காங்கிரஸ் என்றால் வஞ்சம் தீர்ப்பது! படித்ததும் பிடித்ததும்!

அன்றொரு நாள் ஜூன் 28

 
இப்படி அன்றொரு நாள் என்று தலைப்பிட்டு, அந்த அந்த நாட்களில்  நடந்த சம்பவங்களை கொஞ்சம் பழைய நடப்புக்களைத் திரும்பிப் பார்க்கிற விதத்தில்,சுவாரசியமாக, சுருக்கமாக கூகிள் வலைக் குழுமங்களில் (மின்தமிழ், தமிழ்வாசல்) எழுதிக் கொண்டிருக்கிறார், இன்னம்புரான் என்று அறியப்பட்ட திரு சௌந்தரராஜன். இந்திய அரசின் தணிக்கைத் துறையில் பணியாற்றியவர் என்ற வகையில், இந்திய அரசு, அரசு நிர்வாக (அ)லட்சணம் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருப்பவர்! பிரிட்டிஷ் அரசு அமைப்பு, நீதி, நிர்வாக, தேர்தல்  முறையில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர்! இந்தியச் சூழ் நிலையில் அது ஊழலுக்கு மட்டுமே வித்து, விளைநிலம் என்பதாக இவருடன் எனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும், இவருடைய பத்தி எழுத்து கொஞ்சம் சுவாரசியமாகத் தான் இருக்கிறது.

இன்று ஜூன் 28 காங்கிரஸ்காரர்களே  மறந்துபோன அல்லது சோனியா அண்ட் கம்பனியால் திட்டமிட்டே மறக்கடிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் பி வி நரசிம்ம ராவ் பிறந்த தினம் என்று ஆரம்பித்து, ஒன்றிரண்டு விஷயங்களைத் தொட்டு திரு இன்னம்புரான்,அதற்குப் பின்னூட்டமாக எழுத்தாளர் திரு வி.திவாகர் எழுதியிருந்ததை இன்று மாலை படித்துக் கொண்டிருந்த போது, சிலவிஷயங்களை மறுபடி நினைத்துப்பார்த்தேன்!

நரசிம்ம ராவ் என்று சொன்னவுடன் உடனேயே நினைவுக்கு வருவது, நேரு காலம் தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்ட முட்டாள்தனமான சோஷலிசப் பொருளாதாரத்தால் தேசமே திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்த நேரத்தில்,துணிச்சலுடன் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள்!

நரசிம்ம ராவ் என்று சொன்னவுடன், கூடவே நினைவுக்கு வருவது சூட் கேஸ்!

ஹர்ஷத் மேத்தா என்ற பங்குவர்த்தகப் புள்ளி நரசிம்மராவுக்கு ஒரு கோடி ரூபாய் ஒரு சூட் கேசில் அடைத்துக் கொடுத்ததாக வந்த செய்திகள், ஒருகோடி ரூபாயை (அப்போது, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடையாது!) சூட்கேசில் அடைக்க முடியுமா, முடியாதா என்று தொடர்ந்து கொண்டிருந்த சர்ச்சைகள்! அதையும் தாண்டி, சிரிக்கவே தெரியாத மனிதராக எப்போதுமே சீரியஸாக, சிடுமூஞ்சியாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் நபர் என்ற சித்திரம்!

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கையை விட, நரசிம்மராவ் வாங்கிய ஓட்டுக்கள் மிகவும் அதிகம்(!!) என்று அந்த நாட்களிலேயே நம்முடைய தேர்தல்முறை மிகவும் கேலிக்குள்ளானதும் கூடவே நினைவுக்கு  வருகிறது!

பொருளாதார சீர்திருத்தம், நரசிம்ம ராவ் தலைமையிலான அரசின் தனிப்பெரும் சாதனை! திவாலாகும் நிலையில் இருந்த தேசம் கொஞ்சம் மீண்டெழ உதவிய சாதனை அது! அந்த சீர்திருத்தத்தைத் தொடர்ந்து  வந்த உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளினால்தான், இப்போது நம்முடைய அரசியல் வாதிகள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொள்ளையடிக்க முடிந்திருக்கிறது! 

