கலப்படப் பெட்ரோல், டீசல் உபயோகிப்பதால் மட்டும் தான் காற்றில் கரியமில வாயுவின் அளவு கூடுகிறது என்ற மாதிரி  நினைக்கவேண்டாம்!

அசைவ உணவு உட்கொள்வதும் கூட, கரியமில வாயுவின் அளவைக் கூட்டுகிறது, சுற்றுச் சூழலுக்கு எதிராகச் செயல்படுகிறது  என்பதையும் இந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது! அதற்கப்புறம் பால், தயிர், வெண்ணெய், நெய்,  பாலாடைக்கட்டி என்று வருகிற பண்ணைப் பொருட்களுமே  கூடக் கரியமிலவாயு சுற்றுச்சூழலில் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறது.

கொஞ்சம் வினோதமான செய்தி தான்! யோசித்துச் செயல்பட வேண்டிய செய்தியும் கூட! புவிவெப்பமடைவதில், கோளாறைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கிறதே!

மரக்கன்றுகள் நடுவதோடு நின்று விடாமல், அசைவத்தைத் தவிர்க்கும் ஒவ்வொரு வேளையும், கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்காமல் செய்கிறோம். பிளாஸ்டிக் பைகளைப் பயன் படுத்தாமல் இருக்கும் ஒவ்வொரு தரமும் சுற்றுச் சூழல் மாசு படுவதைக் கணிசமாகக் குறைக்கிறோம். தண்ணீரை விரையம் செய்யாமல் இருக்கும் ஒவ்வொரு தருணமும், வறண்ட பாலையாகிவிடாமல் நமது மண்ணைப் பாதுகாக்கிறோம். 


தேவையற்ற ரசாயனங்களை அது பெப்சி, கோக கோலா போன்ற குளிர்பானங்களாக இருக்கட்டும், விவசாயத்தில் பயன்படுத்தப் படுகிற செயற்கை உரம், பூச்சிக் கொல்லி போன்றவைகளாக இருக்கட்டும், உபயோகிப்பதை எந்த அளவுக்குக் குறைத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு சுற்றுச் சூழலும் தூய்மை பெறுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும்!

குண்டு பல்புகளைத் தவிர்த்துசி எப் எல் விளக்குகளை உபயோகிக்க ஆரம்பிப்பது கூட, புவிவெப்பமடைவதைக் குறைக்க உங்களால் ஆனா சிறு பங்கு என்பதை அறிவீர்களா? 




இது இந்தப்பக்கங்களில், 400 வது பதிவு!



சண்டேன்னா மூணு!நவராத்திரி! சீனா, பெருமிதமா, பூச்சாண்டியா?




 
நவராத்ரி பண்டிகையின் மூன்றாவது நாள் இன்று! முதல் மூன்று நாட்கள் துர்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் பத்தாவது நாள் அகந்தை, ஆணவ இருளை வெல்லும் விஜயதசமியாகவும் அன்னையை வணங்கிக் கொண்டாடப்படும் நவராத்ரித் திருநாள் வாழ்த்துக்களாக முதலில்!


ஊழலும், திறமையின்மையும், குழப்பமும் மலிந்து கிடக்கும் இந்த நேரத்தில் இந்த தேசம் தன்னுடைய இழந்த பெருமையை மீட்டெடுக்கவேண்டும், இருளில் இருந்து சோர்வுற்று சோம்பிக் கிடப்பதில் இருந்து வலிமையான பாரதமாக, விஜயபாரதமாக உருவாகவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவேண்டிய தருணம் இது! இந்த தேசத்தின் இளைஞர்களுக்கு ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ துர்கையை வழிபடச் சொல்லும் இந்தப் பிரார்த்தனை, இரண்டாவதாக.





 
HYMN TO DURGA
by Sri Aurobindo



Mother Durga!

Rider on the lion, giver of all strength, Mother, beloved of Shiva! We, born from thy parts of Power, we the youth of India, are seated here in thy temple. Listen, O Mother, descend upon earth, make thyself manifest in this land of India.


Mother Durga! 

From age to age, in life after life, we come down into the human body, do thy work and return to the Home of Delight. Now too we are born, dedicated to thy work. Listen, O Mother, descend upon earth, come to our help. 

Mother Durga! 

