இது அரசியல் காமெடி டைம்!சிரிச்சு வையுங்க!



காங்கிரஸ் கட்சியில் சீசனுக்கு சீசன் காமெடி செய்வதற்கு "கிறுக்கு மாய்க்கான்கள்" இருந்து கொண்டே இருப்பார்கள்!

இந்த சீசனில் இத்தாலிய அன்னையைத் தவிர மற்ற எல்லோருமே காமெடி வில்லன்களாகவும் கிறுக்கு மாய்க்கான்களாகவும் இருப்பது காலக் கொடுமை என்று தான் சொல்லவேண்டும்! அப்படி இன்றையக் காங்கிரஸ் காமெடி வில்லன்களில் ஒருவரான திக் விஜய்சிங் உதிர்த்திருக்கிற காமெடிக் கொடுமை இது!

ராகுல் காண்டிக்கு ஒரு நல்ல பிரதமராக இருப்பதற்கு வேண்டிய அத்தனை தகுதிகளும் இருக்கிறது என்பது அவருடைய இன்றைய கண்டுபிடிப்பு!

ooOoo

வரும்.........! ஆனா, .......வராது!

இந்த வசனம் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான, கேவலமான காமெடி வசனம்.

இதைவிடக் கேவலமான காமெடிச் செய்தி அல்லது கேள்வி ஒன்று உண்டென்றால், அது திமுக-காங்கிரஸ் கூட்டணி முறியுமா என்பதுதான்! தேர்தல் தோல்விக்குப் பின்னால், கனிமொழி ஜாமீன் மறுப்புக்குப் பின்னால், திமுகவே, கூட்டணி முறிவு, வெளியில் இருந்து ஆதரவு என்றெல்லாம் ஊகங்களைப் பரபரப்புச் செய்தியாகக் கசிய விட்டு விட்டு, அப்புறமாக, காங்கிரஸ்-திமுக கூட்டணி முறியவேண்டுமென்று சில ஊடகங்கள் தான் விரும்புகின்றன என்றெல்லாம் ப்ளேட்டைத் திருப்பிப் போடுவது திமுக தலைவருக்குக் கை வந்த கலை!  தனக்கு ஆதாயம் எதுவென்பதில்  அவர் என்னவோ தெளிவாகத்தான் இருக்கிறார்!

ஆனால், இப்போது கருணாநிதி என்ன செய்தாலும் அது அவருக்கு எதிராகவே திரும்புகிற நேரம் என்பதை இன்னமும் புரிந்துகொண்ட மாதிரித் தெரியவில்லை! மக்கள் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டில் உட்கார வைத்துவிட்டாலும், இவர் மக்களை சும்மா விடப் போவதில்லை என்பதில் குறியாக இருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம்!

ரஜனி ஜெவுடன் பேசினாரா, உடனே இவரும் சிங்கப்பூருக்கு கால் போட்டுப் பேசி, அதையும் தனக்கு விளம்பரம் தேடிக் கொள்கிற ஒரு செய்தியாக்கிக் கொள்வார்! பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஜெவுக்கு சிறப்பு வாகனம் அனுப்பி, மன்மோகன் சிங் வாசலில் நின்று வரவேற்றாரா, அதில் ஏற்பட்ட புகைச்சலை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு இதெல்லாம் சாதாரணமான நடைமுறைதான் என்று அறிக்கை விடுவார்.

ஈரோட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் இளங்கோவன் பேசுகையில், "காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு உள்ளே போகவேண்டிவரும் என்பதால் தான் கூட்டணி தொடரும் என்று பேசிவருகிறார் கருணாநிதி. கூடா நட்பு உங்களுக்கு லேட்டாகத்தான் தெரிகிறது. அனால் நான் ஒரு மாதம் முன்பே சகவாச தோஷம் பற்றி பேசிவிட்டேன். கூடா நட்புதான் இன்று கருணாநிதி மகள் கனிமொழியை சிறைக்கு அனுப்பியிருக்கிறது. மகளுக்குக் கூற வேண்டிய அறிவுரைகளை எல்லாம் மற்றவர்களுக்குச் சொல்லி வருகிறார் கருணாநிதி" என்று சொன்னாராம்! இளங்கோவன் பேசியதற்கு பதிலாக தொல் திருமாவளவன் "ரொம்பப் பேசற நீ!" என்ற ரேஞ்சில் காமெடி செய்துவிட்டு, கூடவே உள்ளாட்சித் தேர்தல்களிலும் திமுக - விசி கூட்டணி தொடரும் என்று அட்வான்சாக துண்டைப் போட்டு ரிசர்வ் செய்திருக்கிறார்!