போபார்ஸ் ஊழலில் ராஜீவ் காந்திக்கு சுவிஸ் ரகசிய வங்கிக் கணக்கில் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட தொகை வெறும் அறுபத்து நாலே கோடி ரூபாய்தான்! இன்றைக்கு இரட்டை இலக்கமாக இருந்த கோடிகள், ஆயிரம் லட்சம் கோடிகளில் பேசப்படுவதாகப் பெருகிப் போகிற அளவுக்கு, ஒருவலுவான பொருளாதார அடித் தளத்தை அமைத்துக் கொடுத்தவர் நரசிம்மராவ் தான்! 

ஆனால், நரசிம்மராவை நன்றியோடு  நினைத்துப்பார்க்க, அவரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட, அன்றைக்குப் பொருளாதார மேதையாகவும், இன்றைக்கு வெறும் டம்மிப் பீஸ், காமெடிப் பீசாகவும் ஆக்கப்பட்டிருக்கிற மன்மோகன் சிங்குக்குக் கூட நேரமில்லை! தைரியமுமில்லை! 

இதை சொல்கிற போதே, மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, வேறு புதிய முகமூடி உட்கார வைக்கப்படலாம் என்ற ஹேஷ்யங்கள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. பிரணாப் அல்லது பானா சீனா என்றெல்லாம் பெயர்கள் அடிபட்டன., பானா சீனா கதையே இப்போது கந்தலாகிக் கொண்டிருக்கும் நிலையில் உள்துறையாவது தங்குமா என்றே தெரியாத நிலையில் மன்மோஹனுக்கும் நரசிம்மராவுக்கு ஏற்பட்ட அதே கதிதானா அல்லது கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சுமா என்பதே தெரியவில்லை!

பொருளாதார சீர்திருத்தம் மட்டுமல்ல, நரசிம்மராவ் ஆட்சிக்கு இன்னுமொரு தனிச்சிறப்பும் இருந்தது.  சோனியா அண்ட் கம்பனியைத் தலைதூக்க விடாமல் வைத்திருந்ததுதான் அந்தத்தனிச் சிறப்பு! 


அதுவே அவருக்கு வினையாகிப் போனது, வரலாற்றின் நகை முரணாகத் தெரிந்தாலும், காங்கிரஸ் வரலாறே, துரோகங்கள், உள்ளிருந்தே கொல்லும் வியாதியாக இருக்கும் அதன் தலைவர்களைப் பற்றி கொஞ்சமாவது அறிந்தவர்களுக்கு ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை!

டில்லியை சமாதிகளின் நகரம் என்று சொல்வார்கள்!  

மொகலாயப் பேரரசர்கள், வெறும் பத்தே மைல் பரப்பளவை மட்டும் ஆண்டு கொண்டு உலகத்தின் சக்கரவர்த்தி என்று பொருள் பட ஷா ஆலம் என்ற பெயருடன் ஆண்டஒரு நபரையும்  உள்ளிட்டு  (இந்த உலகப்பேரரசனுடைய ஆட்சியின் கீழ் டில்லி யில் இருந்து தற்போது பாலம் விமான நிலையம் வரையிலான இடம் மட்டுமே) ஏகப்பட்ட சமாதிகள், நினைவுச் சின்னங்கள், ஸ்தூபிகள்!

இதுபோக சுதந்திர இந்தியாவின்(புது) டில்லி பாதுஷாக்களுக்கும்!  ஒரே விதிவிலக்கு, மகாத்மா காந்தி ஒருவர் தான்! பதவியில் இல்லாத சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி உட்பட நேரு குடும்பத்தவர்க்கு மட்டும் தனியாக நினைவிடங்கள்!

நரசிம்மராவுடைய கடைசி எட்டு ஆண்டுகாலம், அவ்வளவு சொல்லிக் கொள்ள முடியாத சோதனையான காலம். திட்டமிட்ட பழிவாங்குதல், வழக்குகளுக்கு ஆளான நிலையில், எதுவும் செய்ய முடியாமல், கடைசியில் 2004 டிசம்பர் 23 ஆம் தேதி மரணமடைந்த பிறகு கூட சோனியா அண்ட் கம்பனியுடைய வஞ்சம் தீரவில்லை! ஒரு முன்னாள் பிரதமர், அமிக இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்தவர், அவருடைய பிணத்தைக் கூட, காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் கொண்டுவந்து அஞ்சலி செய்ய விடவில்லை. அக்பர் ரோடு கட்சி அலுவலக வாசலில்  இருபது  நிமிடம் வைத்து அனுப்பிய கட்சி காங்கிரஸ்! 