Rider on the lion, trident in hand, thy body of beauty armour-clad, Mother, giver of victory. India awaits thee, eager to see the gracious form of thine. Listen, O Mother, descend upon earth, make thyself manifest in this land of India.

முழுவதுமாகப் படிக்க இங்கே


******************

ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களோடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்னும் மூன்று நாட்களில் முடிந்து விடும். முடிந்தபின்னாலும், அதன் ஊழல் முடைநாற்றம் காங்கிரஸ் கட்சியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கப்போகிறது என்பதென்னவோ சர்வ நிச்சயம்!



சீனா அறுபது, சீனப்பெருமிதம் என்ற தலைப்பில் சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை என்ன, கற்றுக் கொள்ளத் தவறியவை என்ன என்பதை சென்ற வருடம் அக்டோபர் முதல் சில பதிவுகளில் இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம். சென்ற வருடம் அக்டோபர் முதல் தேதியன்று சீனா தன்னுடைய அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை, தன்னுடைய ராணுவ வலிமையைப் பறை சாற்றுவது போலவும், பொருளாதார வலிமையை, சந்தை வாய்ப்புக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போலவும் திட்டமிட்டு, நடத்திய கொண்டாட்டங்களைப் பற்றி பேசும் போது முப்பதே ஆண்டுகளில் டெங் சியாவோ பிங் சீனாவை ஒரு திட்டமிட்ட வளர்ச்சிப்பாதைக்கு நடத்திச் சென்றதைத் தொட்டும் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். தேவையில்லாத சுமையாக கம்யூனிசம் அல்லது சிவப்பு நாடாக்களை உதறி எறிந்தும், தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அம்சங்களையும் அறவே தவிர்த்து விட்டும் சீனா உலகத்தின் வலிமையான பொருளாதார சக்தியாக அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் அதுவரை இருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது பொருளாதார சக்தியாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே முன்னேறி விட்டது.

என்னதான் சீனா நெருப்பைக் கக்கும் டிராகனாகப் பூச்சாண்டி காட்டினாலும், மற்றைய முன்னேறிய பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு  பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ஒரு அசுர வேகத்தோடு சீனா முன்னேறிக் கொண்டிருந்தாலும், இது நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் இல்லை என்றே  சீன விவகாரங்களைக் கூர்ந்து கவனித்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சீனா, இந்த மாதிரிக் கருத்துக் கணிப்புக்களை சட்டை செய்வதில்லை என்றாலும், ஆசியப் பகுதியில் தன்னுடைய ஆளுமையை மிக வலுவாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்தவில்லை. இந்தப்பகுதியில் தன்னுடைய அரசியல், ராணுவ, பொருளாதார வலிமைக்குக் கட்டுப்பட்டதாகவே இதரநாடுகள் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுக் காய்களை நகர்த்திவருகிறது.


சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்து விடுபட வேண்டும், ஜனங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கவேண்டும் என்று ஜன நாயக உரிமைகளுக்காகப் போராடி வரும் லியு சியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை, சீனா எள்ளி நகையாடி ருக்கிறது. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டதன் மூலம் இந்தப் பரிசு அதன் மதிப்பை இழந்து விட்டதாகவும் அறிவித்திருக்கிறது. நோபல் பரிசு பெற்ற லியு சியாபோ சிறையில் இருக்கிறார், மியான்மரின் ஆங் சுயிக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் ஆசியாவைச் சேர்ந்த இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

சீன அரசோ, நோபல் பரிசுக் குழுவின் இந்த முயற்சி, சீனாவை எரிச்சலூட்டுவதற்கான ஒன்று என்று, அலட்சியப்படுத்தி, அதே நேரம், இந்த செய்தி பரவாமல் தணிக்கையைக் கடுமையாக்கி வைத்திருக்கிறது.

இங்கே கொஞ்சம் இது தொடர்பான செய்தி , அதிலேயே வீடியோ இரண்டையும் பார்க்கலாம்.
 
இங்கே இந்தியாவில், நம்முடைய அரசியல்வாதிகள் என்னடா
ன்றால் ஊழல் செய்வதற்காகவே விளையாட்டுப் போட்டிகள் உட்பட புதுப் புது உத்திகளைக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஜனங்களும் எங்கேயோ மழை பெய்கிறது என்று மானாட மயிலாட, அல்லது விஜய் டீவீயில் நீயா நானாவை இலவசத் தொலைகாட்சியில் காசு கொடுத்துக் கேபிள் கனெக்ஷன் வாங்கி வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

அசமந்தத்தனத்தில் இருந்தும் திறமையில்லாத காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் இந்த தேசத்தைக் காப்பாற்றுவாய்!
 