ooOoo

திமுகவின் இப்போதைய கவனம் முழுக்க முழுக்க வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் தான் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிற ஒருசெய்திக் கட்டுரை இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கிறது. இங்கே, தினமணிக்கு நன்றியுடன்!



முறிகிறதா திமுக - காங்கிரஸ் உறவு?

அஜாத சத்ரு 

First Published : 16 Jun 2011 02:50:32 AM IST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புது தில்லி விஜயமும், பிரதமருடனான அவரது சுமுகமான சந்திப்பும் காங்கிரஸ்-அதிமுக உறவுக்கான பிள்ளையார் சுழியாக இருக்கக் கூடுமோ என்கிற யூகத்துக்கு வழி வகுத்திருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் திமுக - காங்கிரஸ் உறவில் பிளவை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி செய்வதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். எந்த அளவுக்கு இதிலெல்லாம் உண்மை இருக்கிறது,  தமிழக அரசியலில் தடாலடி அணிமாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்றெல்லாம் தில்லியிலும், தமிழகத்திலும் உள்ள அரசியல் நோக்கர்கள் விவாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியின் விளைவாகத் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் சுமையைக் குறைக்கக் குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு உதவியாக வழங்க வேண்டும் என்றும், இது தவிர மாநில அரசு செயல்படுத்த இருக்கும் உதவித் திட்டங்களுக்கும் தேவையான நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் மிக மோசமான நிதி நிர்வாகம் நடந்தேறிய நிலையில் அதை மத்திய அரசின் உதவியில்லாமல் புதிய அதிமுக அரசால் சரிசெய்ய முடியாத இக்கட்டில் சிக்கியிருக்கிறது அதிமுக அரசு. முதல்வர் ஜெயலலிதா முன்பு ஒருமுறை குறிப்பிட்டது போல, ஒவ்வொரு முறை அதிமுக ஆட்சி அமையும்போதும், முந்தைய திமுக அரசினால் சீர்குலைக்கப்பட்ட நிதிநிலைமையைச் சரிசெய்வதற்கே குறைந்தது மூன்று ஆண்டுகளும், அதற்காகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதால் ஏற்படும் கெட்ட பெயரும்தான் மிச்சமாகிறது என்பது மீண்டும் உண்மையாகி இருக்கிறது.

இந்த நிலையில், 2001 ஆட்சியின்போது ஏற்பட்டது போல மத்திய அரசிடம் இணக்கமில்லாத சூழ்நிலை தொடர்வதை முதல்வர் ஜெயலலிதா விரும்பமாட்டார் என்பதால்தான், திமுக - காங்கிரஸ் உறவு தொடருமா என்கிற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

இதைப்பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான குலாம் நபி ஆசாதைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் திமுகவுடனான தொடர்பை முறித்துக் கொள்ளும் எந்தவித எண்ணமும் காங்கிரசுக்குக் கிடையாது என்று திட்ட வட்டமாக மறுத்து விட்டார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி பற்றி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் கருத்துக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

"அதிமுக-காங்கிரஸ் கூட்டணி வந்தால் எங்கள் நிலைமை என்ன என்று கேட்பது அத்தைக்கு மீசை முளைத்துச் சித்தப்பனான கதையாக இருக்கிறது. அதிமுகவுக்கும் எங்களுக்கும் இடையே இருந்தது தேர்தல் உடன்பாடே தவிர, கூட்டணி அல்ல. இப்போது அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள், நாங்கள் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல் படுகிறோம். நிர்வாக ரீதியாக ஒரு மாநில அரசு மத்திய அரசுடன் சுமுகமான உறவு வைத்துக் கொள்வதும், கூட்டணி அமைப்பதும் வெவ்வேறான விஷயங்கள்'' என்று அதிமுக - காங்கிரஸ் உறவு பற்றிக் கருத்துத் தெரிவித்தார் மாநிலங்களவையின் மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன்.