நரசிம்மராவ், நவயுக டில்லி பாதுஷா குடும்பத்தை சேர்ந்தவர் இல்லையே!

ஆனால், நரசிம்மராவ் எழுதிவைத்திருந்த புத்தக வரைவுகள், இதர விஷயங்களைக் கைப்பற்றுவதில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவான அரசு இயந்திரம் செயல்படத் தயங்கவில்லை!  எமெர்ஜென்சி குறித்து, நரசிம்மராவ் ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்!

டில்லி கண்டோன்மென்ட் பகுதியில் எரித்தால் என்னவோ நோய்
தொற்று வந்துவிடும் என்ற ரீதியில் அரசு இயந்திரம்முக்கி முனகி  சாதாரண ஜனங்கள் எரிக்கப்படும் நிகம்போத் இடுகாட்டில்  இறுதிச்  சடங்குகள் செய்யலாம் என்றிருந்த நிலையில், ஹிட்லர் மாதிரி சர்வாதிகாரம் செய்ய வந்த ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி தான் நரசிம்மராவ் குடும்பத்தை வற்புறுத்தி, இறுதிச்சடங்குகளை ஹைதராபாத்தில் வைத்துக் கொள்ள வற்புறுத்தினார்.

"Rao deftly navigated the political waters at a time when his own party was out to scuttle his most ambitions undertaking and made economic reforms politically tenable. How ironical then that today the same Congress party functionaries shout from the rooftops trying to take credit for India's economic success without acknowledging the role of Rao who envisioned and executed the process?
 

..........
 
For all this, Rao has only received contempt from his party colleagues. Being one of the most successful Indian prime ministers from a non-Nehru-Gandhi dynasty is not something that Congress-wallahs can accept easily. In their deference to the Dynasty, they have vilified Rao, a sagacious and wily leader who led this nation like few others. Hopefully, history will restore him to a place that he truly deserves -- as one of the most remarkable prime ministers of modern India."

எமெர்ஜென்சி முடிந்துவிட்டதாக அல்லது அது நேற்றைய பழங்கதை என்று யார் சொன்னது? 


  
 
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்  வரை, இந்திரா வாரிசுகளுடைய பிடியில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கும் என்ற நிலை தொடரும் வரை, எமெர்ஜென்சி, நெருக்கடி நிலை என்பது வெறும் கற்பனை இல்லை. எப்போதுவேண்டுமானாலும், அவர்களுடைய ஊழல் முகத்தை மறைத்துக் கொள்ள முடியாத தருணங்களில் சாதாரண ஜனங்களின் மீது பிரயோகிக்கப் படக் கூடியதுதான்!

இன்னும் கொஞ்சம் விவரமாகத் தெரிந்துகொள்ள இங்கே மற்றும் இங்கே 


 
நல்லவேளை மெரீனா தப்பித்தது!

 

1 comment:

  1. சத்தியமாக எவருக்கும் இந்த செய்திகள் நினைவிருக்காது. இருட்டடிப்பு செய்யப்பட்ட நிகழ்வுகளில் நரசிம ராவும் ஒருவர்தான்.
    ஆனால் பாபர் மசூதி இடிப்புக்கு மட்டும் " எல்லா மத சார்பற்ற " தலைகளுக்கு மட்டும் இவரின் ஆட்சிகாலம் நினைவுக்கு வந்துவிடும். அது அன்றி வேறு ஒன்றும் நினைவில் தங்காது. இவரின் தாக்கம் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு காரணமே அந்த மசூதி இடிப்பு விவகாரமே. சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக தன்னை முன்னிறுத்திய காங்கிரசின் "மூஞ்சியில் " கரி பூசப்படதால் நரசிமராவின் நினைவுகள் புரம்தள்ளி வைக்கப்பட்டன. ஒட்டு வங்கியில் ஓட்டை விழவைத்த நரசிம்ம ராவின் நாட்கள் சோனியாவின் காங்கிரசுக்கு ஆகாத நாட்களே.நரசிம்ம ராவின் நினைவு நாளை அவர்கள் கொண்டாடாத விதத்திலேயே தெரியுமே இவர்களின் கபட நாடகம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!