தேடியுனைச் சரணடைந்தேன்! தேசமுத்து மாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரம் தருவாய்!

என்று பிரார்த்தனை செய்வது தவிர வேறு வழி?!




 

இந்த வருஷம் கொஞ்சம் விசேஷம் தான்...! தகவல் விசித்திரங்கள்!

சின்ன விஷயம் தான்!

இந்த அக்டோபர் மாத காலண்டரைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்!

1,8,15,22,29 என்று ஐந்து வெள்ளிக் கிழமைகள்!

2,9,16,23.30 என்று ஐந்து சனிக் கிழமைகள்!

3,10.17.24,31 என்று ஐந்து ஞாயிற்றுக் கிழமைகள்!

சரி இதிலென்ன பெரிய ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா?

இந்த வருடம் ஜனவரி மாதம் கூட இதே மாதிரி அடுத்தடுத்து வெள்ளி, சனி ஞாயிறு என்று ஒரே மாதத்தில் ஐந்து தரம் வந்ததை, இப்போது கவனித்திருப்பீர்கள் இல்லையா!  

அப்புறம் மார்ச் மாதம், மே மாதம்,  ஜூலை மாதம்,ஆகஸ்ட் மாதங்களில் கூட இதே மாதிரி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஐந்து தரம் வந்தது.
 
இந்த வருடம் டிசம்பர் மாதம் கூட இதே மாதிரி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஐந்துதரம் வரப்போகிறது!

சரி, எதற்கு இந்தக் கதை இப்போது என்கிறீர்களா?

வெள்ளி, சனி, ஞாயிறு இப்படி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஒரே மாதத்தில் மறுபடி வர 823 வருடங்கள் ஆகுமாம்!

ஆனால், அப்போது கூட இங்கே உள்ள காங்கிரஸ் காரனுக்கு சொந்தபுத்தி வரவே வராது!








இன்னிக்குப் புதன் கிழமை! அந்த ஒரு புதன் கிழமை இல்லீங்கோ!

எழுதி எழுதி ஏட்டைக் கெடுத்தானாம்-போதாது போதாதுன்னு
பாட்டும் படிச்சுப் பாட்டைக் கெடுத்தானாம்!

வலைப்பதிவுகளாகட்டும், கூகிள் பஸ்ஸில் வருகிற கும்மிகளாகட்டும் மேலே சொன்ன கதை மாதிரித் தான் கந்தலாகிக் கொண்டிருக்கிறது. அதனால் கொஞ்சம் படம் காட்டப் போறேன்! படத்தோடு கொஞ்சம் கமெண்டும்! 


மேலே பாருங்கள்! நீருக்கு உள்ளே  பாதுகாப்பாக நீந்திக் கொண்டு பார்க்க வேண்டிய ஆமையார், வெளியே இருந்து நீரைப் பார்க்கிறாராம்! இதைத் தான் கலி முத்திப் போச்சுன்னு சொல்றாங்களோ! எப்படியோ உள்ளே-வெளியே பொருத்தம் நல்லாத் தான் இருக்கு இல்லே!


**********

ஜாய்   டிவிஷன்! விவாகரத்து வழக்கறிஞர்களாம்! இந்தப் பெயர்ப்பலகை இன்னும் என்னென்னமோ அர்த்தங்களைச் சொல்கிறதே!

பிரிப்பதனால் சந்தோஷம்! பிரிப்பதில் சந்தோஷம்! இப்படிப்பட்ட ஆசாமிகள் இருந்தால், குடும்பம், நாடு வெளங்கிடும்!

**********
 




சுத்துமுத்தும் ஏகப்பட்ட சத்தம்! அம்மிணி ரெண்டு காதுகளையும் பொத்திக்கிட்டு, ம்யூட் பண்ணிக் கிட்டாங்களாம்! இப்படிச் சொல்லும்போதே, அம்மிணி அசலூராத் தான் இருக்கணும்னு தனியா சொல்லவா வேணும்!