அதிமுக தரப்பில் காங்கிரசுடனான கூட்டணி பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. தில்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசவில்லை. காங்கிரஸ் தரப்பிலும் அதிமுக உறவு பற்றிய சிந்தனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பிறகு ஏன் திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸýடனான உறவு முறிந்துவிடும் என்று பயப்படுகிறார்?

"கருணாநிதி காங்கிரஸ் உறவு முறிந்துவிடும் என்று பயப்படவில்லை, விரும்புகிறார்'' என்கிறார் இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன். இது படுமோசமான தேர்தல் தோல்வியால் துவண்டு போயிருக்கும் திமுகவுக்குப் புத்துயிர் கொடுக்கக் கருணாநிதி செய்யும் முயற்சிதான் என்பது அவரது கருத்து.

"திமுக பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்துகூட இல்லாத நிலைமைக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலைமை. வருகிற நகராட்சி, உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக படுதோல்வி அடைந்து விட்டால், கட்சி அமைப்புகள் நிலைகுலைந்துபோய், கருணாநிதிக்குப் பிறகு அந்தக் கட்சி சின்னாபின்னமாகிச் சிதறு தேங்காயாக உடைந்து விடும். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரûஸ வெளியேற்றி அதிமுகவுடன் கைகோக்கச் செய்வதன் மூலம், அதிமுகவின் தோழமைக் கட்சிகளான தேமுதிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளை மூன்றாவது அணி அமைக்க வைப்பதுதான், கருணாநிதியின் கனவு. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி பலவீனமாகி விடுமென்றும், திமுக அணியில் முடிந்தால் இடது சாரிகளையும் இணைத்து பலப்படுத்திக் குறைந்தது பாதிக்கு மேலான நகராட்சி, உள்ளாட்சிகளைக் கைப்பற்றுவது என்பதும்தான் கருணாநிதி போடும் கணக்கு'' என்று கருத்துத் தெரிவித்தார் அவர்.

செ.கு. தமிழரசனின் கருத்தை ஆமோதிக்கிறார் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி உடைவது என்பது "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்'' என்கிற நிலைமையை ஏற்படுத்திவிடும் என்கிறார்.

"அதிமுக என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சி. தேமுதிக என்பது புரட்சித் தலைவரின் தொண்டனின் தலைமையில் இயங்கும் கட்சி. இரண்டுக்குமே அடிப்படை ஆதார சக்தி எம்.ஜி.ஆர்.தான். இது இயற்கையான கூட்டணி. அடிமட்டம் வரை இரண்டு கட்சித் தொண்டர்களும் இணைந்து பணியாற்றுவதைக் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பார்த்தோம். எங்கள் கூட்டணி தொடரும் வரை, திமுக தலைதூக்க வாய்ப்பே இல்லை. இதைத் தெரிந்து வைத்திருக்கும் கருணாநிதி, காங்கிரசைக் கழற்றி விட்டுவிட்டு, அதன் மூலம் எங்கள் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தப் பார்க்கிறார். அதிமுக - காங்கிரஸ் கூட்டணியும் வராது, தேமுதிக - காங்கிரஸ் மூன்றாவது அணியும் சாத்தியம் இல்லை'' என்று தெளிவுபடுத்தினார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

மத்திய அரசுடன் சுமுகமான உறவு வைத்துக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்வதுதான் அரசியல் சாதுர்யம் என்பதை முதல்வர் ஜெயலலிதா உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ் - அதிமுக கூட்டணி ஏற்படுமானால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒருவர் பின் ஒருவராகக் கருணாநிதியின் குடும்பத்தினர் சிக்குவதற்கு அதிமுகவின் மறைமுக நெருக்கடிதான் காரணம் என்று அதை திசை திருப்பிக் கருணாநிதி அனுதாபம் தேடப் பார்ப்பார் என்பதால்தான், தெரிந்தே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி பற்றி கருத்துத் தெரிவித்து, அதிமுக - காங்கிரஸ் உறவு இல்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெயலலிதா என்று தெரிகிறது.