நம்மூர் அம்மிணிகளா இருந்தாக்க, அவங்க போடற சத்தத்தில நாம இல்ல ம்யூட் பண்ணி ஒக்காந்துக்கிடணும்! போதாக்குறைக்கு ஆணாதிக்க வக்கிரம்னும், த்தூத்தூ த்தூத்து த்தூத்துத்தூனு துப்பிக் கிட்டே வர்ற ஆதரவுக் கூட்டமுமா படா பேஜாரால்ல கதை போகும்!


**********


புள்ளிராசா வங்கி தந்த புள்ளிவிவரச் சிங்கம் நம்ம அண்ணாச்சி இந்தப் புள்ளிவிவரப் படத்தை அனுப்பிருக்கிறார்.

23.08.2010 தேதியிட்ட இந்தியா டுடே பத்திரிகையில் பட்டத்து இளவரசர்  ராகுல் காண்டிக்கு செல்வாக்கு உயர்ந்துகொண்டே போகிறது என்ற ரீதியில், ஒரு கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்டிருக்கிறது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், இளவரசருக்குப் பெருகி வரும் ஆதரவு என்பது,  சோனியா காண்டி, மன்மோகன் சிங் இருவருக்கும் இருந்த ஆதரவு மங்கி வருவதில் இருந்து கூடி வருகிறது என்பதை இந்த வரைபடமே சொல்கிறது, பார் என்று அண்ணாச்சி உத்தரவு போட்டு படத்தை அனுப்பியிருக்கிறார்.

படத்தை நன்றாகப் பாருங்கள்! 14,15,18 சதவீதம் என்று கடந்த மூன்று வருடங்களில் மன்மோகன் சிங்குக்கு இருந்த ஆதரவு 2010 ஆகஸ்டில் ஒரே ஒரு சதவீதமாகக் குறைந்திருக்கிறது. சோனியாவுக்கு இருந்த ஆதரவும் குறைந்து வருவதை இந்தியா டுடே கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

மன்மோகன்சிங்கை டம்மிப்பீஸ் சிங்காக்கித் தான் வீட்டுக்கு அனுப்பபோகிறார்கள் போல!


**********


டம்மிப் பீஸ்களைப் பற்றிய கவலை கிடக்கட்டும்! கடந்த பதிவுகளில், பிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி உங்கள் கருத்துக்களைக் கேட்டிருந்தேனே!

கொஞ்சம் உங்கள் அனுபவம், கருத்துக்களை சொல்லுங்களேன்!




சண்டேன்னா மூணு! மூணில் இது ஒண்ணு !

பிராண்ட், பிராண்ட் இமேஜ், இதெல்லாம் தெரிந்த பெயர்கள் தான்! ஆனால் ஒரு பிராண்ட் என்பது என்ன?   

இந்த பிராண்ட், பிராண்ட் இமேஜைப்பற்றி முன்னம் கொஞ்சம் பேசியிருக்கிறோம்! இப்போது மறுபடியும்....!

ஒரு பிராண்ட் என்பது நேற்றைக்கு அறியப்பட்ட விதத்தில் இருந்து ரொம்பவுமே வித்தியாசப்பட்டு,  பிராண்ட் என்பது ஒருதயாரிப்பாளர் அல்லது சேவையை  வழங்குகிறவர் கொடுக்கும் உத்தரவாதம், அதை நம்புகிற வாடிக்கையாளர் என்று தெளிவாக வரையறை செய்து கொண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது.

பிராண்ட் இமேஜ் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து இந்தப்பதிவில் தேடுங்கள்! இதற்கு முன்னால் இந்த சப்ஜெக்டை எடுத்துப் பேசிய பதிவுகள் கிடைக்கும். அதற்கு முன்னோட்டமாக......

ஒரு பிராண்ட் எப்படி இருக்கக் கூடாது என்பதை ஒரு சின்னப் படமாக......
 
இங்கே பிராண்டுகள் வளரும் லட்சணம் எப்படி என்பதை இடதுபக்கம் இருக்கும் எச் சி எல் கம்ப்யூட்டரும், சர்வீஸ் படுத்தல்களும் என்ற பத்தியில் கொஞ்சம், லிங்கில் விரிவாகவும் பார்க்கலாம்.

கொஞ்சம் யோசித்துவிட்டு எனக்கும் சொல்லுங்கள்! பேசுவோம்!