"2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொறுத்தவரை, மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணையும், நடவடிக்கையும் உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியைத் திமுக தலைவர் கருணாநிதி மறைமுகமாகக் குற்றம் சாட்டுவது, தெரிந்தே செய்யும் திசை திருப்பும் வேலை. உண்மையைச் சொல்லப் போனால், திமுகதான் எங்களுக்கு சுமையே தவிர, நாங்கள் திமுகவுக்கு சுமையல்ல. ஏதோ எங்கள் கூட்டணி தொடர்வதால்தான் திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக பவனி வருகிறார்கள் என்பதைக் கருணாநிதி மறந்துவிடக்கூடாது. இந்தக் கூட்டணி இல்லாவிட்டாலும் மத்திய அரசுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை. திமுகவுக்கு, குறிப்பாக, கருணாநிதி குடும்பத்தினருக்குத்தான் பாதுகாப்பு இருக்காது'' என்று கருத்துத் தெரிவித்த முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதுதான் கட்சித் தொண்டர்களின் விருப்பம் என்று தலைமைக்குத் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

அதிமுகவையும், முதல்வர் ஜெயலலிதாவையும் பொறுத்தவரை, திமுக-  காங்கிரஸ் கூட்டணி தொடர்வதுதான் நல்லது என்று கருதுவதாகத் தெரிகிறது. இல்லையென்றால், நியாயமான தவறுகளுக்காகக் கருணாநிதி குடும்பத்தினர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அதிமுகவின் மீது பழி சுமத்தக் கருணாநிதி தயங்கமாட்டார் என்பது முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும். மத்திய அரசுடன் சுமுகமான உறவு, அதேசமயம் காங்கிரஸ் கட்சியுடன் "சற்று தள்ளியே இரும் பிள்ளாய்.'' தொடர்பு என்று முதல்வர் ஜெயலலிதா வியூகம் வகுத்திருப்பதாகத் தெரிகிறது.

கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகிக் கொள்வதாக இல்லை. காங்கிரஸ் என்னதான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாராமுகமாக இருந்தாலும், தனது குடும்ப உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பாக மத்திய அமைச்சர் பதவி இருப்பதால், திமுகவும் வலிய விலகிக் கொள்வதாக இல்லை. "விக்கிரமாதித்தன் கழுத்தில் ஏறிய வேதாளம்' கதையாக அந்த உறவு தொடர்வதுதான் தனக்கு சௌகரியம் என்பதால் அதிமுகவும் அலட்டிக் கொள்வதாக இல்லை.

அதிமுகவையும் தேமுதிகவையும் பொறுத்தவரை, சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை விட உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை உறுதிப்படுத்தி, திமுகவை நிலைகுலையச் செய்வதுதான் ஒரே குறிக்கோள் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடராமல் போனாலும், அதிமுக - தேமுதிக கூட்டணி முறியாது என்பதுதான் எதார்த்த நிலைமை!

ooOoo
ஜனநாயகத்தின் மிக அவசியமான நிபந்தனையே, எப்போதும் விழிப்போடு இருப்பதுதான்! தேர்தல் நாளன்று ஓட்டுப் போடுவதோடு மட்டும் முடிந்து போய்விடுகிற ஒன்றில்லை என்பதை இந்தப் பக்கங்களில் அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறோம். தவறு செய்கிறவர்களைக் கண்காணித்துக் கொண்டு இருப்பதோடு தட்டிக் கேட்கிற  தைரியமும், ஒற்றுமையும் ஜன நாயகத்தின் முக்கியமான தேவைகள்.

சுதந்திரம், ஜனநாயகம் என்பது சும்மாக் கிடைப்பதில்லை! எவரோ நமக்கு இலவசமாகவோ, தானமாகவோ தருவதுமில்லை!

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!



 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!